புலவி நுணுக்கமாவது தலைவனிடம் தவறில்லை என்றாலும், தன் காதல் மிகுதியால் சொல்லெச்சத்தினாலும் குறிப்பெச்சத்தினாலும் வேறுபடப் பொருள் கொண்டு, தலைமகள் புலந்து கூறுதல். பொய்யான காரணங்கள் மிகவும் திறமையோடு கற்பித்துச் சொல்லப்படுவதால் நுணுக்கம் எனப்பட்டது. புலவி உண்டாவதற்குக் காட்டப்படும் நுட்பமான காரணம் புலவி நுணுக்கம் எனக் கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் உள்ள முதலிரண்டு பாக்கள் தலைவி கூற்றாகவும் பின்னர் வரும் எட்டுக் குறள்களும் தலைவன் கூற்றாகவும் அமைந்துள்ளன.
பொய்யாகப் புனைந்த காரணங்களாதலால் இங்கு சொல்லப்பட்ட ஊடலில் விளையாட்டுத் தன்மை உள்ளது. ஆயினும் சினம் கொள்ளல், கண்ணீர், அழுகை என்று வேறுபட்ட உணர்ச்சிகளையும் காட்டுகிறாள் தலைவி; குற்றமற்ற தலைவனிடம் வேண்டுமென்றே பழி கூறி, அவன்படும் கலக்கத்தில் இன்பம் காண்கிறாள். ஊடல் கொள்வது போல் இப்படி நடிப்பது எளிதன்று.
இரவு நேரம். பள்ளியில் தலைமகனும் காதலியும் இருக்கிறார்கள். ஊடலுக்குப் பின் கூடலாம் என முடிவு செய்த தலைவி, தலைவன் புறத்தொழுக்கம் உடையவன் என்று அவனைச் சீண்டி பூசலைத் தோற்றுவிக்கலாம் என எண்ணுகிறாள். காதலன் தன் ஊடலைத் தீர்க்க வேண்டும் என்பதும் தன் மேல் அன்பை வெளிப்படையாகச் சொரிந்து உரிமை பாராட்ட வேண்டும் என்பது அவள் விருப்பம். அம்மா வந்து தூக்கி முத்தமிடும் வரை குழந்தை கத்தி அழுமே அந்த மனநிலைக்கு மாறுகிறாள்.
அவன் அவளிடம் நெருங்குகிறான். அவள் மறுப்பவள் போல நெருங்காதே! ஊர்ப்பெண்கள் பார்த்து மகிழ்ந்த மார்புடைய பரத்தனே! என்கிறாள். இந்தச் சொற்களில் கடுமை இருப்பதுபோல் தோன்றுகிறது. வேறு பெண்கள் தன்னைப் பார்ப்பதற்கு அவன் என்ன செய்ய முடியும்? ஆனால், காதலனுக்குச் சிறிதும் பொருந்தாத குற்றச்சாட்டாக இருப்பதால், விளையாட்டாக அமைகிறது. அவனும் தன்னையறியாமல் அந்த ஆட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்கிறான். அவன் எது செய்தாலும் வேறுபடக் கருதுவது எதுசொன்னாலும் வேறுபடப் பொருள் கொள்வது என்று ஊடல் நீளுகிறது. தலைவன் பூச்சூடுதல், தும்முதல், அஞ்சித் தும்மல் அடக்குதல், ஊடல் உணர்த்தல், வாளா தலைவியை உற்று நோக்குதல் என்றிவை காதலியின் புலத்தலுக்கு ஏதுக்கள் ஆகின்றன. தலைவனது செயல்களில் மட்டுமன்றி, யாம் காதலையுடையோம், இப்பிறப்பில் நாம் பிரியமாட்டோம், உன்னை நினைத்தேன் என்று அவன் நயந்து பணிந்து சொன்னாலும் அவற்றிற்கு வேறுபடப் பொருள் கண்டு அவனுடன் சண்டையிட்டு நிற்கின்றாள் தலைவி. பிறபெண்கள் மீது பொறாமை கொள்வது போலவும் அவர்கள் செயல்கள் இவளுக்கு அச்சமூட்டுவது போலவும் புனைந்து புலக்கிறாள். ஊடலைத் தணிவிக்க தலைவன் எடுக்கும் முயற்சிகளை பயனற்றுப் போகச்செய்கிறாள் தலைவி.
தலைவன் கூறும் மொழிகளுக்கு அவள் தன் புலமைத்திறத்தால் வேறு பொருளைக் குறிப்பினாற் கொண்டு ஊடுவது இலக்கியச்சுவை நல்குவதாய் உள்ளது.
புலவி நுணுக்கம் அதிகாரத்தில் பிறமகளிரைத் தலைவனோடு தொடர்புபடுத்தி வெளிப்படையாகத் தலைவி பேசுகிறாள். இங்குத் தலைவி கண்ட குற்றமனைத்தும், பொய் என்பதனை தலைவியே பின்னர் கூறுவாள் இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவரளிக்கு மாறு (ஊடலுவகை குறள்எண்: 1321 பொருள்: அவரிடம் ஒரு தவறும் இ்ல்லையாயினும், ஊடலால் அவருடைய அன்பை முழுதுமாகப் பெற முடிகிறது. அதனால்தான் ஊடுகிறேன்) என்று
'காமத்துப்பால் இருபத்தைந்து அதிகாரங்களுள்ளும் புலவி நுணுக்கத்தை ஒப்பது பிறிதில்லை' என்று மிக உயர்வாய்ச் சொல்வார் வ சுப மாணிக்கம். மேலும அவர் 'பரத்தயரை ஒதுக்கி ஊடல் அதிகாரங்களை நுணுக்கமாக யாத்த புதுப்பெருமை யுடையவர் வள்ளுவர் எனினும் பரத்தமைக் குறிப்பை அவர் ஒதுக்கவில்லை. ஆடவன் நிறையாளன் எனினும் அந்நிறைவு குறைவாகவே பெண்ணுள்ளத்திற்குப் படும் போலும். இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன் என்ற வரத்தை பெருமகன் இராமனிடங்கூடச் சீதை பெற்றாள் என்பர் கம்பர். ஆடவன் தவற்றுக்குச் சமுதாயத்தில் வாய்ப்பு உண்டு என்பதையும் அவள் அறிவாள். தன் கணவன் தவறிலன் என்பதையு அறிவாள். அறிந்து வைத்தும் ஊடற்காலத்துத் தவறுடையான் போலச் சுட்டிப் புலவி மிகுப்பாள். பெண்ணினத்தின் உள்ளோட்டத்தைப் புலவி நுணுக்கத்திற்குப் பயன்படுத்துவர்' எனவும் இவ்வதிகாரம் பற்றிக் கூறியுள்ளார்.