இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-1151 குறள் திறன்-1152 குறள் திறன்-1153 குறள் திறன்-1154 குறள் திறன்-1155
குறள் திறன்-1156 குறள் திறன்-1157 குறள் திறன்-1158 குறள் திறன்-1159 குறள் திறன்-1160

பிரிவாற்றாமை என்பது பிரிந்து போவதைச் சகிக்க முடியாமை. இது கணவன் தன்னைவிட்டுப் பிரிந்து போவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மனைவியின் மனநிலையைச் சொல்லுவது.
- நாமக்கல் இராமலிங்கம்:

புதுவதாக இல்வாழ்க்கையில் கணவனும் மனைவியாக நிலத்தொடு நீரியைந்தன்ன ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றார்கள் அவர்கள். அதுபொழுது தொழில்முறை காரணமாகத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்ல வேண்டியுள்ளது. நெடுந்தொலைவு செல்ல வேண்டுமாதலால் பிரிவுக்காலமும் நெடிது ஆகிறது. தலைவிக்குப் பிரிவுச்செய்தியே தாங்கமுடியாததாகி விடுகிறது. பிரிவு இருக்கும் என்பதை அறிந்து வைத்திருந்தும், காதல் கொண்டவர்க்குப் பிரிவு நிகழும்பொழுது, ஆறுதல் கொள்வது கடினம் போலும் என்கிறாள் தலைவி.

பிரிவாற்றாமை

அன்பின் உயர்ந்த நிலை பிரிவில் தான் நன்கு வெளிப்படும். ஒருவரை ஒருவர் அன்பினால் நினைத்துப் பார்த்தற்குப் பிரிவின்கண் வாய்ப்பு மிகுதி. பிரிவின்கண் தலைவியின் நிலையையும் அவள் எண்ணங்கள், உணர்ச்சிகள் முதலியவற்றையும் புலப்படுத்தும் முறையில் இவ்வதிகாரத்துக் காட்சிகள் அமைகின்றன.
பணி காரணமாகத் தலைவன் தலைவியைப் பிரிய நேரிடுகிறது.. இப்பிரிவு தொலைவாலும் பொழுதாலும் நீண்டதாதலால். பிரிவுச் செய்தியைக் கேட்டதும் தலைவியின் உள்ளம் கலங்கத் தொடங்குகிறது, பிரிவினனத் தாங்க முடியாதவளாகின்றாள். 'நின்னிற் பிரியேன், பிரியின் ஆற்றேன்' என்றவர் பிரிகிறாரே! கணவர்க்கு நல்விடை கொடுக்க அவளது உள்ளம் மறுக்கிறது.
அன்பால் பிணைக்கப்பட்ட அவர்கள் பிரிந்திருப்பதற்கு உள்ளங்கள் ஒவ்வாதது இயல்பே. பிரியாமல் ஒன்றுபட்டிருக்க விரும்புவது என்பது மெய்யால் மட்டுமன்றி. உள்ளத்தாலும் உணர்வாலும் ஒன்றியிருப்பது ஆகும். இங்கே காதல் தூய்மையோடு காட்சிப்படுத்தப்படுகிறது. கடமைகளைச் செய்வதற்காகத் துன்பங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர் என்ற உணர்தல் இருந்தாலும் தலைவியின் மனம் பிரிவை ஒப்புக் கொள்ளவில்லை.

பிரிவின்கண் தலைவி வருந்துவதை இவ்வதிகாரத்துப் பாடல்கள் கூறுகின்றன. ஆற்றாமைத் தன்மை தலைவிபால் மிகுந்து தோன்றுவதால் அவள் உளநிலையை மட்டும் இத்தொகுதி தெரிவிக்கின்றது. அங்ஙனம் மிகுந்து தோன்றுவதில் அவள் அவனிடம் கொண்டுள்ள அன்பின் நிறைவு நன்கு புலப்படுகின்றது. தான் மேற்கொள்ளும் வினையில் மனம் ஈடுபடுதலால் தலைவனுக்குப் பிரிவின் கொடுமை அவ்வளவாக இல்லை. ஆனால், தலைவி இல்லறக் கடமைகளைச் செய்யும் போதும் அவளுக்குக் காதல் நினைவை மறக்க முடிவதில்லை. ஆதலால் பிரிவில் வருந்துகின்ற நிலை தலைவிக்கே மிகுதியாகும். ஆகவே இங்கு தலைவியின் துயரம் மட்டும் பேசப்படுகிறது.
பிரிவு உரைக்கத் தலைவர் வரும் காட்சியில் தொடங்கி, தலைவியின் வேதனை நிறைந்த உள்ளத்தைப் புலப்படுத்தி, அவர் நீங்கியதும் காதல்தீ மிகுகிறது எனச் சொல்லி, பிரிவு தாங்கமாட்டாது வருந்தும் தலைவி பின்னர் உலகியல் புரிந்து தன்னை ஆற்றிக்கொள்ள முயல்கிறாள் என்று சொல்லி முடிகிறது இவ்வதிகாரத் தொகுப்பு.

