இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0175



அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்

(அதிகாரம்:வெஃகாமை குறள் எண்:175)

பொழிப்பு (மு வரதராசன்): யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?

மணக்குடவர் உரை: நுண்ணிதாகப் பரந்த அறிவுடையானாயினும் அதனாற் பயன் யாதாம்? எல்லார் மாட்டும் பொருளை விரும்பி யீரமில்லாதன செய்வனாயின்.
இஃது அறிவுடையார் செய்யாரென்றது.

பரிமேலழகர் உரை: அஃகி அகன்ற அறிவு என்னாம் - நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்; வெஃகியார் மாட்டும் வெறிய செயின் - பொருளை விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின்.
('யார்மாட்டும் வெறிய செய்த'லாவது தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன், அவை செய்யாமையாகலின் 'அறிவு என்னாம்' என்றார்.)

இரா சாரங்கபாணி உரை: எவரிடத்தும் பொருளை விரும்பி வெறிச் செயல்களைச் செய்தால் நுட்பமான விரிந்த அறிவினால் என்ன பயன்?


பொருள்கோள் வரிஅமைப்பு:
அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்.

பதவுரை: அஃகி-நுண்ணியதாய, கூர்த்த; அகன்ற-விரிந்த (எல்லா நூல்களிலும் சென்ற); அறிவு-அறிவு, உணர்வு; என்னாம்-என்ன ஆகும், என்னத்துக்கு; யார்மாட்டும்-எவரிடத்திலும், எல்லாரிடத்தும்; வெஃகி-கவர விரும்பி; வெறிய-அறிவொடுபடாத செயல்கள்; செயின்-செய்தால்..


அஃகி அகன்ற அறிவுஎன்னாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நுண்ணிதாகப் பரந்த அறிவுடையானாயினும் அதனாற் பயன் யாதாம்?
பரிதி: குறையாமல் நிறைந்த அறிவுடைமை ஏதாம்?
காலிங்கர்: சான்றோர்க்குக் கல்விமிகுதியாகி, அச்சிறந்த அறிவினால் நுண்ணிதாய்ப் பரந்த உணர்வு கொண்டு என்ன பயன் உளதாம்?;
பரிமேலழகர்: நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்?;
பரிமேலழகர் குறிப்புரை: அறிவிற்குப் பயன், அவை செய்யாமையாகலின் 'அறிவு என்னாம்' என்றார்.

'நுண்ணிதாகப் பரந்த அறிவுடையானாயினும் அதனாற் பயன் யாதாம்?' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நுணுகிப் பரந்த அறிவால் பயன் என்ன?', 'கூர்ந்து கவனித்துக் கல்வி கற்று விரிவடைந்த அறிவு யாரிடத்தில் இருந்தாலும்', 'அவன் நூல்களை எல்லாம் நுணுகி ஆராய்ந்து பெற்ற விரிந்த அறிவினால் ஆகிய பயன் யாது?', 'நுண்ணியதாய், எல்லா நூல்களிலும் சென்ற பரந்த அறிவு என்ன பயனைத் தரும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நுண்ணியதாய் விரிவடைந்த அறிவு இருந்து எதற்காம்? என்பது இப்பகுதியின் பொருள்.

யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லார் மாட்டும் பொருளை விரும்பி யீரமில்லாதன செய்வனாயின். [ஈரமில்லாதன-இரக்கமற்ற கவரும் செயல்களை]
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறிவுடையார் செய்யாரென்றது.
பரிதி: பிறர் செல்வத்தை விரும்பிப் பாவத்தையே தேடுவானாகில் என்றவாறு.
காலிங்கர்: தமக்கு மரபினால் வரும் ஆக்கமன்றி மற்றும் யாவர்மாட்டும் அவரவரது பொருளில் விரும்பி அதற்காகப் பிறர் வெருவத்தக்கன செய்வாராயின். [வெருவத்தக்கன-அஞ்சத்தக்கன]
பரிமேலழகர்: பொருளை விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின்.
பரிமேலழகர் குறிப்புரை: 'யார்மாட்டும் வெறிய செய்த'லாவது தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல். [வெறிய-மயக்கத்தோடு கூடிய செயல்கள்]

