இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1319



தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர்
இந்நீரர் ஆகுதிர் என்று

(அதிகாரம்:புலவி நுணுக்கம் குறள் எண்:1319)

பொழிப்பு (மு வரதராசன்): ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லிச் சினம் கொள்வாள்.

மணக்குடவர் உரை: தன்னை ஊடல் தீர்த்தற்கு உணர்த்தினும், பிறர்க்கும் நீர் இவ்வாறு செய்வீரே யென்றுசொல்லி வெகுளும்.
இது தன்னைப் போற்றினும் குற்றமென்று கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) தன்னை உணர்த்தினும் காயும் - இவ்வாற்றான் ஊடிய தன்னை யான் பணிந்து உணர்த்துங்காலும் வெகுளா நிற்கும்; பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர் என்று - பிற மகளிர்க்கும் அவர் ஊடியவழி இவ்வாறே பணிந்துணர்த்தும் நீர்மையையுடையீராகுதிர், என்று சொல்லி.
('இவள் தெளிவித்தவழியும் தெளியாள் என்பதுபற்றி என்மேல் ஏற்றிய தவற்றை உடம்பட்டுப் பணிந்தேன்; பணிய, அது தானும் புலத்தற்கு ஏதுவாய் முடிந்தது. இனி இவள் மாட்டு செய்யத் தகுவது யாது'? என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: ஊடிய அவளைத் தெளிவித்தாலும் வெகுள்வாள். பிற மகளிர்க்கும் அவர் ஊடிய வழி இவ்வாறே பணிந்து உணர்த்தும் தன்மை உடையவர் ஆகுவீர் என்று சொல்லி.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர் இந்நீரர் ஆகுதிர் என்று.

பதவுரை: தன்னை-தன்னை(இங்கு தலைவியை); உணர்த்தினும்-ஊடல் தணிப்பினும்; காயும்-சீற்றங் கொள்வாள்; பிறர்க்கு-பிறர்க்கு (அதாவது பிற மகளிர்க்கு); நீர்-நீங்கள்; இந்நீரர்-இத்தன்மையர்; ஆகுதிர்-ஆகுவீர்; என்று-என்பதாகச் சொல்லி.


தன்னை உணர்த்தினும் காயும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னை ஊடல் தீர்த்தற்கு உணர்த்தினும் வெகுளும்;
பரிப்பெருமாள்: தன்னை ஊடல் தீர்க்கும்பொழுதும் வெகுளும்;
காலிங்கர்: தன்னை ஊடல் தீர்க்கும் பொழுதும் வெகுளும்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) இவ்வாற்றான் ஊடிய தன்னை யான் பணிந்து உணர்த்துங்காலும் வெகுளா நிற்கும்; [உணர்த்துங் காலும் - ஊடலை நீக்கும் போதும்]

'தன்னை ஊடல் தீர்க்கும் பொழுதும் வெகுளும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவள் ஊடலைப் பணிந்து நீக்கினாலும் காய்வாள்', 'ஊடிய தலைவியைப் பணிந்து மென்மொழி பேசி ஊடலைப் போக்கினாலும் சினப்பாள்', '(வேறு யாரும் என்னை நினைப்பவரில்லை நீதான் நினைத்தாய்' என்று) அவளையே புகழ்ந்து சொல்லிப் பிணக்கம் நீக்க முயன்றும்கூட சினந்து கொள்ளுகிறாள்', 'அவளைப் பிணக்குத் தீர்த்தாலும் சினக்கின்றாள்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தன் ஊடல் தீர்த்தாலும் சினப்பாள் என்பது இப்பகுதியின் பொருள்.

