இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0117



கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு

(அதிகாரம்:நடுவுநிலைமை குறள் எண்:117)

பொழிப்பு (மு வரதராசன்): நடுவுநிலையாக நின்று அறநெறியில் நிலைத்து வாழ்கின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என்று கொள்ளாது உலகம்.

மணக்குடவர் உரை: நன்மையின்கண்ணே நடுவாக நின்றவனுக்கு அது காரணமாகப் பொருட்கேடு உண்டாயின் அதனை உலகத்தார் கேடாகச் சொல்லார். ஆக்கத்தோடே யெண்ணுவர்.

பரிமேலழகர் உரை: நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - நடுவாக நின்று அறத்தின் கண்ணே தங்கியவனது வறுமையை; கெடுவாக வையாது உலகம் - வறுமை என்று கருதார் உயர்ந்தோர்.
(கெடு என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். 'செல்வம் என்று கொள்ளுவர் என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் முறையே கேடும் பெருக்கமும் கோடுதலான் வாரா என்பதூஉம். கோடுதல் கேட்டிற்கேதுவாம் என்பதூஉம், கோடாதவன் தாழ்வு கேடு அன்று என்பதூஉம் கூறப்பட்டன.)

வ சுப மாணிக்கம் உரை: நேர்மையாக நின்றமையின் தாழ்வு வரின் அதனைக் கேடாக உலகம் கருதாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு கெடுவாக வையாது உலகம்.

பதவுரை: கெடு-கெடுதல்; ஆக-ஆக; வையாது-கருதாது; உலகம்-உலகோர்; நடுவு-நடுவுநிலைமை, நேர்மை; ஆக-ஆகும்படி; நன்றிக்கண்-நன்னெறின்கண், அறத்தின் கண்; தங்கியான்-தங்கினவன்; தாழ்வு-குறைவு, வறுமை, செயலின் காலத்தாழ்ச்சி.


கெடுவாக வையாது உலகம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்தார் கேடாகச் சொல்லார். ஆக்கத்தோடே யெண்ணுவர்; [எண்ணுவர் - கருதுவர்]
பரிப்பெருமாள்: உலகத்தார் கேடாகச் சொல்லார். ஆக்கத்தோடே யெண்ணுவர்;
பரிதி: அந்த விதனத்தை விதனம் என்று சொல்லக் கடவன் அல்ல; .
காலிங்கர்: இதனை ஒரு கேடாக வைத்து எண்ணார் சான்றோர்; யாதனையோ எனில்;
பரிமேலழகர்: வறுமை என்று கருதார் உயர்ந்தோர்;

'உலகத்தார் ஒரு கேடாக வைத்து எண்ணார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றையம்ஆசிரியர்கள் 'உயர்ந்தோர் கேடாகக் கருதார்', 'ஒரு குறையாக எண்ணாமல் உலகம் அவனைச் சிறப்புள்ளவனாகவே மதிக்கும்', 'ஒரு கேடாக உயர்ந்தோர் கருதமாட்டார்', 'உலகம் கெட்ட நிலையாகக் கருதாது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

'உலகம் கேடாகக் கருதாது என்பது இப்பகுதியின் பொருள்.

நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நன்மையின்கண்ணே நடுவாக நின்றவனுக்கு அது காரணமாகப் பொருட்கேடு உண்டாயின் அதனை.
பரிப்பெருமாள்: நன்மையின்கண்ணே நடுவாக நின்றவனுக்கு அது காரணமாகப் பொருட்கேடு உண்டாயின் அதனை.
பரிப்பெருமாள் குறிப்புரை: நடு எனவே அமையும். மேலும் நன்றிக்கண் என்றது நடுவு செய்யுங்கால் அறம் பார்த்துச் செய்ய வேண்டும் என்றற்கு. இது கெட்டான் ஆயினும் இகழப்படான் என்றது. [நன்றிகண் - நற்செயலின்கண்]
பரிதி: ஒருவர் நடுவுநிலைமையிலே நின்று அதனாலே விதனம் வந்தாலும்.
காலிங்கர்: ஒருபால் கோடுதல் இன்றி நடுவாகவே நன்னெறிக்கண் தங்கியானது காரியத் தாழ்வினை என்றவாறு. [காரியத்தாழ்வு - செயலின் தாமதம்]
பரிமேலழகர்: நடுவாக நின்று அறத்தின் கண்ணே தங்கியவனது வறுமையை.
பரிமேலழக குறிப்புரைர்: கெடு என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். 'செல்வம் என்று கொள்ளுவர் என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் முறையே கேடும் பெருக்கமும் கோடுதலான் வாரா என்பதூஉம். கோடுதல் கேட்டிற்கேதுவாம் என்பதூஉம், கோடாதவன் தாழ்வு கேடு அன்று என்பதூஉம் கூறப்பட்டன.

'நடுவாக நின்று அறத்தின் கண்ணே தங்கியவனது/பொருட்கேட்டை/விதனத்தை/காரியத் தாழ்வினை/ வறுமையை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நடுநிலையாக அறத்தின் வழி நடந்ததால் ஒருவனுக்கு வறுமை ஏற்படின் அதனை 'நடுவு நிலைமை தவறாமல் நடந்து கொள்ளும் ஒருவன் ஏழையாக இருப்பினும் அதை', 'முறையாக நன்னெறியில் நிலை பெற்றவனது எளிமையை', 'நடு நிலையில் நின்று அற வழியில் சென்றவனது தாழ்வை' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

நடு நிலையாக அற வழியில் நின்றவனது தாழ்வை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நடு நிலையாக அற வழியில் நின்றவனது தாழ்வை உலகம் கேடாகக் கருதாது என்பது பாடலின் பொருள்.
'தாழ்வு' குறிப்பது என்ன?

நேர்மையாளன் தாழ்வுற்றாலும் இகழப்படமாட்டான்.

நடுவு நிலைமையிலேயே இருந்து நன்மையான செயல்களிலே நிலைத்திருப்பவனின் தாழ்வைக் கேடு என்று உலகோர் கொள்ளார்.
நடுவாக என்றது நடுநிலையாக நிற்றல் என்பது. நடுநிற்றல் நேர்மை குறித்த சொல். நன்றி என்ற சொல் நன்மை அதாவது நற்செயல் எனப் பொருள்படுவது. 'நன்றிக்கண் தங்கியான்' என்ற தொடர் நடுவு செய்யுங்கால் நன்மையான பார்த்துச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறது. நடுநிலைமை தவறாமையே ஓர் அறம்தான். ஆயினும் நடுநிற்றற்கண்ணும் அறம் பார்த்து நிற்கவேண்டும் என்பதாக நன்றியின் கண்ணே நடுவானவன் என அவ்வறம் அழுந்தச் சொல்லப்படுகிறது. 'தங்கியான் தாழ்வு' என்றது பல துன்பங்களுக்குள்ளானபோதும் நடுவு நிலைமை பிறழாது உள்ளஉறுதியோடு நின்றவன் என்பதனைக் காட்டுவது.
நடுநின்றவன் அடையும் துன்பத்தையும் இழிவையும் உலகம் கேடுற்றதாக எண்ணுவதில்லை. நேர்மையான நெறியைக் கடைப்பிடித்து ஒழுகியதால் அவனுக்குத் தாழ்வு உண்டானாலும் அதனை உலகோர் குறைவாகக் கருதார்.

கெடுவாக என்ற சொல் கெடு + ஆக என விரியும். கெடு என்பது 'தல்' விகுதி கெட்டுக் கெடுதல் அதாவது கேட்டை உணர்த்திற்று. (குழந்தை பால் குடி மறந்தது என்பதில் குடி குடித்தலைக் குறித்தல் போல) ஆக என்ற சொல்லுக்கு ஆகும்படி என்பது பொருள். வையாது என்ற சொல் வைக்காது என்ற பொருளில் அமைந்தது. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து (பொறையுடைமை 155 பொருள்: தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக வைக்கமாட்டார்; ஆனால் பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.) என்ற மற்றொரு குறட்பாவிலும் வையார் என்ற சொல் வைக்கமாட்டார் எனும் பொருளில் ஆளப்பட்டது. கெடுவாக வையாது என்பது கெடுதல் ஆகும்படி வைக்காது அதாவது கெடுவாக அல்லது கேடாகக் கொள்ளாது என்ற பொருள் தரும்.

