தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்
(அதிகாரம்:நடுவுநிலைமை
குறள் எண்:111)
பொழிப்பு (மு வரதராசன்): அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
|
மணக்குடவர் உரை:
நடுவு நிலைமை யென்று சொல்லப்படுகின்ற தொன்று நல்லதே: அவரவர்நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்.
பரிமேலழகர் உரை:
தகுதி என ஒன்றே நன்று - நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று; பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின் - பகை, நொதுமல் நட்பு எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின்.
(தகுதி உடையதனைத் 'தகுதி' என்றார்."ஊரானோர் தேவகுலம்" என்பது போலப் பகுதியான் என்புழி ஆன் உருபு'தோறு'ம் தன் பொருட்டாய் நின்றது. 'பெறின்' என்பது அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது. இதனான் நடுவுநிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.)
வ சுப மாணிக்கம் உரை:
இடந்தோறும் முறையோடு ஒழுக முடியின் நடுவு நிலைமை மிகச் சிறந்த அறமாம்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்.
பதவுரை: தகுதி- (அதிகாரம் நோக்கி) நடுவு நிலைமை; என-என்று சொல்லப்படுகின்ற, எனப்படும்; ஒன்று நன்றே-ஒப்பற்ற நன்மையுடையதே; பகுதியால்-வகைதோறும்; பாற்பட்டு-முறைமை விடாமல்; ஒழுக-நடந்துகொள்வார், நடந்துகொள்ள; பெறின்-எனின், நேர்ந்தால்.
|
தகுதி எனஒன்று நன்றே:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நடுவு நிலைமை யென்று சொல்லப்படுகின்ற தொன்று நல்லதே;
பரிப்பெருமாள்: நடுவு நிலைமை யென்று சொல்லப்படுகின்ற தொன்று நல்லதே;
பரிப்பெருமாள் குறிப்புரை: தக்கவாறு கூறுதலின் தகுதி என்றார்.
பரிதி: தகுதிப்பாடாகிய நடுவுநிலைமை உண்டாகில்; [தகுதிப்பாடு- தகுதி]
காலிங்கர்: நடுவுநிலைமைத் தகுதி எனப்படுகின்றது மனச்செற்றம் கொண்டு ஒருதலைச் சார்பாக நில்லாமை; [மனச்செற்றம் - மனத்தின்கண் வெகுளி]
பரிமேலழகர்: நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று;
பரிமேலழகர் குறிப்புரை: தகுதி உடையதனைத் 'தகுதி' என்றார்.
'நடுவு நிலைமை என்று சொல்லப்படுவது ஒன்று/ஓர் அறமுமே நன்று' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமும் நல்லதே', 'நடுவுநிலைமை சரியாக இருக்கும்', 'நடுவு நிலைமை என்னும் ஓர் அறமே போதிய அளவு நன்மை தருவதாம்', 'நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஒப்பற்ற அறமும் நன்றாகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஒன்று நல்லதே என்பது இப்பகுதியின் பொருள்.
பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவரவர்நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின். [நிலைமைப்பகுதி - நிலைமைக்குத் தக்க தன்மை]
பரிப்பெருமாள்: அவரவர்நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நடுவு சொல்லத் தீமை பயப்பனவும் உளவாம். அதுபடாமல் தனக்கும் பிறர்க்கும் நன்மை பயக்குமாறு கூறவேண்டும் என்றது. அஃது அறியுமாறு தருமசாத்திரத்துள் அறியப்பெறும். [தருமசாத்திரம் - அறநூல்]
பரிதி: அந்த நிலைமைக்குச் சரியாக ஒன்றும் இல்லை என்றவாறு.
காலிங்கர்: மற்று அங்ஙனம் அறநூல் சொன்ன முறைமைப்பாட்டால் நடுவுநிலைமையின் ஒழுக்கத்தை வழுவாமல் நடத்தப்பெறின் என்றவாறு.
பரிமேலழகர்: பகை, நொதுமல் நட்பு எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின்.
