இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1316உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்

(அதிகாரம்:புலவி நுணுக்கம் குறள் எண்:1316)

பொழிப்பு (மு வரதராசன்): `நினைத்தேன்` என்று கூறினேன்; `நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர்? என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.

மணக்குடவர் உரை: அவ்விடத்து எம்மை நினைத்தோமென்றீர்: மறந்தாரன்றே நினைப்பார். ஆதலான் எங்களை மறந்தீரென்று சொல்லி எம்மை முயங்காளாய்ப் புலவிக்குத் தகுதியாளாயினாள்.
இது நினைத்தோமெனினும் குற்றமென்று கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) உள்ளினேன் என்றேன் - பிரிந்த காலத்து நின்னையிடையின்றி நினைந்தேன் என்னும் கருத்தால், யான் உள்ளினேன் என்றேன்; மற்று என் மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள் - என, அதனை ஒருகால் மறந்து பின் நினைந்தேன் என்றதாகக் கருதி, என்னை யிடையே மறந்தீர் என்று சொல்லி, முன் புல்லுதற்கு அமைந்தவள் அஃதொழிந்து புலத்தற்கு அமைந்தாள்.
(மற்று - வினை மாற்றின்கண் வந்தது. அருத்தாபத்திவகையான் மறத்தலையுட்கொண்டு புலந்தாள் என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: பிரிவில் நின்னை நினைத்தேன் என்று கூறினேன். அதற்கு அவள் மறந்தால்தானே மறுபடியும் நினைக்க முடியும் எனக் கருதிக் கொண்டு என்னை ஏன் இடையில் மறந்தீர் எனக்கேட்டு முயங்க வந்தவள் முயங்காதவளாய்ப் புலவி மேற்கொண்டாள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றெம்மைப் புல்லாள் புலத்தக் கனள்.

பதவுரை: உள்ளினேன்-(உன்னை) நினைத்தேன்; என்றேன்- என்று கூறினேன்; மற்று-(அப்படியென்றால்)பின்னர்; என்மறந்தீர்-ஏன் (என்னை)மறந்தீர்; என்று-என்று கூறி; எம்மைப் புல்லாள்-என்னை கூடித் தழுவாள்; புலத்தக்கனள்-ஊடுதற்குப் பொருந்தினாள்.


உள்ளினேன் என்றேன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்விடத்து எம்மை நினைத்தோமென்றீர்;
பரிதி: நாயகரே! நீர் என்னை நினைத்தோம் என்றீர்;
காலிங்கர்: 'நீர் பிரிந்த இடத்து எம்மை நினைந்தோம் என்றீர்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) பிரிந்த காலத்து நின்னையிடையின்றி நினைந்தேன் என்னும் கருத்தால், யான் உள்ளினேன் என்றேன்;

'நீர் பிரிந்த இடத்து எம்மை நினைந்தோம் என்றீர்' என்று மற்றவர்களும் 'பிரிந்த காலத்து நின்னையிடையின்றி நினைந்தேன் என்னும் கருத்தால், யான் உள்ளினேன் என்றேன்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நினைத்தேன் என்றேன்', '(வெளியூர்களில் இருக்கும்போது) 'உன்னை நினைத்தேன்' என்று சொன்னேன்', 'நினைத்தேன் என்றேன்', 'பிரிந்த காலத்தில் இடைவிடாது நினைத்துக் கொண்டிருந்தேன் என்னும் கருத்தால் யான் நினைத்தேன் என்றேன்', என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

(உன்னை) நினைத்தேன் என்றேன் என்பது இப்பகுதியின் பொருள்.

மற்று என்மறந்தீர் என்றெம்மை புல்லாள் புலத்தக் கனள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('உள்ளினே மென்றீர்மற் றெம்மறந்தீர் என்றெம்மைப்' பாடம்): மறந்தாரன்றே நினைப்பார். ஆதலான் எங்களை மறந்தீரென்று சொல்லி எம்மை முயங்காளாய்ப் புலவிக்குத் தகுதியாளாயினாள்.
மணக்குடவர் குறிப்புரை: இது நினைத்தோமெனினும் குற்றமென்று கூறியது.
பரிதி: ஆகையினால் மறந்தநாளும் உண்டென்று ஊடினாள் என்றவாறு.
காலிங்கர் ('உள்ளினே மென்றீர்மற் றெம்மறந்தீர் என்றெம்மைப்' பாடம்): மற்று எம்மை மறந்தீர்' என்று முயங்காளாய்ப் புலவித் தகுதியான் ஆயினாள் என்றவாறு.
பரிமேலழகர்: (என, அதனை ஒருகால் மறந்து பின் நினைந்தேன் என்றதாகக் கருதி) என்னை யிடையே மறந்தீர் என்று சொல்லி, முன் புல்லுதற்கு அமைந்தவள் அஃதொழிந்து புலத்தற்கு அமைந்தாள். [புல்லுதற்கு அமைந்தவள் - முயங்குதற்கு இசைந்திருந்தவள்; அஃது ஒழிந்து - என்னைப் புல்லுதற்கு அமைந்ததை விட்டு]
பரிமேலழகர் குறிப்புரை: மற்று - வினை மாற்றின்கண் வந்தது. அருத்தாபத்திவகையான் மறத்தலையுட்கொண்டு புலந்தாள் என்பதாம்.

