இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1312ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக்கு அறிந்து

(அதிகாரம்:புலவி நுணுக்கம் குறள் எண்:1312)

பொழிப்பு (மு வரதராசன்): காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய்திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.

மணக்குடவர் உரை: தம்மோடு புலந்து உரையாடாது இருந்தேமாக: அவ்விடத்து யாம் தம்மை நெடிதுவாழுவீரென்று சொல்லுவே மென்பதனை யறிந்து தும்மினார்.
இது தலைமகள் தோழிக்குக் கூறியது.

பரிமேலழகர் உரை: (தலைமகன் நீக்கத்துச் சென்ற தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்தது கூறியது.) ஊடி இருந்தேமாத் தும்மினார் - யாம் தம்மோடு ஊடி உரையாடாதிருந்தேமாகக் காதலர் தும்மினார்; யாம் தம்மை நீடுவாழ்கென்பாக்கு அறிந்து - அது நீங்கித் தம்மை நீடுவாழ்கென்று உரையாடுவேமாகக் கருதி.
(தும்மியக் கால் வாழ்த்துதல் மரபாகலான், உரையாடல் வேண்டிற்று என்பதாம். இயல்பான் நிகழ்ந்த தும்மலைக் குறிப்பான் நிகழ்ந்ததாகக் கோடலின், நுணுக்கமாயிற்று.)

சி இலக்குவனார் உரை: ஊடலுற்று உரையாடாது இருந்தோமாகக் காதலர் தும்மினார்; ஊடல் நீங்கி யாம் அவரை நீடு வாழ்க என்று உரையாடுவோம் என்று தெரிந்து.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக்கு அறிந்து.

பதவுரை:
ஊடி-பிணங்கி; இருந்தேமா-இருந்தபொழுது; தும்மினார்-தும்மினார்; யாம்-நான்; தம்மை-தங்களை (தன்னை); நீடு-நெடிது; வாழ்க-வாழ்ந்திடுக; என்பாக்கு-என்பது, என்று கூறுதலை; அறிந்து-கருதி.


ஊடி இருந்தேமாத் தும்மினார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மோடு புலந்து உரையாடாது இருந்தேமாக: தும்மினார்;
பரிப்பெருமாள்: தம்மோடு புலந்து உரையாடாது இருந்தேமாக: தும்மினார்;
பரிதி: ஊடியிருக்கையில் நாயகர் தும்மினார்;
காலிங்கர்: தம்மோடு புலந்து உரையாடாது இருந்தேம்; அவ்விடத்துத் தும்மினார்;
பரிமேலழகர்: (தலைமகன் நீக்கத்துச் சென்ற தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்தது கூறியது.) யாம் தம்மோடு ஊடி உரையாடாதிருந்தேமாகக் காதலர் தும்மினார்; [பள்ளியிடத்து-படுக்கையிடத்து]

'தம்மோடு புலந்து உரையாடாது இருந்தேமாக தும்மினார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பேசாது ஊடியபோது தும்மினார்', 'காதலரோடு ஊடி உரையாடாதிருந்தேனாக, அவர் தும்மினார்', 'நான் அவருடன் பேசாமல் பிணங்கியிருக்கும்போது என் காதலர் தும்மினார் (நான் அதற்கும் பேசவில்லை)', 'பிணங்கிப் பேசாதிருந்தோமாக, காதலர் தும்மினார் ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

காதலரோடு ஊடியிருந்தேனாக, அவர் தும்மினார் என்பது இப்பகுதியின் பொருள்.

