இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1320



நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யார்உள்ளி நோக்கினீர் என்று

(அதிகாரம்:புலவி நுணுக்கம் குறள் எண்:1320)

பொழிப்பு (மு வரதராசன்): அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள்.

மணக்குடவர் உரை: தனது உறுப்புகளோடு வேறொன்றை உவமிக்க ஒண்ணாமையை யெண்ணி நோக்க இருப்பினும், என்னுறுப் பெல்லாம் நீர் காதலித்தவர்களில் யாருறுப்புக்கு ஒக்குமென்று நினைத்திருந்து நோக்கினீரென்று சொல்லி வெகுளும்.
இது பார்க்கிலும் குற்றமென்று கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நினைத்து இருந்து நோக்கினும் காயும் - என் சொற்களும் செயல்களும் பற்றித் தான் வெகுடலான், அவற்றையொழிந்திருந்து தன் அவயங்களது ஒப்பின்மையை நினைந்து அவற்றையே நோக்கினும் என்னை வெகுளாநிற்கும்; அனைத்தும் நீர் நோக்கினீர் யார் உள்ளி என்று - நீர் என் அவயவமனைத்தும் நோக்கினீர, அவற்றது ஒப்புமையான் எம் மகளிரை நினைந்து? என்று சொல்லி.
('யான் எல்லா அவயங்களானும் ஒருத்தியொடு ஒத்தல் கூடாமையின், ஒன்றால் ஒருவராகப் பலரையும் நினைக்கவேண்டும்; அவரெல்லாரையும் யான் அறியச் சொல்லுமின்', என்னுங் கருத்தால் 'அனைத்தும் நோக்கினீர் யாருள்ளி'? என்றாள். 'வாளாவிருத்தலும் குற்றமாயிற்று' என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: அவள் அழகை உற்றுநோக்கினாலும் காய்வாள்; யாரோடு ஒப்பு நோக்கினீர் என்று.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யார்உள்ளி நோக்கினீர் என்று.

பதவுரை: நினைத்து-நினைத்துக் கொண்டு; இருந்து-இருந்து; நோக்கினும்-பார்த்தாலும்; காயும்-வெகுளும்; அனைத்து-அவ்வளவும்; நீர்-நீங்கள்; யார்-எவர்; உள்ளி-நினைத்து; நோக்கினீர்-பார்த்தீர்; என்று-என்பதாகச் சொல்லி.


நினைத்திருந்து நோக்கினும் காயும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனது உறுப்புகளோடு வேறொன்றை உவமிக்க ஒண்ணாமையை யெண்ணி நோக்க இருப்பினும் வெகுளும்;
பரிப்பெருமாள்: தனது உறுப்புகளோடு வேறொன்றை உவமிக்க ஒண்ணாமையை நினைத்து நோக்கி இருப்பினும் வெகுளும்;
பரிதி: நாயகரே! இந்நேரமும் ஒரு நினைவு கொண்டிருந்து என் முகம் நோக்கினீர்;
காலிங்கர்: தனது உறுப்புக்களோடு வேறு ஒன்றை உவமிக்க ஒண்ணாமையை நினைத்து நோக்கினும் வெகுளும்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) என் சொற்களும் செயல்களும் பற்றித் தான் வெகுடலான், அவற்றையொழிந்திருந்து தன் அவயங்களது ஒப்பின்மையை நினைந்து அவற்றையே நோக்கினும் என்னை வெகுளாநிற்கும்; [வெகுடலான் - சினத்தலால்; அவற்றை - என் சொற்களையும் செயல்களையும்]

'தனது உறுப்புக்களோடு வேறு ஒன்றை உவமிக்க ஒண்ணாமையை நினைத்து நோக்கினும் வெகுளும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவளது எழில்நலத்தை நினைத்து விருப்பமுடன் இருந்து உற்று நோக்கினும் சினப்பாள்', '(அவளைப் பற்றியே) நினைத்துக்கொண்டு (வாய் பேசாமல்) இருந்து கொண்டு (வேறொன்றும் செய்யாமல் அவளைப்) பார்த்தாலும்கூட கோபிக்கிறாள்', 'அவள் உறுப்புக்களின் ஒப்பில்லாமையை நினைத்து அவற்றை நோக்கினாலும் வெகுள்வாள்', 'அவளுடைய ஒப்பற்ற அழகை நினைத்து இருந்து பார்த்தாலும் வெகுள்வாள் ', என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தலைவியின் அழகுநலன்களை நினைத்து இருந்து அவளை நோக்கினாலும் வெகுள்வாள் என்பது இப்பகுதியின் பொருள்.

