இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1317வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று

(அதிகாரம்:புலவி நுணுக்கம் குறள் எண்:1317)

பொழிப்பு (மு வரதராசன்): யான் தும்மினேனாக அவள் `நூறாண்டு` என வாழ்த்தினாள்; உடனே அதைவிட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்.

மணக்குடவர் உரை: யாம் தும்மினேம்; அதற்காக வாழ்த்தினாள்; நும்மை யார் நினைக்கத் தும்மினீர் என்று சொல்லி மீட்டும் அழுதாள்.
இது தும்மினும் குற்றமென்று கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) தும்மினேனாக வழுத்தினாள் - கூடியிருக்கின்றவள் யான் தும்மினேனாகத் தன் இயற்கை பற்றி வாழ்த்தினாள்; அழித்து யார் உள்ளித் தும்மினீர் என்று அழுதாள் - அங்ஙனம் வாழ்த்திய தானே மறித்து, நும்மை நினைத்து வருந்துகின்ற மகளிருள் யாவர் நினைத்தலால் தும்மினீர்? என்று சொல்லிப் புலந்தழுதாள்.
(வாழ்த்தலொடு புலத்தல் இயையாமையின், 'அழித்து' என்றான். அன்புடையார் நினைத்தவழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்பது மகளிர் வழக்கு. 'இல்வழக்கை உள்வழக்காகக் கருதிப் புலந்தாள்' என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: தும்மினேன் வாழ்த்தினாள்; திரும்ப அழுதாள் யார் நினைத்ததால் தும்மல் வந்ததென்று.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று.

பதவுரை: வழுத்தினாள்-வாழ்த்தினாள்; தும்மினேன் ஆக-தும்மல் கொண்டேனாக; அழித்து-(வாழ்த்தியதை) மாற்றி; அழுதாள்-(ஊடல் கொண்டு) அழுதாள்; யாருள்ளி - யாரை நினைத்து; தும்மினீர் என்று- தும்மல் கொண்டீர் என்று.


வழுத்தினாள் தும்மினேன் ஆக:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாம் தும்மினேம்; அதற்காக வாழ்த்தினாள்;
பரிப்பெருமாள்: யாம் தும்மினேம்; அதற்காக வாழ்த்தினாள்;
பரிதி: நாயகர் தும்மக்கண்டு;
காலிங்கர்: யாம் தும்மினேம்; அதற்கு அவள் வாழ்த்தினாள்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) கூடியிருக்கின்றவள் யான் தும்மினேனாகத் தன் இயற்கை பற்றி வாழ்த்தினாள்;

'யாம் தும்மினேம்; அதற்கு அவள் வாழ்த்தினாள்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கூடியிருந்தபோது நான் தும்மினேனாக. அவள் உடனே வாழ்த்தினாள்', '(அப்படி அவள்) சொன்னாள்: அப்போது எனக்குத் தும்மல்வர நான்) தும்மினேன்', 'தும்மினேன், உடனே வாழ்த்தினாள்', 'யான் தும்மினேனாகத் தன் இயற்கைக் குணத்தால் முதலில் வாழ்த்தினாள்', என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தும்மினேனாக உடன் வாழ்த்தினாள் என்பது இப்பகுதியின் பொருள்.

அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நும்மை யார் நினைக்கத் தும்மினீர் என்று சொல்லி மீட்டும் அழுதாள்.
மணக்குடவர் குறிப்புரை: இது தும்மினும் குற்றமென்று கூறியது.
பரிப்பெருமாள்: நும்மை யார் நினைக்கத் தும்மினீர் என்று சொல்லி மீட்டும் அழுதாள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தும்மினும் குற்றமாம் என்று கூறியது.
பரிதி: நாயகி மீளவும் நினைந்து அழுதாள்; உமக்கு மனமகிழ்ந்த நாயகி யார் நினைக்க நினைந்து தும்மினீர்; அதற்கு நான் வாழ்த்துச் சொல்லாது என்று ஊடினாள் என்றவாறு.
காலிங்கர்: விட்டு அழுதாள் உம்மை யார் நினைக்கத் தும்மினீர் என்று சொல்லி என்றவாறு.
பரிமேலழகர்: அங்ஙனம் வாழ்த்திய தானே மறித்து, நும்மை நினைத்து வருந்துகின்ற மகளிருள் யாவர் நினைத்தலால் தும்மினீர்? என்று சொல்லிப் புலந்தழுதாள்.
பரிமேலழகர் குறிப்புரை: வாழ்த்தலொடு புலத்தல் இயையாமையின், 'அழித்து' என்றான். அன்புடையார் நினைத்தவழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்பது மகளிர் வழக்கு. 'இல்வழக்கை உள்வழக்காகக் கருதிப் புலந்தாள்' என்பதாம். [இல்வழக்கை - பொய் வழக்கை; உள் வழக்காக- மெய் வழக்காக]

