சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்
(அதிகாரம்:நடுவுநிலைமை
குறள் எண்:119)
பொழிப்பு (மு வரதராசன்): உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லினும் கோணுதல் இல்லா திருத்தல் நடுவுநிலைமையாம்
|
மணக்குடவர் உரை:
நடுவுநிலைமையாவது கோட்டமில்லாததாய சொல்லாம்: உறுதியாக மனக்கோட்ட மின்மையோடு கூடுமாயின்.
இது நடுவுநிலைமையாவது செவ்வை சொல்லுத லென்பதூஉம் இரு பொருட் பொதுமொழி கூறதலன்றென்பதூஉம் கூறிற்று.
பரிமேலழகர் உரை:
செப்பம் சொற்கோட்டம் இல்லது - நடுவு நிலைமையாவது சொல்லின்கண் கோடுதல் இல்லாததாம்; உள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறின்- அஃது அன்னதாவது மனத்தின்கண் கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின்.
(சொல் : ஊழான் அறுத்துச் சொல்லுஞ் சொல். காரணம் பற்றி ஒருபால் கோடாத மனத்தோடு கூடுமாயின், அறம் கிடந்தவாறு சொல்லுதல் நடுவு நிலைமையாம்; எனவே, அதனோடு கூடாதாயின் அவ்வாறு சொல்லுதல் நடுவு நிலைமை அன்று என்பது பெறப்பட்டது. .)
இரா சாரங்கபாணி உரை:
மனம் ஒருபக்கம் சாயாமல் நிற்கச் சொற்கோணல் இன்றி நேர்மையாகப் பேசுவது நடுநிலைமையாகும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்.
பதவுரை: சொல்- மொழி; கோட்டம்-கோணுதலுடைமை; இல்லது-இல்லாமல் இருப்பது, இல்லாதது; செப்பம்-செம்மை, நடுவு நிலைமை; ஒருதலையா-உறுதியாக, திண்ணிதாக, ஒரு பக்கம் சாய்ந்து, ஒருவழிப்பட; உள்-நெஞ்சம்; கோட்டம்-கோணுதலுடைமை; இன்மை-இல்லாதிருத்தல்; பெறின்-அடைந்தால்.
|
சொற்கோட்டம் இல்லது செப்பம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நடுவுநிலைமையாவது கோட்டமில்லாததாய சொல்லாம்;
மணக்குடவர் குறிப்புரை: இது நடுவுநிலைமையாவது செவ்வை சொல்லுத லென்பதூஉம் இரு பொருட் பொதுமொழி கூறதலன்றென்பதூஉம் கூறிற்று. [இருபொருட் பொதுமொழி - இரண்டு பொருள்கட்குப் பொதுவான ஒரு சொல்]
பரிதி: வாக்கினில் குற்றம் நான்காவன: பொய், கோள், பயனிலசொல், குறளை. இந்த நான்கும் இல்லாதநெறி பெற்றாலும்;
காலிங்கர்: ஒருவர் தாம் சொல்லும் சொல்லின்கண் எஞ்ஞான்றும் ஒரு கோட்டமும் இல்லாமையாகின்றது யாது அதுவே நடுவு நிலைமையாவது;
பரிமேலழகர்: நடுவு நிலைமையாவது சொல்லின்கண் கோடுதல் இல்லாததாம்;
பரிமேலழகர் குறிப்புரை: சொல்: ஊழான் அறுத்துச் சொல்லுஞ் சொல். [ஊழான் அறுத்துச் சொல்லுஞ் சொல்- அறநூல் கூறிய விதிப்படி வரையறுத்துச் சொல்லும் தீர்ப்பு]
'நடுவுநிலைமையாவது கோட்டமில்லாததாய சொல்லாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'சொல்லுகின்ற சொல் நேர்மைச் சொல்லாகும்', 'சொற்கோணல் இன்றி நேர்மையாகப் பேசுவது நடுநிலைமையாகும்', 'வழக்கில் தீர்ப்புச் சொல்லுவதும் நடுவுநிலைமை தவறாததாகவே இருக்கும்', 'சொல்லின்கண் மாறுதல் இல்லாமலிருப்பது நடுவு நிலைமையாகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
சொல்லில் சாயாமல் நேர்மையாகப் பேசுவது நடுநிலைமையாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உறுதியாக மனக்கோட்ட மின்மையோடு கூடுமாயின்.
