இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1315இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்

(அதிகாரம்:புலவி நுணுக்கம் குறள் எண்:1315)

பொழிப்பு (மு வரதராசன்): இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்` என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.

மணக்குடவர் உரை: இப்பிறப்பிலே யாம் பிரியோமென்று சொன்னேனாக, அதனால் மறுபிறப்பின்கண் பிரிவுண்டென்று கருதிக் கண்ணிறைய நீர் கொண்டாள்.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனா - காதல் மிகுதியான் இம்மையாகிய பிறப்பின்கண் யாம் பிரியேம் என்று சொன்னேனாக; கண் நிறை நீர் கொண்டனள் - அதனான் ஏனை மறுமையாகிய பிறப்பின்கண் பிரிவல் என்னும் குறிப்பினேனாகக் கருதி, அவள் தன் கண்நிறைந்த நீரினைக் கொண்டாள்.
('வெளிப்படுசொல்லைக் குறிப்புச் சொல்லாகக் கொள்கின்றதல்லது என்பால் தவறில்லை', என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: காதல் மிகுதியால் இப் பிறவியில் உன்னைவிட்டுப் பிரிய மாட்டோம் என்று சொன்னோமாக. அதனால் மறுமையில் பிரிந்து விடுவேன் என்று கூறும் குறிப்பாகக் கொண்டு தன் கண் நிறைந்த நீரினைக் கொண்டாள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர் கொண்டனள்.

பதவுரை: இம்மைப் பிறப்பில்-இப்பிறவியில்; பிரியலம்-பிரியாமல் இருப்போம்; என்றேனா-என்று கூறினேன் ஆக; கண்நிறை-கண்கள் நிறைந்த; நீர் கொண்டனள்-நீரை(கண்ணீரை)க் கொண்டு விட்டாள்.


இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனா :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இப்பிறப்பிலே யாம் பிரியோமென்று சொன்னேனாக;
பரிப்பெருமாள்: இப்பிறப்பிலே யாம் பிரியோமென்று சொன்னேன்;
பரிதி: இந்தச் செனனத்திலே பிரியோம் என்றார்;
காலிங்கர்: இப்பிறவியில் யான் பிரியேன் என்று சொன்னேன்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) காதல் மிகுதியான் இம்மையாகிய பிறப்பின்கண் யாம் பிரியேம் என்று சொன்னேனாக;

'இப்பிறவியில் யாம் பிரியோம்/யான் பிரியேன் என்று சொன்னேனாக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இப்பிறப்பில் பிரிய மாட்டோம் என்றதும்', 'காதல் மிகுதியால் இம்மையாகிய இப்பிறப்பில் உன்னைப் பிரியோம் என்றேனாக', 'நான் இந்தப் பிறப்பில் உன்னை விட்டுப் பிரிந்து (வேறு எங்கும் போய்விட மாட்டேன்' என்றேன்', 'இப்பிறப்பிலே நின்னைப் பிரிய மாட்டேனென்றேன்', என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இந்தப் பிறப்பில் நாம் பிரிய மாட்டோம் என்று சொன்னேனாக என்பது இப்பகுதியின் பொருள்.

கண்நிறை நீர்கொண் டனள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனால் மறுபிறப்பின்கண் பிரிவுண்டென்று கருதிக் கண்ணிறைய நீர் கொண்டாள்.
பரிப்பெருமாள்: அதனானே மறுபிறப்பின்கண் பிரிவுண்டென்று கருதிக் கண்ணிறைய நீர் கொண்டாள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, பிரியேன் எனினும் குற்றமாம் என்று கூறியது.
பரிதி: வருகிற செனனத்தில் பிரியவும் உள்ளவரோ என்று ஊடினாள் என்றவாறு.
காலிங்கர்: அதனானே மறு பிறப்பின்கண் பிரிவு உண்டு என்று கருதிக் கண் நிறைய நீர் கொண்டனள் என்றவாறு.
பரிமேலழகர்: அதனான் ஏனை மறுமையாகிய பிறப்பின்கண் பிரிவல் என்னும் குறிப்பினேனாகக் கருதி, அவள் தன் கண்நிறைந்த நீரினைக் கொண்டாள். [அதனான் - அவ்வாறு சொன்னதால்; பிரிவல் - பிரிவேன்]
பரிமேலழகர் குறிப்புரை: 'வெளிப்படுசொல்லைக் குறிப்புச் சொல்லாகக் கொள்கின்றதல்லது என்பால் தவறில்லை', என்பதாம். [குறிப்புச் சொல் - குறிப்பாற் பொருளுணர்த்தும் சொல்]