பரிமேலழகர் குறிப்புரை: "ஊரானோர் தேவகுலம்" என்பது போலப் பகுதியான் என்புழி ஆன் உருபு'தோறு'ம் தன் பொருட்டாய் நின்றது. 'பெறின்' என்பது அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது. இதனான் நடுவுநிலைமையது சிறப்புக் கூறப்பட்டது. ["ஊரானோர் தேவகுலம்"-ஊர்தோறும் ஒரு கோயில் என்பது பொருள்]
'அவரவர்நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்' என மணக்குடவர்/பரிம்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் 'அறநூல் சொன்ன முறைமைப்பாட்டால் நடுவுநிலமையின் ஒழுக்கத்தை வழுவாமல் நடத்தப்பெறின்' என்றார். பரிமேலழகர் 'பகை, நொதுமல் நட்பு எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின்'
இன்றைய ஆசிரியர்கள் 'பகைவர், அயலார், நண்பர் என்னும் மக்கள் பகுதிதோறும் நேர்மையாக நடந்துகொண்டால்', 'ஒரு வழக்கைத் தீர்த்துவிட, நடுவு நிலைமையாகப் பாரபட்சமில்லாதிருக்க வேண்டிய ஒருவன் வழக்கினால் கருத்து வேற்றுமைப்பட்டவர்களுடைய நிலையில் தன்னை நிறுத்திக்கொண்டு ஆராய்ந்தால்', 'பகைவர், நண்பர், அயலார் என்னும் மூவகையாரிடத்தும் முறைமையோடு பொருந்தி ஒழுகும் தன்மை வாய்க்கப் பெற்றால்', பகை, நொதுமல், நட்பு எனும் பகுதிதோறும் தம் முறைமை விடாது ஒழுகப்பெறின்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
எந்தப் பகுதியினரிடத்தும் நேர்மையாக நடந்து கொள்வார் எனின் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
பகுதியால் பாற்பட்டு நடந்து கொள்வார் எனின் நடுவு நிலைமை என்று சொல்லப்படுவது ஒன்று நல்லதே என்பது பாடலின் பொருள்.
'பகுதியால் பாற்பட்டு' குறிப்பது என்ன?
|
யாவரிடமும் நேர்மையாக நடந்து கொள்க.
வேண்டியவர், வேண்டாதவர், அயலார் யாராக இருந்தாலும் ஒருவர் நடுவுநிலைமைக்குரிய முறைமையோடு இருந்து ஒழுகினால் அந்த ஒன்றே நன்மையைத் தரும்.
நடுவு நிலைமை எனச் சொல்லப்படும் அறம் எப்பகுதியினரிடத்தும் நேர்மையிலிருந்து வழுவாது ஒழுகுதலைக் குறிப்பதாகும்.
தகுதி:
நடுவுநிலைமை என்ற பண்பு தகுதி என்ற சொல்லால் இங்கு குறிக்கப்பெறுகிறது.
'தக்கவாறு கூறுதலின் தகுதி', .'நடுவுநிலைமைத் தகுதி எனப்படுகின்றது மனத்தின்கண் வெகுளி கொண்டு ஒருதலைச் சார்பாக நில்லாமை', 'தகுதி உடையதனைத் 'தகுதி' என்றார்'
என்றபடி பழம் ஆசிரியர்கள் தகுதி என்ற சொல்லை விளக்கினர்.
பிறிதோர் இடத்தில் மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்றுவிடல் (பொறையுடைமை 158), தகுதி என்னும் சொல் பொறுமை என்னும் பொருளில் குறளில் ஆளப்பட்டது.
''யோக்கியதை' என்னும் வடசொல் வழக்கு ஊன்றித் தகுதி என்னும் தகுந்த தமிழ்ச்சொல் வழக்கு வீழ்ந்தது' என்பார் தேவநேயப் பாவாணர்.
ஒரு பிரிவின் பால் சாராமல் நடுநிலை வகிப்பது தகுதி எனப்படுகிறது.
ஒன்று நன்றே: ஒன்று என்ற சொல் ஒப்பற்ற என்ற பொருளையும் நன்று என்ற சொல் நன்மை என்ற பொருளையும் தரும். ஒன்று நன்றே என்பது ஒப்பற்ற நன்மை எனப்பொருள்படும்.