அறிவியல் வளர்ச்சியாலும் தொலை தொடர்புத் துறையில் காணப்படும் விரைந்த முன்னேற்றங்களினாலும் இன்று பிரிவில் இருக்கும் துன்பம் குறைந்துள்ளதா? இணையம், கைபேசி வளர்ச்சி முதலியன காதலர்களை எப்பொழுதும் தொடர்புநிலையில் வைத்திருக்கத் துணை செய்கின்றன என்பது உண்மையே. முகத்துக்கு முகம் நேரே பேசிக் கொள்ள முடிவதில்லையே தவிர, பிரிந்தபின், காதலர்கள் காணொளி மூலம் பார்க்கவும் நினைத்த நேரத்தில் தொலைபேசி மூலம் உரையாடவும் முடிகிறது. இருந்தாலும், பிரிவின் துயரம் உள்ளம் தொடர்பானதாதலால் தொலைத்தொடர்பு கருவிகள் ஓரளவிற்கே துன்பம் துய்ப்பதை நீக்க உதவ முடியும். அவை பிரிவின் துயரத்தை முழுதுமாக போக்கிவிட முடிவதில்லை. பிரிவால் உண்டாகும் துன்ப நிலை முன்பிருந்தது போலத் தொடரவே செய்கிறது. எனவே இன்று காதலர்க்கு இடையிலுள்ள பிரிவு என்பது கவலைப்படத் தேவையில்லாத காலநிகழ்வு ஆகி விட்டது என்று சொல்ல முடியாது.

பிரிவாற்றாமை அதிகாரப் பாடல்களின் சாரம்:

  • 1151 ஆம்குறள் பிரிவுச் செய்தியை எதிர்கொள்ளப் போகும் தலைவியின் உணர்ச்சிகரமான உரையைச் சொல்வது.
  • 1152 ஆம்குறள் இன்பம் தரவேண்டிய தலைவரின் தழுவுல் பிரிவை உணர்த்துவதால் துன்பம் தருகிறது என்று காதலி சொல்லும் பாடல். .
  • 1153 ஆம்குறள் பிரிவு உண்மை அறிந்து கொண்டிருக்கக் கூடியவர்க்குக்கூட பிரிவு தாங்க முடியவில்லையே என்று காதலி புலம்புவதைச் சொல்வது.
  • 1154 ஆம்குறள் அஞ்சாதே என்ற அவர் சொல்லில் ஆறுதல் பெற்றது என் தவறா என்று பிரிவில் கலங்கும் தலைவி தனக்குத் தானே முறையிட்டுக் கொள்வதைக் கூறுவது.
  • 1155 ஆம்குறள் தலைவர் பிரிவில் செல்வதைத் தடுக்க முடியாவிட்டால் என் உயிர் நீங்கிவிடுமே என்று தலைவி கூறுவதைச் சொல்வது.
  • 1156 ஆம்குறள் இப்பொழுது கல்நெஞ்சக்காரராக இருப்பவர் திரும்பிவரும்போது மட்டும் கருணையாளராய் இருப்பாரா என்ன? எனத் தலைவி கேட்பதைச் சொல்வது.
  • 1157 ஆம்குறள் ஒரு பக்கம் காதலர் நீங்கிச் செல்கிறார்; மறுபக்கம் இங்கு காதலியின் தோள் மெலிவுறுகிறது என்பதைச் சொல்வது.
  • 1158 ஆம்குறள் கணவரைப் பிரிந்து இருத்தல் தோழமையுள்ள அண்டையர் இல்லாத இடத்தில் வாழ்வது போன்றது என்று தலைவி கூறுவதைச் சொல்வது.
  • 1159 ஆம்குறள் தலைவர் நீங்கியதும் காதல்தீ இன்னும் மிகுந்து உள்ளே சுடுகிறது என்று தலைவி கூறுவதைச் சொல்வது.
  • 1160 ஆவதுகுறள் பிரிவு தாங்கமாட்டாது வருந்தும் தலைவி உலகியல் புரிந்து தன்னை ஆற்றிக்கொள்ள முயல்கிறாள் என்பதைச் சொல்வது.

பிரிவாற்றாமை அதிகாரச் சிறப்பியல்புகள்

தொடங்குநிலை பிரிவைக் காட்சிப்படுத்தும் செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை என்னும் பாடலில் (குறள் 1151) 'பிரிந்து சென்று விரைவில் திரும்பி வந்து விடுவேன் என்று சொல்வதாக இருந்தால், திரும்பி வரும்வரை உயிருடம் இருப்பவர்க்குச் சொல்லுங்கள்' எனத் தலைவரிடம் வெடுக்கென்று கூறுகிறாள் தலைவி. தலைவன் பிரிவு அவளது உயிர்ப்பிரிவு போல்வது என்பதை உணர்ச்சிகரமான சொற்களில் மொழிவது இக்குறட்பா. அவள் தன் கணவன்மேல் கொண்டிருந்த அன்பின் மிகுதியையும் தெரிவிக்கிறது இது.

ஒத்த உணர்வு இல்லாத மக்கள் வாழும் ஊரில் வாழ்வது கொடியது என்று கூறும்.. இனன்இல்லூர்...'என்ற பாடலிலும் (குறள் 1158) நீங்கினாலும் சுடும் காமம் எனக் கூறும் தொடிற்சுடின்..... என்ற பாடலிலும் (குறள் 1158) காணப்படும் உவமை நயங்கள் நினையத் தக்கன.

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர் என்ற பாடல் (குறள் 1160) தலைவரது பிரிவால் மனைவி உறும் உடல், உடலுணர்வு, மன (Physical, Psysiological, Psychological) வலிகளைச் சொல்கிறது.




குறள் திறன்-1151 குறள் திறன்-1152 குறள் திறன்-1153 குறள் திறன்-1154 குறள் திறன்-1155
குறள் திறன்-1156 குறள் திறன்-1157 குறள் திறன்-1158 குறள் திறன்-1159 குறள் திறன்-1160