இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1155



ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு

(அதிகாரம்:பிரிவாற்றாமை குறள் எண்:1155)

பொழிப்பு (மு வரதராசன்): காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும்; அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.

மணக்குடவர் உரை: காக்கலாமாயின் அமைந்தார் தம்முடைய பிரிவைக் காக்க; அவர் பிரிவராயின் பின்பு கூடுதல் அரிது.
மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டு யாது சொல்வேனென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் - என்னுயிரைச் செல்லாமல் காத்தியாயின், அதனை ஆளுதற்கு அமைந்தாருடைய செலவினை அழுங்குவிப்பாயாக; மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது - அழுங்குவிப்பாரின்றி அவர் செல்வாராயின், அவரால் ஆளப்பட்ட உயிரும் செல்லும்; சென்றால் பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாம்.
(ஆளுதற்கு அமைதல்: இறைவராதற்குத் தெய்வத்தால் ஏற்புடையராதல். மற்று: வினைமாற்றின்கண் வந்தது.)

இரா சாரங்கபாணி உரை: என் உயிர் போகாமல் காக்கக் கருதின் காதலராக அமைந்தவருடைய பிரிவைத் தடுக்க வேண்டும். அவர் பிரிந்தால் பின் கூடுதல் அரிதாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு.

பதவுரை: ஓம்பின்-காக்கவேண்டின், காப்பாயாயின்; அமைந்தார்--எனக்காகவே அமைந்தார் (காதலர்); பிரிவு-செலவு; ஓம்பல்-செல்லாமல் தடுக்க; மற்று- பின்; அவர்-அவர்; நீங்கின்-அகன்றால்; அரிது-அருமையானது; ஆல்-(அசைநிலை); புணர்வு--(திரும்பக், மீளக்)கூடுதல், சேர்தல்.


ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காக்கலாமாயின் அமைந்தார் தம்முடைய பிரிவைக் காக்க;
பரிப்பெருமாள்: காக்கலாமாயின் அமைந்தார் தம்முடைய பிரிவைக் காக்க;
பரிதி: பிரியாமல் கூடியிருக்கும் நாயகர் பிரிந்தால்;
காலிங்கர்: தோழி! நமது நெஞ்சோடு அமைந்த நம் காதலரை இனிப் பிரிவு குறிக்கொண்டு செல்லாமல் பாதுகாப்பாயாக;
பரிமேலழகர்: ( இதுவும் அது.) என்னுயிரைச் செல்லாமல் காத்தியாயின், அதனை ஆளுதற்கு அமைந்தாருடைய செலவினை அழுங்குவிப்பாயாக; [காத்தியாயின் - காப்பாற்றுவாயானால்; செலவினை - பிரிவை; அழுங்குவிப்பாயாக - தடை செய்வாயாக]
பரிமேலழகர் குறிப்புரை: ஆளுதற்கு அமைதல்: இறைவராதற்குத் தெய்வத்தால் ஏற்புடையராதல்.

'காக்க வேண்டின் நெஞ்சோடு அமைந்த காதலரது பிரிவைக் காக்க' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தடுப்பின் புறப்படுவார் பிரிவைத் தடுக்க', 'என்னைப் பாதுகாக்கவே கடமை பூண்டு ஒப்புக் கொண்ட என் கணவர் என்னை விட்டுப் போகிற எண்ணத்தை விட்டுவிட வேண்டும்', 'என் உயிரப் பாதுகாப்பாயானால் காதலருடைய பிரிவினைத் தடுப்பாயாக', 'என்னைக் காப்பாற்ற எண்ணினால் என்னைத் தலைவியாக ஆளுதற்குப் பொருந்தியவருடைய பிரிவைத் தடுக்கவும்' என்ற பொருளில் உரை தந்தனர்.

(என்னுயிரைக்) காக்கவேண்டுமானால் எனக்காக அமைந்தவரது பிரிவைத் தடுக்க என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் பிரிவராயின் பின்பு கூடுதல் அரிது.
மணக்குடவர் குறிப்புரை: மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டு யாது சொல்வேனென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: அவர் பிரிவராயின் பின்பு கூடுதல் அரிது. >
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டு யாது சொல்வேனென்ற தோழிக்கு 'அவர் பிரியாமல் கூறு' என்று தலைமகள் கூறியது.
பரிதி: பின்பு கூடுதல் அரிது என்றவாறு.
காலிங்கர்: மற்று அவர் பிரிவினைப் பாதுகாவாயாயின் மற்று அவர் நீங்குவர். நீங்குவாராயின் கூடுதல் சால அரிது. எனவே யான் இறந்துபடுதலும் உண்டு என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அழுங்குவிப்பாரின்றி அவர் செல்வாராயின், அவரால் ஆளப்பட்ட உயிரும் செல்லும்; சென்றால் பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாம். [அழுங்குவிப்பார் இன்றி - தடை செய்வார் இல்லாமல்; ஆளுதற்கு அமைதல் - தலைவராதற்கு தகுதியுடையவராதல்]
பரிமேலழகர் குறிப்புரை: ஆளுதற்கு அமைதல்: இறைவராதற்குத் தெய்வத்தால் ஏற்புடையராதல். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.

