இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0112



செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து

(அதிகாரம்:நடுவுநிலைமை குறள் எண்:112)

பொழிப்பு (மு வரதராசன்): நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியிலுள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

மணக்குடவர் உரை: நடுவு நிலைமை யுடையவனது செல்வம் தன்னளவிலுங் கேடின்றியே நின்று, தன் வழியுள்ளார்க்குங் கேடுவாராமற் காவலாதலையுடைத்து.
நடுவுநிலைமையுடையார் செல்வம் அழியாதென்றவாறு.

பரிமேலழகர் உரை: செப்பம் உடையவன் ஆக்கம் - நடுவு நிலைமையை உடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து - பிறர் செல்வம் போல அழிவு இன்றி அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து.
(விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்கும் துணையும் அவன்றனக்கும் ஏமாப்பு உடைத்து என்பது பெற்றாம். அறத்தோடு வருதலின், அன்னதாயிற்று. தான் இறந்தவழி எஞ்சி நிற்பதாகலின் 'எச்சம்' என்றார்.)

குன்றக்குடி அடிகளார் உரை: நடுவு நிலைமையுடையவனது செல்வம் அழியாது அவனுடைய வழியினர்க்கும் பாதுகாப்புத்தரும். எச்சத்திற்கு - அவன் வழித் தோன்றல்களுக்கு என்பது பொதுவான கருத்து. ஒருவர் இறந்த பிறகும் அதை அவர் நினைவாக எஞ்சியிருப்பது எச்சம். இங்ஙனம் எஞ்சி நிற்பது வழித்தோன்றல்கள் என்று உறுதியாகக் கூற முடியாது. ஒருவருடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய புகழ் எஞ்சி நிற்கும். ஒருவர் நடுவு நிலையுணர்வுடன் செல்வத்தை ஈட்டினால் அதனால் வரும் புகழ் அவருக்குப் பாதுகாப்பாக அமையும் என்று கொள்ளுதலும் பொருந்தும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.

பதவுரை: செப்பம்-நடுவுநிலைமை; உடையவன்-பெற்றுள்ளவன், நடந்துகொள்பவன்; ஆக்கம்-செல்வம், பெருக்கம், ஈட்டம், படைப்பு; சிதைவின்றி-அழிதல் இல்லாமல்; எச்சத்திற்கு-வழியினர்க்கு; ஏமாப்பு-பாதுகாப்பு, அரண், வலியாதல்; உடைத்து-உடையது.


செப்பம் உடையவன் ஆக்கம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நடுவு நிலைமை யுடையவனது செல்வம்;
பரிதி: நடுவுநிலைமை ஆகிய செப்பத்திலே நிற்பான்;
பரிமேலழகர்: நடுவு நிலைமையை உடையவனது செல்வம்;

'நடுவு நிலைமையை உடையவனது செல்வம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நேர்மை உடையவனது செல்வம்', 'நடுவுநிலைமை உடையவனது செல்வம்', '(வழக்கைத் தீர்ப்பவர்கள்) ஓரவஞ்சனை யற்றவர்களாக நடந்து கொண்டால் அந்தப் பெருமை', 'நடுவு நிலையைக் கடமையாகக் கொண்டவனது செல்வமும் புகழும்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நடுவு நிலைமையை உடையவனது ஆக்கம் என்பது இப்பகுதியின் பொருள்.

சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னளவிலுங் கேடின்றியே நின்று, தன் வழியுள்ளார்க்குங் கேடுவாராமற் காவலாதலையுடைத்து.
மணக்குடவர் குறிப்புரை: நடுவுநிலைமையுடையார் செல்வம் அழியாதென்றவாறு
பரிதி: வங்கிசம் தழைத்து ஆக்கம் பெருகும். [வங்கிசம் - மரபு, வம்சம்]
பரிமேலழகர்: பிறர் செல்வம் போல அழிவு இன்றி அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து. [வலியாதல்- உறுதியாதல்]
பரிமேலழகர் குறிப்புரை: விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்கும் துணையும் அவன்றனக்கும் ஏமாப்பு உடைத்து என்பது பெற்றாம். அறத்தோடு வருதலின், அன்னதாயிற்று. தான் இறந்தவழி எஞ்சி நிற்பதாகலின் 'எச்சம்' என்றார். [அன்னது -செல்வம் எச்சத்திற்கும் உறுதியாதல்; எச்சம் - எஞ்சி நிற்பது]

