இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0180இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு

(அதிகாரம்:வெஃகாமை குறள் எண்:180)

பொழிப்பு: விளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.

மணக்குடவர் உரை: விசாரியாதே பிறர் பொருளை விரும்புவானாயின் அது கேட்டைத் தரும். அதனை வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத்தைத்தரும்.
இஃது உயிர்க்குக் கேடு தருமென்றது.

பரிமேலழகர் உரை: எண்ணாது வெஃகின் இறல் ஈனும் - பின் விளைவது அறியாது ஒருவன் பிறன் பொருளை வெளவக் கருதின், அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் - அப்பொருளை வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும்.
[பகையும் பாவமும் பெருக்கலின் 'இறல்ஈனும்' என்றும், அப்பொருளை வேண்டி உழல்வோர் யாவரையும் கீழ்ப் படுத்தலின், 'விறல்ஈனும்' என்றும் கூறினார். 'செருக்கு' ஆகு பெயர். இதனான் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.]

சி இலக்குவனார் உரை: பின்வரும் தீங்கை நினையாது பிறர் பொருளைக் கவர விரும்பின் அழிவு உண்டாகும்; பிறர் பொருளை விரும்பாமை என்னும் உயர் எண்ணம் வெற்றியைத் தரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எண்ணாது வெஃகின் இறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு விறல்ஈனும் .


இறல்ஈனும் எண்ணாது வெஃகின்:
பதவுரை: இறல்-அழிவு; ஈனும்-பயக்கும்; எண்ணாது-(பின்விளைவது) சிந்திக்காமல்; வெஃகின்-வௌவக் கருதினால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விசாரியாதே பிறர் பொருளை விரும்புவானாயின் அது கேட்டைத் தரும்;
மணக்குடவர் குறிப்புரை: இஃது உயிர்க்குக் கேடு தருமென்றது.
பரிதி: கேடாகிய விதனத்தைக் கொடுக்கும், பிறர் வாழ்வை ஆசைப்படுவானாகில்; [விதனம் - துன்பம்]
காலிங்கர்: எஞ்ஞான்றும் கேட்டினைத்தரும் இன்னாதனவற்றை விரும்புவானாயின்;
பரிமேலழகர்: பின் விளைவது அறியாது ஒருவன் பிறன் பொருளை வெளவக் கருதின், அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும்;

விசாரியாதே/பின் விளைவது அறியாது பிறர் பொருளை விரும்புவானாயின் அது கேட்டைத் தரும்/இறுதியைப் பயக்கும் என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் இன்னாதனவற்றை விரும்புவானாயின் என்று உரைத்ததால் அவர் எண்ணாது வெஃகின் என்பதற்கு 'இன்னாத வெஃகின்' எனப் பாடம் கொண்டிருப்பார் என்பர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பின்வருவது பாராமல் விரும்புவது அழிவு', 'பின் விளைவு அறியாது பிறர் பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவ்விருப்பம் அவனுக்கு இறுதியைத் தரும்', 'அதனாலுண்டாகும் நன்மை தீமைகளை எண்ணிப் பார்க்காமல் பிறருடைய பொருளைக் கவர ஆசை கொண்டால் கெடுதி உண்டாகும்', 'பின் விளைவதை நினையாமல் பிறர் பொருளை விரும்பினால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பின்வருவது அறியாமல் பிறர் பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவ்விருப்பம் அவனுக்கு அழிவைப் பயக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு:
பதவுரை: விறல்-வெற்றி; ஈனும்-கொடுக்கும்; வேண்டாமை-விரும்பாதிருத்தல்; என்னும்-என்கின்ற; செருக்கு-பெருமிதம்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனை வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத்தைத்தரும்.
பரிதி: அஃதன்றியிலே, போன சென்மாந்திரத்திலே விட்டதற்குத் தக்கதாகக் கூடுமென்று எண்ணுவானாகில், திருமாது வெற்றியைத் தரும் என்றவாறு. [சென்மாந்திரம்-மறுபிறப்பு; திருமாது - திருமகள்]
காலிங்கர்: இனி அஃதன்றித் தனக்கு எல்லாவென்றியையும் தரும் பிறர்பொருளை விரும்பாமையாகிய மனமகிழ்ச்சி என்றவாறு.
பரிமேலழகர்: அப்பொருளை வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: பகையும் பாவமும் பெருக்கலின் 'இறல்ஈனும்' என்றும், அப்பொருளை வேண்டி உழல்வோர் யாவரையும் கீழ்ப் படுத்தலின், 'விறல்ஈனும்' என்றும் கூறினார். 'செருக்கு' ஆகு பெயர். இதனான் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.

'வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத்தைத்தரும்' என்று மணக்குடவரும் 'முன்பிறவியில் விட்டதற்குத் தக்கதாகக் கூடுமென்று எண்ணுவானாகில் வெற்றியைத் தரும்' என்று பரிதியும் விரும்பாமையாகிய மனமகிழ்ச்சி எல்லாவென்றியையும் தரும் என்று காலிங்கரும் 'வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வேண்டாம் என்னும் பெருமிதம் வெற்றி', 'பிறர் பொருளை விரும்பாமை என்னும் பெருமிதம் வெற்றியைத் தரும்', 'அப்படி வரும் செல்வம் வேண்டாவென்று விலக்கிவிடும் பெருமை தர்ம பலத்தைக் கொடுக்கும்', 'அஃது அழிவைத் தரும். விரும்பாமையாகிய வீரம் நல்ல வெற்றியைத் தரும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிறர் பொருளை விரும்பாமை என்னும் பெருமிதம் வெற்றியைத் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பின்னர் உண்டாகப்போகும் விளைவுகளை எண்ணாமல் பிறர் பொருளைப் பறிக்க விரும்பினால் அழிவு நேரும்; அப்பொருளை விரும்பாமை என்னும் பெருமிதம் வெற்றியை நல்கும்.

