இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0173சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்

(அதிகாரம்:வெஃகாமை குறள் எண்:0173)

பொழிப்பு: அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.

மணக்குடவர் உரை: சிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார் பேரின்பமாகிய வீடுபேற்றைக் காமிப்பவர்.
இது வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது.

பரிமேலழகர் உரை: சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் - பிறர்பால் வெளவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அவர் மாட்டு அறன் அல்லாத செயல்களைச் செய்யார்; மற்று இன்பம் வேண்டுபவர் - அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தை காதலிப்பவர்.
['பாவத்தான் வருதலின் அப்பொழுதே அழியும்' என்பார், 'சிற்றின்பம்' என்றார். 'மற்றையின்பம்' என்பது 'மற்றின்பம்' என நின்றது.]

வ சுப மாணிக்கம் உரை: சிறுநலத்தை விரும்பிக் கொடியவை செய்யார் பெருநலத்தை நாடுபவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டுபவர்.


சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே:
பதவுரை: சிற்றின்பம்-விரைந்து அழியும் இன்பம்; வெஃகி-விரும்பி; அறன்-நல்வினை; அல்ல-ஆகாதவைகள்: செய்யாரே-செய்யமாட்டார்களே.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார்;
பரிதி: அழிகின்ற சிற்றின்பத்தை ஆசைப்பட்டு மறுமைக்கு முத்தி தருகின்ற தன்மத்தை விடார்;
பரிமேலழகர்: பிறர்பால் வெளவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அவர் மாட்டு அறன் அல்லாத செயல்களைச் செய்யார்;
பரிமேலழகர் குறிப்புரை: 'பாவத்தான் வருதலின் அப்பொழுதே அழியும்' என்பார், 'சிற்றின்பம்' என்றார்.

'சிற்றின்பமாகிய பொருளை விரும்பி/அழிகின்ற சிற்றின்பத்தை ஆசைப்பட்டு/வெளவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறர் பொருளைக் கவர்வதால் வரும் நிலையற்ற சிற்றின்பத்தை விரும்பி அறமல்லாத தீய செயல்களைச் செய்யமாட்டார்கள்', 'உடனே கிடைக்கக் கூடிய சிற்றின்பத்துக்கு ஆசைப்பட்டுப் பிறருடைய பொருளைக் கவரும் தர்மமல்லாத காரியத்தைச் செய்ய மாட்டார்கள்', 'பிறர்பொருள் கவர்வதால் வரும் சிறுநயத்தைக் கருதிக் குற்றமான செயல்களைச் செய்ய மாட்டார்கள்', 'கவரும் பொருளால் அடையும் நிலையற்ற சிறிய இன்பத்தை விரும்பி அறத்தோடு படாத செயல்களைச் செய்யார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கவரும் பொருளால் அடையும் சிறுநலத்தை விரும்பி அறமல்லாத செயல்களைச் செய்யமாட்டார்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றின்பம் வேண்டு பவர்:
பதவுரை: மற்றின்பம்-பிறிதொன்றாகிய இன்பம்; வேண்டுபவர்-விரும்புபவர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பேரின்பமாகிய வீடுபேற்றைக் காமிப்பவர். [காமிப்பவர்-விரும்புபவர்]
மணக்குடவர் குறிப்புரை: இது வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது.
பரிதி: பரலோகத்தை இச்சிப்பவர் என்றவாறு. [இச்சிப்பவர்-விரும்புபவர்]
பரிமேலழகர்: அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தை காதலிப்பவர்.
பரிமேலழகர் குறிப்புரை: 'மற்றையின்பம்' என்பது 'மற்றின்பம்' என நின்றது.

'பேரின்பமாகிய வீடுபேற்றை/பரலோகத்தை/நிலையுடைய இன்பத்தை விரும்புபவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறத்தால் வரும் நிலைத்த இன்பத்தை விரும்புபவர்கள்', 'பேரின்பத்தை விரும்புகிறவர்க்ள்', 'அறத்தால் வரும் நிலையான இன்பத்தை விரும்புகின்றவர்கள்', 'நிலையான பேரின்பத்தை விரும்புபவர்கள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அறத்தால் வரும் நிலையான நலத்தை நாடுபவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பெருமை தரும் இன்பத்தை விழைபவர் கவரும் பொருளால் உண்டாகும் சிற்றளவான இன்பத்தை விரும்பி அறமல்லாதனவற்றைச் செய்ய மாட்டார்.

