இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1160அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்

(அதிகாரம்:பிரிவாற்றாமை குறள் எண்:1160)

பொழிப்பு (மு வரதராசன்): பிரியமுடியாத பிரிவிற்கு உடன்பட்டு, (பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும் விட்டு, பிரிந்தபின் பொறுத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.

மணக்குடவர் உரை: பொறுத்தற்கரியதனைப் பொறுத்து, அல்லல் செய்யும் நோயை நீக்கிப் பிரிவையும் பொறுத்துக் காதலரை நீங்கியபின் தமியராயிருந்து வாழ்வார் பலர்.
அல்லல்நோய்- காமவேதனை. பிரிவாற்றுதல்- புணர்ச்சியின்மையைப் பொறுத்தல்.

பரிமேலழகர் உரை: (தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர், அது நீ செய்கின்றில்லை, என்ற தோழிக்குச் சொல்லியது.) (நீ சொல்லுகின்றது ஒக்கும்,) அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி - பிரிவுணர்த்திய வழி அதற்கு உடம்பட்டுப் பிரியுங்கால் நிகழும் அல்லல் நோயினையும் நீக்கி; பிரிவு ஆற்றிப் பின் இருந்து வாழ்வார் பலர் - பிரிந்தால் அப்பிரிவு தன்னையும் ஆற்றிப் பின்னும் இருந்து உயிர் வாழும்மகளிர் உலகத்துப் பலர்.
(பண்டையிற் சிறப்பத் தலையளி பெற்று இன்புறுகின்ற எல்லைக்கண்ணே அஃது இழந்து துன்புறுதற்கு உடம்படுதல் அரியதொன்றாகலின், 'அரியதனைச் செய்து' என்றும், 'செல்லுந் தேயத்து அவர்க்கு யாது நிகழும்?' என்றும் 'வருந்துணையும் யாம் ஆற்றியிருக்குமாறு என்?' என்றும், 'அவ்வரவுதான் எஞ்ஞான்று வந்தெய்தும்' என்றும், இவ்வாற்றான் நிகழும் கவலை மனத்து நீங்காதாகலான் 'அல்லல் நோய் நீக்கி' என்றும், பிரிந்தால் வருந்துணையும் அகத்து நிகழும் காம வேதனையும், புறத்து 'யாழிசை, மதி, தென்றல் என்றிவை முதலாக வந்து இதனை வளர்ப்பனவும் ஆற்றலரிய வாகலின் 'பிரிவாற்றி' என்றும், தம் காதலரை இன்றியமையா மகளிருள் இவையெல்லாம் பொறுத்துப் பின்னும் இருந்துஉயிர் வாழ்வார் ஒருவரும் இல்லை என்பது குறிப்பால் தோன்றப் 'பின் இருந்து வாழ்வார் பலர்' 'என்றும் கூறினாள். 'அரிது' என்பது வினைக்குறிப்புப்பெயர். பிரிவின்கண் நிகழ்வனவற்றைப் பிரிவு என்றாள். செய்து, நீக்கி, ஆற்றி என்பன ஓசை வகையான் அவ்வவற்றது அருமையுணரநின்றன. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது; 'யானும்இறந்து படுவல்' என்பது கருத்து.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: பிரிவு தெரிந்தபோது அதற்கு இணங்குதலாகிய அரிய செயலைச் செய்து பிரியும்போது உண்டாகும் துன்பநோயை நீக்கிப் பிரிந்தபின் ஆற்றாமைத் துன்பத்தைப் பொறுத்திருந்து உயிர் வாழ்வாரும் உலகத்திற் பலர் போலும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர்.

பதவுரை: அரிது-அருமையான; ஆற்றி-செய்து; அல்லல்-துன்பம்; நோய்-பிணி; நீக்கி-போக்கி, விலக்கி; பிரிவு-பிரிவு; ஆற்றி- பொறுத்து; பின்-(இவை எல்லாவற்றிற்கும்) பின்னரும்; இருந்து-இருந்துகொண்டு; வாழ்வார்-வாழ்பவர்; பலர்-பலர்.


அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொறுத்தற்கரியதனைப் பொறுத்து, அல்லல் செய்யும் நோயை நீக்கிப் பிரிவையும் பொறுத்து;
மணக்குடவர் குறிப்புரை: அல்லல்நோய்- காமவேதனை. பிரிவாற்றுதல்- புணர்ச்சியின்மையைப் பொறுத்தல்.
பரிப்பெருமாள்: பொறுத்தற்கரியதனைப் பொறுத்து, அல்லல் செய்யும் நோயை நீக்கிப் பிரிவையும் பொறுத்து;
பரிப்பெருமாள் குறிப்புரை: அரியது அரிது ஆயிற்று. அதனைப் பொறுத்தலாவது பொழுதும் குழலும் முதலாயினவற்றான் வரும் துன்பத்தைப் பொறுத்தல். அல்லல் நோயானது காமவேதனை பிரிவாற்றுதல். புணர்ச்சியின்மையைப் பொறுத்தல்.
பரிதி: பீரியாமல் கூடியிருந்து அல்லலாகிய நோயையும் தள்ளி இருந்தவர் நாயகரைப் பிரிந்தும்;
காலிங்கர்: தத்தம் கொழுநரைப் பிரிந்த பிரிவின்கண் தமக்கு அல்லலைச் செய்யும் நெஞ்சுறுவது யாது, அதை வரவரத் தணித்தும் மற்றும் அரியவை பொறுத்தும் இங்ஙனம் பிரிவு ஆற்றி;
பரிமேலழகர்: (தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர், அது நீ செய்கின்றில்லை, என்ற தோழிக்குச் சொல்லியது.) (நீ சொல்லுகின்றது ஒக்கும்,) பிரிவுணர்த்திய வழி அதற்கு உடம்பட்டுப் பிரியுங்கால் நிகழும் அல்லல் நோயினையும் நீக்கி- பிரிந்தால் அப்பிரிவு தன்னையும் ஆற்றி;
பரிமேலழகர் குறிப்புரை: பண்டையிற் சிறப்பத் தலையளி பெற்று இன்புறுகின்ற எல்லைக்கண்ணே அஃது இழந்து துன்புறுதற்கு உடம்படுதல் அரியதொன்றாகலின் 'அரியதனைச் செய்து' என்றும், 'செல்லுந் தேயத்து அவர்க்கு யாது நிகழும்?' என்றும் 'வருந்துணையும் யாம்ஆற்றியிருக்குமாறு என்?' என்றும், 'அவ்வரவுதான் எஞ்ஞான்று வந்தெய்தும்' என்றும், இவ்வாற்றான் நிகழும் கவலை மனத்து நீங்காதாகலான் 'அல்லல் நோய் நீக்கி' என்றும், பிரிந்தால் வருந்துணையும் அகத்து நிகழும் காம வேதனையும், புறத்து 'யாழிசை, மதி, தென்றல் என்றிவை முதலாக வந்து இதனை வளர்ப்பனவும் ஆற்றலரிய வாகலின் 'பிரிவாற்றி' என்றும், தம் காதலரை இன்றியமையா மகளிருள் இவையெல்லாம் பொறுத்து; [அஃது இழந்து-இன்பத்தை இழந்து; அதனை-காம வேதனையை; இன்றி யமையா- இல்லாது முடியாத]

'பொறுத்தற்கரியதனைப் பொறுத்து, காமவேதனையை நீக்கிப் புணர்ச்சியின்மையையும் பொறுத்து' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொறுத்துத் துன்பம் நீக்கிப் பிரிவைத் தாங்கி', ''தாங்க முடியாத பிரிவுக்கு இசைந்து பிரிந்தபோது துயரத்தை நீக்கிப் பிரிந்தபின் பொறுத்திருந்து', 'மிகவும் பிரயாசைப்பட்டு முயன்று துன்பமுள்ள காம வேதனையை அடக்கி காதலர் பிரிவைப் பொறுத்துக் கொண்டிருந்து', ''தலைவர் பிரிவைப் பொறுத்து பிரிவால் உண்டாகும் துன்பநோய்களை நீக்கிப் பொறுத்து. என்ற பொருளில் உரை தந்தனர்.

பிரிவுக்கு இணங்கிய அரிய செயலைச் செய்து உடல்உணர்வுகளை வருத்தும் துன்பத்தை விலக்கி பிரிவின் துயரத்தைத் தாங்கி என்பது இப்பகுதியின் பொருள்.

