அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை
(அதிகாரம்:புறங்கூறாமை
குறள் எண்:189)
பொழிப்பு (மு வரதராசன்): ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல்பாரத்தை, `இவனையும் சுமப்பதே எனக்கு அறம்’ என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?
|
மணக்குடவர் உரை:
பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற்பாரத்தை நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்: அல்லது போக்கும்.
இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது.
பரிமேலழகர் உரை:
புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை - பிறர் நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை உரைப்பானது உடற்பாரத்தை; வையம் அறன் நோக்கி ஆற்றுங்கொல் - நிலம் இக் கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது போலும்!
(எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும் கருத்தால், 'அறன் நோக்கி ஆற்றுங்கொல்' என்றார்.' இவை ஐந்து பாட்டானும் புறம் கூறுவார்க்கு எய்தும் குற்றம் கூறப்பட்டது.)
வ சுப மாணிக்கம் உரை:
போனது பார்த்துப் புறங்கூறுபவனை உலகம் சுமக்கிறது. அதுவும் ஓர் அறமோ?
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை வையம் அறன்நோக்கி ஆற்றுங்கொல்.
பதவுரை: அறன்-அறம், நல்வினை; நோக்கி-கருதி; ஆற்றும்கொல்-(ஐயம்) பொறுத்துக் கொண்டிருக்கிறதோ?, தாங்கிக் கொள்கிறதோ?; வையம்-உலகம்-; புறன்-நீங்கின அளவு; நோக்கி-பார்த்து; புன்சொல்-பழித்துரை; உரைப்பான்-சொல்லுபவன்; பொறை-சுமை, உடற்சுமை.
|
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்: அல்லது போக்கும்.
பரிதி: பூமி தன்மத்தைப் பார்த்துப் பாதுகாக்கும் அல்லது பூமி அவனைத் தாங்காது என்றவாறு.
காலிங்கர்: அகழ்வாரைத் தாங்கும் பூமியானது தன் தன் தருமத்தை நேர் நோக்கி ஆற்றுகின்றது கொல்லோ; [நேர்நோக்கி - எதிர்நோக்கி]
பரிமேலழகர்: நிலம் இக் கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது போலும்!
பரிமேலழகர் குறிப்புரை: எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும் கருத்தால், 'அறன் நோக்கி ஆற்றுங்கொல்' என்றார்.'
'நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் ''கொடியது தாங்குவதே அறம்' என்று கருதி இந்நிலம் சுமக்கின்றது போலும்', 'பூமியானது தன்னுடைய கடமை என்று கருதிச் சுமந்து கொண்டிருக்கிறதோ?', 'நிலமானது பொறுத்திருப்பது, இக்கொடியோனைப் பொறுப்பதே அறமென்று கருதிப் போலும்!', 'உலகம் அறநெறி கருதிச் சுமக்கின்றது போலும். (தீமை செய்வார்க்கும் நன்மை செய்யவேண்டும் என்பது அறநெறி.)' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அறம் கருதி இவ்வுலகம் தாங்கிக்கொள்கின்றது போலும் என்பது இப்பகுதியின் பொருள்.
புறன்நோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற்பாரத்தை. [உடற்பாரம் - உடற்சுமை]
மணக்குடவர் குறிப்புரை: இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது.
பரிதி: ஒருவன் குற்றத்தைப் புறஞ்சொல்பவனை.
காலிங்கர்: ஒருவனது குற்றஞ் சொல்லுகைக்கு இடம் என்ற குறிக்கொண்டு புல்லிய சொல்லினைக் கூறுவானாயின் அவனது பாரத்தை என்றவாறு. [புல்லிய சொல்லினை - இழிந்தனவும் உண்மையல்லாதனவும் ஆகிய சொல்லை]
பரிமேலழகர்: பிறர் நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை உரைப்பானது உடற்பாரத்தை; [பழித்துரை - இகழ்ந்து பேசுதல்]
பரிமேலழகர் குறிப்புரை: இவை ஐந்து பாட்டானும் புறம் கூறுவார்க்கு எய்தும் குற்றம் கூறப்பட்டது.
'பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற்பாரத்தை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிறர் நீங்குதல் கண்டு புறங்கூறிப் பழித்துரைப்பானது உடற்சுமையை', 'ஒருவன் இல்லாத சமயம் பார்த்து அவனைப் பற்றிக் கோள் சொல்லுகிறவனை', 'பிறர் நீங்குஞ் சமயம் பார்த்து, அவர் புறத்தே அவரை இகழ்ந்துரைப்பானது உடற்பாரத்தை', 'பிறர் நீங்கின சமயம் பார்த்து அவரைப்பற்றிப் பழித்துரைப்பார் உடல் பாரத்தை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
யாரும் இல்லாதவாறு பார்த்து ஒருவரைப் பற்றி இகழ்ந்துரைப்பானது உடல் சுமையை என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
யாரும் இல்லாதவாறு பார்த்து ஒருவரைப் பற்றி இகழ்ந்துரைப்பானது உடல் சுமையை அறன் நோக்கி இவ்வுலகம் தாங்கிக்கொள்கின்றது போலும் என்பது பாடலின் பொருள்.
'அறன்நோக்கி' என்ற தொடர் குறிப்பது என்ன?
|
புறங்கூறுவானுக்கு இவ்வுலகில் வாழ உரிமையில்லை.
அக்கம் பக்கம் பார்த்து அங்கில்லாத ஒருவரை இழிவாகப் பேசுபவனைக்கூட இந்த உலகம் பொறுத்துக் கொண்டிருக்கிறதே, அது அறம் கருதிப் போலும்!
பிறன்மேல் குற்றம் சொல்வதற்கு இதுதான் இடம் என்று குறிக்கொண்டு எவரும் இல்லாதவாறு புறத்தே பார்த்துப் புன்சொல் சொல்பவனது பாரத்தையும் இந்தப் பூமி எப்படித்தான் தாங்கிக் கொண்டிருக்கிறதோ என்று வள்ளுவர் முதலில் வியக்கிறார். பின்னர் தனக்கு அறமென்று கருதித்தான் இவ்வுலகம் பொறுத்துக் கொள்கிறது போலும் என்று அமைதி காட்டுகிறார். வேறென்னவாக இருக்க முடியும்? ஆனாலும் 'அவனெல்லாம் பூமிக்கு பாரம்' என்ற உலகியல் வழக்கில் புறம் கூறுவோரை இங்கு வைதுமிருக்கிறார். புறம் பேசுகிறவர்கள் பூமிக்குச் சுமைபோலே என்பது இக்குறள் கூறும் செய்தி.
புறனோக்கிச் சொல்லும் பழிச் சொல் புன்சொல் எனச் சொல்லப்பட்டது.
'பொறை என்னும் சொல் இங்குச் சுமத்தலும் பொறுத்துக்கொள்ளுதலுமாகிய இரு பொருளையும் ஒருங்கே தழுவியதாம்' என்பார் தேவநேயப்பாவாணர்.
பூமிக்குப் பாரமான வேறு வகை மாந்தரையும் பிற இடங்களில் குறள் குறித்துள்ளது. அவை:
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை (வெருவந்த செய்யாமை 570 பொருள்: கடுங்கோல் ஆட்சி அறிவில்லாதாரை ஈர்க்கும்; பூமிக்குச் சுமையாவது அதுவன்றி வேறொன்று இல்லை),
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை (கண்ணோட்டம் 572 பொருள்: உலக இயக்கம் கண்ணோட்டத்தில் நிகழ்கிறது; அப்பண்பு இல்லாதார் உள்ளமை நிலத்திற்குச் சுமையாகும்),
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை (சான்றாண்மை 990 பொருள்: சான்றோர்கள் தம் சான்றாண்மைக் குணங்களில் குறைந்தால் பெரிய பூமியும் சுமையைத் தாங்க இயலாது போம்),
ஈட்டம் இவறி இசைவேண்டா வாடவர் தோற்றம் நிலக்குப் பொறை (நன்றியில் செல்வம் குறள்எண்: 1003 பொருள்: சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்குப் பாரமே ஆகும்).
பூமியின் பெருமைக்கு அதன் பொறுமையைக் காட்டுவது இலக்கிய மரபு; எல்லையற்ற பொறுமை கொண்டது பூமி. எல்லாவற்றையும் பொறுத்தல் நிலத்துக்கு இயல்பாயினும் புறங்கூறுவானைப் பொறுத்தல் அரிது என்று வள்ளுவர் எண்ணுவதால் 'அறனோக்கி யாற்றுங்கொல்!' என்றார். புறம் கூறி வாழ்பவனது உடற்சுமையை இந்தப் பூமி தாங்குவது கூடாது என்பதே அவரின் எண்ணமாக உள்ளது.