ஒழுகப் பெறின்: இத்தொடர் ஒழுகப்பெற்றால் என்ற பொருளது. ஒருவன் நடுவுநிலையாக நிற்பது அரிது என்பதை விளக்க 'ஒழுகப் பெறின்' எனச் சொல்லப்பட்டது.
மக்களைப் பகுதிகளாகப் பலவகையில் பிரிக்க முடியும். எப்பகுதியினரிடத்தும் தன் முறைமையோடு- அதாவது நேர்மையை விடாது - பொருந்தி ஒழுகும் தன்மை வாய்க்கப் பெற்றால், அந் நடுவுநிலைமை ஒப்பற்ற அறமாம். எப்படிப் பகுத்துப் பார்த்தாலும் அவ்வப்பகுதியினரிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்கிறது பாடல். வறியவர், செல்வந்தர், வலியவர், எளியவர், உதவியவர், உதவாதவர், பகைவர், நண்பர், அயலார், சமூகத்தில் தாழ்ந்த நிலையிலுள்ளவர், செல்வாக்குப் பெற்றவர் என்பனபோல் பகுத்துப் பார்த்து ஒரு தலைச் சார்பாக நில்லாமை நல்ல அறம். சார்புக்கான அடையாளம் எவ்விதமும் இல்லாமல் எல்லாரிடமும் அறம்வழுவா முறைமையோடு ஒழுகுவது நடுவுநிலையாம்.
|
'பகுதியால் பாற்பட்டு' குறிப்பது என்ன?
பகுதி என்ற சொல் பிரிவு. பாகம், வேறுபாடு எனப் பல பொருள் தரும்.
'ஊரான் ஓர் தேவகுலம்' என்பதற்கு ஊர் தோறும் ஒரு கோயில் என்று பொருளாதல் போல, பகுதியான் என்பது பகுதிதோறும் எனப் பொருள்படும் என விளக்குவார் பரிமேலழகர். மக்கட்பகுதி, அவரவர் நிலைமைப் பகுதி, அறப்பகுதி எனவும் உரைகாரர்கள் இதற்குப் பொருள் கூறினர்.
பாற்பட்டு ஒழுகப்பெறின் என்ற சொற்றொடர் முறைப்படி அல்லது ௮ந்த நடுவுநிலைமைக் குரிய முறைமையோடு பொருந்தி ஒழுகப் பெறின் எனும் பொருள் தருவதாகிறது.
'வேறுபாட்டுக்கிடையேயும் நடுநிலைக்குரிய இயல்புப்படியும் முறைப்படியும் ஒழுகுகின்ற ஓர் அறமே நல்லதாகும்' என விளக்கம் செய்வார் மு மு இஸ்மாயில்.
பற்பலராய்ப் பகுதிப்பட்டோருடன் நடுநிலைமைப் பண்போடு ஒழுகப்பெற்றால் என்று கூறப்பட்டதால் பற்பலரைப் 'பகை நொதுமல் நண்பு' என வகுத்துப் பார்க்கும் மரபுப்படி உரையாளர்கள் பொருளுரைத்தனர்.
பகுதி என்ற சொல்லுக்கு பகைவர், நட்பு, அயலார், உறவினர் என்ற வகையில் மட்டும் பிரிவு கொள்ளாது எப்படிப்பட்ட பிரிவானாலும்- மொழி, இனம், உறவுமுறை, சார்ந்திருக்கும் தொழில், கட்சி, என்று எந்த வேறுபாட்டிலுமே காட்டவேண்டிய நேர்மையை, நடுநிலையைக் குறிப்பதாகக் கொள்வது பொருத்தமாகும்.
'பகுதியால் பாற்பட்டு' என்ற தொடர் பகுதிதோறும் முறைமையோடு பொருந்தி எனப் பொருள்படும்.
|
எந்தப் பகுதியினரிடத்தும் நேர்மையாக நடந்து கொள்வார் எனின் நடுவு நிலைமை என்று சொல்லப்படுவது ஒன்று நல்ல அறமேயாம் என்பது இக்குறட்கருத்து.
யாரிடமும் நடுவுநிலைமை வழுவாத பண்பு சிறந்த அறம்.
எப்பகுதியினரிடமும் நேர்மையாக நடந்துகொண்டால் நடுவுநிலைமை என்று சொல்லப்படுவது நல்ல அறமே.
|