'தன்னளவிலும் கேடின்றி, தன் வழியுள்ளார்க்குங் கேடுவாராமற் காவலாதலையுடைத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குறையாமல் வழி வழி மக்கட்குத் துணையாகும்', 'அழிவின்றி அவனது வழிவரும் பரம்பரைக்கும் துணையாகும்', 'அழியாமலிருந்து அவனுடைய பரம்பரைக்குப் பாதுகாப்பதாகும்', 'அவனோடும் அழிந்து போகாமல் அவன் வழியினர்க்கும் சிறந்த பாதுகாப்பாகும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அழிவு இன்றி வழியுள்ளார்க்குச் சிறந்த பாதுகாப்பாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நடுவு நிலைமையை உடையவனது ஆக்கம் அழிவு இன்றி எச்சத்திற்கு சிறந்த பாதுகாப்பாகும் என்பது பாடலின் பொருள்.
'எச்சத்திற்கு' குறிப்பது என்ன?

நடுவு நிலைமை தந்த செல்வம் பயன்படாமல் அழியாது.

நடுநிலை நின்றவர் சேர்த்த செல்வத்துக்கு அவர் காலத்துக்குப் பின்னும் பாதுகாப்பு உண்டு.
முந்தைய குறளில் நடுவுநிலைமை தகுதி என்ற சொல்லால் குறிக்கப் பெற்றது. இங்கு அதுவே செப்பம் என அழைக்கப்படுகிறது. செப்பம் உடையவன் நடுநின்றவனாகும். ஆக்கம் என்ற சொல் உயர்வு அல்லது பெருக்கத்தைத் தருவதைக் குறிப்பது. செல்வம், கல்வி, செல்வாக்கு, புகழ் போன்றவற்றை உணர்த்தும் சொல் இது.
நடுவு நிலைமை உடையவனின் செல்வம், அழிவு இன்றி அவனுடைய எச்சத்திற்குப் ஏமாப்புத் தரும் என்கிறது பாடல். ஏமாப்பு என்பதற்கு உறுதியாதல் வலியாதல் துணையாதல், பயன்தருவதாய், மரபிலுள்ளார்க்குத் துணையாய் எனப் பொருள் கூறினர். இவற்றுள், வலிதருவதாய், உறுதியாய் என்ற பொருட்கள் சிறந்தன.
பொதுவாக ஒருவர் ஈட்டும் செல்வம் தான் துய்த்த பின் தன் பிள்ளைகள் மீது கொண்ட அன்பு காரணமாக அவர்களுக்கே செல்லவேண்டும் என்றே நினைப்பார். ஆனால் அவர்கள் அதைத் துய்ப்பார்கள் என்பதை உறுதி செய்வது எப்படி? நடுவுநிலைமையைக் கைக்கொண்டொழுகுவோரின் செல்வம் குறைவுபடாது அவர் வழியுள்ளோர்க்குப் பாதுகாவலாக இருக்கும் என வள்ளுவர் இங்கு சொல்வதால் அது அவர்களைச் சென்றடையும் என்பதாகிறது.
நடுவு நிலை தவறுவதால் வரும் ஆக்கம் நிலையானதன்று என்ற உட்பொருளும் இதில் விளங்கக் காணலாம்.

அறம்புரிவோர் ஆக்கம் சிதையக் கூடாது என்பது வள்ளுவரின் விருப்பம். செவ்வியான் கேடு ஏன் வந்தது என்று ஆராயப்பட வேண்டும் என்று அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். (169) என்ற பாடலில் கூறுவதிலிருந்து நடுநிலை அறத்தில் நின்றவன் கேடுறக்கூடாது அதாவது அவன் செல்வம் நிலைக்க வேண்டும் எனக் கருதுகிறார் என்பது தெளிவாகிறது. இங்கு அவனது ஆக்கம் எச்சத்திற்குப் பாதுகாப்பாகும் என்கிறார். நேர்வழியில் சம்பாதித்தவை அழிவில்லாமல் நிலைத்திருக்கும் என்பது அறம் சார்ந்த நம்பிக்கை.