அனைத்துநீர் யார்உள்ளி நோக்கினீர் என்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்னுறுப் பெல்லாம் நீர் காதலித்தவர்களில் யாருறுப்புக்கு ஒக்குமென்று நினைத்திருந்து நோக்கினீரென்று சொல்லி.
மணக்குடவர் குறிப்புரை: இது பார்க்கிலும் குற்றமென்று கூறியது.
பரிப்பெருமாள்: என்னுறுப் பெல்லாம் நீர் காதலித்தவர்களில் யார் உறுப்பை ஒக்குமென்று நினைத்து நோக்கினீர் என்று சொல்லி.
பரிதி: முன்னாள் கூடிய நாயகி நலமும் கலவியும் நினைத்து அவள் நலத்துக்கு இவள் ஒவ்வாதென்றோ நோக்கினீர் என்று ஊடினாள் என்றவாறு.
காலிங்கர்: என் உறுப்பு எல்லாம் நீர் காதலித்தவர்களில் யார் உறுப்பை ஒக்கும் என்று நினைத்து நோக்கினீரென்று சொல்லி என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: பார்க்கிலும் குற்றமாம் என்று கூறியது.
பரிமேலழகர்: நீர் என் அவயவமனைத்தும் நோக்கினீர, அவற்றது ஒப்புமையான் எம் மகளிரை நினைந்து? என்று சொல்லி.
பரிமேலழகர் குறிப்புரை: 'யான் எல்லா அவயங்களானும் ஒருத்தியொடு ஒத்தல் கூடாமையின், ஒன்றால் ஒருவராகப் பலரையும் நினைக்கவேண்டும்; அவரெல்லாரையும் யான் அறியச் சொல்லுமின்', என்னுங் கருத்தால் 'அனைத்தும் நோக்கினீர் யாருள்ளி'? என்றாள். 'வாளாவிருத்தலும் குற்றமாயிற்று' என்பதாம். [வாளாஇருத்தல் - சும்மா இருத்தல்]

'என் உறுப்பு எல்லாம் நீர் காதலித்தவர்களில் யார் உறுப்பை ஒக்கும் என்று நினைத்து நோக்கினீரென்று சொல்லி' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் ' யாரை நினைத்து என்னை ஒப்புநோக்கினீர் என்று கேட்டு', 'அவ்வளவு நேரமாக யாரை நினைத்துக் கொண்டிருந்து விட்டு (இப்போது என்னைப்) பார்க்கிறீர் என்று', 'அவற்றை யெல்லாம் யார் உறுப்புக்களை நினைத்து அவற்றோடு ஒப்பிட்டு நோக்கினீரென்று', 'அவ்வளவும் நீர் யாரை நினைத்துப் பார்த்தீர் என்று' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவ்வளவையும் யாரை நினைத்துப் பார்த்தீர் என்று கேட்டு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நினைத்திருந்து நோக்கினும் வெகுள்வாள், அவ்வளவையும் யாரை நினைத்துப் பார்த்தீர் என்று கேட்டு என்பது பாடலின் பொருள்.
'நினைத்திருந்து நோக்கினும்' குறிப்பது என்ன?

'அமைதியாக இருந்து அவளை வெறுமனே பார்த்ததிலும் குற்றம் காண்கிறாள்' - கணவர்.