'மற்று அவர் பிரிவாரானால் பின்பு கூடுதல் அரிது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவர் பிரியின் நான் இருந்து கூடுதல் எங்கே?', 'போவாரானால் அவர் பிரிவை நான் சகித்திருக்க முடியாது', 'அங்ஙனம் இன்றி அவர் செல்வாராயின் பின் அவரைக் கூடுதல் இயலாது', ';தடுக்கப்படாமல் அவர் என்னை விட்டு நீங்கினால் என் உயிரும் நீங்கிவிடும். பின்னர் அவரைக் கூடுதல் அரிது' என்றபடி பொருள் உரைத்தனர்.

அவர் என்னைவிட்டு நீங்கினால் பின் அவரைத் திரும்பச் சேர்தல் எங்ஙனம்? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
என்னுயிரைக் காக்கவேண்டுமானால் அமைந்தார் பிரிவைத் தடுங்கள்; அவர் என்னைவிட்டு நீங்கினால் பின் அவரைத் திரும்பச் சேர்தல் எங்ஙனம்? என்பது பாடலின் பொருள்.
'அமைந்தார்' யார்?

'அவர் என்னைவிட்டு நீங்கியபின் நான் இருப்பேனா' என்னும் தலைவியின் புலம்பல்.

என்னைக் காப்பதானால், தலைவர் என்னைவிட்டுப் பிரியாதபடி தடுங்கள்; அவர் நீங்கிச் சென்றுவிட்டார் என்றால், என் உயிரும் நீங்குதல் கூடும். பின் எப்படி அவரைச் சேர்வது?
காட்சிப் பின்புலம்:
தலைவரும் தலைவியும் புதிய இல்வாழ்க்கை தொடங்கியுள்ளனர். கணவனும் மனைவியாக மனம் ஒன்றிய இல்லற வாழ்வை நடத்துகின்றனர். அதுபொழுது பணி காரணமாகத் தலைவியைப் பிரிந்து கணவர் தொலைவு செல்ல வேண்டியுள்ளது. நீண்ட பிரிவுக்காலம் என்பதை உணர்ந்த தலைவிக்கு அந்நினைப்பையே தாங்கிக்கொள்ள இயலவில்லை.
'உன்னைவிட்டுப் பிரிந்து செல்லப் போவதில்லை என்றால் மட்டும் எனக்குச் சொல்லுங்கள். போய் விரைவில் திரும்புகிறேன் என்று சொல்வதாக இருந்தால் நான் அதைத் தாங்க மாட்டேன்; நீங்கள் திரும்பி வரும்வரை வாழ்ந்திருக்கக் கூடியவருக்கு அச்செய்தியைச் சொல்லுங்கள்' என்றாள்; 'முன்பு அவரது பார்வை புணர்ச்சி குளிர்ச்சி தருவதாயிருக்கும், பிரிந்து செல்லப் போவதைச் சொல்லும் அவரது பார்வை இப்பொழுது துன்பம் தருவதாக உள்ளது'; 'ஒரோவழி பிரிவு இருக்கத்தான் செய்யும் என்பதையும் அதன் துயரத்தையும் அறிந்த எனக்கும் பிரிவுவேளையில் அதனைத் தாங்க முடியவில்லையே'; 'உன்னைப் பிரியேன், அஞ்சேல்' என்று அவர் சொன்னதை உண்மை என்று நம்பியது என் குற்றமா? பிரிவு நேரக் கலக்கத்தில் இவ்வாறு தலைவி எண்ணிக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
தலைவர் கடமை காரணமாகப் புறப்பட்டுச் செல்லும் சமயம். 'என் உயிரைக் காப்பதானால் கணவர் என்னைவிட்டு நீங்குதலைத் தடுங்கள்; அவர் பிரியின் பின்னர்க் கூடுதல் முடியாது' என்று காதல் தலைவி சொல்கிறாள். தலைவர் இப்பொழுது பிரிந்து சென்றாலும் கடமை முடிந்து திரும்ப வந்து விடுவார்தானே. பின் ஏன் கூடுதல் முடியாது என்கிறாள் தலைவி? அவர் போனபின் அவர் பிரிவைத் தாங்கமுடியாமல் அவள் உயிர் நீங்கிவிடுமாம். அவள் உயிருடன் இருந்தால்தானே சேரமுடியும் என்பதால் அவ்விதம் கூறினாள்.
தலைவர் நெடிது பிரிந்து செல்லப்போகிறார் என்ற செய்தி வந்ததிலிருந்து தலைவி மிகுந்த வேதனையுற்றாள். அவர் இல்லாமல் எப்படித் தனிமையில் நாட்களைக் கடந்து செல்லப்போகிறோம் என்ற எண்ணம் அவளை வருத்தியது. ஏதாவது செய்து அவர் பிரிவைத் தடுக்க முயல்கிறாள். இறுதியில்அவர் பிரிவினைக் காவாவிட்டால் தான் இறந்துபடுதலும் உண்டு; அது உடன்பாடுதானா எனவும் கேட்கிறாள். என் உயிர் போகாமல் காக்கக் கருதினால் எனக்குத் தலைவராக அமைந்தவர் பிரிந்து செல்வதைத் தடுங்கள் என வேண்டுகிறாள். 'பிரிவுஓம்பல்' எனப் அவர் பிரிவைத் தடுத்துக் காக்க என்கிறாள். இவ்வாறாக ஆற்றமாட்டாமல் பல வழிகளிலும் கணவரது பிரிவைத் தடுக்கமுயன்று பார்க்கிறாள் தலைவி.

