இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0171நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

(அதிகாரம்:வெஃகாமை குறள் எண்:0171)

பொழிப்பு: நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டு குற்றமும் அப்பொழுதே வந்து சேரும்.

மணக்குடவர் உரை: நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின் அதனானே குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமுமுண்டாம்,
இது சந்தான நாச முண்டாமென்றது.

பரிமேலழகர் உரை: நடுவு இன்றி நன்பொருள் வெஃகின் - 'பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன் அன்று' என்னும் நடுவு நிலைமை இன்றி, அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின்; குடி பொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் - அவ் வெஃகுதல் அவன் குடியைக் கெடச்செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும்.
(குடியை வளரச் செய்து பல நன்மையையும் பயக்கும் இயல்புபற்றி, வெஃகின் என்பார்.'நன்பொருள் வெஃகின்'என்றார், 'பொன்ற' என்பது 'பொன்றி' எனத் திரிந்து நின்றது. 'செய்து' என்பது சொல்லெச்சம்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: ஒருவன் முறையின்றிப் பிறரது நல்ல பொருளைக் கவர விரும்பினால் அவ்விருப்பம், அவனது குடியைக் கெடுத்துப் பலவிதக் குற்றங்களையும் அப்பொழுதே விளைவிக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்.


நடுவின்றி நன்பொருள் வெஃகின்:
பதவுரை: நடுவின்றி-நடுவுநிலைமை இல்லாமல்; நன்-ந்ல்ல; பொருள்-உடைமை; வெஃகின்-வௌவக் கருதினால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின்;
பரிதி: நடுவுநிலைமையை விட்டுப் பிறர்வாழ்வை விரும்புவானாகில்;
காலிங்கர்: நடுவுநிலைமைக்கு ஒத்த வழிபாடுடைய பொருளே பயனன்றித் தமக்கு மிகுதியாகப் பொருளை ஈட்டுதலை விரும்புவாராயின்;
பரிமேலழகர்: 'பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன் அன்று' என்னும் நடுவு நிலைமை இன்றி, அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: குடியை வளரச் செய்து பல நன்மையையும் பயக்கும் இயல்புபற்றி, வெஃகின் என்பார்.'நன்பொருள் வெஃகின்'என்றார்.

'நடுவு நிலைமை இன்றி, அவர் மிக்க பொருளை/நன்பொருளை ஒருவன் விரும்புவானாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நேர்மையின்றிப் பிறர்பொருளைக் கவர்ந்தால்', 'பிறர் நன்முறையில் ஈட்டிய பொருளை ஒருவன் நேர்மையின்றி விரும்பினால்', 'நியாயமில்லாமல் பிறருக்குச் சொந்தமான பொருளைக் கவர்ந்து கொள்ள இச்சை கொண்டால்', 'நடுநிலை இல்லாமல் பிறருடைய பொருளைக் கொள்ளக் கருதினால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நேர்மையின்றிப் பிறரது நல்லபொருளைக் கைக்கொள்ள விரும்பினால் என்பது இப்பகுதியின் பொருள்.

குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்:
பதவுரை: குடி-குடும்பம்; பொன்றி-அழிந்து; குற்றமும்-பிழையும்; ஆங்கே-அப்போதே; தரும்-கொடுக்கும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனானே குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமுமுண்டாம்,
மணக்குடவர் குறிப்புரை: இது சந்தான நாச முண்டாமென்றது.
பரிதி: குடிகெட்டு மிடியனாகிக் குற்றமும் வரும் என்றவாறு.
காலிங்கர்: மற்றிதனால் குற்றமாகிய ஏதம் வந்து குடிமரபும் பொன்றிப் பின்னும் அவ்வண்ணமே நரகத்தினையும் தரும்.
பரிமேலழகர்: அவ் வெஃகுதல் அவன் குடியைக் கெடச்செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'பொன்ற' என்பது 'பொன்றி' எனத் திரிந்து நின்றது. 'செய்து' என்பது சொல்லெச்சம்.

'அதனானே குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமுமுண்டாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் குற்றம் என்பதற்கு நரகம் எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உடனே குடியழிந்து குற்றங்கள் பெருகும்', 'அவ்விருப்பம் அவனது குடியை அழித்துப் பல குற்றங்களையும் அப்பொழுதே கொடுக்கும்', 'குடும்பத்துக்குக் கெடுதி வரும். வேறு குற்றங்களும் உண்டாகும்', 'குடியழிந்து குற்றமும் உண்டாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அது குடும்பத்தை அழித்துப் பல குற்றங்களையும் அப்பொழுதே உண்டாக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நேர்மை இல்லாமல் பிறருடைய நல்வழிப் பொருளை ஒருவன் கொள்ள விரும்பினால் அது அவன் குடியை அழித்துப் பழியையும் அப்பொழுதே தரும்.

நேர்மையின்றிப் பிறரது நல்லபொருளைக் கைக்கொள்ள விரும்பினால், அது குடும்பத்தை அழித்துப் பல குற்றங்களையும் அப்பொழுதே உண்டாக்கும் என்பது பாடலின் பொருள்.
'நன்பொருள்' குறிப்பது என்ன?

நடுவின்றி என்றதற்கு நேர்மை இல்லாமல் என்பது பொருள்.
வெஃகின் என்ற சொல் கவர்ந்து கொள்ள விரும்பினால என்ற பொருள் தரும்.
குடிபொன்றி என்ற தொடர்க்கு குடும்பம் அழிந்து என்று பொருள்.
குற்றமும் என்ற சொல் பழியும் எனப் பொருள்படும்.
ஆங்கே தரும் என்ற தொடர் அப்பொழுதே கொடுக்கும் என்ற பொருள் தருவது.

