இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0181அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம்கூறான் என்றல் இனிது

(அதிகாரம்:புறங்கூறாமை குறள் எண்:181)

பொழிப்பு: ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும் மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.

மணக்குடவர் உரை: ஒருவன் அறத்தை வாயாற் சொல்லுதலுஞ் செய்யானாய்ப் பாவஞ் செய்யினும் பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப்படுதல் நன்றாம்.
இது பாவஞ்செய்யினும் நன்மை பயக்கும் என்றது.

பரிமேலழகர் உரை: ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் - ஒருவன் அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்; புறம் கூறான் என்றல் இனிது - பிறனைப் புறம் கூறான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று.
(புறம் கூறாமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது, மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனால் அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.)

இரா இளங்குமரனார் உரை: ஒருவன் அறநெறியில் ஒன்றைச் சொல்லாதவனாய் அறமல்லாச் செயலைச் செய்பவனாய் இருந்தாலும் கூட அவன் புறஞ்சொல்ல மாட்டான் என்று சொல்லுமாறு வாழ்தல் நல்லது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒருவன் அறம்கூறான் அல்ல செயினும் புறம்கூறான் என்றல் இனிது.


அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்:
பதவுரை: அறம்-நல்வினை; கூறான்-சொல்லுவதும் செய்யாதவனாய்; அல்ல-ஆகாதவைகளை; செயினும்-செய்தலும்; ஒருவன்-ஒருவன்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் அறத்தை வாயாற் சொல்லுதலுஞ் செய்யானாய்ப் பாவஞ் செய்யினும்;
பரிதி: புண்ணியத்தின் வழியைப் பேசான்; பாவமே செய்வானாகிலும்;
காலிங்கர்: தன் நாவினால ஒருவன் அறத்தினைச் சொல்லானுமாய், பாவமாகிய அல்லாதனவற்றைச் செய்வானாகிலும்;
பரிமேலழகர்: ஒருவன் அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்;

'ஒருவன் அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவமே செய்வானாகிலும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் அறத்தைப் பழித்துத் தீமை செய்யினும்', 'ஒருவன் அறம் என்பதையே அறியாதவனாக அறம் அல்லாத காரியங்களைச் செய்கிறவனாக இருந்தாலும்', 'ஒருவன் தருமம் என்னுஞ் சொல்லைக் கூடச் சொல்லாது தீயன செய்து ஒழுகினும்', 'ஒருவன் அறநெறிகளைக் கூறாமல் தீயனவற்றைச் செய்தாலும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவன் அறம் பற்றிப் பேசாதவனாக, அறம் அல்லாத செயல்களைச் செய்தாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

புறம்கூறான் என்றல் இனிது:
பதவுரை: புறம்-காணாதவிடம்; கூறான்-கூறமாட்டான்; என்றல்-என்று சொல்லப்படுதல்; இனிது-நன்றானாது.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப்படுதல் நன்றாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது பாவஞ்செய்யினும் நன்மை பயக்கும் என்றது.
பரிதி: ஒருவன் குற்றத்தைப் புறம் சொல்லாதிருப்பவன் ஈடேறுவான். [ஈடேறுவான் - உயர்வான்].
காலிங்கர்: புறங்கூறான் என்று பிறர் சொல்லுமாறு இருத்தல் பெரிதும் இனிது என்றவாறு.
பரிமேலழகர்: பிறனைப் புறம் கூறான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: புறம் கூறாமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது, மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனால் அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.

'பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப்படுதல் நன்றாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கோள் சொல்லான் என்பது காதுக்கு இனிது', 'அவன் கோள் சொல்ல மாட்டான் என்பது சிறப்புடையது', 'அவன் புறங்கூற மாட்டான் என்ற பெயர் பெறுதல் நல்லதே. (அது பிறர்க்கு மகிழ்ச்சி விளைப்பது என்பது கருத்து)', 'காணாதவிடத்துப் பழித்து உரையான் என்று சொல்லப்படுதல் இன்பம் பயக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

புறங்கூற மாட்டான் என்ற பெயர் பெறுதல் நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறம் பற்றிப் பேசவும் செய்யாது, அறமல்லாத செயலைச் செய்பவனாய் ஒருவன் இருந்தாலும் கூட, அவன் புறங்கூற மாட்டான் என்று பெயர் பெற்று வாழ்வது நல்லது.

