இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0188துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு

(அதிகாரம்:புறங்கூறாமை குறள் எண்:188)

பொழிப்பு: நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?

மணக்குடவர் உரை: தம்மோடு செறிந்தார் குற்றத்தையும் பிறர்க்கு உரைக்கின்ற சேதியை யுடையார் செறிவில்லாதார்மாட்டு யாங்ஙனஞ் செய்வாரோ?
இது யாவரோடும் பற்றிலரென்றது.

பரிமேலழகர் உரை: துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் - தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினை உடையார்; ஏதிலார் மாட்டு என்னை கொல் - அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ?
('தூற்றுதல்' பலரும் அறியப் பரப்புதல். அதனின் கொடியது பிறிதொன்று காணாமையின், 'என்னைகொல்' என்றார். 'செய்வது என்பது சொல்லெச்சம'. 'என்னர் கொல்' என்று பாடம் ஓதி, 'எவ்வியல்பினராவர்' என்று உரைப்பாரும் உளர்.)

வ சுப மாணிக்கம் உரை: பழகியவர் குற்றத்தையே தூற்றித் திரிபவர் பழகாதவரிடம் எப்படி எப்படியோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் ஏதிலார் மாட்டு என்னைகொல்?


துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்:
பதவுரை: துன்னியார்-நண்பர்; குற்றமும்-பிழையும்; தூற்றும்-இகழ்ந்துசொல்லும்; மரபினார்-இயல்பினையுடையவர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மோடு செறிந்தார் குற்றத்தையும் பிறர்க்கு உரைக்கின்ற சேதியை யுடையார்;
பரிதி: ஒருவர் குற்றத்தைப் புறம் சொல்லித் திரிவார்;
காலிங்கர்: எஞ்ஞான்றும் நட்டாராகிய அற்றத்தார் அற்றம் அடக்குதல் அறமாகக் கொள்ளாது, அதனைக் கைவிட்டு, அவரது குற்றமும் புறம் போந்து யாவரும் அறியவெளியிடுகின்ற இயல்பினை உடையார்; [அற்றத்தார் - அவமானம் உடையோர்]
பரிமேலழகர்: தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினை உடையார்;
பரிமேலழகர் குறிப்புரை: 'தூற்றுதல்' பலரும் அறியப் பரப்புதல்.

'செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினை உடையார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெருங்கிப் பழகியவரது குற்றத்தையும் பலரறியப் பறைசாற்றும் இயல்பினர்', 'நெருங்கிய நண்பர்களுக்கிடையிலும் குற்றங் கூறித் தூற்றிப் பேசிப் பகைமை உண்டாக்குகிற இனமாகிய இவர்கள்', 'நெருங்கிப் பழகிய நண்பரது குற்றத்தையும் புறத்தே தூற்றும் இயல்பினை உடையவர்கள்', 'தம்மோடு நெருங்கிய நண்பினர் குற்றத்தையும் பலர் அறியச் சொல்லும் இயல்பினார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நெருங்கிப் பழகியவரது குற்றத்தையும் புறத்தே தூற்றும் இயல்பினர் என்பது இப்பகுதியின் பொருள்.

என்னைகொல் ஏதிலார் மாட்டு:
பதவுரை: என்னை-யாது?; கொல்-(ஐயம்) ஏதிலார்-அயலார்; மாட்டு-இடத்தில்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செறிவில்லாதார்மாட்டு யாங்ஙனஞ் செய்வாரோ?
மணக்குடவர் குறிப்புரை: இது யாவரோடும் பற்றிலரென்றது.
பரிதி: தங்களை வேண்டாதார்முன் எப்படி ஆவரோ எனில், பலர்க்கும் வேண்டாதார் ஆவர் என்றவாறு.
காலிங்கர்: இனிப் பகைவர் மாட்டு எங்ஙனமோ? புறங்கூற்று என்பார்க்கு உதவியாக எனைத்து இடரும் செய்வாராவர் என்றவாறு.
பரிமேலழகர்: அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ?
பரிமேலழகர் குறிப்புரை: அதனின் கொடியது பிறிதொன்று காணாமையின், 'என்னைகொல்' என்றார். 'செய்வது என்பது சொல்லெச்சம'. 'என்னர் கொல்' என்று பாடம் ஓதி, 'எவ்வியல்பினராவர்' என்று உரைப்பாரும் உளர்.

செறிவில்லாதார்/வேண்டாதார்/பகைவர்/அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ? என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைவரிடத்து என்ன செய்வாரோ?', 'ஏற்கனவே பகைமை உள்ளவர்களுக்கிடையில் என்ன செய்ய மாட்டார்கள்?', 'அயலார்மாட்டு உற்ற குற்றத்தை எப்படித் தூற்றமாட்டார்?', 'அயலாரிடம் செய்வது யாதோ? (மிகுதியாகக் கற்பித்தும் கூறுவர் என்பதாம்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அயலாரிடம் என்ன செய்வாரோ? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நன்கு பழகியவர் பற்றியும் புறம் பேசும் இயல்பினர், அயலார் இடத்து என்ன செய்வாரோ?

நெருங்கிப் பழகியவரது குற்றத்தையும் புறத்தே தூற்றும் இயல்பினர் அயலாரிடம் என்ன செய்வாரோ? என்பது பாடலின் பொருள்.
இங்கு சொல்லப்பட்ட 'ஏதிலார்' யார்?