யாம்தம்மை நீடுவாழ் கென்பாக்கு அறிந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்விடத்து யாம் தம்மை நெடிதுவாழுவீரென்று சொல்லுவே மென்பதனை யறிந்து.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் தோழிக்குக் கூறியது.
பரிப்பெருமாள்: அவ்விடத்து யாம் தம்மை நெடிதுவாழ்வீரென்று சொல்லுவே மென்பதனை யறிந்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைமகன் புணர்ந்து நீங்கிய பின் அகம் புக்க தோழிக்கு, அவர் செய்த களவு இது என்று தலைமகள் கூறியது.
பரிதி: நாயகி வாழ்த்தினால் ஊடல் தீரலாம் என்று; அதுவறிந்து நாயகி தன் மங்கல நாணைத்தொட்டு மனத்திலே வாழ்த்தினாள் என்றவாறு.
காலிங்கர்: யாம் தம்மை நெடிது வாழ்வீர் என்று சொல்லுவேம் என்பதனை அறிந்து என்றவாறு.
பரிமேலழகர்: அது நீங்கித் தம்மை நீடுவாழ்கென்று உரையாடுவேமாகக் கருதி.
பரிமேலழகர் குறிப்புரை: தும்மியக் கால் வாழ்த்துதல் மரபாகலான், உரையாடல் வேண்டிற்று என்பதாம். இயல்பான் நிகழ்ந்த தும்மலைக் குறிப்பான் நிகழ்ந்ததாகக் கோடலின், நுணுக்கமாயிற்று. [கோடலின் -கொள்ளுதலால்]

'யாம் தம்மை நெடிது வாழ்வீர் என்று சொல்லுவேம் என்பதனை அறிந்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவரை நீடுவாழ்க என்று சொல்வேனென நினைந்து', 'அவ்வூடல் நீங்கி மங்கல நாணைத்தொட்டு நூறாண்டு வாழ்க என யாம் வாழ்த்துவோமாகக் கருதி', 'நான் அவரை நெடுங்காலம் வாழ்வீர்களென்று சொல்லுவேனாக்கும் (அப்படியாவது நான் பேச வேண்டும்) என்று எண்ணி', ''நாம் அவரை நீடுவாழ்க' என்று சொல்லிப் பேசுதலைக் கருதி' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நாம் அவரை 'நீடுவாழ்க' என்று சொல்வேனெனக் கருதி என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காதலரோடு ஊடியிருந்தேனாக, அவர் தும்மினார், நாம் அவரை 'நீடுவாழ்க' என்று சொல்வேனெனக் கருதி என்பது பாடலின் பொருள்.
'நீடுவாழ்க' என்பது என்ன?

ஊடலின் இறுக்கத்தை எப்படி நெகிழச் செய்வது? தலைவனுக்குச் சூழ்ச்சித்திறமான ஓர் எண்ணம் தோன்றியது.

காதலரோடு நான் ஊடியிருந்தபோது, நான் தம்மை, ‘நீடுவாழ்க’ என்று சொல்லுவேன் என்று நினைத்துத் தும்மினார் எனச் சொல்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகப் பிரிவிற் சென்றிருந்த தலைவர் இல்லம் திரும்பியுள்ளார். காதலர் இருவருக்கும் காதல் வேட்கை மிகுந்திருக்கிறது. பின்வரும் புணர்ச்சிக்கு முன் ஊடல் கொள்வது கூடுதல் இன்பம் அளிக்கும் எனத் தலைவி எண்ணுகிறாள். அவ்விதம் புலவி இன்பம் காண விழைந்ததால், அவளைத் தழுவ விரைந்த தலைவரை விளித்து 'பரத்த! நீ வரும் வழியில் உள்ள ஊர்ப்பெண்கள் அனைவரும் உன்னுடைய பரந்த மார்பழகைக் கண்களாலேயே விழுங்குவதுபோல் பார்த்தனரே! அதனால் அவர்கள் பார்வை எச்சில்பட்ட உன் மார்பை நான் எப்படித் தழுவுவேன்? தள்ளிப் போ' எனக் கூறுகிறாள். இவ்வாறு அவனைத் தவிக்கச் செய்து அதில் இன்பம் அடைகிறாள்.