'வறிதே அவளை நோக்கினாலும் சினப்பாள், எவளை நினைத்து என்னைப் பார்த்தீர்கள் என்று கேட்டு' என்கிறார் தலைவர்.
காட்சிப் பின்புலம்:
நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு தன் பணி முடித்து வீடு திரும்பியிருக்கிறார் கணவர். பிரிவின் வேதனை தாங்கமுடியாமல் தலைவி உடல் மெலிந்து அவரையே நினைத்துக் கொண்டிருந்தாள். அவரைக் கண்டவுடன் அவள் பழைய நிலைக்குத் திரும்பி முகத்தில் மலர்ச்சியுடன் முழுப் பெண்மைப் பொலிவுடன் காட்சி அளிக்கிறாள். இரவு நெருங்குகிறது. படுக்கையறையில் இருவரும் சந்திக்கின்றனர். கூடலுக்கு முன் ஊடல் கொண்டால் சேர்க்கை இன்பம் மிகும் என்று அவள் அறிந்து வைத்திருந்ததால் புலவி நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறாள். மனைவியின் காய்தலுக்கும் கண்ணீருக்கும் ஈடு கொடுக்கமுடியாமல் தலைவர் பேதுற்றுக் கொண்டிருக்கிறார்.
'ஊர்ப்பெண்கள் எல்லாரும் கண்டு உண்ட உமது மார்பினைப் பொருந்தேன்' என்கிறாள்; நான் வாழ்த்துவேன் என்றெண்ணி ஊடிக்கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; 'யாருக்குக் காட்டுவதற்காக இந்த மரக்கொம்புப் பூவை சூடினீர்' என்று சினத்துட கேட்டாள்; 'நாம் மற்ற எவரினும் காதலுடையோம்' என்று தலைவர் சொல்ல 'யாரைவிட யாரைவிட என்மீது காதலுடையரானீர்' என்று பாய்ந்தாள்; 'இப்பிறவியில் நான் உன்னைவிட்டு அகலமாட்டேன்' என்று அவர் சொல்ல, 'அப்படியானால் வேறு பிறவிகளில் பிரிந்துவிடுவீர்களா என்ற குறிப்பில் அவள் கண்களில் நீர் நிறைந்தது; 'நினைத்தேன்' என்று அவர் சொல்கிறார், 'மறந்ததால்தானே என்னை நினைத்தீர்' என்று தழுவ வந்தவள் பின்வாங்கினாள். அவர் தும்முகிறார். 'யார் நினைக்கத் தும்மல் வந்தது?' என்று வினவி அழுதாள்; மறுபடியும் அவருக்குத் தும்மல் வந்தபோது அதை அடக்க முயல்கிறார், அப்பொழுதும் 'உம்மை விரும்பியவள் நினைப்பதை எம்மிடமிருந்து மறைக்கின்றீரோ' என்று அழுதாள்; ஊடல் தணிக்கும் நோக்கில், கணவர் இன்சொல் பேசி தான் செய்யாத தவற்றிற்குக்கூட, தலைவியின் முன் பணிந்து மன்றாடுகிறார், அதற்கும் 'மற்றப் பெண்டிரிடமும் இப்படித்தானே விழுந்து கிடப்பீர்' என்கிறாள்.
இவ்வாறு தலைவர் எது சொன்னாலும் என்ன செய்தாலும் மறித்து உரையாடிக்கொண்டிருக்கிறாள். தலைவர்க்கு மனைவியைத் தவிர்த்து வேறு எந்தப் பெண்ணிடமும் காதல் உறவு இல்லை என்பதை அறிந்தும் அது இருப்பதாகக் கற்பித்து ஊடுகிறாள் தலைவி.

இக்காட்சி:
இப்பொழுது, தான் எது சொன்னாலும், என்ன பணிவு காட்டினாலும் தலைவி வெகுள்வதால், செய்வதறியாது, எதையும் பேச அஞ்சி, அவளையே பார்த்துக்கொண்டு இருக்கின்றார் காதல்தலைவர். அவளது அழகு நலன்களை நினைந்து அமர்ந்து நோக்குகிறார். அதுவும் குற்றமாகவே முடிகின்றது. வேறு யாரொஒரு பெண்ணுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கிறார் என்று கருதி, 'யாரை நினைத்து என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்?' என்று பாய்ச்சல் கொள்கிறாள் அவள். தலைவர் ஒன்றும் பேசாது, செய்யாது, வாளா இருந்ததும் ஊடலுக்கு ஏதுவாயிற்று.
எவ்வளவு நினைத்து இருந்து பார்த்தாலும் என்போல் மற்ற எப்பெண்ணும் அழகாயிருக்க முடியாது என்று தலைவி உள்ளுக்குள் பெருமிதம் கொண்டு சொல்வது போலவும் உள்ளது இப்பாடல்.