பிறன்பழி கூறுவானை அறம் கருதி பொறுத்துக்கொள்கிறது இப்பூமி என்பது இக்குறள். அறம் நாணி ஒருவனைக் கைவிட்டு நீங்கும் என இன்னொரு இடத்தில் சொல்கிறது குறள்: பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின் அறம்நாணத் தக்கது உடைத்து (நாணுடைமை 1018 பொருள்: பிறர் நாணம் அடையத்தக்க செயலைச் செய்யத் தான் வெட்கப் படாவிடின், அது அறம் கண்டு வெட்கப்பட்டு நீங்கும் தன்மையினையுடையதாகும்).
|
'அறன்நோக்கி' என்ற தொடர் குறிப்பது என்ன?
'அறன்நோக்கி' என்ற தொடர்க்கு அறத்தை நோக்கி, தன்மத்தைப் பார்த்து, தருமத்தை நேர் நோக்கி, எனக்கு அறமாவது எனக் கருதி, அறம்பற்றி, அதுவும் ஓர் அறமோ?, 'கொடியது தாங்குவதே அறம்' என்று கருதி, தன் கடமை என்று கருதி, அறம் கருதி, தனக்கு அறமென்று கருதி, அறநெறி கருதி, அறநெறி கருதி, அறத்தை நோக்கி என்று உரையாளர்கள் பொருள் கூறினர்.
புறங்கூறுபவனையும் ஏன் இந்த உலகம் தாங்கிக் கொண்டிருக்க வேண்டும்?
அக்கம் பக்கம் பார்த்து அங்கில்லாத ஒருவரை இழிவாகப் பேசுபவன் தீச்செயல் (பாவச்செயல்) புரிபவன் போன்று கொடியவன், அவன் இப்பூமியில் வாழத் தகுதியற்றவன் என்பது வள்ளுவர் கருத்து. அவனைக்கூட இந்த உலகம் பொறுத்துக் கொண்டிருக்கிறதே அது ஏன் என எண்ணிப்பார்க்கின்றார் வள்ளுவர், அது தனக்கு அறமென்று கருதித்தான் போலும்! என முடிக்கின்றார்.
தன்னை அகழ்வாரைத் தாங்கும் நிலம்கூடப் புறங்கூறுபவனது உடலைச் சுமக்க வெறுப்படையும். ஆனாலும் தாங்கிக்கொள்கிறது - அது தனக்கு அறமாகும் என்று கருதி.
'இக்கொடியது பொறுத்தலே தனக்கு அறமாவது என்று கருதி' என்று சொல்லும்போது பூமியின் கடமையுணர்ச்சியும் அருவெறுப்பும் புறங்கூறுவானது இழிவும் உடன் தோன்றுகிறது என்பார் தண்டபாணி தேசிகர்.
பூமி மாந்தர்க்கு வாழ்விடமாக அமைந்துள்ளது; அவர் வாழ்வதற்கான அனைத்தையும் வழங்குகின்றது. இந்நிலையில் அடுத்தவர்களைப் பற்றி இழிவான சொற்களைச் சொல்லிக்கொண்டு திரிந்து வருகின்றவர்களை நிலம் பிளந்து அவர்களை அப்படியே விழுங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அறமாக இருக்க முடியும்; ஆனால் அவர்களுடைய உடல் சுமையையும் தாங்கிக் கொண்டு இந்தப் பூமி இருக்கின்றதே என்பதை 'ஆற்றுங்கொல்' என்ற தொடரால் ஏக்கம் கலந்த கவலையால் குறிக்கிறார் வள்ளுவர்.
'அறன்நோக்கி' என்ற தொடர்க்கு அறம் கருதி என்பது பொருள்.
|
யாரும் இல்லாதவாறு பார்த்து ஒருவரைப் பற்றி இகழ்ந்துரைப்பானது உடல் சுமையை அறம் கருதி இவ்வுலகம் தாங்கிக்கொள்கின்றது போலும் என்பது இக்குறட்கருத்து.
உலகம் உன்னைச் சுமக்கப் புறங்கூறாமை வேண்டும்.
யாரும் இல்லாத நேரம் பார்த்துப் புறங்கூறுபவனது உடற்சுமையை இவ்வுலகம் அறம் கருதிப் பொறுக்கிறது போலும்.
|