இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1318



தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று

(அதிகாரம்:புலவி நுணுக்கம் குறள் எண்:1318)

பொழிப்பு (மு வரதராசன்): அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள `உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ` என்று அழுதாள்.

மணக்குடவர் உரை: தும்மல் தோற்ற அதனை யடக்கினேன். அதற்காக நுமர் உள்ளினமையை எமக்கு மறைக்கின்றீரோ வென்று சொல்லி அழுதாள்.
இது தும்மாதொழியினும் குற்றமென்று கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) தும்முச் செறுப்ப - எனக்குத் தும்மல் தோன்றியவழி, யார் உள்ளித் தும்மினீர்? என்று புலத்தலை அஞ்சி, அதனையான் அடக்கினேன், அங்ஙனம் அடக்கவும்; நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று அழுதாள் - நுமர் நும்மை நினைத்தலை எம்மை மறைக்கல் உற்றீரோ என்று சொல்லிப் புலந்தழுதாள்.
('தும்மு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். செறுப்ப என்புழி இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. எம்மை என்பது 'நும்மோடு யாதுமியைபில்லாத எம்மை' என்பதுபட நின்ற இசையெச்சம். இதனை வடநூலார் 'காகு' என்ப. 'தும்மினும் குற்றம், ஒழியினும் குற்றமாயக்கால் செயற்பாலது யாது'? என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: தும்மல் தோன்றியபோது யார் நினைக்கத் தும்மினீர் எனக் கேட்பாள் என்று அஞ்சி அதனை அடக்க, அவள் நுமக்கு வேண்டியவர் நினைத்தலை நான் அறியக்கூடாது என்று எமக்கு மறைத்தீரோ என்று கேட்டு அழுதாள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தும்முச் செறுப்ப நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று அழுதாள்.

பதவுரை:
தும்மு-தும்மல்; செறுப்ப-அடக்க; அழுதாள்-அழுதாள்; நுமர்-உம்முடையவர்; உள்ளல்-நினைத்தல்; எம்மை-எங்களை; மறைத்திரோ-மறைக்கின்றீரோ; என்று-என்பதாக.


தும்முச் செறுப்ப:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தும்மல் தோற்ற அதனை யடக்கினேன்;
பரிப்பெருமாள்: தும்மல் தோற்ற அதனை யடக்கினேன்;
பரிதி: தும்மல் உண்டாகக் கண்ட நாயகி அழுதாள்;
காலிங்கர்: தும்மல் தோன்ற அதனை அடக்கினேன்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) எனக்குத் தும்மல் தோன்றியவழி, யார் உள்ளித் தும்மினீர்? என்று புலத்தலை அஞ்சி, அதனையான் அடக்கினேன், அங்ஙனம் அடக்கவும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'தும்மு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். செறுப்ப என்புழி இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தால் தொக்கது.

'தும்மல் தோன்றியவழி அதனை யடக்கினேன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வந்த தும்மலை அடக்கினேன்', 'நான் தும்மலை அடக்கினதற்கு', 'தும்மலையடக்கவும்', 'உண்டான தும்மலை அடக்க', என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தும்மல் அடக்கியபோது என்பது இப்பகுதியின் பொருள்.

அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதற்காக நுமர் உள்ளினமையை எமக்கு மறைக்கின்றீரோ வென்று சொல்லி அழுதாள்.
மணக்குடவர் குறிப்புரை: இது தும்மாதொழியினும் குற்றமென்று கூறியது.
பரிப்பெருமாள்: அதற்கு நுமர் உள்ளினமையை எம்மை மறைக்கின்றீரோ வென்று சொல்லி அழுதாள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தும்மாதொழியினும் குற்றமாம் என்று கூறியது.
பரிதி: உமது நாயகி வாழ்த்தத் தும்முவதன்றி இவள் வாழ்த்தத் தும்ம ஒண்ணாது என்று ஊடினாள் என்றவாறு.
காலிங்கர்: அதற்கு அழுதாள், நீர் நுமர் உள்ளினமையை எம்மை மறைத்திரோ என்று சொல்லி என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: தும்மாதொழியினும் குற்றமாம் என்று கூறிற்று.
பரிமேலழகர்: நுமர் நும்மை நினைத்தலை எம்மை மறைக்கல் உற்றீரோ என்று சொல்லிப் புலந்தழுதாள்.
பரிமேலழகர் குறிப்புரை: எம்மை என்பது 'நும்மோடு யாதுமியைபில்லாத எம்மை' என்பதுபட நின்ற இசையெச்சம். இதனை வடநூலார் 'காகு' என்ப. 'தும்மினும் குற்றம், ஒழியினும் குற்றமாயக்கால் செயற்பாலது யாது'? என்பதாம்.