எப்படியிருப்பினும் ஊடலில் சென்று முடிகிறதே என்று, எதுவும் சொல்லாமல், அவளுடனான அன்புறவை நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்து அவள் அழகை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்கும் அவள் வெகுண்டாள், 'என்னை வேறு எந்த பெண்ணின் அழகுக்கு ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்?' என்று சொல்லிச் சினந்தாள் தலைவி.
இக்குறட்கருத்துடன் ஒப்பிடத்தக்க ஊடற்காட்சிகளைக் கம்பரும் தருகிறார். அங்குள்ள தலைவன் தன் காதலியிடம் தென்னையின் இளநீரைக் காட்டி, இவை பெண்களின் கொங்கைகள் போன்றுள எனக் கூற, அவள் 'எந்தப் பெண்ணின் கொங்கைகளை ஒத்துள்ளன?' என்று வினவி விம்மி வியர்த்து வெய்துயிர்த்தாளாம்:
செம்மாந்த தெங்கின் இளநீரை ஓர் செம்மல் நோக்கி
‘அம்மா! இவை மங்கையர் கொங்கைகள் ஆகும் ‘என்ன,
‘எம்மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன?‘ என்று, ஒர் ஏழை
விம்மா, வெதும்பா, வெயரா முகம், வெய்து உயிர்த்தாள்.
(கம்பராமாயாணம் பாலகாண்டம், பூ கொய் படலம், 17 பொருள்: உயர்ந்தோங்கி நின்ற தென்னையின் இளநீரையுடைய காயை ஒரு தலைவன் பார்த்து ஆ! இவ்விளநீர்க் காய்கள் மங்கையரின் கொங்கைகள் போலுள்ளனவே! என்று கூற, எந்த மங்கையின் கொங்கைக்கு ஒப்பாவன? என்று கேட்டு விம்மி மனம் கொதித்து முகம் வெயர்த்து வெப்பப் பெருமூச்சு விட்டாள்) ஆனால் தலைவன் ‘இவை நின்கொங்கைகள் போல் ஆகும்’ என்று சொல்லாமல் இவை மங்கையர் கொங்கைகள் ஆகும்’ எனப் பொதுவாகக் கூறியது தலைவியின் ஊடற்கு காரணமாயிற்று.
இதுபோன்ற இன்னொரு புலத்தல் நிகழ்வையும் கம்பர் காட்டுகிறார்:
போர் என்ன வீங்கும் பொருப்பு அன்ன பொலம் கொள் திண் தோள்
மாரன் அனையான், மலர் கொய்து இருந்தானை, வந்து ஓர்
கார் அன்ன கூந்தல் குயில் அன்னவள் கண் புதைப்ப,
‘ஆர்? ‘என்னலோடும், அனல் என்ன அயிர்த்து உயிர்த்தாள்.
(கம்பராமாயாணம் பாலகாண்டம், பூ கொய் படலம், 18 பொருள்: போர் என்று சொன்ன அளவிலேயே (மகிழ்ச்சியில்) பூரித்துப் பெருக்கும் மலையினைப் போன்ற அழகு வாய்ந்த வலிய தோள்களையுடையவனே! மன்மதனை ஒப்பவனே!) பூக்களைப் பறித்துக் கொண்டிருந்த கணவனை கார்மேகம் போன்ற கூந்தலையுடையவளாய் ஒப்பற்ற குயிலைப் போன்றகுரலுடையவளான ஒருத்தி வந்து கண்களைப் பொத்தினாள். அப்போது அவன் என் கண்களைப் பொத்தியவர் யார்? என்று கேட்டவுடனே அவள் தீ போன்று வெதும்பி ஐயமுற்று வெப்பப்பெரு மூச்சு விட்டாள் எனச்சொல்கிறது அப்பாடல். தன் கண்ணைப் பொத்தியவுடன். தன் பெயரைச் சொல்லிக் ‘கையை எடு’ என்று சொல்ல வேண்டிய கணவன். ‘ஆர்’ என்று வினவியதால் தன்னைப் போன்றே இவன் கண் பொத்தி விளையாடும் மகளிர். வேறு சிலரும் உள்ளார்கள் போலும் என்று ஊடல் கொண்டாளாம்.

'நினைத்திருந்து நோக்கினும்' குறிப்பது என்ன?

