இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0113



நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்

(அதிகாரம்:நடுவுநிலைமை குறள் எண்:113)

பொழிப்பு (மு வரதராசன்): தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவுநிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.

மணக்குடவர் உரை: பெருமையே தரினும் நடுவுநிலைமையை நீங்கி வரும் ஆக்கத்தை அவ்வாக்கம் வருதற்குத் தொடக்கமான அன்றே யொழிய விடுக.

பரிமேலழகர் உரை: நன்றே தரினும் - தீங்கு அன்றி நன்மையே பயந்ததாயினும்; நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழியவிடல் -நடுவு நிற்றலை ஒழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக.
(நன்மை பயவாமையின் நன்றே தரினும் என்றார். இகத்தலான் என்பது இகந்து எனத் திரிந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் முறையே நடுவு நிலைமையான் வந்த செல்வம் நன்மை பயத்தலும், ஏனைச்செல்வம் தீமை பயத்தலும் கூறப்பட்டன.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: நன்மையே விளைப்பதாயிருந்தாலும் முறையைக் கடந்து நடப்பதாக உண்டாகக்கூடிய செல்வத்தை முறைவரம்பு கடக்க நேரிட்ட அப்பொழுதே ஒழிய விடுக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நன்றே தரினும் நடுவு இகந்த ஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்.

பதவுரை: நன்றே-நன்மையே; தரினும்-தரும் என்றாலும், கொடுத்தாலும்; நடுவு- நடுவுநிலைமை; இகந்தாம்- நீங்குதலால்; ஆக்கத்தை-செல்வத்தை, முன்னேற்றத்தை, மேம்பாட்டை, ஆதாயத்தை; அன்றே-அப்பொழுதே, அந்த நாளில்; ஒழிய-நீங்க; விடல்-விட்டொழிக, கைவிடுக.


நன்றே தரினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெருமையே தரினும்;
பரிப்பெருமாள்: பெருமையே தரினும்;
பரிதி: ஆக்கம் பெற்றாலும் வேண்டாம்;
காலிங்கர்: நெறிகோடி செய்யும் கருமம் தனக்கு நன்மையைத் தருவதே ஆயினும்; [நெறிகோடி செய்யும் கருமம் - வழி தவறிச் செய்யும் செயல்கள்]
பரிமேலழகர்: தீங்கு அன்றி நன்மையே பயந்ததாயினும்;
பரிமேலழகர் குறிப்புரை: நன்மை பயவாமையின் நன்றே தரினும் என்றார். இகத்தலான் என்பது இகந்து எனத் திரிந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் முறையே நடுவு நிலைமையான் வந்த செல்வம் நன்மை பயத்தலும், ஏனைச்செல்வம் தீமை பயத்தலும் கூறப்பட்டன. ['நன்றே தரினும்' என்பதில் உள்ள எதிர்மறை உம்மை நன்மையைத் தாராது என்று காட்டும்]

'நன்மையைத் தருவதே ஆயினும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நலமே தரினும்', 'நடுவுநிலைமை மாறியதால் வரும் செல்வம் நன்மையே நல்கினும்', '(ஓரவஞ்சகத் தீர்ப்பு செய்வதால் பெருத்த செல்வம் வருவதாக இருந்தாலும்) எவ்வளவு நல்லதானாலும்', 'நன்மையே தந்தாலும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நன்மையைத் தந்தாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நடுவுநிலைமையை நீங்கி வரும் ஆக்கத்தை அவ்வாக்கம் வருதற்குத் தொடக்கமான அன்றே யொழிய விடுக.
பரிப்பெருமாள்: நடுவுநிலைமையை நீங்கி வரும் ஆக்கத்தை அவ்வாக்கம் வருதற்குத் தொடக்கமான அன்றே யொழிய விடுக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வாழ்ந்தான் ஆயினும் ஆக்கமாகக் கொள்ளார் என்றது.
பரிதி: மனம் வாக்குக் காயங்களைப் பாவத்தின்வழிச் செல்லாமல் நடுவுநிலைமை விட்டதாகில், அது எப்படி என்னில் நடுவுநிலைமையைவிட்ட காரியம் நில்லாது என்றவாறு. [நில்லாது - நிலை பெறாது]
காலிங்கர்: நடுவுநிலைமையைக் கடந்து ஆவது ஓர் ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக என்றவாறு
பரிமேலழகர்: நடுவு நிற்றலை ஒழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக.
பரிமேலழகர் குறிப்புரை: இகத்தலான் என்பது இகந்து எனத் திரிந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் முறையே நடுவு நிலைமையான் வந்த செல்வம் நன்மை பயத்தலும், ஏனைச்செல்வம் தீமை பயத்தலும் கூறப்பட்டன. [நடுவு இகந்து ஆம் ஆக்கம் - நடுவு நிலைமையை இகத்தலான் ஆகும் ஆக்கம் என விரிக்க வேண்டும். இகத்தல் - நீங்குதல்]