பிறர்க்குநீர் இந்நீரர் ஆகுதிர் என்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர்க்கும் நீர் இவ்வாறு செய்வீரே யென்றுசொல்லி.
மணக்குடவர் குறிப்புரை: இது தன்னைப் போற்றினும் குற்றமென்று கூறியது.
பரிப்பெருமாள்: பிறர்க்கும் நீர் இவ்வாறு செய்வீரே யென்றுசொல்லி.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தன்னைப் போற்றினும் குற்றமாம் என்று கூறியது. இவை எட்டும் தலைமகன் கூற்று. இவை நெஞ்சோடு புலத்தலின்பின் கூறற்பாலது ஆயினும், புலவி நுணுக்கம் சேரச்சொல்ல வேண்டும் ஆதலானும் இறந்தது காட்டல் என்னும் தந்திர வுத்தியானும் ஈண்டுக் கூறப்பட்டது.
காலிங்கர்: பிறர்க்கும் இவ்வாறு செய்வீரே என்று சொல்லி என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: தன்னைப் போற்றினும் குற்றமாம் என்று கூறியது.
பரிமேலழகர்: பிற மகளிர்க்கும் அவர் ஊடியவழி இவ்வாறே பணிந்துணர்த்தும் நீர்மையையுடையீராகுதிர், என்று சொல்லி. [நீர்மையை உடையீர் - இத்தன்மையை உடையீர்; ஆகுதிர் - ஆவிர்]
பரிமேலழகர் குறிப்புரை: 'இவள் தெளிவித்தவழியும் தெளியாள் என்பதுபற்றி என்மேல் ஏற்றிய தவற்றை உடம்பட்டுப் பணிந்தேன்; பணிய, அது தானும் புலத்தற்கு ஏதுவாய் முடிந்தது. இனி இவள் மாட்டு செய்யத் தகுவது யாது'? என்பதாம்.

'பிறர்க்கும் நீர் இவ்வாறு செய்வீரே யென்றுசொல்லி' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறரிடமும் இங்ஙனந்தானே நடப்பீர் என்று', 'பிறரிடமும் ஊடல் நீக்க இவ்வாறுதான் நடந்து கொள்வீர் என்று', ''மற்றப் பெண்களிடத்தும் நீர் இப்படித்தானே பேசுவீர்' என்று', 'பிற பெண்டிர்க்கும் இத்தன்மையாய்ப் பிணக்குத் தீர்ப்பீர் என்று' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிறரிடமும் இவ்வாறுதானே நடந்து கொள்வீர் என்று சொல்லி என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தன்னை உணர்த்தினும் சினப்பாள், பிறரிடமும் இவ்வாறுதானே நடந்து கொள்வீர் என்று சொல்லி என்பது பாடலின் பொருள்.
'தன்னை உணர்த்தினும்' என்ற தொடர் குறிப்பது என்ன?

நீங்கள் என்னதான் காலில் விழுந்து கெஞ்சி கொஞ்சினாலும் நான் மயங்கமாட்டேன்.