'அதனானே மறு பிறப்பின்கண் பிரிவு உண்டு என்று கருதிக் கண் நிறைய நீர் கொண்டனள்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மறுபிறப்பில் பிரிவுண்டா என்று அழுதாள்', 'அவள் மறுபிறப்பில் பிரிந்து விடுவேன் எனக் குறிப்பால் கருதிக் கண்ணிறைந்த நீரினைக் கொண்டாள். (கண் இறைநீர் எனப் பிரித்துக் கண்ணிலிருந்து இறைக்கும்படியான மிகுந்த நீர் என்றும் கொள்ளலாம். 'கண்ணநீர் கைகளால் இறைக்கும்' நம்மாழ்வார்)', 'உடனே என் காதலி (இந்தப் பிறப்பில் பிரிய மாட்டேன் என்றால் இனிவரும் பிறப்புகளில் நான் அவரை விட்டுப் பிரிந்துவிடுவேனோ என்று வருந்தி) நிறைய கண்ணீர் விட்டு அழுதுவிட்டாள்', 'அப்படியானால் மறுபிறவியிற் பிரியக் கருதுகின்றீரோ என்று பிணங்கித் தன்னுடைய கண்கள் நிறைய நீர் பெருக்கினாள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கண்கள் நிறைய நீர் பெருக்கினாள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இந்தப் பிறப்பில் நாம் பிரிய மாட்டோம் என்று சொன்னேனாக, கண்கள் நிறைய நீர் பெருக்கினாள் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

பொய்மையான ஊடலிடையே ஒரு மெய்யான உருக்கமான காட்சி.

'இப்பிறப்பில் பிரிய மாட்டோம்' என்று தலைவன் கூறினான். உடனே மறுபிறவியிற் பிரிந்துவிடுவோமா எனக் கருதி மனைவி கண்களில் நீர் நிறைந்தது.
காட்சிப் பின்புலம்:
நெடிய பிரிவில் சென்றிருந்த தலைவன் கடமை முடிந்து இல்லம் திரும்பியுள்ளான், பிரிவின் துயர் ஆற்றமுடியாமல் இருந்த மனைவி அவனை நேரில் பார்த்தவுடன் மிக மகிழ்ச்சி அடைந்தாள். இப்பொழுது தன்னை நன்கு அணி செய்து கொண்டு படுக்கையறையில் உள்ளாள். நீண்ட இடைவெளிக்குப் பின் அவர்கள் நெருக்கத்தில் உள்ளனர். தலைவி கூடல் இன்பம் மிக வேண்டும் என்பதற்காக அவனுடன் சேர்வதற்கு முன் ஊடல் கொள்ள எண்ணி இல்லாததற்கெல்லாம் காய்ந்து கொண்டிருக்கிறாள். 'ஊர்ப்பென்கள் எல்லாம் கண்ணால் நுகர்ந்த உன் மார்பை நான் பொருந்தேன்' என அவனிடம் சொல்கிறாள், 'நான் ஊடிக் கொண்டிருந்தேன்; என்னிடம் பேசுவதற்காகத் தும்முகிறார்-நான் 'நீடு வாழ்க' எனச் சொல்வேனெனக் கருதி என்கிறாள். 'யாருக்குக் காட்டுவதற்காக அந்த மரக்கொம்பு பூவை அணிந்துள்ளீர்' எனக் கேட்கிறாள். யாரையும் விடக் காதல் உடையோம் என்று அவன் கூறினான்; உடனே யாரைவிட யாரைவிட என்று அவனுடன் சண்டைக்குப் போனாள். கணவன் அவளது ஊடலைத் தணிப்பதற்கு முயன்று கொண்டிருக்கிறான்.