பரிதி: மனத்திலே நடுவுநிலைமை பெரியது என்றவாறு.
காலிங்கர்: மற்றைச் சொல்தான் எஞ்ஞான்றும் தன்மனமும் வாக்கும் ஒருவழிப்பட உட்கோட்டம் இல்லாமை பெறுவதாயின் என்றவாறு.
பரிமேலழகர்: அஃது அன்னதாவது மனத்தின்கண் கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின். [அஃது அன்னதாவது - சொல்லில் கோணுதல் இல்லாமல் இருப்பது; திண்ணிதாக - உறுதியாக]
பரிமேலழகர் குறிப்புரை: காரணம் பற்றி ஒருபால் கோடாத மனத்தோடு கூடுமாயின், அறம் கிடந்தவாறு சொல்லுதல் நடுவு நிலைமையாம்; எனவே, அதனோடு கூடாதாயின் அவ்வாறு சொல்லுதல் நடுவு நிலைமை அன்று என்பது பெறப்பட்டது. [அறம் கிடந்தவாறு - நீதியின் அமைப்புப்படியே]
மணக்குடவர் 'உறுதியாக மனக்கோட்டமில்லாமல் கூடுமாயின்' என்றும் பரிமேலழகர் 'மனத்தின்கண் கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின்' என்றும் ஒருதலையா என்பதற்கு 'உறுதியாக' என்று பொருள்கொண்டு இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் ஒருதலையா என்பதற்கு ஒருவழிப்பட்டு எனப் பொருள் கொண்டு உரை கூறுகிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'உள்ளம் சிறுதும் சாயாமல் இருந்தாலன்றோ', 'மனம் ஒருபக்கம் சாயாமல் நிற்க', 'மன ஒரு பக்கத்திலும் சாய்ந்துவிடாமல் இருந்தால்', 'மனத்தின்கண் மாறுபாடு இல்லாமையை உறுதியாகப் பெற்றால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
உள்ளம் ஒருபால் சாயாமல் இருந்தால் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
உள்ளம் ஒருபக்கமாகக் கோணாமல் இருந்து சொற்கோட்டம் இல்லது நடுநிலைமையாகும் என்பது பாடலின் பொருள்.
''சொற்கோட்டம் இல்லது' என்ற தொடர் குறிப்பது என்ன?
|
தீர்ப்புக் கூறும் நிலையில் உள்ளோர் மனதாலும் திண்ணமாக ஒருபக்கம் சார்பு இல்லாமல் இருத்தல் வேண்டும்.
உள்ளத்தில் ஒருபால் சாய்வுக்கு இடம் தராத உறுதிபெற்று, சொல்லிலும் குறை நேராது இருத்தல் நடுவுநிலைமையாம்.
இப்பாடலும் முந்தைய குறளும் அவையத்தாரை நோக்கி உரைத்தனவாம். இங்கு சொல்லப்பட்ட நடுவுநிலைமைப் பண்புகள் எல்லா நிலையினர்க்கும் வேண்டுமாயினும் இவை சிறப்பாக அறம் கூறும் அவையத்தாருக்கு உரியதாகக் கொள்வர்.
இக்குறளிலுள்ள செப்பம் என்ற சொல்லுக்கு அதிகார இயைபு பற்றி நடுவுநிலைமை என்பது பொருளாகிறது. நடுநிற்றலின் கூற்றில் ஒருசார்பாக வளையாதிருப்பதே செப்பம் எனப்படும்; ஒருதலைச் சார்பாகப் பேசாதது மட்டும் நடுநிலையாகாது; உட்கோட்டம் இன்மையும் வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
நடுநிலைநிற்போர், மனம் ஒருபக்கம் சார்பின்றி நிற்க, தாம் ஆய்ந்து கண்ட உண்மையை மாற்றுதலும் மாற்றியுரைத்தலும் இல்லாமல் சொற்சோர்வின்றி உரைப்பர்.