'இன்மொழிகூறி, பணிவாக நடந்து, தலைவியின் ஊடலைப் போக்கினாலும் 'மற்றப் பெண்களிடத்திலும் இப்படித் தானே நடந்து கொள்வீர்கள்' என்று என்மேற் சினம் கொள்வாள்.
காட்சிப் பின்புலம்:
நெடிய பயணத்தை முடித்துவிட்டுக் கணவர் இல்லம் திரும்பியுள்ளார். அவரது பிரிவைத் தாங்க முடியாமல் இதுகாறும் நொந்து போயிருந்த தலைவி, அவரைக் கண்டபின்பு பெருமகிழ்ச்சியுடன் இருக்கிறாள். இரவு வந்தது. படுக்கையறையில் இருவரும் சந்திக்கின்றனர். கலவி இன்பத்தை மிகுவிக்கக் கருதி கூடலுக்கு முன் அவள் தலைவருடன் ஊடல் கொள்ள விரும்புகிறாள்.
ஊர்ப்பெண்கள் எல்லாரும் வெறித்துப் பார்த்த நினது மார்பினைப் பொருந்தேன் என்கிறாள்; 'நீடு வாழ்க' என நான் கூறிவேனென்று கருதி ஊடிக்கொண்டிருந்த வேளை அவர் தும்மினார்; 'யாருக்குக் காட்டுவதற்காக இந்தப் பூவை சூடினீர்' என்று வெறுப்புடன் கேட்டாள்; 'நாம் மற்ற எவரினும் காதலுடையோம்' என்று அவர் சொல்ல 'யாரைவிட என்மீது காதலுடையரானீர்' என்று பாய்ந்தாள்; 'இந்தப் பிறவியில் நான் உன்னைவிட்டு நீங்கமாட்டேன்' என்று அவர் சொல்ல அப்படியானால் வேறு பிறவிகளில் பிரிந்துவிடுவீர்களா என்ற குறிப்பில் அவள் கண்களில் நீர் நிறைந்தது; 'நினைத்தேன்' என்று அவர் சொன்னதும் 'மறந்துவிட்டு என்னை நினைத்தீராக்கும்' என்று தழுவ வந்தவள் பின்வாங்கினாள். அப்பொழுது அவர் தும்மினார். 'யார் நினைக்கத் தும்மல் வந்தது?' என்றுவினவி அழுதாள்; மறுபடியும் தலைவருக்குத் தும்மல் வந்தபோது அதை அடக்க முயன்றார், அப்பொழுதும் உம்மை விரும்பிய பெண் நினைத்தலை எம்மிடமிருந்து மறைக்கின்றீரே' என்று அழுதாள். இவ்வாறு தலைவர் எது சொன்னாலும் மறித்து உரையாடிக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
தலைவியின் புலத்தல் நாடகம் தொடர்கிறது. அவர் என்ன செய்தாலும் பொய்யாகக் காய்கிறாள். என்ன சொன்னாலும் பொய்ச் சினம் காட்டுகிறாள். தலைவியின் வாட்டுதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் காதல்கணவர் திணறிக் கொண்டிருக்கிறார்.
இப்பொழுது தலைவரது உணர்த்தல் முயற்சி தொடங்குகிறது. மனைவியிடம் என்ன தன்மதிப்பு காட்டுவது? ஊடல் தணிக்கும் பொருட்டு, தலைவர் இன்சொல் பேசி தலைவியின் முன் பணிந்து, தன்மேல் இட்டேற்றிய செய்யாத தவற்றிற்குக்கூட மன்றாடுகிறார். அதற்கும் அவள் மசியவில்லை. 'எல்லாப் பெண்டிர்களிடம் இப்படித்தானே புகழ்ந்து பணிந்து கிடப்பீர்கள்' என்று சொல்லிச் சினக்கிறாள்.

தலைவர் புறம்போகாதவர். காமத்துப்பாலில் வள்ளுவர் காட்டும் காதலர் குறை இல்லாத உயர்பண்பினர்; மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணுக்கும் தன் உள்ளத்தில் இடம் தராதவர். தலைவியால் அவரிடம் ஒரு தவறும் காணமுடியாது. அவள் பிணங்கி கொள்ளுவதற்கு ஏதொரு காரணமும் இல்லை. அவர்மேல் ஏற்றிய தவற்றில் உண்மையில்லை என்றறிந்தும் தலைவி புலக்கிறாள். தலைவரும் கூறப்பட்ட தவறுகளையெல்லாம் பொருட்படுத்தாமல் சீறும் அவளை அமைதிப்படுத்தும் நோக்கில் பணிவுடன் நடந்து அன்பு காட்டுகிறார். உண்மைக் காரணம் இருந்தால்தானே அதையறிந்து போக்கலாம். சினம்கொண்டவள் போலக் காட்டி இன்பத்தை மிகைப்படுத்துவதுதானே அவளது எண்ணம். அதுதான் புலவி நுணுக்கம். எனவே, தலைவரது பணிவையும் இகழ்ந்தாள். 'இங்ஙனம்தானே மற்ற பெண்கள் வெகுள்வதையும் பேரையும் சரிக்கட்டுவீர்கள்' என்று சொல்கிறாள். கணவரது பணிவையும் ஊடற்குக் காரணமாக்குகிறாள் தலைவி.
நுட்பமான இவ்வுரையாடலில்‌ காதலர்களிடையேயுள்ள அன்புப்‌ பிணைப்பும்‌ வெளிப்படுகிறது.

