இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0118துலாக்கோல்
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி

(அதிகாரம்:நடுவுநிலைமை குறள் எண்:118)

பொழிப்பு (மு வரதராசன்): முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர் தூக்கும் துலாக்கோல்போல் அமைந்து, ஒரு பக்கமாகச் சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

மணக்குடவர் உரை: சமன்வரைப்பண்ணி யிரண்டுதலையுஞ் சீரொத்தால் தூக்கிப் பார்க்கப்படுகின்ற கோலைப்போல, வீக்கம் தாக்கமற்று ஒருவன் பக்கமாக நெஞ்சைக் கோடவிடாமை சான்றோர்க்கு அழகாவது.
இது நடுவுநிலைமை வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் - முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல; அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி - இலக்கணங்களான் அமைந்து ஒரு பக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகு ஆம்.
(உவமையடை ஆகிய சமன்செய்தலும் சீர் தூக்கலும் பொருட்கண்ணும், பொருளடை ஆகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர்தூக்கலாவது தொடை விடைகளால் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும், ஒருபால் கோடாமையாவது அவ்வுள்ளவாற்றை மறையாது பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க.)

இரா இளங்குமரனார் உரை: முதற்கண் சமமாக நின்று பின் தன்னிடத்து வைக்கப்பட்ட பொருளின் எடையைச் செம்மையாகக் காட்டும் நிறைக்கோல். அதுபோல் ஒரு பக்கம் சாயாமல் நடுவுநிலையோடிருத்தல் சான்றோர்க்கு அழகாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி

பதவுரை: சமன்-சரிநிலை, சமஅளவில்; செய்து-செய்து, இயற்றி; சீர்-அளவு; தூக்கும்-வரையறுக்கும், சரியாகக் காட்டும்; கோல்தராசு; போல்-போன்று, நிகராக; அமைந்து-பொருந்தி; ஒருபால்-ஒருபக்கம்; கோடாமை-கோணாதிருத்தல்; சான்றோர்க்கு-சான்றோர்க்கு; அணி-ஆபரணம், அழகு.


சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சமன்வரைப்பண்ணி யிரண்டுதலையுஞ் சீரொத்தால் தூக்கிப் பார்க்கப்படுகின்ற கோலைப்போல; [சமன்வரைப்பண்ணி-சமமாதலை வரையறை செய்யும் கோடினைக்கீறி; சீர் - அளவு]
பரிதி: கழற்றுக்கோல் சமன்வாயிலே நின்று ஒருபலம் இருபலமாகில் தன் அளவிலே நிற்கும் தன்மைபோல; [சமன்வாயிலே - சமனாக நிற்கும் தராசின் வாயின் மூலம்]
காலிங்கர்: கல்லொடு பொன்னொடு வாசியறச் சமநிலை செய்து வழுவாமல் குறிக்கொண்டு சீர்தூக்கும் கோல்போல; [வாசியற - வேறுபாடின்றி]
பரிமேலழகர்: முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல;

'சமநிலை செய்து வழுவாமல் குறிக்கொண்டு சீர்தூக்கும் கோல்போல' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சமமாக நின்று பின் நிறுக்கும் தராசுபோல', 'முதலில் தான் சமனாக இருந்து பின் தன்னிடம் வைத்த எடையை நிறுத்துக் காட்டும் துலாக்கோல் போல', '(ஒரு வழக்கைத் தீர்க்கும்போது) துலாக்கோல் போல நேர்மை கோணாமல் வழக்கைச் சீர்தூக்கிப் பார்த்து', 'சமனாக நின்று எடையினை அறிவிக்குந் துலாக்கோல் போல அமைந்து', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சமமாக நின்று பின் தன்னிடம் வைத்த பொருளின் எடையை நிறுத்துக் காட்டும் துலாக்கோல் போல என்பது இப்பகுதியின் பொருள்.

அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வீக்கம் தாக்கமற்று ஒருவன் பக்கமாக நெஞ்சைக் கோடவிடாமை சான்றோர்க்கு அழகாவது. [வீக்கம் தாக்கம்- நிறைகுறை]
மணக்குடவர் குறிப்புரை: இது நடுவுநிலைமை வேண்டுமென்றது.
பரிதி: தானும் அளவுக் களவாகச் சொல்லுதல் நடுவுநிலைமை என்றவாறு.
காலிங்கர்: தன் நெஞ்சத்து அமையுடையனாய் ஒருபக்கம் சேர்வதோர் கோட்டம் இல்லாமை சால்புடையார்க்கு அழகாவது என்றவாறு..[கோட்டம்-ஒரு பக்கம் சாய்தலாகிய கோணல்]
பரிமேலழகர்: இலக்கணங்களான் அமைந்து ஒரு பக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகு ஆம்.
பரிமேலழகர் குறிப்புரை: உவமையடை ஆகிய சமன்செய்தலும் சீர் தூக்கலும் பொருட்கண்ணும், பொருளடை ஆகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர்தூக்கலாவது தொடை விடைகளால் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும், ஒருபால் கோடாமையாவது அவ்வுள்ளவாற்றை மறையாது பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க.

'ஒருவன் பக்கமாக நெஞ்சைக் கோடவிடாமை சான்றோர்க்கு அழகாவது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனஞ்சாயா நேர்மையே நடுவர்க்கு அழகு', 'நடுவுநிலையிலிருந்து ஒருபக்கம் சாயாது நிற்றலே சால்புடையார்க்கு அழகாம்', 'ஒரு பக்கத்திலும் சாய்ந்து விடாமல் இருப்பதுதான் மேலான குணமுள்ளவர்களின் சிறப்பு', 'ஒரு பக்கத்திற் சாயாமையே அறிஞர்க்கு அழகாகும்.' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

நெஞ்சத்து நடுநிலை அமைந்து, ஒரு பக்கம் சாயாமையே சால்புடையார்க்கு அழகாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சமமாக நின்று பின் தன்னிடம் வைத்த பொருளின் எடையை நிறுத்துக் காட்டும் கோல் போல், நெஞ்சத்து நடுநிலை அமைந்து, ஒரு பக்கம் சாயாமையே சால்புடையார்க்கு அழகாகும் என்பது பாடலின் பொருள்.
'கோல் போல்' சொல்வது என்ன?

எப்பக்கமும் சாயாமல் நேர்நின்று நீதி உரைப்பர் பெரியோர்.

தன்னைச் சமன் செய்து கொண்டு, பிறகு தன்னிடம் வைத்த பொருளின் எடையினைச் சமமாக அளந்து காட்டும் துலாக்கோல் போல, ஒரு பக்கமாகச் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும்.
இதே அதிகாரத்தில் உள்ள முந்தைய ஒரு குறள் .....நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி (குறள் 115 பொருள்:........உள்ளம் சாயாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகு) என்று சொன்னது. வழக்கு ஆராயத் தொடங்கும் முன்னர், அவ்விதம் உள்ளத்தை ஒரு பக்கம் சாயாமல் வைத்திருக்க வேண்டும் என இக்குறள் சொல்கிறது. அதன் பின்னர் யார் பக்கமும் சாயாது ஆய்ந்து தீர்ப்பு உரைக்க வேண்டும். வழக்குத் தீர்ப்பவர் துலாக்கோலை நோக்க வேண்டும். தான் முதலில் சமமாக நின்று பிறகு சார்பு நிலை எடுக்காமல் அதாவது வேண்டியவர் வேண்டாதவர் என்ற வேறுபாடு இல்லாமல் தன்னிடம் வைத்த பொருளின் எடையை உள்ளவாறு அறிவிக்கும் துலாக்கோல் போல முதலில் நெஞ்சம் கோடாமல் அதாவது மனத்தால் நேர் நின்று பின்பு எந்தப்பக்கமும் சாயாமல் நீதி வழங்குவர் சான்றோர்.
சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்திருக்க வேண்டிய தேவை பொது வாழ்வில்தான் மிகையாக உண்டாகிறது. நடுவு நிலைமைக் குணம் பொதுவாகப் பல சூழ்நிலைகளுக்கு வேண்டியதானாலும் நீதி நிர்வாகம் செய்வோர்க்கு இக்குணம் மிகத் தேவையாம். பலவேறு கருத்துக்களைச் சமநிலையில் கேட்டல், ஆய்வு செய்தல், ஏற்பன ஏற்றல், ஏற்பக்குரியனவல்லாதவற்றைத் தொடர்ந்து விவாதித்துச் செழுமைப்படுததி ஏற்றல் முதலியன வழக்குத் தீர்ப்பதில் உள்ள கூறுகளாகும். நடுவுநிலைமையாவது எப்பகுதியினர் மாட்டும் ஒக்க நிற்கும் நிலையாகும். ஒரு பாற் கோடாமைக்கு- நடுவு நிலைமைக்கு விருப்பம் இல்லை; வெறுப்பும் இல்லை. நடுவுநிலை உடையவர்கள் இனம், சமயம், உறவினர், நொதுமலர் (அயலார்-பகை, நட்பு அல்லாதார்), பகைவர், நட்பு கொண்டோர், வலியவர், மெலியார், செல்வர், வறியர் என்பவற்றின் காரணமாக சார்புநிலை மேற்கொள்ளார். ஒன்றை ஆய்வு செய்வதிலும் ஏற்பதிலும் விலக்குவதிலும் முறை பிறழாது, அறம் நோக்கியே செயற்பட்டு அறத்தியல்பை இலக்காகக் கொண்டு முடிவுகள் எடுப்பர். உணர்ச்சிகளற்ற சமன்கோல் போலவே சான்றோரும் நடுநிலைக் கருவியாக இருப்பர். இது வழக்குத் தீர்ப்போர்க்கு உரிய அழகாகும்.