இக்காட்சி:
ஊடல் தொடர்கிறது. கணவன் தன்னுடைய உள்ளத்திலுள்ள உணர்ச்சிகளை அவளுக்குத் தெரிவிக்க விரும்பி, அன்பு மீக்கூர, 'இந்தப் பிறப்பில் நாம் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிய மாட்டோம்' என்று கூறினான். அதுகேட்ட தலைவியின் உள்ளம் குழைந்துருகுகிறது. ஆனாலும் 'இந்தப் பிறப்பில் உன்னைப் பிரியவே மாட்டேன்' என்றுதானே சொன்னார். அவ்வாறானால் அடுத்து வரக்கூடிய பிறவிகளில் தன்னை விட்டு நீங்கிவிடுவானோ என எண்ணம் தோன்ற, காதல் உணர்வு மிகுதியால், தலைவிக்குக் கண்ணீர் பெருக்கெடுத்தது; காதலியின் பேரன்பு வெளிப்படுத்தப்பட்டது.
உள்ளத்தை நெகிழவைக்கும் ஒரு காட்சி! இந்நிகழ்ச்சியும் உரையாடல் குறிப்பும் பாடலைப் படிப்போரிடமிருந்தும் கண்ணீர் வரவழைக்கக் கூடியன.
பிறவிகள் பல இருப்பின் அப்பிறவிகள் தோறும் இருவரும் கூடி வாழ்தல் வேண்டும் என்பது ஆழ்ந்த காதலால் பிணைக்கப்பட்ட இணைகளின் விருப்பமாக இருக்கும். இந்த வாழ்க்கை உள்ள அளவும் நாம் பிரியோம் என்று அவன் கூறிய கருத்துக்கு மாறாகத் தலைவி 'அடுத்த பிறவியில் பிரிந்துவிடுவேன்' என்று பொருள்கொண்டு கலக்கமுற்றாள். அக்கணமே அவன் பிரிந்துவிட்டதுபோல் உணர்ந்தாலாதலால் அது பொறுக்கமாட்டாமல் அவள் கண்கள் குளமாயின. இனி எடுக்கும் பிறவிகளில் எல்லாம் இவரையே கணவனாக அடைய வேண்டுமென்று தலைவி விரும்பினாள் என்ற நுணுக்கமுள்ள கவிதை இது.

'கண்ணிறை நீர் கொண்டனள்' என்பதைக் கண் நிறை நீர் கொண்டனள் என்றும் கண் இறை நீர் கொண்டனள் என்றும் இருவகையாகப் பிரித்துப் பொருள் கொள்வர். எனவே கண்களிலிருந்து நீரைக் கையால் இறைக்கும்படியாகக் கண்ணீர் மிகும்படி அழுதாள் என்றும் இக்குறளுக்கு மற்றொரு பொருள் உரைப்பர்.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

இக்குறளுக்கு நேர் பொருள் 'இந்தப் பிறப்பில் நாம் பிரிய மாட்டோம் என்று சொன்னவுடன், அவள் கண்களில் நீர் நிறைந்தது' என்பது. தலைவி கண்ணில் நீர் கொண்டமைக்கு என்ன காரணம் என்று குறளில் சொல்லப்படவில்லை. அது என்ன?
அதிகாரம் புலவி நுணுக்கம். முந்தைய குறள்கள் தலைவி காதலனுடன் ஊடல் கொண்டு அவனைப் பொய்யாகச் சீண்டிக் கொண்டிருப்பதாக உள்ளன. இங்கு 'இப்பிறப்பில் பிரிய மாட்டோம்' என்ற காதலன் கூற்றுக்கு 'இனிவரும் பிறவிகளில் பிரிந்துவிடப் போகிறோமா' எனப் பொருள் கற்பித்துக்கொண்டு ஆற்றமுடியாமல் அழுகிறாள். 'எந்தப் பிறவியிலும் பிரியமாட்டோம்' என்று அவர் சொல்லவில்லையே என்பது அவள் வருத்தம்!