பின்வருவது சிந்திக்காமல் பிறர் பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவ்விருப்பம் அவனுக்கு அழிவைப் பயக்கும்; பிறர் பொருளை விரும்பாமை என்னும் செருக்கு வெற்றியைத் தரும் என்பது பாடலின் பொருள்.
'செருக்கு' தரும் பொருள் என்ன?

இறல் என்ற சொல்லுக்கு அழிவு என்பது பொருள். இறுதி என்றும் கேடு என்றும் பொருள் கொள்வர்.
ஈனும் என்ற சொல்லுக்குப் பயக்கும் அல்லது தரும் என்று பொருள்.
எண்ணாது என்ற் சொல் சிந்திக்காமல் என்ற பொருள் தரும்.
வெஃகின் என்ற சொல் கவர விரும்பினால என்ற பொருள் தரும்.
விறல் என்ற சொல் வெற்றி என்ற பொருள் தருவது.
வேண்டாமை என்ற சொல் இங்கு வெஃகாமை அதாவது பிறர் பொருளைக் கவர விரும்பாமை எனப்பொருள்படும்.
என்னும் என்ற சொல் என்கின்ற எனப்படும்.

பின் விளைவுகளைச் சிந்திக்காமல் பிறர்பொருளைக் கவர விரும்பினால் அழிவு வரும்; அப்பொருளை விரும்பாமை பெருமிதத்தையும் வெற்றியையும் ஈட்டிக் கொடுக்கும்.

பின் உண்டாகப்போகும் குற்றங்களை நினையாமல் கண்மூடித்தனமாக மற்றவர் பொருளைக் கவர விரும்பினால் அழிவுநேரும். அதை விரும்பாமல் இருப்பதால் உள்ள பெருமை வெற்றியைத் தரும். பிறன் பொருளை வௌவக் கருதுகிறவன் அதனால் வரும் பழியையும், பகை அச்சங்களையும் எண்ணிப் பார்ப்பதில்லை. எண்ணாது கவர விரும்பின் அழிவு வரும். அழிவு என்பது கைப்பற்றப்பட்ட பொருளாலோ அல்லது பொருளைப் பறிகொடுத்தாராலோ ஏற்படலாம். அதேவேளை பிறர் பொருள் வேண்டாம் என்ற மனத்திண்மை உடையோருக்கு அவரது கொள்கைப் பிடிப்பு வெற்றியைப் பெற்றுத் தரும். வேண்டாம் என்பதே ஐம்புலன்களையும் ஆட்கொண்டதற்கான அடையாளமாகிறது; அவரது நடுவுநின்ற சிந்தனை வெற்றியைப் பெற்றுத் தரும்.
நாகை சொ தண்டபாணிப்பிள்ளை 'வெஃகுதல் அறம் பொருள் இன்பம் மூன்றையும் இழக்கச் செய்தலின் இறல் ஈனும் என்றும், வெஃகாதார்க்கு மனம் அடங்க அறமுதலிய மூன்றையும் ஆளுந் திறமுண்டாதலின் விறலீனும் என்றும் கூறினார்' என இக்குறட்கருத்தை விளக்குவார்.

'செருக்கு' தரும் பொருள் என்ன?

இக்குறளிலுள்ள 'செருக்கு' என்ற சொல்லுக்குப் பெருமிதம், மனமகிழ்ச்சி, செல்வம், மனத்திண்மை, வீரம், உயர் எண்ணம், மனஉறுதி, பெருங்குணம் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
ஓடும் மனத்தைத் தடுத்து நிறுத்துதலால், ஆசைப்படாத மனத்தை வேண்டாமை என்னும் செருக்கு (மனத்திண்மை) என்றார் என்றும் பிறர் பொருளை விரும்பாமையாகிய பெருங்குணம் ஒருவனுக்குச் செருக்கைத் தருதலின் செருக்கு என்றார் என்றும் விளக்கினர்.
செருக்கு என்பதற்குப் பெருமிதம் என்ற பொருள் பொருத்தமாக உள்ளது.

'செருக்கு' என்ற சொல்லுக்கு இங்கு பெருமிதம் என்று பொருள்.

பின்வருவது சிந்திக்காமல் பிறர் பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவ்விருப்பம் அவனுக்கு அழிவைத் தரும்; பிறர் பொருளை விரும்பாமை என்னும் பெருமிதம் வெற்றியைத் தரும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வெஃகாமை வெற்றியைத் தரும்.

பொழிப்பு

பின்வருவதைக் கருதாமல் பிறர்பொருளைக் கவர விரும்புவது அழிவு தரும்; விரும்பாமை என்னும் பெருமிதம் வெற்றியைக் கொடுக்கும்.