இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0172



படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்

(அதிகாரம்:வெஃகாமை குறள் எண்:0172)

பொழிப்பு (மு வரதராசன்): நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.

மணக்குடவர் உரை: தமக்குப் பயனுண்டாக வேண்டிப் பழியொடுபடுவன செய்யார், நடுவன்மைக்கு நாணுபவர்.
இது நடுவுநிலைமை வேண்டுபவர் செய்யாரென்றது.

பரிமேலழகர் உரை: படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் - பிறர் பொருளை வெளவினால் தமக்கு வரும் பயனை விரும்பி, அது வெளவுதற்குப் பழியின்கண்ணே படுஞ்செயல்களைச் செய்யார்; நடுவு அன்மை நாணுபவர் - நடுவு நிலைமை அன்மையை அஞ்சுபவர்.
('நடுவு' ஒருவன் பொருட்குப் பிறன் உரியன் அல்லன் என்னும் நடுவு.)

வ சுப மாணிக்கம் உரை: கொள்ளை விரும்பிக் கூடாதன செய்யார் நேர்மைக்கு அஞ்சும் பெரியவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நடுவன்மை நாணுபவர் படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்.

பதவுரை: படு-பெரும்; பயன்-நன்மை; வெஃகி-விரும்பி; பழிப்படுவ-பழி உண்டாக்கக் கூடியன; செய்யார்-செய்யமாட்டார்கள்; நடுவுஅன்மை-நேர்மையற்ற தன்மை, நடுவு அல்லாமை; நாணுபவர்-அஞ்சுபவர், வெட்கப்படுபவர்.


படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்குப் பயனுண்டாக வேண்டிப் பழியொடுபடுவன செய்யார்; [பழியொடுபடுவன - பழியொடு பொருந்துவன]
பரிதி: செல்வத்தால் வரும்பயனை நாடித் தன்மம் அல்லாத காரியத்தைச் செய்யார்;
காலிங்கர்: பெரும்பொருட் பயனை விரும்பி மற்றஇது காரணமாகப் பழியுண்டாவன செய்யார் யாரோ எனில்;
பரிமேலழகர்: பிறர் பொருளை வெளவினால் தமக்கு வரும் பயனை விரும்பி, அது வெளவுதற்குப் பழியின்கண்ணே படுஞ்செயல்களைச் செய்யார்; [வெளவினால்-கவர்ந்தால்]

'தமக்குப் பயனுண்டாக வேண்டிப் பழியொடுபடுவன செய்யார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தமக்கு வரும் பெரும் பயனை விரும்பிப் பழிக்குரிய செயல்களைச் செய்ய மாட்டார்', 'அப்போதைக்கு வருகிற நன்மைகளை மட்டும் கருதி பிறர் பொருளைக் கவர ஆசைப்பட்டு பழிச் சொல்லுக்கு ஆளாகக் கூடிய குற்றங்களைச் செய்யமாட்டார்கள்', 'பிறர்பொருளைக் கவருவதால் உளதாம் பயனை விரும்பிப் பழியொடு பொருந்திய செயல்களைச் செய்யமாட்டார்', 'கவரும் பொருளால் உண்டாகும் பயனை விரும்பிப் பழியுண்டாகும் செயல்களைச் செய்யார்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பெரும் பயனை விரும்பிப் பழிக்குரிய செயல்களைச் செய்ய மாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.

நடுவன்மை நாணு பவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நடுவன்மைக்கு நாணுபவர்.
மணக்குடவர் குறிப்புரை: இது நடுவுநிலைமை வேண்டுபவர் செய்யாரென்றது.
பரிதி: நடுவுநிலைமையை உறுதியாகப் பிடித்தவர் என்றவாறு.
காலிங்கர்: தமது நெறியின்கண் ஏற்றத்தாழ்வின்றி ஒத்துவரும் பொருளல்லாமையை நாணும் இயல்புடையார் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: அன்மை என்பது அல்லாமை ஆயிற்று.
பரிமேலழகர்: நடுவு நிலைமை அன்மையை அஞ்சுபவர்.
பரிமேலழகர் குறிப்புரை: 'நடுவு' ஒருவன் பொருட்குப் பிறன் உரியன் அல்லன் என்னும் நடுவு. [நடுவு-நீதி]

'நடுவு நிலைமை அன்மையை நாணும் இயல்புடையார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நடுவு நிலைமையினின்றும் தவறுதலுக்கு நாணும் பெரியோர்', 'அநியாயம் செய்ய அஞ்சுகின்றவர்கள்', 'முறை இன்மைக்கு அஞ்சுபவர்', 'நடுவு நிலைமை தவறி நடப்பதை அஞ்சுபவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நடுவு நிலைமை அல்லாமையை நாணுபவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நடுவு நிலைமை அல்லாமையை நாணுபவர், படுபயன் விரும்பிப் பழிக்குரிய செயல்களைச் செய்ய மாட்டார் என்பது பாடலின் பொருள்.
'படுபயன்' குறிப்பது என்ன?

எத்துணைப் பயன் தருவதானாலும் பிறர்பொருளைப் பறிக்க நினைக்க வேண்டாம்.