ஒருதலையா என்ற சொல்லுக்கு உறுதியாக என்றும் ஒருபக்கமாக என்றும் இருதிறமாகப் பொருள் கண்டனர். அதிகாரம் நடுவுநிலைமை என்பதால் ஒரு பக்கமாக என்ற பொருள் மிகப்பொருந்தும் என்றாலும், உட்கோட்டம் என்பதே மனம் ஒரு பக்கமாகச் சாய்வது எனப் பொருள் தருவதால், ஒருபக்கமாக உட்கோட்டம் என இயைத்துப் பொருள் கண்டது மிகையாகத் தோன்றுகிறது. எனவே உள்ளக் கோணுதல் இல்லாமை உறுதியாகப் பெறின் எனக் கொள்வது சிறக்கும்.
வெளியில் நடுவு நிலையாளரைப்போல் தோற்றம் தந்து அகத்தில் சார்பு நிலை கொள்பவர்கள் உண்டு. அதனால் மனத்தளவிலும்கூட நெறிதப்புதல் இல்லையெனில் என்றால் மட்டுமே நடுவுநிலைமை காக்கப்படும். நேர்மையும் நெஞ்சுறுதியும் உள்ள ஒருவர்தான் அறம் தவறாது சொல்ல முடியும். அவர் கூறும் தீர்ப்புச் சொற்களிலும் கோணுதல் இருக்கக்கூடாது.
ஒரு பக்கம் சாய்ந்த மனத்தோடு சொல் கூடாதிருந்தால்தான், சட்டப்படி சொல்லப்பட்டதும் நடுவுநிலைமை தவறாததாகக் கருதப்படும்.
மனக்கோட்டம் உடையவனும் சொற்கோட்டம் இல்லாமல் செயல்பட முடியும் என்பதால் சில உரைகாரர்கள் மனக்கோட்டம், சொற்கோட்டத்துடன் பொருட்கோட்டம் இன்மை வேண்டும் என விளக்கினர். சொற்கோட்டம் பொருட்கோட்டம் மனக்கோட்டம் மூன்றும் இல்லாததே நடுவு நிலைமைக்குச் சிறந்தது என்றனர் இவர்கள்.
உட்கோட்டம் இன்மை 'பெறின்' என ஏன் சொல்லப்பட்டது? தேவநேயப்பாவாணர் 'மனம் வாய் மெய் என்னும் முக்கரணங்களுள் மனமே ஏனை யிரண்டிற்கும் மூலமாதலாலும், மனத்துக்கண் மாசிலனாதலே அறமாதலாலும், சொற்கோட்ட மில்லா நடுவுநிலைக்கு உட்கோட்ட மின்மை இன்றியமையாத தென்றார். ஆயினும், கண்ணன்ன கேளிருக்கும் பெருநன்றி செய்தவர்க்கும் செல்வத்தாலும் அதிகாரத்தாலும் ஆட்டுணையாலும் வலியவர்க்கும் கருதியது செய்து முடிக்கும் கயவருக்கும் மாறாக, உயிர்நாடிச் செய்திகளில் உண்மை கூறுவதற்குத் தெய்வத் தன்மையான மனச்சான்றும் இறுதிவரினும் அஞ்சாத் தறுகண்மையும் வேண்டியிருத்தலின், அவையிரண்டும் அமையும் அருமை நோக்கி, 'உட்கோட்ட மின்மை பெறின்' என்றார்' என உள்ளத்தில் கோடாமல் இருப்பதின் அருமையை விளக்கினார்.
|
'சொற்கோட்டம் இல்லது' என்ற தொடர் குறிப்பது என்ன?
'சொற்கோட்டம் இல்லது' என்ற தொடர்க்குக் கோட்டமில்லாததாய சொல், பொய் கோள் பயனிலசொல் குறளை இந்த நான்கும் இல்லாத வாக்கு, தாம் சொல்லும் சொல்லின்கண் எஞ்ஞான்றும் ஒரு கோட்டமும் இல்லாமை, சொல்லின்கண் கோடுதல் இல்லாததாம், கொடுமையான வசனங்களைச் சொல்லாதது, சொல்லின்கண் சார்பு இல்லாமல் நிற்பது, சொல்லினும் கோணுதல் இல்லாதிருத்தல், பேச்சில் ஒரு பக்கம் வளையாதிருப்பது, சொல்லில்கூட சார்பு இல்லாமல் நிற்பது, நேர்மைச் சொல், சொற்கோணல் இன்றி நேர்மையாகப் பேசுவது, தீர்ப்பு கோணலில்லாமல் இருக்கும், சொல்லும் சொல்லிலும் நடுவுநிலைமை நீங்காமல் அமைந்திருத்தல், சொற்கோணாமை, சொல்லின்கண் மாறுதல் இல்லாமலிருப்பது, சொல்லில் குற்றமில்லாமலிருப்பது, தீர்ப்பின்கண் சிறிதும் சொற்கோடுதல் இல்லது, நீதி தவறாத சொல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
சொற்கோட்டம் என்பது நேர்மையற்ற (நடுநிலை பிறழ்ந்த) சொல்லைக் குறிக்கும்.
