இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0115கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி

(அதிகாரம்:நடுவுநிலைமை குறள் எண்:115-)

பொழிப்பு (மு வரதராசன்): கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்

மணக்குடவர் உரை: கேடுவருதலும் ஆக்கம் வருதலும் உலகத்தில்லையல்ல: அவ்விரண்டினுள்ளும் யாதானுமொன்று வந்த காலத்துத் தன்னெஞ்சு கோடாம லொழுகல் சான்றோர்க்கு அழகாம்.

பரிமேலழகர் உரை: கேடும் பெருக்கமும் இல் அல்ல - தீவினையால் கேடும், நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி - அவ்வாற்றை யறிந்து அவை காரணமாக மனத்தின்கண் கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழகாவது.
(அவை காரணமாகக் கோடுதலாவது, அவை இப்பொழுது வருவனவாகக் கருதிக் கேடு வாராமையைக் குறித்தும் பெருக்கம் வருதலைக் குறித்தும் ஒருதலைக்கண் நிற்றல். 'அவற்றிற்குக் காரணம் பழவினையே; கோடுதல் அன்று என உண்மை உணர்ந்து நடுவுநிற்றல் சால்பினை அழகு செய்தலின், சான்றோர்க்கு அணி' என்றார்.)

இரா இளங்குமரனார் உரை: வறுமையும் வளமையும் உலகில் காணாத புதுமைகள் அல்ல. ஆயினும் அவற்றைக் கருதி மனத்தின்கண் நடுவுநிலைமை தவறாது இருத்தலே சான்றோர்க்கு அழகு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்.கோடாமை சான்றோர்க்கு அணி

பதவுரை: கேடும்-அழிவும், கெடுதலும், தாழ்வும்; பெருக்கமும்-ஆக்கமும்; இல்லல்ல-இல்லாதவை அல்ல; நெஞ்சத்து-உள்ளத்தில்; கோடாமை-(நடுநிலை) கோணாதிருத்தல், தவறாமை; சான்றோர்க்கு-சால்புடையாக்கு; அணி-அழகு, ஆபரணம்.


கேடும் பெருக்கமும் இல்லல்ல:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கேடுவருதலும் ஆக்கம் வருதலும் உலகத்தில்லையல்ல;
பரிப்பெருமாள்: கேடுவருதலும் ஆக்கம் வருதலும் உலகத்தில்லையல்ல;
பரிதி: ஒரு காலத்திலே கேடும் நன்மையும் உண்டு;
காலிங்கர்: முன்பு விதி முறையான் வருகின்ற பொருளினது கேடும் மற்றும் இதன்பின் வரும் ஆக்கமும் இவ்விரண்டும் உலகத்து இல்லாதன அல்ல;
பரிமேலழகர்: தீவினையால் கேடும், நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன; [பெருக்கம் - வளர்ச்சி]

'கேடும் ஆக்கமும் உலகத்து இல்லாதன அல்ல' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் விதிமுறையால் வரும் கேடும் ஆக்கமும் என்றார். பரிமேலழகர் தீவினை, நல்வினையால் அமைந்த கேடும் பெருக்கமும் என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அழிதலும் ஆதலும் உலகியற்கை', 'கேடும் பெருக்கமும் உலகில் இல்லாதன அல்ல', 'ஏழையாக இருப்பதும் பணக்காரனாக இருப்பதும் உலகத்தில் எல்லாருக்கும் உள்ளதுதான்', 'உலக வாழ்வில் செல்வக் கேடும் செல்வப் பெருக்கமும் இல்லாதன அல்ல', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கேடும் பெருக்கமும் உலகில் இல்லாதன அல்ல என்பது இப்பகுதியின் பொருள்.

நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்விரண்டினுள்ளும் யாதானுமொன்று வந்த காலத்துத் தன்னெஞ்சு கோடாம லொழுகல் சான்றோர்க்கு அழகாம். [கோடாமல் - நடுவுநிலைமை தவறாமல்]
பரிப்பெருமாள்: அவ்விரண்டினுள்ளும் யாதானுமொன்று வந்த காலத்துத் தன்னெஞ்சு கோடாம லொழுகல் சான்றோர்க்கு அழகாம்
பரிப்பெருமாள் குறிப்புரை: நடுவு செய்வோரிடத்தே எது காரணமாகக் கேடுவரினும் நடுவல்லாதன செய்வோரிடத்தே, அது காரணமாக ஆக்கம் வரினும் அவற்றை முன்வினைப்பயன் என்று கருதி அதற்கு இடப்படாது நடுவு செய்ய வேண்டும் என்றது. [இடப்படாது- இடமாகாமல்
பரிதி: அப்போது விதனமும் பிரியமும் வரவொண்ணாது, எக்காலமும் ஒரு தன்மையாக இருப்பது அழகு என்றவாறு. [விதனமும் பிரியமும்- துன்பமும் இன்பமும்]
காலிங்கர்: மற்று ஆதலால் தமது உள்ளத்தின்கண் கோட்டம் இல்லாமை சால்புடையார்க்கு அணிகலமாவது என்றவாறு. [கோட்டம் - கோணல். அதாவது நடுவுநிலை தவறுதல்; சால்புடையார் - அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையாகிய ஐம்பண்புகளும் உடையார்]
பரிமேலழகர்: அவ்வாற்றை யறிந்து அவை காரணமாக மனத்தின்கண் கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழகாவது.
பரிமேலழகர் குறிப்புரை: அவை காரணமாகக் கோடுதலாவது, அவை இப்பொழுது வருவனவாகக் கருதிக் கேடு வாராமையைக் குறித்தும் பெருக்கம் வருதலைக் குறித்தும் ஒருதலைக்கண் நிற்றல். 'அவற்றிற்குக் காரணம் பழவினையே; கோடுதல் அன்று என உண்மை உணர்ந்து நடுவுநிற்றல் சால்பினை அழகு செய்தலின், சான்றோர்க்கு அணி' என்றார். [ஒருதலைக்கண் நிற்றல் - நடுவு நிலைமை பிறழ்ந்து ஒரு சார்பாக நிற்றல்; பழவினை - முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினை; சால்புடையோர், பண்பு நிறைந்தோர்; கோடுதல் -ஒரு பக்கம் சாய்தல்]

