இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0178



அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்

(அதிகாரம்:வெஃகாமை குறள் எண்:178)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.

மணக்குடவர் உரை: செல்வஞ் சுருங்காமைக்குக் காரணம் யாதோவெனின், பிறன் வேண்டுங் கைப்பொருளைத் தான் வேண்டாமை.
இது செல்வ மழியாதென்றது.

பரிமேலழகர் உரை: செல்வத்திற்கு அஃகாமை யாதெனின் - சுருங்கல் மாலைத்தாகிய செல்வத்திற்குச் சுருங்காமைக் காரணம் யாது என்று ஒருவன் ஆராயின்; பிறன் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை - அது பிறன் வேண்டும் கைப்பொருளைத் தான் வேண்டாமையாம்.
('அஃகாமை' ஆகுபெயர். வெஃகாதான் செல்வம் அஃகாது என்பதாயிற்று.)

சி இலக்குவனார் உரை: செல்வம் குறையாமல் இருப்பதற்குரிய வழி யாதெனின், பிறருடைய பொருளைக் கவர விரும்பாமையேயாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செல்வத்திற்கு அஃகாமை யாதெனின் பிறன் வேண்டும் கைப் பொருள் வெஃகாமை.

பதவுரை: அஃகாமை-சுருங்காமை, குறையாமை; செல்வத்திற்கு-செல்வத்துக்கு, பொருள் மிகுதிக்கு; யாது எனின்-எது என்றால்; வெஃகாமை-விரும்பாதிருத்தல்; வேண்டும்-தேவைப்படும்; பிறன்-மற்றவன்; கைப்பொருள்-கையிலுள்ள செல்வம், மிகத்தேவையான/இன்றியமையாத பொருள்.


அஃகாமை செல்வத்திற்கு யாதெனின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செல்வஞ் சுருங்காமைக்குக் காரணம் யாதோவெனின்;
பரிதி: தன்னுடைய செல்வம் குறையாமை வேண்டுமாகில்;
காலிங்கர்: ஒருவன் தனது செல்வமானது மெலிந்து நசியாமைக்குக் காரணம் யாதோ எனின்;
பரிமேலழகர்: சுருங்கல் மாலைத்தாகிய செல்வத்திற்குச் சுருங்காமைக் காரணம் யாது என்று ஒருவன் ஆராயின்; [சுருங்கல் மாலைத்தாகிய-சுருங்குதல் இயல்புடையதாகிய]
பரிமேலழகர் குறிப்புரை: 'அஃகாமை' ஆகுபெயர்.

'செல்வஞ் சுருங்காமைக்குக் காரணம் யாதோ எனின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன் செல்வம் குறையாமைக்கு வழி யாது?', 'செல்வம் குறையாமைக்குக் காரணம் யாது என்றால்', 'செல்வக் குறைவு இல்லாதிருத்தல் எதுவென்றால்', 'ஒருவன் செல்வத்திற்குச் சுருங்காமை யாதெனில்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவன் செல்வம் குறையாமைக்கு வழி எது என்றால் என்பது இப்பகுதியின் பொருள்.

வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறன் வேண்டுங் கைப்பொருளைத் தான் வேண்டாமை. [கைப்பொருள் - கையின்கண்ணயதாகிய பொருள்]
மணக்குடவர் குறிப்புரை: இது செல்வ மழியாதென்றது.
பரிதி: பிறர் பாக்கியத்தினை விரும்பாது ஒழிக என்றவாறு. [பாக்கியத்தினை-செல்வத்தை]
காலிங்கர்: பிறனொருவனிடத்து உண்டான கைப்பொருளைத் தான் விரும்பாமையே என்றவாறு.
பரிமேலழகர்: அது பிறன் வேண்டும் கைப்பொருளைத் தான் வேண்டாமையாம்.
பரிமேலழகர் குறிப்புரை: வெஃகாதான் செல்வம் அஃகாது என்பதாயிற்று. [வெஃகாதான் -விரும்பாதவன்]