'பொருளை விரும்பி எல்லார் மாட்டும் ஈரமில்லாதன/பாவம்/வெருவத்தக்கன/அறிவோடு படாத செயல்களைச் செய்வனாயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எவர்பொருளையும் நச்சிக் கொடுமை செய்தால்', 'அவர்கள் பிறருடைய பொருளைக் கவர ஆசை வைத்து வெறி பிடித்த செயல்களைச் செய்வார்களானால் அறிவு என்ன பயனுடையதாகும்?', 'பொருளை விரும்பி யாவரிடத்திலும் அறிவில்லாத செயல்களைக் கற்றவன் ஒருவன் செய்தான் ஆயின்', 'பொருளை விருமபி எவரிடமும் அறிவொடு படாத வெறிச் செயல்களைச் செய்வாராயின்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பொருளை விரும்பி யாவர் மாட்டும் கொடுமை செய்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொருளை விரும்பி யாவர் மாட்டும் வெறிய செய்தால் நுண்ணியதாய் விரிவடைந்த அறிவு இருந்து எதற்காம்? என்பது பாடலின் பொருள்.
'வெறிய' என்ற சொல் குறிப்பது என்ன?

என்ன அறிவு இருந்தென்ன? தனக்கு உரியதல்லாத பொருளை வெறித்தனமாக வேட்டையாடுகின்றானே!

பொருள் கவர விரும்பி யார் எவர் என்று பாராமல் பொருந்தாத செயல்களை ஒருவன் செய்வானாயின், அவனது நுணுகி விரிந்த அறிவால் என்னஆகும்?
பொருளில்லாத வறியவர்கள் மட்டுமன்றி நுட்பமான விரிந்த அறிவைப் பெற்ற மக்களும் கூடப் பிறர் பொருளை வெஃகினால் அவர் பெற்ற அறிவு என்னத்துக்குத்தான் ஆகும்? எனக் கேட்கிறார் வள்ளுவர்.
மாந்தருள் அறிவு படைத்தோர் என்று சொல்லப்படுபவர் பிறருக்கு எடுத்துக்காட்டாகவும் ஏனையோரைவிட அறங்களை நன்கு பேணுபவராகவும் இருப்பர் என்று கருதப்படுவர். ஆனால் அவர்களிலும் அழுக்குற்று முறையற்ற வழிகளில் பொருள்திரட்ட அலைகின்றவர்களும் இருக்கின்றனர். இயல்பான அறிவும் கல்வியும் உடையோரிடமிருந்து நல்லியல்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. பிறர் பொருளை விரும்புதல் கூடாது எனக் கூறி அந்த அறிவு தடுக்கவேண்டும். ஆனால் கல்வி, கேள்வியால் நல்ல அறிவுச் செல்வம் பெற்றவர்கள்கூடப் பொருள் வேட்கையால் பேதையர்போல் குற்றப்பட்டு பிறர் உடைமைகளைக் கவர முயல்கின்றனர். தனக்கு உரியதல்லாத பொருளைக் கைப்பற்றுவதற்காக சட்டத்தின் பலவீனமான இடுக்குகளைப் பயன்படுத்தியோ, அறமல்லாத செயல்கள் மூலமோ, அவர்தம் கூர்த்த அறிவையெல்லாம் செலவிடுவதைக் காண்கின்றோம். தாம் விரும்பிய பொருளைப் பெறுவதற்காக இரக்கமற்ற வெறிச் செயல்களைச் செய்யவும் தயங்குவதில்லை. எவருடைய பொருளையும் வௌவி எவ்வாறோ செல்வராய் ஆகிவிட நினைக்கின்றனர். இவ்வாறு பழிப்புக்குரிய செயல்களுக்காகவா அவர்கள் தமது நுண்ணிய பரந்த அறிவைப் பயன்படுத்த வேண்டும்?