இக்குறள் நீதி கூறவேண்டிய முறைமையைக் குறிப்பதாக உள்ளது. இக்காலத்து நீதிமன்றங்கள் போன்று முன்பு அறங்கூறு அவையங்கள் இருந்தன எனப் பழம் நூல்கள் மூலம் அறிகிறோம். இந்த அவையங்களிலிருந்து அறம் உரைத்தவர் சான்றோர் என அழைக்கப்பட்டிருக்கலாம். அறிவொழுக்கங்களால்‌ நிறைந்தோரையே குறள் சான்றோர் எனக் கூறும். இவரே அறம் காவல் செய்தவர். இவர் உள்ளத்தால் கோணுதல் இல்லாத தன்மையே முன்னே உறுதியாகக் கொண்டு நடுவுநிலைமையிலிருந்து அணுவளவேணும் அகலாமல் நேர்மை பிறழாமல் செயல்படுவராக இருக்க வேண்டும் என்பதையே வள்ளுவர் துலாக்கோல் போல சமன் செய்து சீர் தூக்க வேண்டும் எனக் குறிக்கின்றார். நீதி கூறுவாரின் மனம் நடு நிற்காமல் சார்புநிலை எடுத்தால் அவர்கள் உரைக்கும் நீதி நேர்பட இருக்காது.

இக்குறள் படிப்போர்க்கு, கண்களைத் துணியால் கட்டி மறைத்து கையில் தராசு ஒன்றைப் பிடித்தபடி நிற்கும், கற்பனைப் படைப்பான நீதிதேவதை நினைவுக்கு வரும்.

'கோல் போல்' சொல்வது என்ன?