'பிறன் வேண்டுங் கைப்பொருளைத் தான் விரும்பாமையே' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறன் செல்வத்தைப் பறிக்க விரும்பாமை', 'பிறன் கையகத்துள்ள பொருளை விரும்பாதிருத்தலேயாம்', 'இன்னொருவனுக்குச் சொந்தமான பொருளை அபகரிக்க நினைக்காமலிருக்க வேண்டும் என்பதுதான்', 'பிறன்கைப் பொருளைத் தான விரும்பாமையை வேண்டுவதே. (வெஃகாமையே, தன் கைச்செல்வம் சுருங்காமைக்குக் காரணம் என்றார்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிறனுக்கு இன்றியமையாத கைப்பொருளைப் பறிக்க விரும்பாமையே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவன் செல்வம் குறையாமைக்கு வழி எது என்றால், பிறனுக்கு இன்றியமையாத கைப்பொருளைப் பறிக்க விரும்பாமையே என்பது பாடலின் பொருள்.
பிறன் பொருளைப் பறிக்க விரும்பாதிருப்பது எப்படித் தன் செல்வத்தைக் காக்கும்?

மற்றவனது கைப்பொருள்மேல் கண்வைத்தால் உன்னிடம் உள்ளதும் இல்லாமல் போய்விடும்.

'யாதெனின்' என வினவி விடையிறுக்கும் வண்ணம் அமைந்த குறட்பாக்களில் ஒன்று இது. ஒருவன் தனது செல்வ வளம் குறையாமல் இருக்க வேண்டும் என்று விரும்பினால் அவன் யாது செய்யவேண்டுமெனில் அவன் பிறன் கைப்பொருளைக் கவர விரும்பும் தீச்செயலைச் செய்யாமல் இருந்தால் போதும் என்கிறது குறட்பா.
அஃகுதல் என்ற சொல் குறைதல் அல்லது சுருங்குதல் என்ற பொருள் தரும். வெஃகுதல் என்பது கைப்பற்ற விரும்புதல் எனப்பொருள்படும். வெஃகாதான் செல்வம் அஃகாது என்னும் பழமொழியை நினைவிற் கொள்ளலாம்.
கைப்பொருள் என்பது தனிமனித அடிப்படைத் தேவையை நிறைவு செய்யும் பொருள். கைப்பொருள் பற்றிக் குறளில் கூறப்படும் பிற இடம்: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி (ஊழ் 371 பொருள்: பொருள் கிடைப்பதற்குரிய ஊழிருந்தால் ஊக்கம் பிறக்கும்; கைப்பொருள் நீங்குதற்குரிய ஊழிருந்தால் சோம்பல் வந்துவிடும்) என்பது.
தன் செல்வம் குறையாமல் இருக்க ஒருவன் என்ன செய்யவேண்டும்? பிறரது அடிப்படைத் தேவையான கைப்பொருளைத் தான்‌ கொள்ள விரும்பாதிருத்தல்‌ வேண்டும்; இன்னொருமொழியில் சொல்வதானால் ஒருவரது அடிமடியிலேயே கைவைக்கலாகாது.

இக்குறட்பொருளை இருவிதமாக விளக்கினர். தன்னுடைய செல்வம் சுருங்காமைக்குக் காரணம் 'பிறன் வேண்டும்' அதாவது பிறனுக்குத் தேவையான கைப்பொருள் வெஃகாமை' என்று ஒருசாரார் பொருள் கூறினர். இங்கு வேண்டும் என்ற சொல் 'பிறன்' என்பதைத் தழுவியது. மற்றொரு சாரார் வெஃகாமை என்ற சொல்லைத் தழுவி பிறன் கைப்பொருள் 'வெஃகாமை வேண்டும்' அதாவது வெஃகாமை கூடாது என விதி வாக்கியமாக உரைத்தனர்.
இக்குறட்கருத்தை 'வெஃகாமையே, தன் கைச்செல்வம் சுருங்காமைக்குக் காரணம்' என்றும் விளக்குவர். இதன் கருத்தாவது 'தனது செல்வ வளர்ச்சி கருதிப் பிறன் கைப்பொருளைக் கவர எண்ணுபவனது செயல், அவன் எண்ணத்திற்கு மாறாக, புது வெள்ளம் பழைய வெள்ளத்தையும் கொண்டு போனதுபோல, முன்னிருந்த அவன் பொருளையும் குறைக்கும்' என்பது.