பின்இருந்து வாழ்வார் பலர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காதலரை நீங்கியபின் தமியராயிருந்து வாழ்வார் பலர்.
பரிப்பெருமாள்: காதலரை நீங்கியபின் தமியராயிருந்து வாழ்வார் உலகத்துப் பலர்.
'பரிப்பெருமாள் குறிப்புரை: இவ்வாறு உலகியற்கை யாதலால் நீ ஆற்றாயாகின்றது தக்கது அன்று' என்று தோழி தலைமகளை நெருங்கிக் கூறியது.
பரிதி: உயிர் கொண்டிருப்பாரோ என்றவாறு.
காலிங்கர்: பின்னும் இருந்து தம் உயிர் வாழும் பெண்டிரும் பலர் இவ்வுலகத்து; எனவே யான் இருந்து வாழ்தல் எவ்வாற்றானும் அரிது என்று தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
பரிமேலழகர்: பின்னும் இருந்து உயிர் வாழும்மகளிர் உலகத்துப் பலர்.
பரிமேலழகர்: குறிப்புரை: பின்னும் இருந்துஉயிர் வாழ்வார் ஒருவரும் இல்லை என்பது குறிப்பால் தோன்றப் 'பின் இருந்து வாழ்வார் பலர்' என்றும் கூறினாள். 'அரிது' என்பது வினைக்குறிப்புப்பெயர். பிரிவின்கண் நிகழ்வனவற்றைப் பிரிவு என்றாள். செய்து, நீக்கி, ஆற்றி என்பன ஓசை வகையான் அவ்வவற்றது அருமையுணரநின்றன. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது; 'யானும்இறந்து படுவல்' என்பது கருத்து.

இப்பகுதிக்கு பொரூள் கூறுவதில் உரையாசிரியர்கள் வேறுபடுகின்றனர். 'தமியராயிருந்து வாழ்வார் பலர்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் உரைக்க பரிதி 'உயிர் கொண்டிருப்பாரோ; என்று எழுதினார். காலிங்கர் 'உலகில் தலைவன் பிரிவிற்குப் பின்னிருந்து வாழ்வார் பலர் உளர். என்னால் அங்ஙனம் இருந்து வாழ்தல் இயலாது' என்று தலைவியின் ஆற்றாமையைக் கூறுவார். பரிமேலழகர் 'பின்னும் இருந்துஉயிர் வாழ்வார் ஒருவரும் இல்லை' என்பது குறிப்பால் தோன்றக் கூறினாள் என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவருக்குப் பின்னும் இருப்பவர் பலர்', 'பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் பலர். (ஆனால் என்னால் முடியவில்லையே என்பது தலைவி கருத்து)', 'அவர் திரும்பி வந்த பின் அவருடன் இருந்து இன்ப வாழ்க்கை நடத்துகிறவர்கள்தாம் உலகத்தில் பெரும்பாலும் பெண்கள்', 'தலைவர் சென்ற பிறகு இருந்து உயிர் வாழ்கின்றவர் பலராவர். ஆனால் என்னால் முடியாது' என்றபடி பொருள் உரைத்தனர்.

பின்னும் வாழ்பவர்கள் பலர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிரிவுக்கு இணங்கிய அரிய செயலைச் செய்து, உடல்உணர்வுகள் வருத்தும் துன்பத்தை விலக்கி, பிரிவின் துயரத்தைத் தாங்கி. பின்இருந்து வாழ்வார் பலர் என்பது பாடலின் பொருள்.
'பின்இருந்து வாழ்வார் பலர்' என்ற பகுதி கூறும் செய்தி என்ன?

'பிரிவு எனக்கு மட்டுந்தானா? உலகத்து மனைவியர் எல்லாருக்கும்தான் இத்துயரம் இருக்கிறது!'

