வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற்கு அரிதாம் பயன்
(அதிகாரம்:வெஃகாமை
குறள் எண்:177)
பொழிப்பு (மு வரதராசன்): பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.
|
மணக்குடவர் உரை:
பிறர்பொருளை விரும்பிப் பெறுகின்ற ஆக்கத்தை வேண்டாதொழிக; அது பயன்படுங் காலத்தில் ஆகும் பயன் நன்றாதலில்லையாதலான்.
பரிமேலழகர் உரை:
வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க - பிறர் பொருளை அவாவிக்கொண்டு அதனால் ஆகின்ற ஆக்கத்தை விரும்பாது ஒழிக; விளைவயின் பயன் மாண்டற்கு அரிது ஆம் - பின் அனுபவிக்குங்கால் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதல் இல்லை ஆகலான்.
('விளை' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். இவை ஏழு பாட்டானும் வெஃகுதலின் குற்றம் கூறப்பட்டது)
வ சுப மாணிக்கம் உரை:
பிறர்பொருளால் வரும்விளைவு மிகப் பொல்லாது; ஆதலின் தீய முன்னேற்றத்தை வேண்டாதே.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
வெஃகியாம் ஆக்கம் வேண்டற்க விளைவயின் பயன் மாண்டற்கு அரிதாம்.
பதவுரை: வேண்டற்க-விரும்பாதொழிக, விரும்ப வேண்டாம்; வெஃகி-கவர விரும்பி; ஆம்-ஆகும்; ஆக்கம்-மேன்மேல் உயர்தல்; விளைவயின்-துய்க்கும்காலத்து, அநுபவிக்கும்போது; மாண்டற்கு-மாட்சிமைப்படுதற்கு, நன்றாதற்கு, மாணுதலுக்கு, பெருமைக்கு.; அரிதாம்பயன்-நன்மை உண்டாகாதாம், பயன் அரிதாகும்.
|
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர்பொருளை விரும்பிப் பெறுகின்ற ஆக்கத்தை வேண்டாதொழிக;
பரிதி: தனக்கு வேண்டின் மரபுவழிச் செல்வத்தை விரும்புவானாகில்;
காலிங்கர்: எஞ்ஞான்றும் விரும்பாது ஒழிக; யாதினை எனின், நெறியின்றிப் பிறர்பொருளை விரும்பி மற்றதனால் ஆகும் ஆக்கத்தினை;
பரிமேலழகர்: பிறர் பொருளை அவாவிக்கொண்டு அதனால் ஆகின்ற ஆக்கத்தை விரும்பாது ஒழிக;
'பிறர்பொருளை விரும்பிப் பெறுகின்ற ஆக்கத்தை வேண்டாதொழிக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிறர் பொருளை வேண்டி அதனால் வரும் ஆக்கத்தை விரும்பாதொழிக', 'பிறருடைய பொருளைக் கவர்ந்து வருவதாகிய செல்வத்தை விரும்ப வேண்டா', 'பிறர்பொருளை விரும்பி அதனால் உண்டாகுஞ் செல்வத்தை விரும்பாதொழிக', 'பிறர் பொருளை விரும்பிக் கவர்வதனால் உண்டாகும் செல்வத்தை விரும்பாது ஒழிக', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பிறர் பொருளைக் கவர்வதனால் உண்டாகும் ஆக்கத்தை விரும்ப வேண்டா என்பது இப்பகுதியின் பொருள்.
விளைவயின் மாண்டற்கு அரிதாம் பயன்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது பயன்படுங் காலத்தில் ஆகும் பயன் நன்றாதலில்லையாதலான்.
பரிதி: அது அறமும் தரும்; முத்தியும் தரும்.
காலிங்கர்: பயக்குமிடத்து மாட்சிமைப் படுதற்கு அரிதாம்பயன் என்றவாறு.
பரிமேலழகர்: பின் அனுபவிக்குங்கால் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதல் இல்லை ஆகலான்.
பரிமேலழகர் குறிப்புரை: 'விளை' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். இவை ஏழு பாட்டானும் வெஃகுதலின் குற்றம் கூறப்பட்டது.