'நடுவுநிலைமையை நீங்கி வரும் ஆக்கத்தை அவ்வாக்கம் வருதற்குத் தொடக்கமான அன்றே யொழிய விடுக' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நேர்மையில்லா ஆக்கத்தை அப்போதே விட்டு விடுக', 'அதனை அப்பொழுதே கைவிடுக', 'நடுவு நிலைமையான நேர்மையை விட்டுவிட்டு அடையக்கூடிய செல்வத்தை அப்போதே விலக்கிவிட வேண்டும்', 'நடுநிலை கடந்து உண்டாகும் செல்வத்தை அப்பொழுதே நீக்கி விடுக' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

நடுவுநிலைமையைக் கடந்து உண்டாகும் ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நன்மையைத் தந்தாலும் நடுவுநிலைமையைக் கடந்து உண்டாகும் ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக என்பது பாடலின் பொருள்.
நன்மைதானே தருகிறது, பின் ஏன் அச்செல்வத்தைக் கைவிடவேண்டும்?

குறுக்கு வழியில் உண்டாகும் முன்னேற்றத்தை இழக்க முன்வருக.

நன்மையே தருவதானாலும் நடுநிலைமை தவறிப் பெறக்கூடிய ஆக்கத்தை அப்போதே ஒழிய விடுக.
பொருள் செய்யும் வகையிலும் தூய்மை வேண்டும். பொருளொழுக்கமே ஒருவனது மனத்தூய்மைக்கும் வினைத்தூய்மைக்கும் உரைகல். நடுநிலை தவறிச் சேர்த்த ஆக்கம் என்னும்போது மனத்தூய்மையும் செயல் தூய்மையும் கெட்டுவிட்டது என்பது தெளிவாகிறது. அவ்விதம் கிடைக்கும் ஆக்கத்தை ஏற்காது அப்பொழுதே தொலைத்து விடவேண்டும் என்கிறது பாடல்.

நடுவுநிலைமை எச்சத்திற்கும்‌ பயன்‌ தருமென்று முற்குறளில் சொல்லப்பட்டது. இங்கு நடுநிலைமை தவறிய ஆக்கத்தை விரும்பலாகாது என்பது அறிவுறுத்தப்‌படுகிறது.
பிறர்க்குரிய பங்கைத் திருடுதல், மற்றவர் உழைப்பிற்குரிய ஊதியத்தைத் தராமல் சுரண்டுதல், வாணிகத்தில் அளவுக் கருவிகளில் ஏமாற்றுச் செய்தல் போன்றவை நடுவு தவறிய ஆக்கங்களுக்குச் சில எடுத்துக்காட்டுகள். கையூட்டு (லஞ்சம்) தந்து செல்வம் ஈட்டல், பதவி உயர்வு பெறுதல் போன்றன பிற.
நடுநிலை பிறழ்ந்து அதாவது நேர்மையற்ற வழிகளில் பொருள் சேர்ப்போர் பற்றி நாளும் கேள்விப்படுகிறோம். செல்வாக்கு கொண்டோர், ஆற்றல்மிக்க பதவியில் இருப்போர், வணிகர் முதல் சிறுதொழில் புரிவோர் வரை பலவகை மாந்தர் நடுவிகந்தாம் ஆக்கம் பெற நாட்டமுறுகின்றனர். நடுவுநிலைமையைக் கடந்து ஆக்கம் உண்டாவதில் ஒருவர்க்கு நன்மை உண்டாகலாம். தன்னலம் கருதி நடுநிலை கடந்து வாழ்கின்றவர்கள் நலம்பல பெற்று வாழலாம்; செல்வாக்கு பெறலாம்; அந்த செல்வாக்கினால் நடுநிலை கடந்த குற்றமும் மறைக்கப்படலாம். வாழும் காலத்தில் செல்வாக்கின் காரணத்தால் குற்றமற்றவர் போல் தோன்றினாலும் பின்னொருகாலத்தில் உண்மை வெளிப்பட்டு அவர்கள் இகழ்ச்சிக்குள்ளாவர். நன்மையே தருவதானாலும் கூட அவ்விதம் ஆதாயம் பெறும் விருப்பத்தை ஒழித்து மீண்டும் நினைவில் வாராத வண்ணம் உள்ளத்திலிருந்தே அழியுமாறு அதை ஓட்டிவிட வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