'யார்மாட்டும் வெறிய செயின்' என்றது நல்லவர்-கெட்டவர், சிறியவர்-பெரியவர், இளையார்-மூத்தார், ஆடவர்-பெண்டிர், பிணியர், வறியர், செல்வர் என்னும் வேறுபாடு பாராமல் அஞ்சத்தக்க, இழிந்த, கொடிய செயல்களைச் செய்து கிடைத்ததைக் கைப்பற்றுதலைச் சொல்வது. நல்ல கல்வி அறிவு பெற்ற கணக்காயர், மருத்துவர் போன்றோரும் அறிவழிந்தவர் போல பெருநகரங்களிலுள்ள பல்பொருள் அங்காடிகளில் பொருட்களைக் கவர்ந்து கொள்ளும்போது கண்காணித் தொலைக்காட்சியில் (CCTV Camera) அகப்பட்டு இழிவுபடுவது நாளும் நாம் கேள்விப்படும் செய்தி.
ஒருவர் தாம் விரும்பிய பொருள் நேர்வழிகளில் கிடைக்கவில்லையெனின் விரைவில் அப்பொருளை எவ்வாறாயினும் அடைய வேண்டும் என்று எண்ணாமல் அதை மறந்து விடவேண்டும்.

இக்குறளில் வினவியது போன்று 'அறிவிருந்து என்ன பயன்' என்று மற்ற சில இடங்களிலும் கேட்டுள்ளார் வள்ளுவர். கற்றதனால் ஆய பயனென்கொல்? வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். (குறள் 2 பொருள்: இறைவன் தாள் நினையாத அறிவினால் என்ன பயன் இருக்கிறது?) என்றும் அறிவினால் ஆகுவ துண்டோ? பிறிதின்நோய் தம்நோய்போல் போற்றாக் கடை (குறள் 315 பொருள்: அறிவதற்கு பிறருடைய துன்பங்கண்டு உருகுவதற்குத் துணையாக நிற்காத அறிவினால் என்ன ஆகப்போகிறது) என்றும் சினந்து வினவுவார். இங்கு பிறர் பொருளை விரும்பி வெறித்தனமாக நடந்துகொள்கிறான் என்றால் அவன் பேரறிவு வாய்க்கப் பெற்றிருந்தும் என்ன பயன்? எனச் சுடுநடையில் கேட்கிறார். சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு (அறிவுடைமை 422 பொருள்: உள்ளத்தை அது போன போக்குகளிற் செல்லவிடாமல், தீமையினின்று நீக்கி நன்மையின்கண் செலுத்துவதே அறிவாகும்) எனப் பிறிதோரிடத்தில் குறள் குறிக்கும்.

'வெறிய' என்ற சொல் குறிப்பது என்ன?

'வெறிய' என்ற சொல்லுக்கு ஈரமில்லாதன, பாவமாயின, வெருவத்தக்கன, அறிவொடுபடாத வெறிச்செயல்கள், அற்பச் செயல்கள், பொருந்தாதன, வெறுக்கத்தக்க செயல்கள், கொடுமை, வெறிச் செயல்கள், வெறியான செயல்கள், அறிவில்லாத செயல்கள், அருவருக்கத்தக்க, அறிவொடு படாத/பொருந்தாத வெறிச்செயல்கள், அறிவற்ற நேர்மையற்ற என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

‘வெறிய’ என்பதற்கு வெறியான செயல்கள்-வெறிபிடித்த செயல்கள் என்று வழக்குச் சொல்லால் கூறப்பட்ட பொருள் சிறப்பானதாகிறது.
உலகத்துப் பொருள் எல்லாம் தனக்கே உரித்தாக வேண்டும் எனத் திட்டமிட்டுச் செல்வம் குவிக்க அறிவொடு படாத செயல்களை நன்கு கற்றவர்களும் செய்கிறார்கள். அறிவிழந்த செயல்கள் வெறிய செயல்களாம். நாகை செ தண்டபாணிப்பிள்ளை 'மயக்கத்தோடு கூடிய செயல்களைச் செய்தல். வெறியாவது கலக்கம், தீயன செய்தல் கலங்கிய அறிவினால் அன்றித் தெளிந்த அறிவினால் அன்றாதலால் தீயவற்றை ‘வெறிய' என்றார்' என விளக்கந்தருவார்.

‘வெறிய’ என்ற சொல் அஞ்சத்தக்க, கொடிய எனப் பொருள்படும்.

பொருளை விரும்பி யாவர் மாட்டும் கொடுமை செய்தால் நுண்ணியதாய் விரிவடைந்த அறிவு இருந்து எதற்காம்? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கிட்டாதாயின் வெட்டென மற என்னும் வெஃகாமை அறிவு வேண்டும்.

பொழிப்பு

எவர் பொருளையும் விரும்பிக் கொடுமை செய்தால் நுணுகிய விரிந்த அறிவிருந்து எதற்காகும்?