சொற்கோட்டம் இல்லது என்பதற்கு மணக்குடவர் 'இரு பொருட் பொதுமொழி கூறதலன்று' அதாவது இருபொருள்படும் (கவர்படுபொருள்தரும்) சொல்லால் அதைச் சொல்லவும் கூடாது எனப் பொருளுரைத்தார்.
இத்தொடர்க்குத் தண்டபாணி தேசிகர் அதிகாரம் நடுவுநிலைமை ஆதலால் இங்கே கூறப்படும் சொற்கோட்டம் ஆட்சியாலும் ஆவணங்களாலும் அயலார் தங்கள் சாட்சியாலும் கண்டறிந்தவற்றை ஒருதலைச் சார்பால் கோணி உரைத்தல் ஆகாது என விளக்கம் தருவார்.
சொல்லின்கண் மாறுதல் இல்லாமலிருப்பதும் நடுவுநிலையாகும்; ஆராய்ந்து கண்ட உண்மையை மாற்றுதலும் மாற்றியுரைத்தலும் இல்லாமை நடுவுநிலை என்பது இதன் கருத்து. உட்கோட்டம் உடையவனும் சொற்கோட்டம் இன்மையை மேற்கொள்ளக் கூடும். சொற்கோட்டம் வெளிப்படையாக அறியக்கூடிய தன்மையது; ஆனால் மனக்கோட்டத்தை அறிவது எப்படி? அது காணக்கூடியதன்றாதலால் உட்கோட்டமில்லாதிருப்பதை தீர்ப்பு வழங்குவோர்க்குக் கூறிய அறிவுரையாகக் கொள்ளவேண்டும்.
சொற்கோட்டம் இலது என்பதன் பொருளை உண்மை நிகழ்வு ஒன்றையும் அது தொடர்பான வழக்கின் தீர்ப்பையும் நோக்கிப் புரிந்து கொள்ளலாம்: அரசின் உயர்பதவியில் இருந்த ஒருவர் தனக்குள்ள அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அரசுக்குச் சொந்தமான நிலத்தைத் தன் பெயருக்கு வெளிப்படையாகவே மாற்றிக் கொண்டு விட்டார். வழக்கு நீதிமன்றம் சென்றது. இக்குற்றத்திற்கு சட்டத்தில் தண்டனை தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தாலும் தீர்ப்பில் கையகப்படுத்திய நிலத்தை அரசிடமே திருப்பித் தருமாறி கூறித் தண்டனையாகக் குற்றம் செய்தவரைப் பார்த்து 'உங்களை நீங்களே பகுப்பாய்வு (introspect) செய்து கொள்ளுங்கள்' என்று சொல்லப்பட்டது. இது நடுவுநிலைமையற்ற தீர்ப்பு என்பதுடன் சொற்கோட்டம் உள்ளதுமான கூற்றும் ஆகும்.
'சொற்கோட்டம் இல்லது' என்ற தொடர் சொற்கோணல் இன்றி நேர்மையாகப் பேசுவது குறித்தது.
|
உள்ளம் ஒருபக்கம் கோணாமல் இருந்து சொல்லில் சாய்வில்லாமல் நேர்மையாகப் பேசுவது நடுநிலைமையாகும் என்பது இக்குறட்கருத்து.
நடுவுநிலைமையாகச் சொல்லப்பட்ட கூற்று தெளிவாக இருக்கும்.
உள்ளம் ஒருபக்கம் சாயாமல் நிற்கச் சொற்கோணல் இன்றி நேர்மையாகப் பேசுவது நடுநிலைமையாகும்
|