'அது பயன்படுங் காலத்தில் ஆகும் பயன் நன்றாதலில்லையாதலான்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'முடிவில் அவ்வாக்கத்தின் பயன் நன்மை தராது', 'அதனால் விருத்தியடைவது கெடும்', 'பின் நுகருங்கால் அச்செல்வத்தின் பயன் நன்றாவதில்லை', 'அச்செல்வத்தால் பயன் அடைய முடியாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
நுகருங்கால் அவ்வாக்கத்தின் பயன் நன்றாக இருக்காது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
வெஃகியாம் ஆக்கம் விரும்ப வேண்டா; நுகருங்கால் அவ்வாக்கத்தின் பயன் நன்றாக இருக்காது என்பது பாடலின் பொருள்.
'வெஃகியாம் ஆக்கம்' குறிப்பது என்ன?
|
பிறர் பொருளைக் கைப்பற்றி அதைப் பின்பு நன்கு துய்க்கலாம் என்றா எண்ணுகிறாய்? ஏமாந்து போவாய்.
பிறர் பொருளை விரும்பிக் கவர்வதால் உண்டாகும் நலத்தை விரும்ப வேண்டாம்; துய்க்கும் நேரத்தில் அதன் பயன் நன்றாக இல்லாததாயும் போகலாம்.
தனக்கு உரியதல்லாத பிறர் பொருளை விரும்பிக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த ஆக்கத்தின் பயன் நன்றானதாக இருக்காது.
முறையற்ற வழிகளில் பொருளீட்ட நினைத்தால் அதன் பயன் பெருமைக்கு உரியதாக இராது; பயன் அளிக்கும்போது மாண்பு அளியாத வெஃகியாம் ஆக்கத்தை விரும்ப வேண்டாம்.
கையூட்டு தருவது போன்ற முறையற்ற வழியில் (ஊழல் செய்து) ஆக்கம் தேடி, கவர்ந்த பொருளினால் வரும் பயனைத் தம்மனதில் மாட்சிமையோடு துய்த்தல் என்பது மிகவும் கடினம். பிறன் பொருளைக் கைப்பற்றுவதிலேயே மாட்சிமை என்பது கிடையாது; அப்படியிருக்கும்போது அதன் விளைவால் அடையும் பயனில் எப்படிப் பெருமை கிடைக்கும்?
ஆக்கம் என்ற சொல் செல்வம் மட்டும் குறிக்காமல் பதவி, பெயர், புகழ் போன்றவற்றையும் குறிப்பதாம்.
பிறர் பொருளைக் கவர்தலால் வரும் ஆக்கம் இன்பம் தராது; தான் செய்த குற்றம் வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக இன்ப நுகர்ச்சி தடைப்படும். அகப்பட்டுழி துன்பம். பிறர் பொருளை வௌவித் தான் துய்த்தாலும் பிறர்க்கு நன்மை செய்தாலும், அந்த மகிழ்ழ்ச்சியும் உண்மையான மகிழ்ச்சியாயிராது. அவன் செய்த நன்மையால் வரும் புகழும் பேறும் பொருளுடையானையும், பழியும் துன்பமும் வெஃகுதல் செய்தானையும் சென்று சேரும். இதனால் பயன் மாண்டற்கு அரிதாம் எனப்பட்டது.
குற்றம் செய்து கவரப்பட்ட பொருளாதலால் பொருளை அடைந்தவன் மனத்தில் அது எப்போதும் உறுத்திக்கொண்டே இருக்கும். நிறைவான உள்ளத்துடன் துய்க்க முடியாதாதலால் அதன் பயன் இல்லாமல் போய்விடும். தான் செய்த தவறு வெளியார்க்குத் தெரிந்து கவர்ந்த பொருளை அரசோ மற்றவரோ எடுத்துச் சென்றுவிடுவார்களோ என்ற பயத்திலும் இருப்பான்.. மன அழுத்தம் உண்டாகி உடல்நலம் கெடும். அதனால் அப்பொருளின் பயன் அவன் எண்ணிய சுவையாக இருக்காது; அவன் நினைத்த இன்பம் பெறமாட்டான்; யாரிடமிருந்து பொருள்பறிக்கப்பட்டதோ அவருடனான உறவை இழக்கநேரிடும். அடுத்தவர் பொருள் மீது ஆசைப்படுவன் என்று அறிந்து அவனிடம் யாரும் நெருங்க மாட்டார்கள். உலகோர் அவனைத் தாழ்த்திப்பேசுவர்; புகழ் கெடும். எனவே பிறன் பொருளைக் கைப்பற்றிப் பெறும் பெருமையற்ற வளத்தை வேண்டாமையே நன்று என்கிறார் வள்ளுவர்.