துன்னியார் என்ற சொல்லுக்கு நெருங்கிப் பழகுபவர் என்பது பொருள்.
குற்றமும் என்ற சொல் தவறுகளையும் என்ற பொருள் தரும்.
தூற்றும் என்ற சொல்லுக்கு இகழ்ந்து கூறும் என்று பொருள். இகழ்ந்து புறம் கூறும் எனக்கொள்வர்.
மரபினார் என்ற சொல் பழக்கமாகவே உள்ளவர் எனப் பொருள்படும்.
என்னைகொல் என்ற தொடர் என் செய்வாரோ என்ற பொருளது.
மாட்டு என்ற சொல் இடத்து என்ற பொருள் தருவது.

நெருங்கிப் பழகியவரைப் பற்றியும்கூட புறம்பேசும் பழக்கமுடையவர்கள் அயலாரிடத்தில் என்ன செய்வார்களோ?

தம்முடன் நெருங்கிப் பழகுபவர் குற்றங்களையும் பலரறியப் புறத்தே தூற்றும் இயல்புடையார், அயலார் மாட்டு செய்வது யாதோ? என்று கேட்டு, 'மிகுதியாகக் கற்பித்தும் கூறுவர்'; 'நினைக்கவே முடியவில்லை'; 'அவ்வளவு மோசமாக இருக்கும்' என்று வள்ளுவரே அஞ்சுவதுபோல் அமைந்த பாடல்.
மரபினார் என்ற சொல்லப்பட்டதால், புறங்கூறுதலைப் பழக்கமாகக் கொண்டவர் ப்ற்றி இக்குறள் பேசுகிறது என அறியலாம். பழிதூற்றும் பழக்கம் பற்றிக் கொண்டால் எளிதில் நீங்காது. நெருங்கிப் பழகியவர் தம்முடன் உறவாடுகிறவரை நம்பி தம் உள்ளத்தில் உள்ளதைச் சொல்லிவிடுவர். புறங்கூறும் பழக்கம் உள்ளவர் அவற்றிலுள்ள குறைகளைத் தெரிந்தெடுத்து, அவற்றைப் பிறரிடம் தூற்றிப் பேசி மகிழ முந்துவர். இழித்துப் பேசியது பழகியவர்க்கு நாளை தெரியவந்தால் அவர் என்ன எண்ணுவாரோ என்பது பற்றி நினைக்காது புறம்கூறுவதைத் தொடர்வர். அவர் முகத்தில் மீண்டும் விழிக்கவேண்டுமே என்பதையும் பொருட்படுத்தாமல் நெருங்கியவர்பற்றிப் பழிதூற்றுபவர், பகையும் நட்பும் அல்லாத அயலார் பற்றிக் கூறும் புறத்தின் வீச்சு எப்படி இருக்கும் என எண்ணிப் பார்க்க இயலாது என்கிறது குறள்.
புறங்கூறுவான் இன்னார் என்று பார்ப்பதில்லை என்பதும் நெருக்கமானவர்கள் அடையும் மானக்குறைவை நீக்குவதைப் பண்பாகக் கொள்வதை விட்டு, அவர்களுக்கு எதிராகப் பழிதூற்றுவது எவ்வளவு இழிவான செயல் என்பதும் சொல்லப்பட்டது.
புறங்கூறுவானது பேதைமை மிக்க துணிவைச் சொல்லி புறங்கூறலின் தீமை விளக்கப்பட்டது.

இங்கு சொல்லப்பட்ட 'ஏதிலார்' யார்?

'ஏதிலார்' என்ற சொல்லுக்குச் செறிவில்லாதார், வேண்டாதார், பகைவர், அயலார், மற்றவர்கள், பழகாதவர், தொடர்பில்லாத அயலார் என உரையாளர்கள் பொருள் கூறினர்.

துன்னியார்/ஏதிலார் ஆகியோர் புறங்கூறுவானோடு தொடர்புடையவர் என்றே பலரும் பொருள் கூறினர்.
நாமக்கல் இராமலிங்கம் 'துன்னியார் என்றது தமக்குத் துன்னியார் அல்ல. ஏதிலார் என்பதும் தமக்கு ஏதிலார் அல்ல ஒருவருக்கொருவர் துன்னியார் என்றும் ஒருவருக்கொருவர் ஏதிலார் என்றும் கொள்ள வேண்டும்' என விளக்கம் செய்தார். இவரது உரை இயல்பாக இல்லை.
இங்கு ஆளப்பட்ட ஏதிலார் என்ற சொல் மிகப் பொருத்தமானது. இச்சொல் 'வெளிஆள்' அதாவது அயலார் எனப் பொருள் தரும். இவர் பகைவரும் அல்ல; நண்பரும் அல்ல. இவர் அறிமுகம் ஆகாதவர்.
நன்கு அறியப்பட்டவர் (துன்னியார்) பற்றியே புறங்கூறத் துணிபவன் பழக்கமில்லாதவர் (ஏதிலார்) பற்றி என்னதான் செய்யமாட்டான் என்ற கருத்துக்கு ஏதிலார் என்ற சொல்லாட்சி அழுத்தம் கொடுக்கிறது.

‘ஏதிலார்’ என்பவர் பகையும் நட்பும் அல்லாத அயலார்.

நெருங்கிப் பழகியவரது குற்றத்தையும் புறத்தே தூற்றும் இயல்பினர் அயலாரிடம் என்ன செய்வாரோ? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

புறங்கூறுதலில் பழகிப்போனவர், நெருங்கியவர் அயலார் எனப் பாரார் என்னும் புறங்கூறாமை பாடல்.

பொழிப்பு

நெருங்கிப் பழகியவர் குற்றத்தையும் புறம் பேசும் பழக்கம் உடையவர் அயலாரிடத்தில் என்ன செய்வாரோ?