அறத்தால் வரும் நிலையான நலத்தை நாடுபவர் கவரும் பொருளால் அடையும் சிறுநலத்தை விரும்பி அறமல்லாத செயல்களைச் செய்யமாட்டார்கள் என்பது பாடலின் பொருள்.
சிற்றின்பம்-மற்றின்பம் குறிப்பது என்ன?

வெஃகி என்ற சொல்லுக்கு விரும்பி என்பது பொருள். இங்கு பிறர் பொருளைக் கவர விரும்பி எனக் கொள்வர்.
அறனல்ல செய்யாரே என்ற தொடர் அறமல்லாதவற்றைச் செய்யமாட்டார் என்ற பொருள் தரும்.
வேண்டுபவர் என்ற சொல்லுக்கு விரும்புகின்றவர் என்று பொருள்.

நல்லின்பத்தை நாடுபவர்கள் பிறர் பொருளைக் கவர்வதால் கிடைக்கும் விரைந்தழியும் இன்பத்தை விரும்பி அறமற்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

சிற்றின்பம் குறுகிய கால எல்லையில் மட்டுமே இன்பமாக அமைவதைக் குறிப்பது அதாவது அது விரைந்து அழியத்தக்கது. இச்சிறுமை காலமும் அளவும் பற்றியது. மற்றின்பம் நீண்ட கால இன்பத்தைக் குறிக்கும். சிற்றின்பம் வெஃகி என்றது பிறர் பொருளை வௌவுதலால் வரும் குறுகிய இன்பத்தைச் சொல்கிறது. அறநெறியில் வரும் இன்பமோ பெருமைப்படத்தக்கது; நிலைத்து நிற்கக் கூடியது. பிறர் பொருளால் தாம் அடையக்கூடிய இன்பம நிலையில்லாதது. நிலையான இன்பத்தை விரும்புகின்றவர்கள் நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறமல்லாத முறையற்ற செயல்களைச் செய்ய மாட்டார்கள் என்கிறது இப்பாடல். அறத்தான் வருவதே இன்பம்... (குறள் 39) என்று முன்னரே பாயிர அதிகாரத்துள் ஒன்றான அறன்வலியுறுத்தலில் சொல்லப்பட்டது.

பிறர்க்குரிய பொருளைக் கவர்ர்ந்து இன்பம் துய்க்க எண்ணுவது இழிவானது. அதுபோன்ற எண்ணம், அறநெறியில் கிடைக்கின்ற உண்மையான மகிழ்ச்சியினைக் கொடுக்காது. அது பொருளைப் பறிகொடுத்தவர் வருத்தத்தில் வரும் இன்பமாகும். கைப்பற்றிய பொருளால் வரும் இன்பம் நீண்ட காலத்திற்கு வராது; அதனால் நிறைவான வாழ்வையும் கொடுக்க முடியாது; நன்மைகளும் அவ்வளவாக உண்டாகா; அப்பொருள் அனைத்தும் தமக்கும் வல்லவனால் பறித்துக் கொள்ளப்பட்டு விடும் என்பதும் உண்டு. நேர்மையாக ஈட்டிய பொருளே நிறைவான வாழ்வையும் நீடித்த இன்பத்தையும் தர வல்லது.

சிற்றின்பம் என்ற சொல்லை வள்ளுவரே முதன்முதலில் கையாண்டார்; இச்சொல்லுக்கேற்ப மற்றின்பம் என்ற சொல்லையும் தேர்ந்து குறளில் பயன்படுத்தினார்; வள்ளுவர்க்கு முன்னுள்ள இலக்கியங்களில் சிற்றில், மற்று என்னும் சொற்கள் இடம் பெற்றன; ஆனால் சிற்றின்பம், மற்றின்பம் போன்ற சொற்கள் இல்லை; எனவே இந்தக் குறளின்வழி இரண்டு வகையான புதிய சொல் வடிவங்கள் பெறப்பட்டன என்பர் சொல் ஆய்வாளர்.

சிற்றின்பம்-மற்றின்பம் குறிப்பது என்ன?