அன்றே ஒழிய விடல் என்றதற்கு அன்றே, அப்போதே, அக்கணமே, நடுநிலை தவறியதை உணர்ந்தபொழுதே எனப்பொருள் கூறுவர். 'ஒழிய விடல் என்பது 'கைவிடுக' எனப் பொருள்படும். அறம் சாராத செல்வத்தை அப்பொழுதே விட்டுவிடுவது அல்லது ஒதுக்கித் தள்ளுவது நல்லது.
தவறான வழியில் சிலர் பொருள் சேர்ப்பது கண்டு பேராசை கொள்ள வேண்டாம்; நேர்மையுடன் வாழ்ந்து சிறுது பொருளே வைத்திருப்பது அதைவிட நல்லது என்று பழிமலைத் தெய்திய ஆக்கத்திற் சான்றோர் கழிநல் குரவே தலை (வினைத்தூய்மை 657 பொருள்: குற்றச் செயல்களைச் செய்து அடைந்த செல்வத்தைவிடப் பெரியோர்களின் மிகுந்த வறுமையே சிறந்தது) என்று பிறிதோரிடத்தில் குறள் கூறும்.

நன்மைதானே தருகிறது, பின் ஏன் அச்செல்வத்தைக் கைவிடவேண்டும்?

நடுதவறிப் பெற்ற ஆக்கத்தை விரும்பாது விட்டு அப்பொழுதே தள்ளி நிற்பாயாக என்கிறது இக்குறள். அச்செல்வம் தனக்கு நன்மை செய்கிறதே பின் ஏன் அதை ஒதுக்கவேண்டும்? என்பது உடன் எழும் வினா. நன்மையே தந்தாலும் அது நடுவுநிற்றல் என்ற அறத்தை இழந்து வந்த செல்வம் என்பதால் அது ஏற்கத்தக்கதல்ல. இங்கு நன்மை என்ற சொல் தன்னலம் கருதிய நன்மை. அது தனக்கும் தன்னைச் சார்ந்தவர்க்கும் மட்டுமே நன்மை தரும். மேலும் அந்த ஆக்கம் நேர்மைக்குப் புறம்பான வழியில் வந்ததாதலால் அதன் பின்னணியில் ஒருவருக்கோ பலருக்கோ அநீதி இழைக்கப்பட்டிருப்பது திண்ணம்; பொருளாலோ மற்ற வகையாலோ அவர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும். மற்றவர்கள் உறும் கேட்டில் தாம் மேம்பாடு அடைவது பெருமைக்குரியது அல்ல; அறமும் அன்று.நேர்வழி அற்றுப் பொருள் சேர்ப்பது எளிதாகவும் இனிமை பயப்பது போன்று தோன்றலாம். ஆனால் அவை எல்லாம் முடிவில் கெடுதலையே தரும் என்ற அறவுணர்வு மேம்பட அப்பொருளை ஏற்றுக் கொள்ளாமல் உதறித் தள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
'நன்றே தரினும்' என்பதில் உள்ள உம்மை நன்மையைச் செய்யாது என்னும் பொருளை உணர்த்தி நிற்கிறது என்பர். நன்மை என்றாலும் அது தற்காலிகமாக விரும்பத்தக்கதாகத் தோன்றுமே ஒழிய உண்மையில் நன்மை ஆகாது. அதனால் பழியே நிலைத்திருக்கும்; கறை படிந்த வருவாய்க்கு கை நீட்டி அடிமையாக வேண்டாம் என்பது செய்தி.
நன்மை அடைவதற்கான வழிகளும் நேர்மையாக இருத்தல் வேண்டும்; நற்பயனை அடைவதற்காகக் கூட தவறான வழியைப் பின்பற்றக்கூடாது என்பதை எப்பொழுதும் குறள் வலியுறுத்தும்.

தனக்கு நன்மையைத் தந்தாலும் நடுவுநிலைமையைக் கடந்து உண்டாகும் ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நடுவுநிலைமை தவறி வரும் செல்வத்தைக் கைக்கொள்ளற்க.

பொழிப்பு

நன்மையே நல்கினும் நடுவுநிலைமை நீங்கியதனால் உண்டாகின்ற செல்வத்தை அப்பொழுதே கைவிடுக.