தலைவர் பிரிவைப் பொறுத்துக் கொண்டு, அதனால் வரும் வலியையும் விலக்கி, பிரிவுத் துயரையும் தாங்கி, அதன் பின்னரும் மகளிர் பலர் உலகில் வாழ்ந்து கொண்டுதானே இருக்கின்றனர்! என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
தொழில்முறை காரணமாகக் கணவன் தன்னைவிட்டுப் பிரிந்து போனதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மனநிலையில் தலைவி துயர் கொண்டிருக்கிறாள். 'பிரிவின் துன்பத்தை அறிந்து கொண்டிருக்கக் கூடியவர்க்குக்கூட பிரிவு தாங்க முடியாததாக இருக்கிறதே', ''அஞ்சாதே!' என்ற அவர் சொல்லில் ஆறுதல் பெற்று அவரை வழி அனுப்பியது என் தவறா?', 'அவர் திரும்பிவந்தால் மட்டும் எனக்கு அருள் காட்டுபவராய் இருப்பாரா என்ன?' என எண்ணிக்கொண்டிருக்கிறாள். அவர் சென்ற மறு கணமே அவளது உடல் மெலிவுறுகிறது. 'காதலரைப் பிரிந்து இருத்தல் தோழமையுள்ள அண்டையர் இல்லாத இடத்தில் வாழ்வது போன்றது' என மேலும் பலவாறான சிந்தனையோட்டம் அவளுள் தோன்றுகிறது. தலைவன் நீங்கியவேளையைவிட காதல்தீ இன்னும் மிகுந்து அவளின் உள்ளே சுட்டுக்கொண்டிருக்கிறது.

இக்காட்சி:
பிரியும் நேரத்தில், இதுகாறும் கணவர் அருகில் இருந்து இன்பம் பெற்றவளுக்கு இனிச் சிறிதுகாலம் அவர் உடன் இருக்கமாட்டார் என்ற நிலையை நினைக்கும்போதே அவள் மனம் கலங்குகிறது; கணவர் அருகில் இல்லாமல் இருக்கச் செய்யும் பிரிவிற்கு உடன்பட்டதை 'அரிதாற்றி' அதாவது அரியதைச் செய்து என்ற தொடர் குறிக்கிறது. 'அல்லல்நோய் நீக்கி' என்பது பிரிவு வாட்டும் காமவேதனையை விலக்கி எனப்பொருள்படும்; இது உடல்உணர்வுகள் தரும் வலியைச் சொல்வது; அவர் வரும் வரைக்கும் அகத்து நிகழும் காமவுணர்வை அரும்பாடுபட்டு நீக்க முயற்சி செய்கிறாள். பிரிவாற்றி என்னும் தொடர் பிரிவுக்குப் பின் உண்டான கடிய மன வலியைப் பொறுத்துக் கொண்டு இருப்பதைச் சொல்வது.
பிரிவுத் துயரம் தாங்கமாட்டாது வருந்தும் தலைவி உலகியல் அறிந்தவளாதலால் 'நான் மட்டும்தானா தனித்து உள்ளேன்? உலகத்து மனைவியர் எல்லாருக்கும்தான் இத்துயரம் இருக்கிறது' என்கிறாள். அதாவது பிற பெண்டிரின் கணவன்மார்களும் பலவேறு கடமைகளுக்காகத் தமது வாழ்க்கைத்துணையரைப் பிரிந்து செல்லத்தானே செய்கிறார்கள் எனத் தன் மனதைத் தேற்றிக்கொள்கிறாள்.
இப்பாடலிலுள்ள 'ஆற்றி,' 'நீக்கி', (மறுபடியும்) 'ஆற்றி' என்னும் சொற்கள், துயரம் தொடர்வதையும் அதன் கடுமையையும் உணர்த்துகின்றன.

பணி முடிந்தபின் காதலன் திரும்பி வந்துவிடுவான்தான். ஆனாலும் இப்பிரிவு கொடுமையாக உள்ளதே என்று தலைவி உணர்கிறாள். தலைவனது பிரிவுக்கு வேண்டாவெறுப்பாக உடன்படும்போது உண்டான கொடுந்துயர், பிரிவுக்குப்பின் ஏற்பட்ட காமநோய், பிரிவை ஆற்றமுடியாத மனவேதனை ஆகிய அனைத்து வலிகளையெல்லாம் ஆற்றமுடியாமல் இருக்கிறாள். கணவன் பிரிவால் உடலாலும், உடலுணர்வாலும், உளத்தாலும் தலைவி உறும் துயரங்கள் (Physical, Physiological , Psychological pains) சொல்லப்பட்டன.
கடமை காரணமாகத் தலைவன் பிரிதலைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் மனைவியின் மாண்பு கூறப்பட்டது.

'பின்இருந்து வாழ்வார் பலர்' என்ற பகுதி கூறும் செய்தி என்ன?

