இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0120



வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்

(அதிகாரம்:நடுவுநிலைமை குறள் எண்:120)

பொழிப்பு (மு வரதராசன்): பிறர் பொருளையும் தம்பொருள்போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.

மணக்குடவர் உரை: வாணிகஞ் செய்வார்க்கு வாணிகமாம், பிறர் பொருளையுந் தமது பொருள்போலப் பேணிச் சோர்வுபடாமற் செய்வாராயின்.
வாணிகம் - இலாபம்.

பரிமேலழகர் உரை: பிறவும் தமபோல் பேணிச் செயின் -பிறர் பொருளையும் தம்பொருள் போலப் பேணிச் செய்யின்; வாணிகம் செய்வார்க்கு வாணிகம் - வாணிகஞ்செய்வார்க்கு நன்றாய் வாணிகம் ஆம்.
(பிறவும் தமபோல் செய்தலாவது, கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல். இப்பாட்டு மூன்றனுள், முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின; ஏனையது வாணிகரை நோக்கிற்று, அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச் சிறந்தமையின்.)

வ சுப மாணிக்கம் உரை: விலைப்பொருளையும் கொள்பொருளாக மதித்தால் வணிகர்க்கு நல்ல வணிகம் ஏற்படும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பிறவும் தமபோல் பேணிச் செயின் வாணிகம் செய்வார்க்கு வாணிகம் .

பதவுரை: வாணிகம்-வணிகம்; செய்வார்க்கு-செய்பவர்களுக்கு; வாணிகம்-பெருகும் வணிகம், ஆதாயம், ஊதியம்; பேணி-கருதி; பிறவும்-பிறர் பொருளையும், மற்றவையும்; தமபோல்-தம்முடையவை போன்று; செயின்-செய்தால்.


வாணிகம் செய்வார்க்கு வாணிகம்

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வாணிகஞ் செய்வார்க்கு வாணிகமாம்;
மணக்குடவர் குறிப்புரை: வாணிகம் - இலாபம்.
பரிப்பெருமாள்: வாணிகஞ் செய்வார்க்கு வாணிகமாம்;
பரிப்பெருமாள் குறிப்புரை: வாணிகம் - இலாபம்.
பரிதி: ஊதியம் செய்வார்க்கு ஊதியமாவன;
காலிங்கர்: உலகத்து வியாபாரம் செய்து ஒழுகுவார்க்கு இம்மையும் மறுமையும் பெறுவதாகிய ஊதியம் யாதோ எனின்;.
பரிமேலழகர்: வாணிகஞ்செய்வார்க்கு நன்றாய் வாணிகம் ஆம்.

'வாணிகம் செய்வார்க்கு நன்றாய் வாணிகமாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வாணிகம் செய்பவர்க்கு அது நல்ல வாணிகத் தொழில்முறையாம்', 'எதையும் சமனாக நிறுத்து அளந்து கொடுக்க வேண்டியதே தன் கடமையாகக் கொண்ட வாணிகனுக்கு அழகு என்னவென்றால்', 'வணிகஞ் செய்வார் சிறந்த வணிகமாம்', 'அவ் வாணிகம் நடுவு நிலைமையோடு பொருந்திய நல்ல வாணிகமாகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வணிகர்க்கு மேலும் வாணிகப் பெருக்கம் உண்டாகச் செய்யும் என்பது இப்பகுதியின் பொருள்.

பேணிப் பிறவும் தமபோல் செயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர் பொருளையுந் தமது பொருள்போலப் பேணிச் சோர்வுபடாமற் செய்வாராயின்.
பரிப்பெருமாள்: பிறர் பொருளையுந் தமது பொருள்போலப் பேணிச் சோர்வுபடாமற் செய்வாராயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வாணிகம் நடுவு செய்யுமாறு கூறிற்று. இவை நான்கு பாட்டானும் நடுவுசெய்யும் ஆறு கூறப்பட்டது.
பரிதி: தன் காரியம் போல பிறர் காரியம் செய்வதாம் என்றவாறு.
காலிங்கர்: பிறவாகிய பொருள்களையும் தம்முடையவாகிய பொருள்களைப் போலத் தன்னெஞ்சு அறிய அழிவு சேராது பாதுகாத்தும் செய்யின் அதுவே தமக்கு அழியாத ஆக்கம் என்றவாறு.
பரிமேலழகர்: பிறர் பொருளையும் தம்பொருள் போலப் பேணிச் செய்யின்.
பரிமேலழகர் குறிப்புரை: பிறவும் தமபோல் செய்தலாவது, கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல். இப்பாட்டு மூன்றனுள், முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின; ஏனையது வாணிகரை நோக்கிற்று, அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச் சிறந்தமையின். [முன்னைய இரண்டும் - இவ்வதிகாரத்து 8, 9 குறள்கள்]