'நுமர் உள்ளினமையை எமக்கு மறைக்கின்றீரோ வென்று சொல்லி அழுதாள்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதற்குள் அழுதாள் உம்பெண்டிர் நினைப்பதை ஒளிக்கிறீர் என்று', 'அவள் 'உமக்கு வேண்டியவர் (யாரோ உம்மை) நினைக்கிறதை எனக்கு ஒளிக்க முயல்கின்றீர் என்று அழுதாள்', 'நுமக்கு வேண்டியவர் நும்மை நினைப்பதை எமக்கு மறைப்பதைக் கருதினீரோவென்று அழுதாள்', 'உம்மை விரும்பிய மகளிர் நினைத்தலை எமக்கு மறைக்கின்றீரோ என்று கூறி அழுதாள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உமக்கு வேண்டியவர் உம்மை நினைப்பதை எமக்கு மறைக்கின்றீரோ என்று அழுதாள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தும்மல் அடக்கியபோது 'உமக்கு வேண்டியவர் உம்மை நினைப்பதை எம்மை மறைத்திரோ' என்று அழுதாள் என்பது பாடலின் பொருள்.
'எம்மை மறைத்திரோ' என்பதன் பொருள் என்ன?

என்ன இது! தும்மினாலும் குற்றம். தும்மாவிட்டாலும் சண்டைக்கு வருகிறாளே?

அவள் ஊடல் கொள்வாள் என்று அஞ்சி, எழுந்த தும்மலை அடக்கப் போராடினேன் நான்; ‘உம்மவர் நினைப்பதை எமக்குத் தெரியாதபடி ஒளிக்கிறீர்?’ என்று அவள் அழுதாள்.
காட்சிப் பின்புலம்:
கடமை முடித்துவிட்டுக் கணவன் இல்லம் திரும்பியுள்ளான். அவனது நெடிய பிரிவைத் தாங்க முடியாமல் துயருற்றிருந்த காதலி, அவனைக் கண்டபின்பு பெருமகிழ்ச்சியுடன் இருக்கிறாள். படுக்கையறையில் இருவரும் சந்திக்கின்றனர். கூடலுக்கு முன் தலைவி காதலனுடன் ஊடல் கொள்ள விரும்புகிறாள் - அது கலவி இன்பத்தை மிகுவிக்கும் என்பதால். தலைவன் எது சொன்னாலும் மறித்து உரையாடுகிறாள். அப்பொழுது அவன் தும்மினான். 'யாராவது நினைத்தால்தான் ஒருவர்க்குத் தும்மல் வரும்; நினைக்கும் உரிமை உடையவள் நான் ஒருத்திதான். ஆனால் இன்னும் வேறு யாரோ ஒருத்தியும் இருக்கிறாள் போலும்! அவள் நினைத்ததால்தான் இவருக்குத் தும்மல் வந்தது' என்று ஊடலுக்குக் காரணம் கிடைத்ததால், கணவனை நோக்கி 'யார் நினைக்கத் தும்மல் வந்தது?' என்று கேட்டுக்கொண்டிருக்கின்றாள்.