'நும்மை யார் நினைக்கத் தும்மினீர் என்று சொல்லி மீட்டும் அழுதாள்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். அழித்தழுதாள் என்றதற்கு 'மீட்டும் அழுதாள்' என்றும் 'விட்டு அழுதாள்' 'மறித்து அழுதாள்' என்றும் உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தும்மினால் பிறர் நினைப்பர் என்ற மரபைக் கருதிக்கொண்டு நின் காதற்பெண்டிருள் யார் நினைக்கத் தும்மினீர் என்று கேட்டுக் கண்ணீரை வழித்து அழுதாள். (அழித்தழுதாள் எனப்பிரித்து மறுபடியும் அழுதாள் என்பர்)', '(அதைக்கண்டு அவள் 'யாரோ ஒருத்தி உம்மை நினைக்கிறாள்) யார் நினைத்து நீர் தும்மினீர் என்று (கேட்டுவிட்டு) மீண்டும் அழுதாள்', 'பின் அதனை மாற்றி யார் உம்மை நினைக்க நீர் தும்மினீரென்று அழுதாள்', 'அங்ஙனம் வாழ்த்தியவள் பின்னர், எந்தப் பெண் நினைத்தலால் நீர் தும்மினீர் என்று சொல்லி ஊடி அழுதாள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அதைவிட்டு, 'யார் உம்மை நினைக்க நீர் தும்மினீர்' என்று அழுதாள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தும்மினேனாக உடன் வாழ்த்தினாள்; அதைவிட்டு, 'யார் உம்மை நினைக்க நீர் தும்மினீர்' என்று அழித்தழுதாள் என்பது பாடலின் பொருள்.
'அழித்தழுதாள்' என்ற தொடர் குறிப்பது என்ன?

அட! தும்மினாலும் குத்தமா!

'நான் தும்மினேன். என் காதலி உடனே வாழ்த்தினாள். தும்மினால் பிறர் நினைப்பர் என்ற மரபைக் கருதிக்கொண்டு, மறித்து 'யார் நினைத்ததனாலே தும்மினீர்' என்று கேட்டு அழுதாள்' எனத் தலைவன் கூறுகிறான்.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாக அயல் சென்றிருந்த தலைவன் இல்லம் திரும்பியுள்ளான். நீண்ட காலம் பிரிவில் இருந்த தலைவி ஆற்றமையால் வருந்திக் கொண்டிருந்தாள். காதலனைப் பார்த்தபின் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகிறாள். இரவு நெருங்கிவிட்டது. தலைவனும் தலைமகளும் படுக்கையறையில் சந்திக்கின்றனர். கூடுதலின்பம் மிகுவதற்காக சேர்வதற்குமுன் தலைவி காதலனுடன் ஊடல் கொள்ள விழைகிறாள். தலைவன் எது செய்தாலும் அல்லது சொன்னாலும் இடைமறித்து காய்கிறாள் அல்லது கண்ணீர் வடிக்கிறாள்.
இக்காட்சி:
இப்பொழுது தலைவன் தும்முகிறான். தும்மலின் போது, ஒரு வினாடிப் பொழுது உயிர் உடலை விட்டு நீங்கி விடும் என்பது நம்பிக்கையாதலால். உயிர் எங்கே தும்மலோடேயே போய்விடுகின்றதோ என அஞ்சி அருகில் இருப்பவர் 'நீடு வாழ்க' என்று தும்மியவரை வாழ்த்துதல் மரபு. அவ்வாறே உடன் இருந்த தலைவன் தும்மியதும் தலைவி, தான் ஊடற்கு அமைந்துள்ளதை மறந்து, வாழ்த்துகின்றாள்.
இதற்குள் வேறொன்று அவளுக்கு உறைக்கின்றது. ஒருவர் தம்மீது அன்புடையவரை நினைக்கும்போது, அவ்வாறு நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்பதும் தும்மலோடு தொடர்புடைய ஒரு நம்பிக்கை. தன் தலைவன் தும்மியது 'இவன்மேல் அன்பு கொண்ட பிறிதொரு பெண் இவனை நினைத்ததால் விளைந்ததாகும்' என்ற எண்ணம் தலைவிக்குத் தோன்றுகிறது. தன் கணவனுக்கு தான் தவிர்த்து வேறு பெண்கள் கிடையாது என்று நன்கு தெரியும். ஆனால் இப்பொழுது ஊடும் மனநிலையில் இருந்ததால், வாழ்த்தியவுடன், சற்று நிறுத்தி, காதலனை நோக்கி 'எவள் உங்களை நினைக்க தும்மினீர்கள்?' என விம்மிக் கேட்கிறாள். உடன் அவளையுமறியாமல் அழுகையும் வந்தது.