'நெஞ்சு கோடாமல் ஒழுகல் சான்றோர்க்கு அழகாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆதலின் மனம் சாயாமையே சான்றோர்க்கு அழகு', 'ஆதலால், அவை உலகியல்பு என அறிந்து அவை காரணமாக மனம் ஒருபால் சாயாமையே சான்றோர்க்கு அழகாம்', 'எவ்வளவு செல்வம் வருவதானலும் மனம் நேர்மையை விட்டு (செல்வத்தைக் கருதிக்) கோணாமல் இருப்பதுதான் உயர்ந்த குணமுடையவர்களுக்குச் சிறப்பு தருவது', 'ஆதலின் இவை காரணமாக நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகு' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

உள்ளம் கோணாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கேடும் பெருக்கமும் உலகில் இல்லாதன அல்ல; அவை காரணமாக உள்ளம் சாயாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகு என்பது பாடலின் பொருள்.
சான்றோர் என விதந்து சொல்லப்பட்டடது ஏன்?

தாழ்வும் உயர்வும் நேர்மைக் குணத்தை அசைத்துப் பார்க்கவிடலாகாது.

கேடும் ஆக்கமும் உலகியல்பாகும்; அவற்றின் தாக்கத்தால் நெஞ்சறிய நடுவுநிலைமை பிறழாமல் நடந்து கொள்வது சான்றோர்க்கு அழகாகும்.
பொருள் மிக்காராய் இருந்தவர் இல்லாராக ஆவதும் இல்லாராய் இருப்பவர் உயர்வு பெறுவதும் உலகில் இல்லாதவை அல்ல. அவை இயல்பானவை. இதை உணர்ந்து நடுநிலை கோணாதிருத்தல் சால்புடையார்க்கு அழகாகும். வளமும் கேடும் எவர்க்கும் இல்லாமல் இல்லை. அவை வரும் போகும்; எப்பொழுதும் இருப்பனவாகவே இருக்கும். ஆனால் சான்றோர்கள் வாழ்தல் - கெடுதலை பொருட்படுத்தக் கூடாது. வாழ்வில் இயற்கையாக உண்டாகும் இறக்கத்தையும் ஏற்றத்தையும் ஒன்றுபோலவே எண்ணவேண்டும். அதாவது பொருட்கேடு வந்தால் அதனின்று மீள்வதற்காக, நடுநிலை தவறி குற்றமானதைச் செய்ய எண்ணுவதும் ஆக்கமுற்றபோது இகழ்ச்சி காட்டுவதும் இல்லாமல், எப்போதும் ஒரு தன்மையாயிருக்க வேண்டும். நடுநிலை பிறழாது செயலாற்றுவது சான்றோர்களுக்கு நல்ல அணிகலமாக அமையும்.
இக்குறட்கருத்தை ஆக்கம் செய்வாரிடத்து விருப்பமும் கேடுசெய்வாரிடத்து வெறுப்பும் கொண்டு நடுவுநிலை தவறமாட்டார்கள் சான்றோர்கள் என்றபடியும் விளக்குவர்.

எந்த நிலையிலும் நடுநிலை பிறழாதவராக இருப்பது சான்றோர்க்கு அழகு சேர்க்கும் என்ற பொருள் தரும் இக்குறளுக்கு கீழ்க்கண்டவாறும் விளக்கம் தந்தனர்:

  • நடுவு நழுவுதலாகிய வினைவிதைத்து வினையறுக்காமல் இருப்பதே சான்றோர்க்கணி.
  • ஆக்கம் வந்தால் மகிழ்ச்சியோடு நடுவுநிலமையைத் தொடந்து மேற்கொள்வது. கேடு வந்தால் அஞ்சி வருந்தி நடுவு நிலைமையைக் கைவிட்டுவிடுவது என்ற நிலையில் ஒருவன் இருப்பானானால் அவனை நடுவுநிலயாளன் என்று கொள்ள முடியாது.
  • நடுவுநிலைமையைக் கடைப்பிடித்து ஒழுகும் ஒருவன் தன்னுடைய நடுவுநிலைமைக்காக எந்தவிதமான ஊதியத்தையும் எதிர்பார்க்கக் கூடாது.
  • நேர்மையாளர்கள் நடுவுநிலையை விற்றுவிட்டுப் பொருள் ஈட்டக் கூடாது.