இப்பாடல் உழுவலன்பின் சிறப்பினைச் சொல்வதாக அமைந்தது. பிறவிகள்தோறும் மாறாது தொடரும் அன்பை உழுவலன்பு என்ற சொல்லால் நம் முன்னோர்கள் குறித்தனர். இது நிலமும் நீரும்போல, உள்ளங்கள் ஒன்றுபட்ட காதலர் கொண்ட அன்பைச் சொல்வது. கெழுதகை நட்பினராய்ப் பழகிய, மனம் ஒருமித்த, இவர்கள் எல்லாப் பிறவிகளிலும் ஒன்று கூடி வாழ விழைபவர்கள். ஒருவர் பிரிவை மற்றொருவர் பொறார், 'நம்முடைய அன்பு பிறவிதோறும் தொடரும் இயல்பின தாகுக' என்ற கருத்தைக் குறுந்தொகைப் பாடல் ஒன்று சொல்கிறது:
இம்மை மாறி மறுமை ஆயினும்.
நீ ஆகியர் எம் கணவனை;
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே
(குறுந்தொகை 49 பொருள்: இப்பிறப்பு நீங்கப்பெற்று நமக்கு வேறு பிறப்பு உண்டாயினும், என்னுடைய தலைவன் இப்பொழுது என்பால் அன்பு செய்தொழுகும் நீயே ஆகுக! நின்னுடைய மனத்திற்கு ஒத்த காதலி இப்பொழுது நின் நெஞ்சு கலந்தொழுகும் யானே ஆகுக! )
அதே ஆசிரியரின் (அம்மூவனார்) மற்றொரு பாடல் நற்றிணையில் உள்ளது. அது:
சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், ''சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவதுஆயின்,
மறக்குவேன்கொல், என் காதலன்'' எனவே
(நற்றிணை 397 பொருள்: இறப்பு வந்ததேயென்று யான் அஞ்சுகிற்பேனல்லேன்; அவ்வாறு இறந்துழி; எனது இனி வரும் பிறப்பு வேறொரு பிறப்பாகி மாறிவிடின் என் காதலனை அப்பொழுது மறப்பேனோ என்று அதற்குமட்டுமே யான் அஞ்சுவேன்.) இப்பாடலில் 'செத்தால் மானிடப் பிறவியன்றி மாறி வேறு ஏதேனும் பிறவி வாய்க்குமாயின், மறந்தற்கு நேருமே என்று நான் அஞ்சுகிறேன்; அவரை ஒரு பொழுதும் மறந்து வாழ என்னால் இயலாதே' என்கிறாள் சங்கத் தலைவி.
ஈண்டு நான் இருந்து இன் உயிர் மாயினும்
மீண்டு வந்து பிறந்து தன் மேனியைத்
தீண்டல் ஆவது ஒர் தீவினை தீர் வரம்
வேண்டினாள் தொழுது என்று விளம்புவாய்
(கம்ப ராமாயணம், சுந்தர காண்டம், சூடாமணிப் படலம், 35 பொருள்: இந்த இலங்கையில் (மீட்சி பெறாமல்) நான் துன்பத்துடன் இருந்து இனிய உயிர் இறந்தாலும், மறுபடியும் உலகிற்கு வந்து பி்றந்து, இராமனது திருமேனியை தழுவுதலாகிய ஒப்பற்ற, தீமையிலிருந்து நீங்கும், வரத்தை, கைகூப்பி வேண்டிக் கொண்டாள் என்று கூறுவாயாக) என்று சீதை மறுபிறவி இருந்தால் இராமனின் மனைவியாக வேண்டும் வரத்தை வேண்டி நிற்பதாகக் கம்பர் வரைகிறார்.
இவையாவும் எல்லாப்பிறப்பிலும் இதேபோன்று கணவன், மனைவியாகப் பிறக்க வேண்டும் என எண்ணும் 'ஒன்றினார் வாழ்க்கை'யைச் சொல்வன.

இப்பிறப்பில் நாம் பிரியவே மாட்டோம் என்று காதலன் தலைவியிடம் சொல்கிறான், அவளோ, தலைவன் குறிப்பால் அடுத்த பிறப்பில் பிரிவோம் என்று பொருளுணர்த்தியதாக எண்ணி, கண்களையே மறைக்கும் படியாக கண்ணீர் பெருக நின்றாள்.

இந்தப் பிறப்பில் நாம் பிரிய மாட்டோம் என்று சொன்னேனாக, கண்கள் நிறைய நீர் பெருக்கினாள் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

எல்லாப் பிறவிகளிலும் என்னுடன் இருக்க மாட்டீர்களா எனக் கலங்கும் புலவி நுணுக்கம்.

பொழிப்பு

இப்பிறப்பில் பிரிய மாட்டோம் என்று சொன்னேனாக, கண்ணிறைந்த நீரினைக் கொண்டாள்,