ஒருவன் அறம்கூறான், அறம் அல்லாத செயல்களைச் செய்வானாகிலும், புறங்கூற மாட்டான் என்ற பெயர் பெறுதல் நல்லது என்பது பாடலின் பொருள்.
'அறம்கூறான்' யார்?

அல்ல செயினும் என்ற தொடர் அறமல்லாதவற்றைச் செய்தாலும் என்ற பொருள் தரும்.
ஒருவன் புறங்கூறான் என்ற தொடர்க்கு ஒருவன் புறத்தே இகழ்ந்து பேசமாட்டான் என்பது பொருள்.
என்றல் என்ற சொல்லுக்கு என்று சொல்லப்படுதல் என்று பொருள்.
இனிது என்ற சொல் நல்லது எனப்பொருள்படும்.

அறத்தை பொருட்படுத்தாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், புறங்கூற மாட்டான் என்று பெயர் பெற்றவனானால் இனியதாகிவிடும்.

ஒருவன் அறம் பற்றிப் பேசாதவனாக தீமையே செய்து வருகிறான். ஆனால் அவன் புறங்கூறாத நல்லியல்புடையான் என்று பெயரெடுத்தவன். இவனது தீய செயல்கள் மறக்கப்படும் என்பது இக்குறள் தரும் செய்தி. அதாவது அறத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்தாலும் தாழ்வில்லை; புறம் பேசமாட்டான் என்ற பெயரையாவது காத்துக் கொள்ளல் நல்லது என்பது கருத்து. புறம் கூறுதல் என்பது மிகத் தீமையானது எனச் சொல்லவருகிறது இப்பாடல்.
புறங்கூறல் இகழ்ச்சியான மொழியால் அமைவது; பொறாமையால் பேசப்படும் சொல் தீமை விளைவிப்பது; ஒருவர் மீது கொண்ட நம்பிக்கையை அழித்துச் சொல்லப்படுவது. இக்காரணங்களால் புறங்கூறுதல் மிகக் கொடியது என்று சொல்லி அக்குற்றத்தை அகற்றிக்கொள் எனக் கனிவாகச் சொல்கிறார் வள்ளுவர்.

இக்குறளின் கருத்து தீவினைகள் பல செய்தாலும் இந்த ஒர்நற்செயலின் முன் நில்லாது என்பதாம். அதனால் தீவினைகள் செய்யலாம் என்று வள்ளுவர் கூறுகிறார் என்பதல்ல பொருள். வேறு பல தீவினைகள் செய்திருந்தாலும், புறங்கூறாமையானது நன்மை பயக்கும் எனக் கொள்ள வேண்டும். ஒன்றை வலியுறுத்தி ஒருவருடைய உள்ளத்தில் உள்ள ஒரு மாசை அகற்றினால், மற்றவையும் நாளடைவில் விலகிப் போகும் என்பதற்காக வள்ளுவர் கையாளும் உத்தி இது. இதனினும் இது பெரியது, இதனினும் இது தீது, இதனினும் இது நன்று, இதனினும் இது இன்னாதது எனப் பல்வேறு நிலையில் குறட்பாக்கள் உரைக்கும். அதில் இதனினும் இது இனிது என்ற மொழிநடையில் அமைந்த பாடல் இது.

'தகாதன செய்தவனைத் திருத்துதலாகிய அறங்கூறுதலையும் அவனுக்கும் பழிவந்தன செய்தலையும் உடையனாயினும் புறங்கூறான் என்றலினிது' என அறமாயின கூறுதல், அல்லவை செய்தல் என்பவற்றுக்கு ஓர் விளக்கம் உள்ளது.
'ஒருவன் எவராலும் ஒரு தருமமும் தனக்குச் சொல்ல வேண்டாதவனாய்த் தானே எல்லா தருமங்களையும் அறிந்து நல்வினைகளையே செய்து வந்தானாயினும், அவனுக்குப்பிறனைப் புறங்கூறானென்பது அவ்வெல்லாத் தருமங்களிலும் நன்மை தருவதாம் என்று உரை கூறவும் இடமுண்டு' என்றபடியும் உரை உள்ளது. இவ்வுரை, கூறாமையை ஒருவன் மேலும், செய்தலை அறனல்லாத பிறன் மேலும் கொண்டு பொருள் கூறுவது. மேலும் 'கூறான் நல்ல செயினும்' எனப் பிரித்து கூறான் என்பதற்கு எவராலும் சொல்ல வேண்டாதவனாய் என்று பொருளுரைப்பர். அல்ல செயினும் புறங்கூறான் என்றல் இனிது என்பதில் கருத்தழுத்தம் (புறங்கூற்றின் கொடுமை) உள்ளதே யன்றி நல்ல செயினும் எனப் பிரித்துப் பொருள் கொள்வதில் அஃதின்மை ஊன்றி நோக்குவார்க்குப் புலனாம் (இரா சாரங்கபாணி).