நிறுத்தல் அளவைக்குப் பயன்படுத்தப்பட்ட கருவியைச் 'சமன் செய்து சீர்தூக்கும் கோல்' என்று இக்குறள் கூறுகிறது. இதனை மணக்குடவர் வாளா 'கோல்' என்றும் பரிதி 'கழற்றுக் கோல்' (அல்லது கயிற்றுக்கோல்) என்றும் பரிமேலழகர் ‘துலாக் கோல்' என்றும் குறிப்பிடுகின்றனர். காலிங்கர் உரை ‘கல்லொடு, பொன்னொடு வேறுபாடின்றிச் சமநிலை செய்து வழுவாமல் குறிக்கொண்டு சீர்தூக்கும் கோல்’ எனச் சொல்வதால் அது படிக்கல் துணைக்கொண்டு நிறுக்கப்பட்ட தராசைக் குறிக்கும் என்பர். முதலில் சொல்லப்பட்ட மூன்றும் கோலில் வரையும், ஒருபக்கம் தட்டும் உடைய மரக்காலக்கருவியாகும். தராசு என்பது இரு தட்டுகள் கொண்ட உலோகக் கருவி. துலாக்கோல் தன்கண் வைத்த பொருளைச் செவ்வையாக நிறுத்துக் காட்டுவதால் 'சமன்கோல்' என்றும் அழைக்கப்பெற்றது. அது 'ஞமன் கோல்' எனவும் ஆளப்பட்டது. துலாக்கோலின் (ஒற்றைத் தட்டு தராசு) பயன்பாடு நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது எடைப்படி இல்லாமல் அக்கோலில் உள்ள வரைகளைக் கொண்டே நூறு பலம் வரை நிறுக்கும் வாய்ப்பு துலாக்கோலில் சிறப்பாம். அந்தக் கோலில் வெள்ளை நிறத்தில் சில கோடுகள் வரைந்திருப்பார்கள். ஒவ்வொரு கோடும் ஒவ்வொரு எடையைக் குறிக்கும் குறியீடு ஆகும். துலாக்கோலுக்குப் பொருள்களை நிறுக்கத் தனியாக எடைக்கல் என்ற ஒன்று தேவையில்லை. அங்கும் இங்கும் நகர்த்துகிற மாதிரி அந்தக் கோலில் ஒரு சின்ன நூல் கயிறு கட்டியிருப்பார்கள். தேவையான எடைக்குண்டான கோட்டுக்குக் கயிற்றை நகர்த்திப் பிறகு அந்தக் கோட்டிலேயே கயிற்றை இறுக்கி எடை போட வேண்டியபொருளைக் கோலில் உள்ள ஒற்றைத் தட்டில் வைத்துக் கோலைத் தூக்கி எடை கணிப்பார்கள். இன்றும் சீனர்கள் பரவலாக இந்தவகையான அளவுகோலையே நிறுத்தலுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு பொருளை எடைபோடும் முன் துலாக்கோலை முதலில் எடுத்து துலாக்கோலின் சமநிலையைப் பார்த்து. அதாவது எடைக்கற்களும் பண்டங்களும் இல்லாமல் வெறும் நிலையில் கோலைத் தூக்கிச் சரிபார்த்து பின் எடை போடுவர். அதுபோல சான்றோராயிருப்பவர் நீதி ஆராயுமுன் நெஞ்சத்தால் கோடாது நடுநிலை நிற்பார்; நீதி வழங்கும்போது எவர் பக்கமும் சார்ந்திராமல் நீதி வழங்குவார். இதுவே ((துலாக்) 'கோல்போல்' என்பது.

மிகத்துல்லியமாக அளவுகளைக் காட்டும் மின்னணுக் கருவிகள் எல்லாத் துறைகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், இன்று எடை பார்க்கப் பயன்படும் துலாக்கோல், தராசு கொஞ்ச காலத்தில் பயன்படத்தக்கதாக இல்லாமல் போய்விடலாம். எனினும் இக்குறளின் உவமைப் பொருள் மாறாது. 'சமன் செய்து' என்று கூறப்படுவதை மின்னணுக் கருவியின் பயன்பாட்டில் அறியப்படும் 'Zero-reading' எனக் கொள்ளலாம்.

சமமாக நின்று பின் தன்னிடம் வைத்த பொருளின் எடையை நிறுத்துக் காட்டும் துலாக்கோல் போல, நெஞ்சத்து நடுநிலை அமைந்து, ஒரு பக்கம் சாயாமையே சால்புடையார்க்கு அழகாகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நடுவுநிலைமைக்குச் சிறந்த அடையாளம் சமன் செய்து சீர்தூக்கும் கோல்.

பொழிப்பு

சமமாக நின்று பின் தன்னிடம் வைத்த பொருளின் எடையை நிறுத்துக் காட்டும் துலாக்கோல் போல, நெஞ்சத்து நடுநிலை அமைந்து, ஒருபக்கம் சாயாமை சால்புடையார்க்கு அழகு.