'தன்னை உணர்த்தினும்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'தன்னை உணர்த்தினும்' என்ற தொடரிலிலுள்ள தன்னை என்பது இங்கு மனைவியைக் குறிக்கும். உணர்த்தினும் என்ற சொல் தெளிவித்தாலும் அதாவது ஊடலைத் தெளிவித்தாலும் எனப் பொருள்படும். ஊடல் நீக்கினும் அல்லது ஊடல் தீர்த்தாலும் எனவும் பொருள் கொள்வர்.
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன் (புணர்ச்சி மகிழ்தல், 1109 பொருள்: ஊடலும், ஊடல் நீங்கலும், புணர்தலும் அன்பு வாழ்வு கொண்டோர் பெற்ற பயன்கள்) என்ற குறளில் கூறப்பட்டதுபோல ஊடல்,உணர்தல், புணர்தல் என்ற மூன்றும் ஊடலில் விளக்கமாக அமையும். கணவனும் மனைவியும் ஊடலிலும் உணர்தலிலும் காதற்பயன் அறிகின்றனர்; அடுத்து வரும் கூடலில் இன்பப் பயன் பெறுவர். ஊடற்கூறுகளில் இங்கு இடைப்பட்ட உணர்தல் பேசப்படுகிறது. காதலி ஊடல் கொண்டால் அதைத் தலைவர் தீர்த்துவைப்பார். அதுபோல் காதலர் பிணக்கம்கொண்டால் அதைக் காதலி நீக்குவாள். இப்பாடலில் காதலி பொய்யாகத்தான் ஊடுகிறாள் என்றாலும் அதுவும் தெளிவிக்கப்படவேண்டியதே. அவளது ஊடலைத் தீர்க்கத் தலைவர் விடாமல் முயற்சி மேற்கொள்கிறார்.
ஊடல் உணர்த்த காதலன் என்னவெல்லாம் செய்வான் என்று உரையாளர்கள் சொல்லியவற்றிலிருந்து சில:
காதலியைப் போற்றுதல்.
அன்புடன் இனிதாகப்பேசுதல்.
இன்மொழியும் பணிவுரையும் கூறுதல்.
'உன்னைப் பிரிந்த நாள் ஒவ்வொன்றும் ஓர் ஊழிக்காலமாக எனக்கு இருந்தது’ என்று கூறுதல்.
பசப்புமொழி பேசுதல்.
'சினத்திலும் பேரழகாகத் தோன்றுகிறாய்' எனச் சொல்லுதல்.
அவளைச் சிரிக்க வைத்தல்.
செய்யாத தவற்றிற்கும் உடன்பட்டுப் பணிதல்.
'உன்மேல் உயிராயிருக்கிறேன்' என்று கூறுதல்.
அவள்முன் மண்டியிடுதல்.

'தன்னை உணர்த்தினும்' என்றது தலைவியின் ஊடலைத் தெளிவித்தாலும் என்ற பொருள் தரும்.

தன் ஊடல் தீர்த்தாலும் சினப்பாள், பிறரிடமும் இவ்வாறுதானே நடந்து கொள்வீர் என்று சொல்லி என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உணர்த்தினாலும் தீராத புலவி நுணுக்கம்.

பொழிப்பு

அவள் ஊடலைப் போக்கினாலும் பிறரிடமும் இவ்வாறுதானே நடந்து கொள்வீர் என்று சினப்பாள்.