'அறம்கூறான்' யார்?

'அறம்கூறான்' என்ற சொல்லுக்கு அறத்தை வாயாற் சொல்லுதலுஞ் செய்யான், புண்ணியத்தின் வழியைப் பேசான், தன் நாவினால அறத்தினைச் சொல்லான், அறன் என்று சொல்லுவதும் செய்யான், அறமானவற்றைப் பேசான், அறத்தினை எடுத்துக் கூறான், அறத்தைப் பழிப்பான், அறத்தின் வழியைப் பேசாதவன், அறம் என்பதையே அறியாதவன், அறநெறியில் ஒன்றைச் சொல்லாதவன், தருமம் என்னுஞ் சொல்லைக் கூடச் சொல்லாதவன், அறநெறிகளைக் கூறாதவன், அறம் சர்ந்து பேசாதவன், அறம் என்று கூறுவதும் இயலான், அறம் என்னுஞ் சொல்லையுஞ் சொல்லாதவன், அறமொழி கூறமாட்டாதவன், அறங்களைக் கூறாதவன் என்று உரையாளர்கள் பொருள் கூறினர்.

நாகை சொ தண்டபாணியார் 'அறமாயின கூறுதலாவது, இகழ்ச்சிக்குரிய செய்தவனையணுகி அவன் முகத்தெதிரே அவன் செயலின் தன்மையும் பயனும் இனைய வென எடுத்துக்காட்டி அவன் நல்வழிப் படுதற்காவன கூறல்' என விளக்கம் தந்தார். இதற்கு எடுத்துக்காட்டாக 'கண்ணின்று' (184) 'அறஞ்சொல்லும் நெஞ்சத்தான்' (185) என்ற குறட்பாக்களையும் சுட்டினார். இராமலிங்கனார் 'அறம் கூறான் அல்ல செய்யினும்' என்பதற்கு 'ஒருவன் அறம் என்ற கூறுபாட்டின்படி அறம் அல்லாதவற்றைச் செய்கிறவனானாலும்' என்று உரை கூறி, 'கூறான் - சொல்லமாட்டான் என்ற பொருள் தருவதல்ல. கூறு ஆன என்பது கூறுபாடு என்னும் பொருள் தரும்' என்பார். 'இவ்வுரை ஏற்புடையதன்று எனத் தோன்றுகிறது. இங்ஙனம் உரை செய்தனாற் போந்த புறப்பொருளும் இல்லை என்பதும் சிந்திக்க' என்கிறார் தண்டபாணி தேசிகர்.
'அறம்கூறான்' என்ற தொடர்க்குப் பரிதி 'புண்ணியத்தின் வழியைப் பேசான்' எனப் பொருள் தருவார். அறம் கூறல் என்பது நல்வினை அல்லது நன்மை தரும் சொல் கூறல் எனப்பொருள்படும். அறம்கூறான் என்றதற்கு 'அறம்' என்ற சொல்லை வெறும் பேச்சில் கூடப் பயன்படுத்தாதவன் எனப் பொருள் கொள்வர்.

'அறங்கூறான்' என்பது 'அறம் என்று வாயாலும் கூறாதவன்' என்ற பொருள் தரும்.

ஒருவன் அறம்பற்றிப் பேசாதவனாக, அறம் அல்லாத செயல்களைச் செய்பவனாக இருந்தாலும், புறங்கூற மாட்டான் என்ற பெயர் பெறுதல் நல்லது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

புறங்கூறாதவன் என்று பெயர் பெறுவனது மற்ற மறச் செயல்கள் மறக்கப்படலாம் என்னும் புறங்கூறாமை பாடல்.

பொழிப்பு

ஒருவன் அறம் அறியாது அறம் அல்லாதவை செய்வானாகிலும் புற்ங்கூறான் என்று சொல்லப்படுதல் நல்லது.