'மறந்தாரன்றே நினைப்பார். ஆதலான் எங்களை மறந்தீரென்று சொல்லி எம்மை முயங்காளாய்ப் புலவிக்குத் தகுதியாளாயினாள்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'திரும்ப நினைக்குமாறு முன் ஏன் மறந்தீர் என்று தழுவாது ஊடினாள்', '(அதற்கு அவள் 'உன்னை இப்பிறப்பில் பிரியமாட்டேன் என்றீரே அப்படியிருக்க உம்முடைய நெஞ்சில் என்னைப் பிரிந்திருந்துதானே மறுபடியும் நினைத்திருக்கிறீர்கள்) 'ஏன் இடையில் மறந்தீர்கள்?' (என்று சொல்லி என்னைத்) தழுவ வந்தவன் தழுவாமல் பிணங்கிக் கொண்டாள்', 'நீர் மறந்தால்லவோ நினைக்க வேண்டும்; என்னை மறந்தீரோவென்று பிணங்க விரும்பித் தழுவாதிருந்தனள்', 'அதனை ஒருமுறை மறந்து பின் நினைந்தேன் என்றதாகக் கருதி என்னை இடையே மறந்தீர் என்று சொல்லி முன் தழுவுவதற்குப் பொருந்தியவள் அஃதொழிந்து ஊடற்கு அமைந்தாள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அப்படியென்றால் ஏன் மறந்தீர் என்று தழுவாதிருந்து புலத்தற்கு அமைந்தாள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
(உன்னை) நினைத்தேன் என்றேன்; அப்படியென்றால் ஏன் மறந்தீர் என்று தழுவாதிருந்து புலத்தக்கனள் என்பது பாடலின் பொருள்.
'புலத்தக்கனள்' என்பதன் பொருள் என்ன?

எந்த நேரமும் தலைவர் தன்னை மறவாமல் இடையீடின்றி நினைத்துக்கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறாள் தலைவி.

'பிரிவின்போது உன்னை நினைப்பேன்' என்று கூறினேன். அதற்குத் தலைவி மறந்தால்தானே மறுபடியும் நினைக்க முடியும் எனக் கருதிக் கொண்டு 'என்னை ஏன் மறந்தீர்' எனக்கேட்டு, தழுவாமல் விலகி புலத்தல் மனநிலைக்குச் சென்றாள்.
காட்சிப் பின்புலம்:
தொழில் காரனாமாகத் தொலைவு சென்றிருந்த கணவர் வீடு திரும்பிவிட்டார். நீண்டகால இடைவெளியில் தலைவி பிரிவாற்றாமையால் துயருற்றிருந்தாள். அவரைக் கண்டதிலிருந்து மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றாள். கலவியில் கூடுதல் இன்பம் பெறும் நோக்கில் அவருடன் ஊடல் கொள்வேன் என மனத்துள் சொல்லி இல்லாத காரணங்களுக்கெல்லாம் குற்றம் கண்டு அவர் மீது காய்கிறாள்.
'ஊர்ப்பென்கள் எல்லாரும் தம்கண்ணால் துய்த்த உன் மார்பை நான் பொருந்தேன்' என அவரிடம் சொல்லி விலகுகிறாள், 'என்னிடம் உரையாடுவதற்கத் தும்முகிறார் நான் ஊடிக் கொண்டு பேசாமல் இருக்கிறேன் என்பதயறிந்து - நான் 'நீடு வாழ்க' எனச் சொல்வேனெனக் கருதி என்கிறாள்; தலைவர் தனக்கு ஒப்பனையாக அணிந்திருந்த பூவைச் சுட்டி 'யாருக்குக் காட்டுவதற்காக அந்த மரக்கொம்பு பூவை அணிந்துள்ளீர்' என வெறுப்புகாட்டிக் கேட்கிறாள்; 'யாரையும் விடக் காதல் உடையோம் என்று அவர் கூற, உடனே 'யாரைவிட யாரைவிட' என்று அவரை வம்பிற்கு இழுக்கிறாள்; அன்பு மேலிட தலைவர், 'இப்பிறப்பில் நாம் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிய மாட்டோம்' என்று கூற தலைவியின் உள்ளம் குழைந்துருகுகினாலும் 'இந்தப் பிறப்பில் உன்னைப் பிரியவே மாட்டேன்' என்றுதானே சொல்கிறார். அவ்வாறானால் அடுத்து வரக்கூடிய பிறவிகளில் தன்னை விட்டு நீங்கிவிடுவாரோ என எண்ணம் தோன்ற, காதல் உணர்வு மிகுதியால், தலைவிக்குக் கண்ணீர் பெருக்கெடுத்தது.
தலைவர் அவளது ஊடலைத் தணிப்பதற்கு முயன்று கொண்டிருக்கிறார்.