நேர்மையின்றி பிறர்பொருளைக் கைப்பற்றிக்கொள்ள விரும்பினால் அவனது குடிஅழிந்து தீராத பழியும் அப்பொழுதே உண்டாகும்.

பிறர் ஆக்கம் கண்டு அழுக்காறு கொள்வது இழுக்காறு என்று சென்ற அதிகாரத்தில் சொல்லப்பட்டது. பொறாமைப் படுவது போலவே பிறர் பொருளை கவர நினைப்பதும் குற்றம் என்கிறது இவ்வதிகாரத்துப் பாடல்கள்.
வெஃகல் என்ற சொல்லுக்கு விரும்புதல் என்று பொருள். இது இங்கு பிறர் பொருளுக்கு ஆசைப்படுதல் அல்லது தனக்கு உரியன வல்லாதனவற்றைப் பிறரிடமிருந்து கைப்பற்றிக் கொள்ள எண்ணுதலைக் குறிக்கும். அவ்விதம் பிறரின் நல்ல பொருளை நடுநிலை தவறி ஒருவன் பறித்துக்கொள்ள விரும்பினால், அவ்வெண்ணமே அவனது குடியைக் கெடுத்து, குற்றத்தையும் ஆங்கே விளைவித்து விடும் என்கிறது பாடல்.

உலகில் நல்வாழ்வு வாழ பொருள் தேவை. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை. ஆனால் அப்பொருளைத் தகுதியுடன் முயற்சியாலும் உழைப்பாலும் தேடி ஈட்டவேண்டும். அதுபோலவே நல்வழியில் உழைப்பாலும் உயரிய முயற்சிகளாலும் ஒருவர் ஈட்டி வைத்திருக்கும் பொருள்களை வௌவக்கருதுதல் அறமற்றதாகும் என்று இக்குறள் சொல்கிறது.
பிறன் நல்ல பொருளை வைத்திருப்பான். அதுபோலும் ஒரு பொருளை வாங்கவோ, ஆக்கிக்கொள்ளவவோ ஒருவனைத் தூண்டுமாயின் தீங்கு இல்லை. ஆனால் அப்பொருளையே பெறவேண்டும் என்னும் முனைப்புக்கு ஆளாவது குற்றங்களில் கொண்டு செலுத்தும். முதல்முறை விருப்பமாக இருப்பது அடுத்தமுறை கவர்தற்குத் தூண்டும். பிறன் பொருளை விரும்புபவர்கள் அப்பொருளுடையாரைத் துன்புறுத்தவும் செய்வர். அதன்பின் கவர்தற்குரிய வழிவகைகளைத் தேடி அலைவர். அலையும் உள்ளம் நிலை கலங்கி ஒருநாள் களவாட வைக்கும். இவ்வளவுக்கும் அடிப்படை பிறர் பொருள் விரும்புதலே. வெஃகுதலே களவு என்பதற்கு வித்தாக அமைகிறது. இவ்வாறாக பின்விளையும் குற்றங்களைக் கூறி பிறர் பொருளை விரும்புவதைத் தொடக்கத்திலேயே களைய அறிவுரை பகர்கிறது இக்குறள்.
குடிபொன்றுதல் இம்மைப்பயன; குற்றந்தருதல் மறுமைப்பயன் எனக் காளிங்கர் பொருள் உரைப்பார். வ உ சி 'குடிபொன்றுங் குற்றமும் ஆங்கே தரும்' எனப்பாடம் கொண்டு 'தன் குடும்பத்தோடு அழிய ஏதுவாகும் குற்றமும் தரும்' என உரை தந்தார்.

'நன்பொருள்' குறிப்பது என்ன?

நன்பொருள் என்பதற்கு மிக்க பொருள், பிறர் வாழ்க்கை, மிகுதியாகப் பொருளீட்டுதல், பல நன்மையையும் பயக்கும் இயல்புபற்றி, நல்ல செல்வம், உழைத்து ஈட்டிய பொருள், நன்முறையில் ஈட்டிய பொருள், உரிமையினால ஒருவனிடத்தில் உள்ள பொருள், நல்வழிப் பொருள், நல்ல பொருள், அறவழியில் ஈட்டப்பட்டு நல்வழியிற் செலவிடப்பெறும் செல்வம் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
நாகை செ தண்டபாணிப்பிள்ளை 'ஒருவன் குடியை வளர்த்து, அவனுக்கும் அவனையடுத்தார்க்கும் பல நன்மைகளைத் தரத்தக்கது அவனுடைய பொருள் ஆதலால் நன்பொருள் என்றார்' என நன்பொருளுக்கு விளக்கம் தருவார்.
ஒருவருக்குரிய நற்பொருள் அதாவது நல்ல பொருள் என்பது நேர்மையான அறவழிகளில் அவர் ஈட்டிய, அவருக்கு உரிமையான பொருளைக் குறிக்கும்.

‘நன்பொருள்’ என்பதற்கு அறவழியில் ஈட்டப்பட்ட பொருள் என்பது பொருள்.

நேர்மையின்றிப் பிறரது நல்லபொருளைக் கைக்கொள்ள விரும்பினால், அது குடும்பத்தை அழித்துப் பல குற்றங்களையும் அப்பொழுதே உண்டாக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பிறர்பொருள் வெஃகாமை சிறந்த நன்னெறி.

பொழிப்பு

நேர்மையின்றிப் பிறர் நன்முறையில் ஈட்டிய பொருளை ஒருவன் கவரவிரும்பினால் அப்பொழுதே அவன் குடியழிந்து குற்றங்கள் பெருகும்.