'பிறர் பொருளையுந் தமது பொருள்போலப் பேணிச் செய்வாராயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறர் பொருளையும் தம் பொருள்போல் மதித்து வாங்கி விற்றால்', 'பிறருடைய பண்டத்தையும் தன்னுடையது போல் ஏற்றத் தாழ்வில்லாமல் நிறுத்து அளக்க வேண்டியதுதான். அப்படித்தான் நடுவுநிலைமை வகிக்க வேண்டியவர்களும் நிறுத்து அளந்து தீர்ப்புச் சொல்ல வேண்டும்', 'பிறர் பொருளைத் தம் பொருள் போற் கருதி வணிகஞ் செய்யின் அதுவே', 'பிறர் பொருளையும் தம் பொருள் போலக் கருதி வாணிகம் செய்தால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பிறர் பொருளையும் தம் பொருள்போல் கருதி வாணிகம் செய்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிறர் பொருளையும் தம் பொருள்போல் கருதி வாணிகம் செய்தால் வணிகர்க்கு அதுவே மேலும் வாணிகப் பெருக்கம் உண்டாகச் செய்யும் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் இவ்வதிகாரத்துள் இடம் பெற்றது ஏன்?

நேர்மையான வணிகம் ஒருவனது வணிகத்தை அதுவாகவே வளரத் துணை செய்யும்.

பிறர் பொருளையும் தமதே போல் பேணிச் செய்யும் நேர்மையான வாணிகம் இன்னும் மிகையான வணிகத்தை உண்டாக்கும்.
வாணிகம் என்ற சொல்லுக்கு ஊதியம் அதாவது இலாபம் என்பது பொருள். ஆதாயம் பெற்று விற்கும் தொழில் வாணிகம் என்றும் அதைச் செய்வார் வாணிகர் என்றுமாயிற்று. இப்பாடலில் முதலிலுள்ள வாணிகம் என்ற சொல்லுக்கு ஊதியம் என்றும் அடுத்துள்ள வாணிகம் என்ற சொல்லுக்கு வாணிகத் தொழில், ஊதியம், பொங்குமா வளம் என்றுமுரைத்தனர்; இதற்கு கூடுதல் வணிகவருவாய் (turnover) என்பது பொருத்தம்.
ஒரு இடத்தில் உண்டான பொருளை ஒரு விலை கொடுத்து வாங்கி அது தேவைப்படும் இன்னொரு இடத்திற்குக் கொண்டு சேர்த்து விலை மாற்றத்துடன் விற்று இரண்டு விலைக்குமுள்ள வேறுபாட்டில் ஆதாயமோ அல்லது கேடோ அடைவது வணிகமுறையாகும். சிலசில மாறுபடுகளுடன் கூடிய வணிக முறைகள் பலவாக உள. வணிகம் செய்து வாழ்வுநடத்துபவர் வணிகர் என அழைக்கப்படுகின்றனர். நல்ல வணிகத்துக்கு நேர்மையே அடியாக இருக்கும். நடுநிலை எண்ணம் கொண்ட வணிகர் பெரும் ஆதாயம் எண்ணாமல் வணிகம் செய்வர். நேரிய வணிகமாவது 'பிறர் பொருளையும் தம் பொருள் போலப் பேணிச் செய்தல்' என இப்பாடல் கூறுகிறது. தன்னைப் பிறரிடத்து வைத்துப் பார்க்கவேண்டும் என்னும் கருத்தை வள்ளுவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் (குறள் 250, 318) சொல்லியுள்ளார். இங்கும் அதுபோன்ற கருத்துக் கூறப்படுகிறது. தனக்குப் பண ஆதாயம் தேடிச் செயல்படும் வணிகன், தன்னிடம் பொருள் வாங்குவோர்க்கு, நேர்மையான முறையில், பாதுகாத்துத் தரப்பட்ட, கேடில்லாத, தூய்மையான பொருளைத் தரவேண்டும் எனச் சொல்லப்படுகிறது. இவ்விதம் செய்யும் வணிகனுக்கு வாணிகம் ஓங்கி வளரும் எனவும் கூறப்படுகிறது. இதை 'வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம்' என்று அழகுற அமைக்கிறது இப்பாடல்.
'பிறவும் தம்போல் செயின்' என்பதிலுள்ள பிறவும் என்பதற்குப் பிறர் பொருள் எனப் பொருள் கொள்வர். வணிகன் பண்டங்களை எவ்வளவு கருத்துடன் வாங்குகிறானோ அதுபோன்றே தகுந்த மதிப்புள்ள பொருளை விற்கவும் வேண்டும்; வாங்குபவர் கொடுக்கும் பணத்தைக் (அல்லது பண்ட மாற்று முறையென்றால் பண்டத்தைக்) கூடுதலாகப் பெற்று தாம் கொடுக்கும் பொருளை குறைத்தும் கொடுக்கக்கூடாது.
மிதமான ஆதாயம் கருதிச் செய்தால் வாணிகம் நன்கு நடக்கும் என்பது செய்தி. பேரூதியம் பெற்றுக் கொண்டு, குறைத்துக் கொடுப்பதை இன்று சுரண்டல் என வழங்குகின்றனர்.