இக்காட்சி:
இப்பொழுது கணவர் தலைவியை நெருங்கி, பிரிந்திருந்த காலம் எல்லாம், அவளையே நினைத்துக் கொண்டிருந்தேன் எனச் சொல்ல எண்ணி, 'நினைத்தேன்' என்று கூறி அவளைத் தழுவச் செல்கிறார். அவர் கூறிமுடிக்கும் முன், 'மறந்ததால்தானே நினைக்க வேண்டியிருந்தது' என உட்கொண்ட காதலி, 'என்னை ஏன் மறந்தீர்கள்' என வினவி, தழுவ வந்த கையை நெகிழ்த்துப் புலந்து நின்றாள். 'சென்ற இடத்தில் என்னை நினைத்தோம் என்கிறீர்கள். மறந்தவர் அல்லவா திரும்ப நினைப்பர்' என்று கூறி ஊடிக்கொண்டாள். நினைத்தேன் என்றால் மறந்தேன்; பின் நினைத்தேன் என்று எண்ணிக் கொண்டாள் தலைவி.

கடமைமேல் சென்றவர் எப்படி எந்நேரமும் அவளை நினைத்துக்கொண்டிருக்க முடியும்? எனினும் தலைவன் அவளை மறந்ததுமில்லை. அதனைத் தெரிவிக்கும் வகையில்தான் 'நின்னைப் பிரிந்திருந்த காலத்து அடிக்கடி நினைத்துக் கொண்டேன்' என்ற பொருளில் வெண்மையாக 'உன்னை 'நினைத்தேன்' என்றார், 'நினைத்தேன்' என்று சொல்வதில் என்ன குற்றம் இருக்கிறது? ஆனால் ஏதாவது சொல்லி அவருடன் ஊடல் கொள்ளவேண்டும் என்ற மனநிலையில் இருந்ததால் ''என்னை ஏன் நினைத்தீர்கள்? என்னை மறந்ததால்தானே நினைத்தீர்கள். ஏன் என்னை மறந்தீர்கள்? என்னை மறந்து விடுவது, பிறகு நினைத்துக் கொள்வது என்றபடியா?' என்று நுணுக்கமாகக் கேட்கிறாள். ‘நினைத்தது உண்டாயின் மறந்திருந்ததும் உண்டல்லவோ! என்னை ஏன் மறந்தீர்?’ எனக் கேட்கிறாள்.
தலைமகளும் தலைமகனும் ஒருவர் மீது மற்றவர் எவ்வளவு மிகுதியான அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துவதாகவும் இக்காட்சி அமைந்தது.

தன்னுடைய கணவனை மறந்து விடுவது, பின் நினைவது என்னும் நிலையின்றி, எப்போதும் இராவணனை நெஞ்சுட்கொண்டிருப்பவள் ஆதலால், நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள் (கம்பராமாயணம், இராவணன் வதைப் படலம். பொருள்: நினைவும் மறப்பும் அற்ற நெஞ்சினளாகிய மண்டோதரி) என்று கம்பர் மண்டோதரியைக் குறிப்பிடுவார்.

'புலத்தக்கனள்' என்பதன் பொருள் என்ன?

புலத்தக்கனள்' என்றதற்குப் புலவிக்குத் தகுதியாளாயினாள், புலத்தற்கு அமைந்தாள், ஊடினாள், ஊடல் கொள்ளத் தொடங்கினாள், புலவி மேற்கொண்டாள், பிணங்கிக் கொண்டாள், பிணங்க விரும்பித் தழுவாதிருந்தனள், ஊடற்கு அமைந்தாள், ஊடல்கொண்டாள், புலவியை மேற்கொண்டுவிட்டாள், ஊடினாளாகத்தழுவாள் ஆயினள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'புலத்தக்கனள்' என்ற தொடர்க்கு புலத்தற்கு அமைந்தாள் அதாவது தலைவி புலத்தல் நிலைக்கு மாறிவிட்டாள் என்பது பொருள்.
ஏதாவது ஒரு காரணம் காட்டி தலைவியானவள் கணவரைக் காய்ந்து கொண்டிருக்கிறாள். அவர் தழுவ வருகிறார். நீண்ட காலப் பிரிவில் இருந்த மனைவியும் அவரை இறுகக் கட்டியிருக்க வேண்டும். ஆனால் ஊடல் கொண்டபின்தான் கூடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவள் பின்வாங்கி எதிர்வினா எழுப்பிச் சண்டைக்குச் செல்கிறாள். இதுவே புலத்தற்கு அமைதல்.

'புலத்தக்கனள்' என்ற சொல் புலத்தல் மனநிலைக்குச் சென்றாள் என்ற பொருள் தரும்.

(உன்னை) நினைத்தேன் என்றேன்; அப்படியென்றால் ஏன் மறந்தீர் என்று தழுவாதிருந்து புலத்தற்கு அமைந்தாள் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

எப்படி என்னை மறக்கமுடிந்தது எனத் தலைவி வினவும் புலவி நுணுக்கம்.

பொழிப்பு

நினைத்தேன் என்று கூறினேன்; ஏன் மறந்தீர் எனக்கேட்டு தழுவாது புலத்தற்கு அமைந்தாள்.