என் கணவரோ செயலாற்ற வேண்டிய கடமை கருதிப் பிரிந்து போயிருக்கிறார். நானோ பிரிவாற்றாமல் துன்பப்படுகிறேன். என்ன செய்வது? காதலர் திரும்பி வருகிற வரையிலும் எப்படியாவது துன்பத்தைப் பொறுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். பிரிவு எங்கும் நடப்பதுதானே என்று பெருமூச்சுடன் தலைவி சொல்லிக் கொள்கிறாள்.
'பிரிந்தபின் பொறுத்திருக்கவும் முடிகிறதே; பிரிந்து சென்றபின் உயிர் வாழ்வும் முடிகிறதே; உலகத்தில் இப்படியும் பெண்கள் பலர் வாழ முடிகிறதே என எண்ணி என்னால் அது முடியாது. இறந்தே படுவேன்' என்று தலைவி கூறுவதாகப் பலர் இக்குறளை விளக்கினர். இறந்துபடுவேன் என்பதினும் உயிர்வாழ்தல் கடினம் எனக்கொள்வது சிறக்கும்.

காலிங்கர் 'தத்தம் கொழுநரது பிரிவு ஆற்றிப் பின்னும் இருந்து தம் உயிர் வாழும் பெண்டிரும் பலர் இவ்வுலகத்து; எனவே யான் இருந்து வாழ்தல் எவ்வாற்றானும் அரிது அதாவது என்னால் அங்ஙனம் இருந்து வாழ்தல் இயலாது' என்று தலைவியின் ஆற்றாமையை மிகுத்துக் காட்டுவார்.
இப்பகுதிக்குப் பிற உரையாசிரியர்கள் தந்த உரைகளிலிருந்து சில:

  • தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர், அது நீ செய்கின்றில்லை, என்ற தோழிக்குச் சொல்லியது: இவையெல்லாம் பொறுத்துப் பின்னும் இருந்து உயிர் வாழ்வார் ஒருவரும் இல்லை என்பது குறிப்பால் தோன்றப் 'பின் இருந்து வாழ்வார் பலர்' என்றும் கூறினாள். 'யானும்இறந்து படுவல்' என்பது கருத்து.
  • 'இவ்வாறு உலகியற்கை யாதலால் நீ ஆற்றாயாகின்றது தக்கது அன்று' என்று தோழி தலைமகளை நெருங்கிக் கூறியது.
  • என்னால் இயலாது அவர் பிரியின் யான் உயிர் வாழேன். அவர்கட்கு உள்ளது போன்ற ஆற்றல் எனக்கு இல்லை' எனத் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
  • என்னைப் போன்ற நிலைமையிலுள்ள பெண்களிற் பெரும்பாலோரும் இப்படித் தொழில் முறையில் காதலர் பிரிந்து போனதைப் பொறுத்துக் கொண்டு மிகவும் முயன்று ஆசைகளை அடக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி நானும் சகித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் -என்பது கருத்து.
  • காதலிகள் இவையெல்லாம் பொறுத்துப் பின்னும் இருந்து உயிர் வாழ்தல் இல்லை யென்பது குறிப்பு.
  • தம் காதலரை யின்றியமையா மகளிருள் , இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு பின்னுமிருந்து உயிர்வாழ்வார் ஒருவருமிரார் என்பது தோன்றப் பகடிக் குறிப்பாக அப்படிச் சகிப்பவர் பலர். நான் தாங்க மாட்டேன். இறந்தே படுவேன் என்று கூறினாள்.
  • பிரிந்து சென்றபின் உயிர் வாழவும் முடிகிறதே; உலகத்தில் இப்படியும் பெண்கள் பலர் வாழ முடிகிறதே என எண்ணுகிறாள்.

'பின்இருந்து வாழ்வார் பலர்' என்ற பகுதி கணவர் பிரிந்துசென்றபின் வாழ்தல் கடினம் என்ற பொருள் தருவது.

பிரிவுக்கு இணங்கிய அரிய செயலைச் செய்து, உடல்உணர்வுகள் வருத்தும் துன்பத்தை விலக்கி, பிரிவின் துயரத்தைத் தாங்கி, பின்னும் வாழ்பவர்கள் பலர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

உலகியல் அறிந்தும் பிரிவாற்றமையால் தலைவியின் துயர் தொடர்கிறது.

பொழிப்பு

பிரிவுக்கு உடன்பட்டு உடல்வருத்தும் துன்பத்தை விலக்கி பிரிவின் துயரத்தைத் தாங்கிப் பின்னும் பலர் வாழ்கிறார்களே.