அனைத்துத் தொழில்களையுமே வணிகம் என்பதின் கீழ் அடக்கிக் கொள்ள முடியும். எனவே இங்கு பேசப்படும் நடுநிலை என்பது அனைத்துத் தொழிலுக்கும் பொதுவானது ஆகும். பண்டமாற்றோ, பணமாற்றோ எதுவானாலும் அடிப்படையில் கொள்முதல் செய்வது, சேமிப்புக் கிட்டங்கியில் தேக்குவது, சந்தைப்படுத்துவது, விற்பனை செய்வது, இடப்பெயர்ச்சி செய்வது இவற்றுள் அடங்கும். ஆதாயம் என்பது வணிகத் தொழில் தொடர்பான பணிக்கும், காலத்திற்கும், உழைப்பிற்கும், தேக்கச் செலவுககளுக்கும், நிதி மேலாண்மை, போக்குவரத்து, போன்ற செலவுகளுக்கும், ஆய்வுக்கும், பண மதிப்பு மாறுபாட்டிற்கும் இன்ன பிறவற்றிற்கும் கிடைக்கும் ஈட்டுத்தொகை எனப் பொருளியல் அறிஞர் கூறுவர். நடுநிலையான ஈட்டுத் தொகை மிதமான ஆதாயத்துடனான விற்பனை மூலம் பெறப்படும். கொள்முதல் செய்த கூலங்களைக் கொண்டவிலைக்குக் குறுணி கூட விற்க என்பது முன்னோர் அறிவுரை. இதற்கும் மேல் வரம்பில்லா ஆதாயம் தேடுவது நேர்மையற்றது; நடுநிலையல்லாதது எனக் கருதப்படும். வணிக முயற்சியில் ஆதாயம் மட்டுமல்லாமல் நேர்மை அதாவது நடுநிலை அறமும் தேவையாகின்றது. முறையான அளவுகருவி பயன்படுத்தல், தரமான பொருளைக் காத்து வழங்கல், போன்றவை நேர்மையான வணிகத்துக்கான மற்றக் கூறுகள் ஆகும்.

இக்குறள் இவ்வதிகாரத்துள் இடம் பெற்றது ஏன்?

முதல் பார்வையில் இந்த அதிகாரத்தோடு இக்குறள் இயைபு இல்லாதது போலவே தோன்றும். அறத்துப்பாலின் இடையிலே பொருட்பால் தொடர்பான பாடல் வந்துவிட்டது போல் இருக்கிறது இது. வாணிகம் பற்றிய குறள் ஏன் 'நடுவு நிலைமை' அதிகாரத்தில் வருகிறது என்று எண்ண வைக்கிறது. வணிகத்தைப் பற்றி ஓர் அதிகாரமோ அது தொடர்பான வேறு பாடல்களோ குறளில் எங்கும் இல்லை. பொருளின் திறத்தை எல்லாம் பொருட்பாலில் கூறுகின்ற வள்ளுவர் வாணிகத்தைப் பற்றி அங்கும் ஏதும் கூறவில்லை. இக்குறட்பாவும் வாணிபத்தைக் குறிப்பிடுவதற்காகவோ அல்லது அதன் சிறப்பை எடுத்துரைப்பதற்காகவோ அமைந்தது அல்ல. வாணிகத்திலும் நடுநிலை அறத்தைப் பேண வேண்டும் என்பதை வலியுறுத்தவே வாணிகம் பற்றி இங்கு அவர் பேசுகிறார்.
அறங்கூறும் அவையத்தார் (குறள் 118, 119), வணிகர் என்னும் இவ்விரு பிரிவினர்க்கும் நடுவுநிலைமையாகிய அறம் தனித்ததாகச் சிறந்திருத்தலின் பிறரைவிட இவர்களுக்கு நடுவுநிலைமை மிகுதியாக வேண்டும் என்பது வற்புறுத்தப்பட்டது என்கிறது பரிமேலழகர் உரை.