இக்காட்சி:
இப்பொழுது தலைவனுக்கு மறுபடியும் தும்மல் எழுகிறது. இதற்கு முன்னர் இருமுறை தும்மினான். ஒருவர்க்குத் தொடர்ந்து தும்மல் வருவது இயல்புதான். தலைவன் முன்பு தும்மியபோது, யாரோ அவனை நினைத்ததால்தான் தும்மினான் என்று அழுது ஊடினாள் என்பதனால், மீண்டும் தும்மல் வந்தபோது, இந்தமுறை அவ்வாறு நினைப்பதற்கு இடம் கொடுத்தல் வேண்டாமென்று, தும்முதலை அடக்கப் போராடுகிறான். அவள் அதனைப் பார்த்து, 'எவளோ உங்களை நினைத்துக் கொண்டிருப்பதால் உமக்குத் தும்மல் வருகின்றது. அதனை எனக்குத் தெரியாமல் மறைக்க முயலுகின்றீர்கள்' என்றுகேட்டு கண்ணீர் விட்டு மறுபடியும் அழத் தொடங்கிவிடுகிறாள். தும்மியதுதான் ஊடலுக்குக் காரணமாகியது என்றால் தும்மலை அடக்குதலும் அவளுக்கு புலத்தற்கான ஏது ஆகி விட்டதே என அறிந்து செய்வதறியாமல் தலைமகன் இருக்கிறான்.

தலைமகனது எல்லாச்செயலிலும் ஏதாவது குறைகண்டு அவனைச் சீண்டி காதலி மகிழ்கிறாள். ஊடலின்போது காதலி உயர்ந்தவளாகிறாள். தலைவன் பணிந்துதான் ஊடலைத் தீர்க்கவேண்டும். இருவருமே குற்றமற்றவர்கள். இந்நிலையில் மனைவியிடம் கணவன் படும்பாடு காட்சிகளாகத் தோன்றும்போது படிப்பவர்களுக்கு நல்ல நகைச்சுவை விருந்தாக அமைகிறது.

'எம்மை மறைத்திரோ' என்பதன் பொருள் என்ன?

'எம்மை மறைத்திரோ' என்ற தொடர்க்கு எமக்கு மறைக்கின்றீரோ, எம்மை மறைக்கின்றீரோ, எம்மை மறைத்திரோ, எம்மை மறைக்கல் உற்றீரோ, எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ, எமக்கு மறைப்பதற்காகத் தானே, ஒளிக்கிறீர், எமக்கு மறைத்தீரோ, எனக்கு ஒளிக்க முயல்கின்றீர், யாம் அறியாவாறு மறைத்தீரோ, எமக்கு மறைப்பதைக் கருதினீரோ, எமக்கு மறைக்கின்றீரோ, எனக்கு மறைக்கின்றீரோ என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மறுபடியும் தலைவனுக்குத் தும்மல் வந்தபோது அதை அவன் அடக்க முயல 'யாரோ ஒருத்தி உங்களை நினைக்கிறாள்; அதனால்தான் தும்மல் வருகிறது. அதை எம்மை மறைத்திரோ?' எனக் காதலி மடக்கிக் கேட்கிறாள்.
பரிமேலழகர் இத்தொடரிலிலுள்ள எம்மை என்ற சொல்லுக்கு 'எம்மை என்பது 'நும்மோடு யாதுமியைபில்லாத எம்மை' என்பதுபட நின்ற இசையெச்சம்' என விளக்குவார். இசையெச்சமாவது வாக்கியங்களுள் அவ்வவ்விடத்திற்கேற்பப் பலசொல் வருவித்துரைக்கப்படுதலைக் குறிக்கும். இங்கு 'நும்மோடு யாதும் இயைபில்லாத' எனும் சொற்கள் வருவித்துரைக்கப்பட்டமையின் இசை எச்சம் ஆயிற்று. இதையே தேவநேயப்பாவாணர், 'பரத்தையரை 'நுமர் ' என்றதினால், 'எம்மை ' யென்பது நும்மோடியைபில்லாத எம்மை யென்பதுபட நின்றது' என விளக்கம் செய்தார்.

'எம்மை மறைத்திரோ' என்ற தொடர்க்கு எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்பது பொருள்.

தும்மல் அடக்கியபோது 'உமக்கு வேண்டியவர் உம்மை நினைப்பதை எமக்கு மறைக்கின்றீரோ' என்று அழுதாள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தும்மலை அடக்கக் காதலன் திணறுவதைத் தலைவி தன்னுள் சுவைத்து ஊடலை நீட்டிக்கும் புலவி நுணுக்கம்.

பொழிப்பு

தும்மல் தோன்றியபோது அடக்கினேன்; உமக்கு வேண்டியவர் நினைப்பதை எமக்கு மறைக்கின்றீரோ என்று அழுதாள்.