நேர்மை தவற அஞ்சுவோர் தமக்கு மிகுதியான பயன் உண்டாகும் என்று கருதிப் பழிக்குரிய செயல்களைச் செய்ய மாட்டார்கள்.
பிறன் உடைமை கவர்வதால் சில நேரங்களில் பொருள் அளவில் கொள்ளைப் பயன் உண்டாகலாம். அந்த நிலையிலும் பழிக்குரிய செயல்களைச் செய்யமாட்டார்கள் நேர்மையை விடாது கடைப்பிடிப்பவர்கள். அதிகாரம் வெஃகாமை ஆதலால் பழிக்குரிய செயல் என்பது பிறர் பொருளை முறையற்றுக் கவர நினைப்பதைக் குறிப்பதாகும். நடுவு நிலை தவறி பிறர் உடைமைகளைக் கவர நினைப்பதால் பெரும் இழிவு உண்டாகும்; அந்த இழிவால் நாணவேண்டி வருமே என்று கருதுபவர்கள் பிறர் பொருளை வெஃகமாட்டார்கள்.

பிறர் எவருடைய பொருளையும் வௌவி எவ்வாறோ செல்வராய் ஆகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வவ்வுதல் என்பது தனக்குரிமையில்லாத ஒன்றை தனக்குரியதாக்கிக் கொள்ள விழைதல். நடுவுநிலையன்மையை நாணுபவர் அவ்விதம் பழிப்படும் செயல்களைச் செய்து ஆக்கம் தேடுவதை நாடமாட்டார்கள். பிறர் பொருளான் தமக்கு வரும் பெரும்பயனைக் கருதிப் பழிப்படுவ செய்யார் எனின், பழிபடாத செயல்களைச் செய்து கவரலாம் என்பது கருத்தன்று. வௌவுதலே பழிக்குரியதொன்றாம்.
'நடுவன்மை நாணுபவர்' என்றதற்குக் காலிங்கர் 'தமது நெறியின்கண் ஏற்றத்தாழ்வின்றி ஒத்துவரும் பொருளல்லாமையை நாணும் இயல்புடையார்' என உரை தந்தார். இது தம் வாழ்க்கை நெறியில் ஒரே சீரான பொருள்வளமின்றி இருந்தவர் பிறர் பொருளை முறையற்றுக் கைப்பற்றி இப்பொழுது வளம் பெற்றதால் 'இது எங்ஙனம் வந்தது?' எனப் பிறர் கூறும் பழிக்கு வெட்கப்படுபவர் எனப் பொருள்படும்.
'நடுவு' என்பதற்கு 'தமவும் பிறவும் ஒப்ப நாடிப் பிறவுந் தம்போற் பேணுதல்' என விளக்கம் தருவார் தேவநேயப் பாவாணர். தம்முடைய பொருளைப் பிறர் கவர்ந்தவழித் தாம் துன்பெய்துவது போல அவரும் எய்துவரே என்று எண்ணி எய்தச் செய்த பழி நம்மைச் சாருமே என்று பழிக்கு நாணுதல் என்னும் பொருள் தருவது இது.
உலகத்தார் பழித்துப் பேசுவார்களே என்று அஞ்சுபவர்கள் பிறர்பொருளால் தமக்கு எவ்வளவு பயன் உண்டாகுமென்றாலும் அப் பயனை விரும்பிப் பழியின் பாற்படும் தீச்செயல்களைச் செய்ய மாட்டார்கள்.

'படுபயன்' குறிப்பது என்ன?

'படுபயன்' என்றதற்குத் தமக்கு உண்டாகும் பயன், செல்வத்தால் வரும்பயன், பெரும்பொருட் பயன், தமக்கு வரும் பயன், கொள்ளை, பெரும் பயன், அப்போதைக்கு வரக்கூடிய நன்மை, பெருத்த பொருட்பயன், பெறக்கூடிய நன்மை என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

படுபயன் என்பதற்கு உண்டாகும் அல்லது வருகிற பயன் என்று பொருள் கொண்டு பலரும் உரை செய்தனர். படு என்பதற்கு மிகுதியான என்ற பொருளும் உண்டு. வ சுப மாணிக்கம் இத்தொடர்க்குக் 'கொள்ளை' எனப் பொருள் கூறுவார். காலிங்கரும் இன்றைய உரையாசிரியர்களில் சிலரும் பெரும்பயன் எனப் பொருள் கொண்டு உரைத்தனர். உண்டாகும் பயன் என்பதைவிட பெரும்பயன் என்பதுவே பொருத்தமாகத் தோன்றுகிறது. அதாவது எவ்வளவு பெரிய பயன் உண்டானாலும் பழிதரும் செயல்களைச் செய்யார் என்பதைக் குறிக்க பெரும் பயன் என்று சொல்லப்பட்டது.

'படுபயன்' என்றதற்குப் பெரும்பயன் என்பது பொருள்.

நடுவு நிலைமை அல்லாமையை நாணுபவர், பெரும் பயனை விரும்பிப் பழிக்குரிய செயல்களைச் செய்ய மாட்டார் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பிறர் பொருள் வெஃகாமை நடுவுநிலை உறுதிஉள்ளவர்க்கு உண்டு.

பொழிப்பு

நேர்மை அல்லாதவற்றிற்கு நாணுபவர் மிகுதியான பயன் விரும்பிக் கூடாதன செய்யமாட்டார்.