பொருள் முதலீடு செய்து பெரும்பொருள் திரட்டுவதற்கு வாய்ப்பு அமைந்த நிலைக்களமாக இருப்பது வணிகம். அக்களத்தில் நேர்மை நிலவவேண்டும் என்பதற்காக நடுவுநிலைமை அதிகாரத்தில் வணிக நிலைக்கென ஒரு தனியறம் கூறியுள்ளார் வள்ளுவர். 'வாணிகம் செய்வார்க்கு வாணிகம்' என்று இனியதோர் எழுச்சி நடையில் தொடங்கி, 'பேணிப் பிறவும் தமபோல் செயின்' என்ற அரியதோர் அறநடையில் முடித்தார்; நாணயவொழுங்கும் கற்பித்தார் (வ சுப மாணிக்கம்). வணிகத்தில் ஈடுபடுபவரது முதன்மை நோக்கம் ஆதாயமே என்றாலும், செய்யும் தொழில் மூலம் சமுதாய நலத்திற்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் உதவுவது வணிக முறையாகும். பொருட்கள் போக்குவரத்து இனிதாக நடைபெற வணிகர்கள் காரணிகள் ஆகின்றனர். வணிகர்கள் பொருளுண்டாக்குவோர்களுக்கும் துய்ப்போர்க்கும் ஓர் பாலம் போல அமைகிறார்கள். வணிகத்தொழில் இல்லையேல் பொருட் தட்டுப்பாடு ஏற்படும். தேவையற்ற கட்டுபாடுகள் இல்லாத பொருளாதார அமைப்பில், ஒரு குறுகிய காலத்தில், பொருள் விலையும் சமநிலைக்கு வந்துவிடும்.

நேர்மையற்ற வணிகச் செயல்பாடுகளும் நடைமுறையில் ஆழமாக வேரூன்றி விடுவதால் அவற்றைச் சுட்டிக்காட்டி அத்தகைய செயல்களில் வணிகர்கள் ஈடுபடவேண்டாம் என்பதைச் சொல்வதற்காக இக்குறள் இங்கு இடம் பெற்றது. தவறான துலாக்கோல், தராசின் நாக்கினைப் பிழையாகப் பயன்படுத்துதல் வேறுவேறான எடைக்கற்கள், பெரிதும் சிறுதுமான மரக்கால்கள் போன்று பொய்யான அளவைக் கருவிகளைக் கையாள்வது (இன்று புழக்கத்திலுள்ள மின்னணு அளவைக் கருவிகளையும் தவறாகப் பயன்படுத்த முடியும்), தரமற்ற பொருட்கள் வழங்குவது, கொள்ளை ஆதாயம் பெறுதல் போன்றவை முறையற்ற வணிகச் செயல்பாடுகளுள் சில.
மேலும் பொருளைத் தேக்குதல் (பதுக்கல்), கலப்படம் செய்தல், போலிகளை உருவாக்குதல், மிகையான ஆதாயத்திற்காக மறைவு விலைகளைக் கூட்டிச் சொல்லுதல், ஆளுக்கொரு விலையும் வேளைக்கொரு விலையும் உரைப்பது போன்றனவும் நடுநிலை தவறிய வாணிகமாகும்.
நேர்மை தவறாத வணிகத்தையே ஒருவர் மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தவே இப்பாடல் நடுவுநிலைமை அதிகாரத்தில் தொகுக்கப் பெற்றது.

பிறர் பொருளையும் தம் பொருள்போல் கருதி வாணிகம் செய்தால் வணிகர்க்கு அதுவே மேலும் வாணிகப் பெருக்கம் உண்டாகச் செய்யும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நுகர்வோர் மகிழ்வே வணிகர் மேற்கொள்ளக்கூடிய நடுவுநிலைமை அறமாகும்.

பொழிப்பு

பிறர் பொருளையும் தம் பொருள்போல் கருதி வாணிகம் செய்பவர்க்கு வணிகம் பெருகும்.