இவ்விருமைக்கு சிற்றின்பமாகிய பொருள்-பேரின்பமாகிய வீடுபேறு, அழிகின்ற சிற்றின்பம்- மறுமைக்கு முத்தி தருகின்ற தன்மம், நிலையில்லாத இன்பம்- நிலையுடைய இன்பம், சிறுபொழுது இன்பம்-சிறந்த இன்பம், சிறுநலம்-பெருநலம், நிலையற்ற சிற்றின்பம்-நிலைத்த இன்பம், சிறிய இன்பம்-மற்ற பெரிய இன்பம், உடனே கிடைக்கக் கூடிய சிற்றின்பம்-பேரின்பம், சிற்றளவாக உண்டாகும் இன்பம்-நிலையான இன்பம், சிறுநயம்-நிலையான இன்பம், நிலையற்ற இன்பம்-நெடிது நிலைக்கும் இன்பம், சிறுது காலம் நிலைக்கும் இன்பம்-நிலையான இன்பம், நிலையில்லாத சிற்றளவான தீய இன்பம்-நிலையானதும் பேரளவினதுமான வேறு நல்லின்பம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் உரைத்தனர்.

சிற்றின்பம் நிலையற்றது என்றும் துய்க்கும்போது நன்றாக இருந்தாலும் இறுதியில் தீங்கைத்தருவது என்றும் கொடுக்கும் விலைக்குரிய மதிப்பற்ற வரவு என்றும் பொருள் கூறுவர். சிற்றின்பம் ஈண்டுச் சிறிதும் பெரிதுமாகப் பகுத்தோதியது ஐம்புல இன்பமே என்றும் அது பிறன்மனை நயத்தலையோ அல்லது காம இன்பத்தினையோ குறிப்பதல்ல என்றும் விளக்கினர். வெஃகிய பொருளால் விளைவன ஐம்புல இன்பங்களே; அவை சிறிது பொழுது நிற்பன; எனவே அது சிற்றின்பம். 'வெஃகிய பொருளால் விளையும் இன்பம், துய்க்கப்படுகின்ற காலத்திலேயே இப்பொருள் இன்னாரை ஏமாற்றிப் பெறப்பட்டது என்ற எண்ணம் தோன்றுகிறபோது, துன்பமாய்ச் சிற்றின்பத்தையும் இடைகிடைத்துன்பமாக்குதலின் கூறினர் என்பது சிறந்த கருத்தாகலாம். பிறன் பொருளாளைத் துய்க்கும்போது பல்வகை அச்சங்களிடையே துய்க்கப்பெறும் இன்பம் போல இது பல துன்பங்களுக்கிடையே துய்க்கப்பெறும் இன்பம் ஆதலால் சிற்றின்பம் எனப்பட்டது' என்பது தண்டபாணி தேசிகர் தரும் விளக்கம். விரைந்தழிவதால் சிற்றின்பம் என்ற விளக்கம் சிறந்தது. மற்றின்பம் என்பதற்குப் பொருள் கூறும்போது சிலர் வீட்டின்பமாகிய பேரின்பம் என்றும் பெரும்பான்மையினர் மற்றைய நிலையான இன்பம் அல்லது பெருமைப்படத்தக்க இன்பம் எனவும் குறித்தனர்.
மற்றை இன்பம் என்பதற்கு உழைப்பு, ஆற்றல் இவற்றால் கிடைக்கும் மகிழ்ச்சி, அன்பு காட்டுதல், அறசெயல்கள் ஆகியவற்றால் பெறும் இன்பம் போன்றவற்றைக் கூறலாம்.

சிற்றின்பம்-மற்றின்பம் என்றதற்கு விரைந்தழியும் இன்பம்-நிலையான இன்பம் ன்பது பொருள்.

அறத்தால் வரும் நிலையான நலத்தை நாடுபவர் கவரும் பொருளால் அடையும் சிறுநலத்தை விரும்பி அறமல்லாத செயல்களைச் செய்யமாட்டார்கள் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பிறர் பொருள் வெஃகாமை பெருநலம் விரும்புவார் செயல்.

பொழிப்பு

அறத்தால் வரும் பெருநலத்தை விரும்புபவர்கள் பிறர் பொருளைக் கவர்வதால் வரும் சிறுநலத்தை விரும்பி அறமல்லாதவற்றைச் செய்யமாட்டார்கள்.