அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அருளை விரும்பி யறனெறியிலே நின்றவனும்;
பரிதி: முத்தியை விரும்பித் தன்மநெறியிலே நின்றார்;
காலிங்கர்: தமது அறிவினால் 'நமக்குவரும் இன்பம் துன்பம் அனைவர்க்கும் ஒக்கும்' என்று அருளுவதோர் அருளினையே விரும்பி நூல் சொல்லுகின்ற வழிநின்றவர்;
பரிமேலழகர்: அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்; [அருளாகிய அறம் - துறவறம்]
பரிமேலழகர் குறிப்புரை: இல்லற நெறியில் அறிவு முதிர்ந்துழி அல்லது துறக்கப் படாமையின், அதனைத் துறவறத்திற்கு 'ஆறு' என்றார்.
'அருளை விரும்பி அறனெறியிலே/நூல் சொல்லுகின்ற வழி/இல்லறத்தின்கண் நின்றவன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அருளை நாடி உரிய வழியில் நிற்பவன்', 'அருளை விரும்பி அதற்குரிய அறத்தில் நின்றவன்', 'கருணையை விரும்பி இல்லற ஒழுக்கத்தின் நெறி கடக்காமல் இருக்கவென்றே இல்வாழ்க்கை நடத்துகிறவன்', 'அருள் ஒழுக்கத்தை விரும்பி நன்னெறியில் நிற்கின்றவன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அருளை விரும்பி நல்வழியின்கண் நின்றவன் என்பது இப்பகுதியின் பொருள்.
பொருள்வெஃகி பொல்லாத சூழக் கெடும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக் கெடுவன்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அருளுடையானுங் கெடுவனென்றது.
பரிதி: பொன்னாசையை விரும்பி, மனத்தில் அழுக்குடையராகில் கெடுவார் என்றது.
காலிங்கர்: முறைமையின்றிப் பிறனது பொருளை விரும்பி, மற்று அது காரணமாகப் பொல்லாதனவற்றை நினைப்பக் கெடுவர் என்றவாறு.
பரிமேலழகர்: பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்ற நெறிகளை எண்ணக் கெடும்.
பரிமேலழகர் குறிப்புரை: கெடுதல்: இரண்டு அறமும் சேர இழத்தல். 'சூழ்ந்த துணையானே கெடும்' எனவே, செய்தால் கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது. [இரண்டறமும் - இல்லறமும் துறவறமும்; சூழ்ந்த துணையானே - நினைத்த அளவிலே]
'பொருளை விரும்பி குற்ற நெறிகளை எண்ணக் கெடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிறர் பொருளைக் கவர நினைப்பின் கெடுவான்', 'பிறர் பொருளை விரும்பித் தீய நெறிகளை எண்ணுவானாயின் கெடுவான்', 'பொருளின் மேல் வைத்த ஆசையினால கெட்ட காரியங்களைச் செய்ய நினைப்பானாயின் இல்லறம் கெட்டுப் போகும்', 'பிறர் பொருளை விரும்பித் தீய வழிகளைப் பற்ற எண்ணுவானாயின், அவன் கெட்டு ஒழிவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பிறர் பொருளை விரும்பி அதைக் கவரப் பொல்லாத செயல்களை எண்ணக் கெடுவான் என்பது இப்பகுதியின் பொருள்.
|