இப்போது:
படுக்கையறையில் ஊடல் கொண்டு தலைவி பொய்ச் சினம்கொண்டு தலைவரைக் காய்ந்தாள். ஊர்ப் பெண்கள் தன்னைப் பார்ப்பதற்கு அவன் என்ன செய்ய முடியும்? அவனுக்குச் சிறிதும் பொருந்தாத குற்றச்சாட்டாக இருப்பதால், அது விளையாட்டாக அமைகிறது. அவனும் அவள் தொடங்கிய ஆட்டத்தில் ஈடுபடும் நோக்கில் பேசாதிருக்கிறான். இருவரும் சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. இந்த அமைதியை எப்படிக் கலைப்பது? தலைவருக்குக் கள்ளத்தனமான எண்ணம் ஒன்று தோன்றியது. ஒருவர் தும்மினால் அவரை 'நெடுநாள் வாழ்க' என்று அருகில் உள்ளோர் வாழ்த்துவது வழக்கம். காதலியை உரையாடுதலில் இழுப்பதற்குத் தலைவர் தும்மலைப் பயன்படுத்த எண்ணுகிறார். தும்மினால் தலைவி அவரை வாழ்க என்று கூறித் தானே ஆக வேண்டும். அப்பொழுது அமைதி கலைந்து உரையாடும் வாய்ப்பு உண்டாகி விடும் என எண்ணிப் பொய்யாகத் தும்முகிறார். 'நான் ஊடலை மறந்து இவர்க்கு வாழ்த்துச் சொல்லுவேனாக்கும் என்று நினைத்துத் தும்மினார்' என அப்பொழுது கூறிக் கொள்ளுகின்றாள் காதலி. எனினும் 'நீடு வாழ்க' என்று தன்னையுமறியாது வாழ்த்துகின்றாள் தலைவி. தான் அவ்வாறு வாழ்த்தும்படி செய்வதற்காகவும் ஊடலை முடிக்க வேண்டும் என்பதற்காகவும் வேண்டுமென்றே தும்மினார் என உணர்ந்தவளாகப் பேசுகிறாள். ஆனாலும் அவள் ஊடலை முடிப்பதாய் இல்லை; அதைத் தொடரச் செய்யவே விரும்புகிறாள்.

ஊடி இருந்தேமா என்பதில் அமைந்துள்ள 'ஆமா' என்பது வள்ளுவர் அறிமுகப்படுத்திய புதிய வடிவம் என்பர்.

'நீடுவாழ்க' என்பது என்ன?

ஒருவர்க்குத் தும்மல் ஏற்படின், தும்முபவரை அருகிலிருப்பவர் வாழ்த்த வேண்டும் என்பது வழக்கம். சிறு குழந்தைகள் தும்மும்பொழுது தாய்மார் 'நூறு' (நூறாண்டுகள் வாழ்வாயாக) என வாழ்த்துவதை இன்றும் வீடுகளில் காணலாம்.
தும்மலின் போது, இதயம் ஒரு குறு வினாடிப் பொழுது நின்று விடுவதால், உயிர் உடலை விட்டே நீங்கி விடும் என்பது நம்பிக்கை. உயிர் எங்கே தும்மலோடேயே போய்விடுகின்றதோ என அஞ்சி அருகில் நிற்போர் 'நீடுவாழ்க', 'நீண்ட ஆயுள் உண்டாவதாக' 'நூறு வயது (வாழ்வாயாக)' என்றவாறு வாழ்த்துவது மரபு. இது பல நாடுகளில் உள்ள வழக்கம். மேற்குநாடுகளில் தும்முவரை நோக்கி '(God) Bless you' (கடவுள் அருள் கிடைக்கட்டும்) என்று கூறுகிறார்கள்.
பழம் ஆசிரியர் பரிதியின் உரை 'அதுவறிந்து நாயகி தன் மங்கல நாணைத்தொட்டு மனத்திலே வாழ்த்தினாள்' என்கிறது. இதன்வழி தும்மும் கணவனை மங்கல நாணைத் தொட்டு மனைவி மனத்திலே வாழ்த்தும் வழக்கம் அன்றும் இருந்தது என்பதை அறியமுடிகிறது.

'நீடுவாழ்க' என்பது தும்முவோரை வாழ்த்தும் ஓர் மரபு.

காதலரோடு ஊடியிருந்தேனாக, அவர் தும்மினார், நாம் அவரை 'நீடுவாழ்க' என்று சொல்வேனெனக் கருதி என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஊடல் அமைதியை உடைக்கத் தும்மலைப் பயன்படுத்திய புலவிநுணுக்கம்.

பொழிப்பு

காதலரோடு ஊடி உரையாடாதிருந்தேனாக, அவர் தும்மினார்; அவ்வூடல் நீங்கி நீடுவாழ்க என்று சொல்வேனென நினைந்து.