வெஃகாமை என்ற சொல் 'வெஃகு' (பிறர் பொருளை வெளவச் செல்லும் விருப்பம்)என்ற பகுதியில் பிறந்து 'ஆ' என்ற எதிர்மறை குறிப்பு ஏற்று 'மை' என்று விகுதி ஏற்றுக் கொண்ட எதிர்மறைத் தொழிற்பெயர் என்று இலக்கண விளக்கம் அளிப்பர்.
வெஃகுதல் என்பது ஓர் மனமாசு. இது பிறர்க்கு உரிமையானபொருள் மீது அவா கொள்ளுதல் / கவர நினைத்தல் / இச்சித்தல் எனப்பொருள்படும். அதன் மறுதலையான வெஃகாமை என்பது பிறருக்கு உரிமையான பொருளை வஞ்சித்துக் கவர விரும்பாதிருத்தல் என்ற பொருள் தரும். பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் என உள்ளத்தால் உள்ளலும் ஆகாது என்பதைச் சொல்வது வெஃகாமை அதிகாரம்.
உழைப்பாலும் உரிய முயற்சிகளாலும் ஒருவர் நன்னெறியில் ஈட்டி வைத்திருக்கும் பொருள்களை வௌவக்கருதுதல் தீநெறி, அறிவின்மை, அருளின்மை, அழிவு ஆகிய குறைகளையுடையது; வெஃகாமையாவது குடிவாழ்வு, இன்பம், வெற்றி இவை தரவல்லது. பிறர்க்கு உரிமையான பொருளைக் கவர விரும்புவதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் அதாவது அவ்வாசை எழுகின்ற இடத்திலேயே களைய வேண்டும் என்ற கருத்தைச் சொல்ல வந்தது இந்த அதிகாரம்.
ஒருவனுக்கு ஒன்றைப் பெற வேண்டும் என்று ஆசை ஏற்பட்டு விட்டால் அவன் பின்விளைவுகளை எண்ணாது தான் விரும்பியதை அடைய முயற்சி செய்வான். பிறன் பொருள் கண்டு முதலில் பொறாமை கொள்ளும் மனம் நாம் ஏன் அப்பொருளை அடையலாகாது என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது. பின்னர் அப்பொருளைக் கவர்தற்குரிய தீய வழிகளில் மனம் செல்லும். ஆசை வந்துவிட்டால் எந்த நிலையில் இருந்தாலும்-கூர்த்த அறிவுடையாரும் அருளாளாரும்கூட-கீழிறங்கி வந்துவிடுகின்றனர். வெஃகுதல் செய்வோர் பிறன் கைப்பொருளைக்கூடக் கவர நினைக்கின்றனர். படுபயன்(பெரும்பயன்), சிற்றின்பம்(அப்போதைக்கான மகிழ்ச்சி), இலமென்று(வறுமை காட்டி) என்பன ஏன் ஒருவன் பிறன்பொருளைக் கவர நினைக்கின்றான் என்பதற்கான சில காரணங்கள். வெஃகியதால் உண்டான ஆக்கம் துய்க்கப்படும்போது மாட்சிமை தராது. விரும்பாமையை அறிந்தவரைச் சமயம் அறிந்து செல்வம் வந்து சேரும். வெஃகுதல் குடி கெடுத்துக் குற்றமும் தரும், அழிவை உண்டாக்கும்; வேண்டாமை வெற்றியை நல்கும். இவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.
பொருள்பற்று என்பது குற்றமாகாது. பிறன் ஒருவன் நல்ல பொருள் ஒன்று வைத்திருக்கிறான். அதுபோலும் ஒரு பொருளை வாங்கவோ, ஆக்கிக்கொள்ளவோ ஆசை தூண்டுமாயின் அதிலும் குற்றம் இல்லை. ஆனால் அப்பொருள்மேல் அழுக்காறு கொண்டு அப்பொருளை அறமற்ற முறையில் கைப்பற்றிப் பெறவேண்டும் என்னும் முனைப்புக்கு ஆளாவது குற்றப்படும். தனது நல்முயற்சியினாலும் உழைப்பினாலுமே அப்பொருளைப் பெற எண்ணவேண்டும். தம்முடைய உரிமைகளை ஒப்பப் பிறருடைய உரிமைகளையும் மதித்துக் கருதுதல் நடுவு நிலைமை ஒழுக்கமாகும். நல்வழியில் ஒருவர் ஈட்டி வைத்திருக்கும் பொருளை வௌவக்கருதுதல் நடுவு இன்றாகிறது.
நிலம்/வீடு/மற்ற அசையாச் சொத்துக்களைக் கைப்பற்றுதல், வணிக நிறுவனங்களை வளைத்து கொள்வது, வாணிபத்தில் பிறரை ஏமாற்றுதல், தொழிலில் உண்மையின்மை, பணியிடங்களில் பிறர்க்கு முறையாகக் கிடைக்கவேண்டிய பதவிகளைக் குறுக்குவழியில் கைப்பற்றுவது போன்றவை வெஃகுதலுக்கு எடுத்துக்காட்டுகள். வலிமை காட்டல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், கையூட்டு முதலியன வெஃகாமைக்குத் துணை போவன.
வெஃகாமை என்பது மிகுபொருள் விரும்பாமையையும் குறிப்பது என்று சொல்வர். மிகுதியாகப் பொருள் சேர்ப்பவன் பெரும்பாலும் நடுநிலை தவறித்தான் அவற்றை ஈட்ட நேருமாதலால் அதையும் வெஃகுதல் குற்றத்துட்படுத்துவர்.