பிறன் பொருளைப் பறிக்க விரும்பாதிருப்பது எப்படித் தன் செல்வத்தைக் காக்கும்?

நல்லுரை வழங்கும்போது, 'அறங்களைக் கைப்பிடித்தோர் நன்மையையடைவர்', 'அவர் வாழ்க்கை கெடாது' என்ற வகையில் கூறுவது வள்ளுவர் வழக்கம். இங்கு 'வெஃகாமை அறம் பேணுவோரது செல்வம் குறையாது' என்கிறார் அவர்.
பிறன் பொருளுக்கு ஆசை வைப்பதென்பது ஒரு மனப்பழக்கமாகிவிடுவதால் தன்முயற்சி அற்றுப் போய், தனது ஈட்டுதல் இல்லாமல் போவதால் தனது செல்வம் சுருங்கிப்போகலாம்; பொருளைப் பறி கொடுத்தவனது பகையும் பொருட்குறைப்புக்கு காரணமாகலாம்; பிறன் பொருளைக் கவர நினைப்பவனுக்கு தன் பொருளையும் பிறர் கவர விழைவார் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. அதன் விளைவாக அவன் மனத்தில் பயமும், பாதுகாப்பற்ற உணர்வும், தோன்றிவிடுவதால் முயற்சிகள் ஏதும் செய்வதில்லை. இவை அவன் செல்வம் குறைந்து போவதற்கு உரையாசிரியர்கள் தரும் சில விளக்கங்களாகும்.
தன் பொருள் அழிவு சுட்டி பிறன் பொருளைக் கவரும் விருப்பதைக் குறைப்பதற்காக இவ்விதம் வள்ளுவர் கூறுகிறார் என்றும் அறத்தைப் பின்பற்று அது உன் வளங்களைக் காக்கும் என்றும் தீதை எண்ணினால் அல்லது செய்தால் இருப்பதும் அழிந்து போகும் என்றும் வேறு சிலர் கருத்துக் கூறினர்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன். வெஃகுதல் நினையாத அறம் ஒருவனைக் காக்கும். பிறன் பொருளைக் கைப்பற்றும் செயல் எதுபோன்ற எதிர் விளைவுகளைக் கொண்டுவரும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. எனவே தீயதை நினைக்காதே; அதுவே உன்னைக் காப்பாற்றும் என அறம் சார்ந்த விதியை வகுத்தனர். பிறன் கைப்பொருளைக் கவர நினைப்பது ஒரு தீச்செயல் (பாவம்) என்பதால் அதை எண்ணுபவனது செல்வம் குன்றும் என்பது கருத்து.

பிறருடைய கைப்பொருளைக் கவர விரும்பாமை தன் செல்வம் குறையாமல் இருப்பதற்குரிய வழியாம் என்பது ஒரு அறம் சார்ந்த நம்பிக்கையாம்.

ஒருவன் செல்வம் குறையாமைக்கு வழி எது என்றால், பிறனுக்கு இன்றியமையாத கைப்பொருளைப் பறிக்க விரும்பாமையே என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பிறன் கைப்பொருள் வெஃகாமை தன் செல்வம் அஃகாமைக்கு வழி வகுக்கும்.

பொழிப்பு

தன் செல்வம் குறையாமைக்கு வழி எது என்றால், பிறனுக்கு இன்றியமையாத கைப்பொருளை விரும்பாதிருத்தலேயாம்.