'நினைத்திருந்து நோக்கினும்' என்ற தொடர்க்குத் தனது உறுப்புகளோடு வேறொன்றை உவமிக்க ஒண்ணாமையை யெண்ணி நோக்க இருப்பினும், தனது உறுப்புகளோடு வேறொன்றை உவமிக்க ஒண்ணாமையை நினைத்து நோக்கி இருப்பினும், ஒரு நினைவு கொண்டிருந்து என் முகம் நோக்கினீர், தனது உறுப்புக்களோடு வேறு ஒன்றை உவமிக்க ஒண்ணாமையை நினைத்து நோக்கினும், தன் அவயங்களது ஒப்பின்மையை நினைந்து அவற்றையே நோக்கினும், அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், அவளது உறுப்புக்களின் ஒப்பற்ற அழகை எண்ணி அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன், அவள் அழகை உற்றுநோக்கினாலும், அவளது எழில்நலத்தை நினைத்து விருப்பமுடன் இருந்து உற்று நோக்கினும், (அவளைப் பற்றியே) நினைத்துக்கொண்டு (வாய் பேசாமல்) இருந்து கொண்டு வேறொன்றும் செய்யாமல் அவளைப் பார்த்தாலும்கூட, துணைவியின் அழகை நினைத்துக் கொண்டு அவளை உற்றுப் பார்த்தாலும், அவள் உறுப்புக்களின் ஒப்பில்லாமையை நினைத்து அவற்றை நோக்கினாலும், அவளுடைய ஒப்பற்ற அழகை நினைத்து இருந்து பார்த்தாலும், தன் உறுப்புக்களின் ஒப்பில்லா வழகை நினைந்து அவற்றையே வியந்து நோக்கினும் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

எதை நினைத்து இருந்து தலைவர் நோக்கினார்? ‘நினைத்திருந்து நோக்கினும்’ என்னுந் தொடர் பொதுவாக இருத்தலின், உரையாசிரியர்கள் வேறு வேறு விளக்கம் கூறினர். பாடலின் அடுத்த பகுதியில் உள்ள 'அனைத்து' என்ற சொல்லில் குறிப்பு இருப்பதைக் கண்டு, பலரும் 'அனைத்து' என்பது அவளது உறுப்புக்களைக் குறிக்கிறது என்று கொள்கின்றனர். எனவே உறுப்புநலன்களை எண்ணி, தலைவியின் உறுப்புகளோடு வேறொன்றை உவமிக்க ஒண்ணாமையால், உறுப்புக்களின் ஒப்பில்லா அழகை நினைந்து என்று பொருள் கூறினர். மற்றும் சிலர் 'அழகை நினைத்து' என்றனர். 'பிணங்குவதையும் அழுவதையும் பேசுவதையும் நினைத்து' என்றும் 'தனக்கும் அவளுக்கும் உள்ள அன்புறவை நினைத்துக் கொண்டிருந்து' என்றும் உரைகள் உள. நோக்கினும் என்பதற்குப் பார்த்தாலும்/ உற்றுநோக்கினும் என நேர் பொருள் கூறப்பட்டது.
பரிமேலழகர் உரை 'என் அங்கங்கள் அனைத்தும் தனியாக மற்ற ஒரு பெண்ணுடன் ஒத்திருக்காது என்பதால் கண் இவள் போன்று, மூக்கு அவள் போன்று என்று பலரை நினைத்துச் சொல்ல வேண்டியிருக்கும் என்பதால்தானே எல்லா உறுப்புக்களையும் நோக்கினீர்கள்; அவர்கள் எல்லாரும் யார் யார் என்று எனக்குத் தெரியவேண்டும். சொல்லுங்கள்' என்று தலைவி அவரை உலுக்குகிறாள் என்கிறது.

'நினைத்திருந்து நோக்கினும்' என்றது அவளது அழகுநலன்களை நினைத்து அமைதியாக இருந்து அவளை நோக்கினாலும் எனப் பொருள்படும்.

தலைவியின் அழகுநலன்களை நினைத்து இருந்து அவளை நோக்கினாலும் வெகுள்வாள், அவ்வளவையும் யாரை நினைத்துப் பார்த்தீர் என்று கேட்டு என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அவள் அழகைக் கணவர் சுவைத்தாலும் குற்றமாகும் புலவி நுணுக்கம்.

பொழிப்பு

அவள் அழகுநலன்களை நினைத்து இருந்து நோக்கினாலும் சினப்பாள்; அவ்வளவையும் யாரை நினைத்துப் பார்த்தீர் என்று சொல்லி.