'அமைந்தார்' யார்?

'அமைந்தார்' என்ற சொல்லுக்கு அமைந்தார், பிரியாமல் கூடியிருக்கும் நாயகர், நமது நெஞ்சோடு அமைந்த நம் காதலர், என்னுயிரை ஆளுதற்கு அமைந்தார், காதலராக அமைந்தவர், என் உயிரைக் காத்தற்கு அமைந்தவராம் காதலர், புறப்படுவார், காதலராக அமைந்தவர், என்னைப் பாதுகாக்கவென்றே கடமை பூண்டு ஒப்புக் கொண்ட என் கணவர், என் துணைவர், காதலர், என்னைத் தலைவியாக ஆளுதற்குப் பொருந்தியவர், என் உயிரை ஆள அமைந்தவர், என்னுயிர்க்கு இன்றியமையாத் துணைவராக அமைந்தவர், என் உடலுக்கு உயிராக வந்து அன்று கூடினவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இச்சொல்லுக்கு காலிங்கர் நெஞ்சோடு அமைந்த காதலர் என்று பொருள் கூறினார். பரிமேலழகர் உயிரை ஆளுதற்கு அமைந்த தலைவர் என்று உரைத்து 'இறைவராதற்குத் தெய்வத்தால் ஏற்புடையராகிறவர்' என்று அதற்கு விளக்கமும் தந்தார்.
இன்றைய ஆசிரியர்கள் உயிரைக் காத்தற்கு அமைந்தவர், துணையாகப் பொருந்தியவர் என்று பொருள் கூறினர். தேவநேயப் பாவாணர் 'இறைவன் ஏற்பாட்டின்படி அமைந்தவர் (marriages are made in heaven)' என்று குறிக்கிறார்.

அமைந்தார் என்பதை 'எனக்காகவே அமைந்தவர்' என்று காதலி கருதுவதாகக் கொள்வது பொருத்தம்.

என்னுயிரைக் காக்கவேண்டுமானால் எனக்காக அமைந்தாரது பிரிவைத் தடுங்கள்; அவர் என்னைவிட்டு நீங்கினால் (என் உயிரும் நீங்கிவிடும்.) பின் அவரைத் திரும்பச் சேர்தல் எங்ஙனம்? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பிரிவாற்றமையால் தலைவி கடைசிநேர முயற்சியாகத் தலைவன் செலவினால் தன் உயிர் நீங்கிவிடுமே என்கிறாள்.

பொழிப்பு

என் உயிர் காக்க விரும்பினால் எனக்காக அமைந்தவருடைய பிரிவைத் தடுக்க வேண்டும். அவர் பிரிந்தால் பின் அவரைச் சேர்தல் எங்ஙனம்?