நடுவுநிலைமை என்ற சொல் நடுநிற்றலின் தன்மை என்ற பொருள் தருகிறது.
நடுநிலை என்பது வழக்காற்றில் பல பொருள்களைக் குறிக்கும் சொல்லாக உள்ளது. சார்பு எடுக்காத நிலைமை, நேர்மை, சமரசம் செய்தல், என்பன அவற்றில் சில. யாரேனும் இருவருக்கிடையே கருத்து வேறுபாடோ முரண்பாடுடைய பூசலோ ஏற்படும்போது, அதில் குறுக்கிடாமல் யார் பக்கமும் சேராமல் ஒதுங்கி நிற்பதையும் நடுநிலை என்று சொல்கிறோம்.
குறள் கூறும் பொருளில் எல்லாச் செயல்களிலும் உள்ளார்ந்து நிற்கும் உயர் பண்பான நேர்மையே நடுநிலை எனப்படும். இது எல்லாத்துறையிலும் எல்லார்க்கும் இன்றியமையாது வேண்டப்பெறும் குணம் ஆகும். வள்ளுவர் இதனைத் தகுதி என அழைக்கிறார். நடுவுநிலைமை என்பது செப்பம், தகவு, நடுவு என்னும் சொற்களாலும் இவ்வதிகாரத்தில் குறிக்கப் பெறுகிறது. இது ஒருபாற்சாராமை, நேர்மை, நியாய உணர்வு என்ற சொற்களாலும் அறியப்படுவது.
வீட்டிலும் நாட்டிலும் உலக அளவிலும் நடுவு நிலைமை இன்றியமையாத தேவை ஆகும். நடுவு நிலைமையை 'நன்மையை உடைய நடுவு நிலைமை' என்ற பொருளில் 'நன்னர் நடுவு' என்று நெய்தற் கலி பாராட்டுகிறது.
ஒருவருடைய தனிவாழ்வில் தம் பெற்றோர் மனைவி, மக்கள், உடன்பிறந்தோர் ஆகியோருடன் உள்ள உறவின் அழுத்தத்திலுள்ள வேறுபாடு காரணமாக நடுநிலை பிறழாமல் நடந்து கொள்ளவேண்டும். ஒருவரது தாய்க்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு எற்படும் சமயங்களில் சார்புநிலை எடுக்காமல் உண்மை கண்டறிந்து ஒழுகுவது நடுநிலை காப்பது ஆகும்.
உதவி செய்தார்க்கு உதவவேண்டும் என்ற மனநிலை நடுநிலைமையுடன் நிற்பதற்குத் தடையாக அமைதல் கூடாது. (இது செய்ந்நன்றி அதிகாரத்துக்கு அடுத்து இவ்வதிகாரம் வைக்கப்பட்டதற்கான காரணம் என்று உரையாளர்கள் கூறுவர்.)
கேடும் பெருக்கமும் உலக வாழ்க்கையின் இயல்பு. இந்த உண்மையை உணராமல் அவை நடுநிலை தவறுவதற்கு ஏதுக்களாக அமையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நன்று செய்யுமாயினும் நடுநிலை தவறி கையூட்டுப் பெறுதல் போன்றவற்றை வெறுத்து ஒதுக்க வேண்டும். செப்பமான வாழ்வு மேற்கொண்டவர் தாழ்ந்தாலும் அதை இழிவாக உலகோர் கருதார். நேர்மை வாழ்வு நடாத்தியவர்களை அவரது மறைவுக்குப் பின்னர் இன்னும் பெருமையாகப் பேசுவர்.
நீதியரசர்கள் துலாக்கோல் போல்- ஒரு பக்கம் சாராமல்- நேர் நின்று நீதி வழங்க வேண்டும். தீர்ப்பு வழங்கும் நிலையில் இருப்போரது சொற்களில் கோணல் தோன்றக்கூடாது என்பது மட்டுமல்ல, அவர்கள் உள்ளத்திலும் கோட்டமின்றி இருக்க வேண்டும். வணிகர்கள் தம் ஆதாயம் ஒன்றை மட்டுமே கருதாமல் சமூக நலன் கருதிச் செயல்படவேண்டும். இவை இவ்வதிகாரச் செய்திகள்.
நடுநிலைமை எல்லா நிலையினர்க்கும் வேண்டப்படும் பண்பானாலும், சிறப்புக் கருதி, அறம்கூறும் அவையத்தார் (நீதியரசர்கள்) (118, 119) வணிகர் (120) ஆகியோர்க்குச் சிறப்பாக வேண்டப்படுவது என்பது வள்ளுவர் கருத்தாக உள்ளது.