'தாழ்வு' குறிப்பது என்ன?

'தாழ்வு' என்ற சொல்லுக்குப் பொருட்கேடு, விதனம், காரியத்தாழ்வு (செயலின் காலத்தாழ்ச்சி), வறுமை, தரித்திரப்படுதல், வறுமை நிலை, கேடு, தாழ்வு, தரித்திரம், எளிமை, கேடு வருவது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்,

தாழ்வு என்ற சொல் இங்கு நிலை தாழ்தலைச் சொல்வது.
நடுநிலை தவறாமல் செயலாற்றும் ஒருவனுக்குப் பல இன்னல்கள் உண்டாகலாம். அவனுக்குப் பொருள் அளவில் குறைபாடுகள் வரலாம். அறமல்லாத பொருள் ஈட்டத்தைத் தவிர்ப்பதால் அவனது எளிமையான வாழ்வு மேலும் பாதிப்புக்கு உள்ளாகலாம். அவன் பதவி வகிப்பவனாக இருந்தால் பதவி உயர்வு கிடைக்காமலோ வலிமிக்கவர்களின் சூழ்ச்சியினால் பதவித் தாழ்வு அல்லது பதவி நீக்கம் கூட உண்டாகலாம். குற்றம் செய்யாமலே அவன் இழிவுக்கு ஆளாகலாம். எந்தவகையான தாழ்வு நிலை ஏற்பட்டாலும் சார்புநிலை எடுக்காமல் நன்னெறிக்கண் தங்கினானது நிலை தாழ்தலை உலகம் குறைவாக எண்ணாது.

நேர்மை தவறாமல் நடப்பதால் வாழ்க்கையில் தாழ்வுதானே வரும் என்று அஞ்சி நடுநிலை கோடக்கூடாது. நடுநிலையாக அறநெறியில் நின்றவனுடைய தாழ்வை உலகோர் தாழ்வாகக் கருத மாட்டார்கள். அத்தாழ்வுநிலையை மக்கள் கேடுற்ற வாழ்வாகக் கருதமாட்டார்கள். பொருளால் வறுமை அடைந்தாலும் அது பெருமையும் பெருமிதமும் உடைய வறுமைதான். நடுவுநிலைமை தவறி நீதி கூறினால் எளிதாகப் பெரும் ஆக்கத்தைப் பெறமுடியும் என்றாலும், அங்ஙனம் அறம் பிறழ்ந்து மேன்மை அடைவோரை உலகம் தூற்றாமல் விடாது.

நடுநிலை கோடாதவன் தாழ்வு கேடு அல்ல என்று சொல்லும்போது அவன் நேர்மை பற்றி உலகம் பெருமையே கொள்ளும் என்ற கருத்தும் பெறப்படுகிறது. நேர்மையானவனது வாழ்வை வெளிப்படையாகப் பாராட்டதவரும் உள்ளுக்குள் அவனைப்பற்றி வியந்து அவன்மேல் பெருமதிப்பே கொள்வர்.

'தாழ்வு' என்றது தாழ்வுற்ற நிலை என்ற பொருளில் வந்தது.

நடு நிலையாக அற வழியில் நின்றவனது தாழ்வை உலகம் கேடாகக் கருதாது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நடுவுநிலைமைதவறாதவன் உறும் கேடு தாழ்வல்ல.

பொழிப்பு

நடுநிலையாக அறத்தின் வழி நின்றவனுக்கு தாழ்வு ஏற்படின் அதனை உலகம் குறைவாகக் கருதாது.