'எச்சத்திற்கு' குறிப்பது என்ன?

'எச்சத்திற்கு' என்ற சொல்லுக்கு தன்வழி உள்ளார்க்கு, வங்கிசம் தழைத்து, வழி வழி மக்கட்கு, வழிவரும் பரம்பரைக்கு, குடும்பத்துக்கும் பரம்பரைக்கும், அவனுடைய மக்கட்கு, வாரிசுகளுக்கு, அவன் மக்கள் பேரன் முதலாக அவன் வழியில் உள்ளார்க்கு, சந்ததிக்கு, வழி வருவோர்க்கு, வழிவழி இனமரபுக்கு என்று உரையாளர்கள் பொருள் கூறினர்.

எச்சத்திற்கு என்பதற்கு வேறுவேறு சொற்களில் சொல்லப்பட்டாலும் அனைத்தும் செப்பமுடையவன் இறந்த விடத்து எஞ்சி நிற்கும்வழித் தோன்றல்களுக்கு என்ற பொருளையே தருகின்றன. எச்சம் என்பதற்கு நேர் பொருள் எஞ்சி நிற்பது என்பது. தான்‌ இறந்தொழிய எஞ்சி நிற்பறு மக்களே யாதலால்‌ வழிவருவோர் எச்சமெனப்பட்டது என இவர்கள் கருதுகின்றனர்.

இச்சொல்லுக்குச் செல்வம், முன்னோர் வைப்பு, புகழ், ஒரு நறுமணப்பொருள், மிச்சம், மக்கள், பறவைமலம், குறைவு எனப் பல பொருள் உண்டு. ஒருவர் நல்லது செய்தவரா பழியான செயல்கள் புரிந்தவரா என்பதை அவர் இறந்து பிறகு கிடைக்குக் புகழ் கொண்டு தெரியலாம் என்று வசையென்ப வையத்தார்க்கு எல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின். (புகழ்-238 பொருள்: புகழ் என்று சொல்லப்படும் எச்சத்தைப் பெறாவிட்டால் உலகத்தில் பிறந்தோர்க்கு இகழ்ச்சியாகும்) என மற்றொரு இடத்தில் எச்சம் அதாவது தனக்குப் பிறகு நிலைத்திருப்பது புகழ் என்று வள்ளுவர் கூறுவார்.
புகழ் என்றும் நிலைத்திருப்பது. அது சிதையாது. நேர்மையானவன் என்ற நல்லபெயர் ஈட்டுதல் காலங்களைக் கடந்து நன்மை பயப்பதாகும். ஒருவனது நேர்மையான நடவடிக்கைகளைக் கண்ணுற்றுவர்களும் அவனால் பயன் அடைந்தவர்களும் அவற்றைப் பல காலம்கடந்தும் பெருமையுடன் பேசிக்கொண்டிருப்பர். இதுவே அவனது புகழுக்கு ஏமாப்பு ஆகும் என்று எச்சம் என்பதற்கு இசை (புகழ்) எனப் பொருள் கொண்டவர்கள் இக்குறளுக்கு விளக்கம் தருவர்.

இங்கு கூறப்பட்டுள்ள எச்சத்திற்கு என்ற சொல் வழிவழி மக்கட்கு என்ற பொருள் தரும்.

நடுவு நிலைமையை உடையவனது ஆக்கம் அழிவு இன்றி அவன் வழியுள்ளோர்க்குப் பாதுகாப்பாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நடுவுநிலைமை யான்‌ வந்த செல்வம்‌ நன்மை பயக்கும்‌.

பொழிப்பு

நடுவுநிலைமை உடையவனது ஆக்கம் குறைவுபடாது அவனுடைய மக்கட்குப் பாதுகாப்பாக அமையும்.