இக்குறளுக்கு 'வெஃகிஆம் ஆக்கம் வேண்டற்க; அதனால் ஆகும் பயன் விளைவயின் மாண்டற்கு அரிது' எனவும். 'விளைவயின் பயன் மாண்டற்கரிதாம்' எனவும் இருதிறமாகப் பொருள் கொள்வர். விளைவையின் என்ற தொடர் பயன்படும் காலத்தில் அல்லது பயன்படுமிடத்து என்ற பொருள் தரும்.
|
'வெஃகியாம் ஆக்கம்' குறிப்பது என்ன?
'வெஃகியாம் ஆக்கம்' என்ற தொடர்க்குப் பிறர்பொருளை விரும்பிப் பெறுகின்ற ஆக்கம், பிறர் பொருளை அவாவிக்கொண்டு அதனால் ஆகின்ற ஆக்கம், நெறியின்றிப் பிறர்பொருளை விரும்பி மற்றதனால் ஆகும் ஆக்கம், பிறர்பொருள் மீது பேராசைப்பட்டு அதனால் அடைகின்ற செல்வம், பிறர்பொருள், பிறர் பொருளை வேண்டி அதனால் வரும் ஆக்கம், பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ளும் ஆசையினால் வரக்கூடிய செல்வம், பிறர் பொருளைக் கவர்வதால் உண்டாகும் நலம், பிறர்பொருளை விரும்பி அதனால் உண்டாகுஞ் செல்வம், பிறர் பொருளை விரும்பிக் கவர்வதனால் உண்டாகும் செல்வம், பிறர் பொருளை நச்சி அடைவதால் பெறும் நன்மைகள் என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
வெஃகியாம் ஆக்கம் என்பது வெஃகி ஆகும் ஆக்கம் என விரியும். வெஃகியாம் ஆக்கத்திற்குக் காட்டாக பிறரது நிலம்/வீடு ஆக்கிரமிப்பு, வாணிபத்தில் வாங்குவோர்/விற்போர் இவர்களை ஏமாற்றிப் (பிறர் பொருளையும் தம்போற் செய்யாதிருத்தல்) பெற்ற ஆதாயம், தொழிலில் நடுவுநிலைமை காக்காமல் ஈட்டிய செல்வம், கையூட்டு போன்ற முறையற்ற செயல்கள் மேற்கொண்டு பொருள் தொகுத்தல் முதலியனவற்றைக் கூறலாம். ஆக்கம் என்ற சொல்லுக்குச் செல்வம் என்றும் முன்னேற்றம் அல்லது மேன்மேல் உயர்தல் என்றும் பொருள் கூறுவர். செல்வத்தின் வளர்ச்சியைக் குறிப்பாதாகவும் கொள்வர். 'வெஃகியாம் ஆக்கம் வேண்டற்க' என்பது பிறர் பொருளைக் கவரஎண்ணி அதனாலுண்டாகும் தனது முன்னேற்றத்தையோ தனது செல்வத்தின் வளர்ச்சியையோ விரும்பாதொழிக' என்பது செய்தி.
'வெஃகியாம் ஆக்கம்' என்றது பிறர்பொருளை விரும்பிக் கைப்பற்றி அதனால் உண்டாகுஞ் செல்வம் எனப் பொருள்படும்.
|
பிறர் பொருளைக் கவர்வதனால் உண்டாகும் ஆக்கத்தை விரும்ப வேண்டா; நுகருங்கால் அவ்வாக்கத்தின் பயன் நன்றாக இருக்காது என்பது இக்குறட்கருத்து.
பெருமைதரும் முன்னேற்றம் காண வெஃகாமை வேண்டும்.
பிறர் பொருளைக் கவர்வதால் வரும் ஆக்கத்தை விரும்ப வேண்டாம்; அதனால் வரும் விளைவு பொல்லாதது.
|