இப்பாடலின் ஈற்றடியில் அமைந்துள்ள 'கோடாமை சான்றோர்க் கணி' என்ற தொடர் சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி (குறள் 118) என்ற இதே அதிகாரத்து மற்றொரு பாட்டிலும் வந்துள்ளது.
‘அணி’ என்ற சொல்லுக்கு அழகு, ஆபரணம் என்று இரு பொருள்கள் கூறப்படுகின்றன. இவ்விரு பொருள்களும் ஏற்கத்தக்கனவே என்றாலும், அழகு என்னும் பொருள் இங்கு பொருத்தமானது. நடுவுநிலைப் பண்பு உள்ளத்தைப்‌ பற்றியது;‌ நேர்மையாளன் உள்ளழகுடன் தோற்றம் தருவானாதலால் அது அணியாயிற்று.

சான்றோர் என விதந்து சொல்லப்பட்டது ஏன்?

எந்தச் சூழ்நிலையிலும் நேர்மை தவறாமல் வாழவேண்டும் என்பது எல்லாருக்கும் பொருந்தக்கூடிய பொதுவான அறிவுரைதானே. பின் ஏன் சான்றோர்க்கணி எனச் சான்றோர் தனிப்படுத்தப்பட்டுச் சொல்லப்பட்டனர்? எல்லோரும் நேர்மைக் குணம் கொண்டு ஒழுக வேண்டும் என்பதை அறுவுறுத்த வந்ததே இவ்வதிகாரம். இப்பண்பு எல்லோர்க்குமானதே. ஆனாலும் வள்ளுவர் சான்றோர், வணிகர் என்ற இரு பிரிவினரைத் தனித்தெடுத்து இவ்வதிகாரத்துள் குறட்பாக்கள் படைத்துள்ளார். இவ்விருதிறத்தார்க்கும் நடுநிலை அறம் தனித்ததாகச் சிறந்திருத்தலின் என இதை பரிமேலழகர் விளக்குவார் (குறள் 120 உரை)

இங்கு சொல்லப்பட்ட சான்றோர் என்ற சொல் யாரைக் குறிக்கிறது? சான்றோர் என்பவர் அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் ஐம்பண்புகளும் உடையவர் (983) என வள்ளுவரே வரையறுத்துச் சொல்லியுள்ளார். குறள் முழுவதும் சான்றோர் பரவலாக இடம் பெறுகின்றனர். சான்றோர் என்ற சொல் சால்புடையோர், பண்பு நிறைந்தோர், நற்குண நற்செய்கையுடையவர் என்ற பொருளில் பல இடங்களில் குறளில் பயின்றுவந்துள்ளது.
இவ்வதிகாரப் பாடல்களில் சான்றோர் என்பவர் நீதியரசர் என்ற பொருளிலும் ஆளப்பட்டதாகத் தெரிகிறது. அறங்கூறும் அவையத்தில் அறம் காவல் செய்தவர் சான்றோர் என அழைக்கப்பட்டிருக்கலாம். சான்றோர் எனப்படுபவர் ஒன்றைச் சீர்தூக்கிப் பார்த்துச் செயல்பட வேண்டியிருப்பவர். மனத்தளவிலும் எப்பக்கமும் வளையாதிருக்க வேண்டியவர். நடுநிலை தவறி இதைச் செய்தால் வாழ்வில் உயர்வு பெறலாம் என்று அவாவுற்றும், அதைச் செய்தால் தாழ்வு நேரும் என்று அச்சமுற்றும் சான்றோர் தம் கடமைகளைச் செய்யக் கூடாது. 'கேடும் பெருக்கமும் இயல்பானவை; எது வரினும் நேர்மை தவறமாட்டேன்' என்ற உறுதியுடன் நடுநிலையில் நின்று செயலாற்ற வேண்டும். அவர் பொருள் காரணமாக நெஞ்சம் கோடுதல் கூடாது. மனம் கோடுவதற்குச் செல்வம் ஒரு பெருங் காரணமாதலால் இங்ஙனம் தனித்தெடுத்துக் கூறுகிறார் என்பார் தமிழண்ணல்.

தம்முடைய தனிப்பட்ட வளமும் தாழ்வும் அறம்கூறுபவரைப் பாதிக்கக் கூடாது என்பதால் சான்றோர் விதக்கப்பட்டனர்.

கேடும் பெருக்கமும் உலகில் இல்லாதன அல்ல; அவை காரணமாக உள்ளம் சாயாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகு என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நடுவுநிலைமை பெரியோர்க்கு உள்ளழகைத் தரும்.

பொழிப்பு

அழிதலும் ஆதலும் உலகில் இல்லாதன அல்ல; அதனை அறிந்து அவை காரணமாக மனம் ஒருபால் சாயாமையே சான்றோர்க்கு அழகாம்