'அழித்தழுதாள்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'அழித்தழுதாள்' என்ற தொடர்க்கு மீட்டும் அழுதாள், மீளவும் நினைந்து அழுதாள், விட்டு(வாய்விட்டு என்றும் பாடம்) அழுதாள், அங்ஙனம் வாழ்த்திய தானே மறித்து புலந்தழுதாள், அதைவிட்டு அழுதாள், அழத் தொடங்கிவிட்டாள், திரும்ப அழுதாள், வழித்து அழுதாள், மீண்டும் அழுதாள், ஊடி அழுதாள் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர். இவற்றுள் 'அதைவிட்டு அழுதாள்' (மு வரதராசன்) என்ற பொருள் பொருத்தம்.

மணக்குடவர் குறளில் அந்த இடத்தில் 'அழித்து' என்ற சொல் ஏன் வந்தது எனச் சிந்தித்து மீட்டும் அதாவது மீண்டும் என அதற்குப் பொருள் கூறினார். பரிதி இதையே மீளவும் நினைந்து என மாற்றினார். அடுத்துவந்த காலிங்கர் அழித்தழுதாள் என்பதற்கு விட்டு அழுதாள் எனக் கொண்டார்; இவர் உரைக்கு வாய்விட்டு அழுதாள் என்றொரு பாடமும் உள்ளது. பரிமேலழகர் வாக்கியத்தையே 'அழித்து யார் உள்ளித் தும்மினீர் என்று அழுதாள்' என்று மாற்றி அமைத்து முன்கூறப்பட்ட மூன்று உரைகளையும் இணைத்துப் பார்க்கிறார்; அழித்தழுதாள் என்ற தொடர் ஏன் வந்தது என்பதற்குக் காரணமும் காண்கிறார். பாடலின் முதல் வரி தலைவி வாழ்த்துவதாக உள்ளது. வாழ்த்தலொடு புலத்தல் பொருந்தவில்லை என்ற முடிவுக்கு வந்து 'வாழ்த்தலொடு புலத்தல் இயையாமையின், 'அழித்து' என்றான். அங்ஙனம் வாழ்த்திய தானே மறித்து, நும்மை நினைத்து வருந்துகின்ற மகளிருள் யாவர் நினைத்தலால் தும்மினீர்? என்று சொல்லிப் புலந்தழுதாள்' என விரிவுரை வரைந்தார். பின் வந்தஉரையாசிரியர்கள் அழித்தழுதாள் என்பதற்கு மீண்டும்/ திரும்பவும்/ மறுபடியும் அழுதாள் என்றும் ஊடி அழுதாள் என்றும் எளிமையாகப் பொருளுரைத்தனர்.
இரா சாரங்கபாணி 'வழித்தழுதாள்' எனக் கொண்டு 'வகரத்தை உடம்படு மெய்யாக்கி அழித்தழுதாள் என்று பிரித்து உரையாளர்கள் எல்லோரும் பொருள் கூறியுள்ளனர். வழித்தழுதாள் எனக் கிடந்தாங்கே கொண்டு வடிகின்ற கண்ணீரைக் கையினால் வழித்து (துடைத்து) அழுதாள் எனப் பொருள் கொள்ளுதல் இயல்பானது. அங்ஙனம் கொள்ளுங்கால், வழுத்தினாள்....வழித்தழுதாள்' என மோனை நயமும் உண்டு. இக்கருத்துக்கு முன்காட்டிய கண்ணநீர் கைகளால் இறைக்கும் என்னும் நாலாயிரத்தின் (2754) நம்மாழ்வார் பாடலடியை ஒப்பு நோக்குக' என இத்தொடரை விளக்கினார். இவர் உரை 'வருத்தத்தால் வடிந்த கண்ணீரை வழித்தெறிந்து விட்டு, யார் உம்மை நினைக்கத் தும்மினீர் என வெகுண்டு புலந்தாள்' எனச் சொல்கிறது.

'அழித்தழுதாள்' என்ற தொடர்க்கு அதைவிட்டு (வழுத்தியதை விட்டு) அழுதாள் என்பது பொருள்.

தும்மினேனாக உடன் வாழ்த்தினாள்; அதைவிட்டு, 'யார் உம்மை நினைக்க நீர் தும்மினீர்' என்று அழுதாள் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வாழ்த்தலும் அழுகையுமான புலவி நுணுக்கம்.

பொழிப்பு

தும்மினேன் வாழ்த்தினாள்; சற்று நிறுத்தி 'யார் நினைத்ததால் தும்மல் வந்தது' என்று கேட்டு அழுதாள் .