இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1156



பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை

(அதிகாரம்:பிரிவாற்றாமை குறள் எண்:1156)

பொழிப்பு (மு வரதராசன்): பிரிவைப்பற்றித் தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால், அத்தகையவர் திரும்பி வந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.

மணக்குடவர் உரை: பிரிவினை யுரைக்கும் வன்கண்மையை யுடையராயின் அவர் மறுத்துவந்து நல்குவரென்னும் ஆசை யில்லை.
இது தலைமகன் பிரிந்தானென்று கேட்டவிடத்து நின்னிற் பிரியேனென்ற சொல்லை உட்கொண்டு தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்து சொல்லிய தோழிக்குச் சொல்லியது.) அவர் பிரிவு உரைக்கும் வன்கண்ணராயின் -நம் கவவுக் கடுமையறிந்த தலைவர், தாமே நம் முன்னின்று தம்பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையராயின்; நல்குவர் என்னும் நசை அரிது - அத்தன்மையார் பின்பு நம் ஆற்றாமை அறிந்து வந்து தலையளி செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படும்.
(அருமை: பயன்படுதல் இல்லாமை.. 'கூடியிருந்தே அன்பின்றிப் பிரிவு எண்ணுதலும் உணர்த்தலும் வல்லராயினார், பிரிந்துபோய் அன்புடையராய் நம்மை நினைத்து வந்து நல்குதல் யாண்டையது'? என்பதாம். அழுங்குவித்தல் : பயன்.)

சி இலக்குவனார் உரை: தம் பிரிவினைச் சொல்லும் அன்பற்றவராய் இருப்பாரானால் நாம் ஆற்றமுடியாத் தன்மை அறிந்து வந்து அன்பு காட்டுவார் என்னும் விருப்பம் விடப்படும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அவர் பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் நல்குவர் என்னும் நசை அரிது.

பதவுரை: பிரிவு-பிரிந்து செல்லல்; உரைக்கும்-சொல்லும், தெரிவிக்கும்; வன்கண்ணர்-கொடுமையுடையவர்; ஆயின்-ஆனால்; அரிது-அருமையானது; அவர்-அவர்; நல்குவர்-அன்பு செய்பவர்; என்னும்-என்கின்ற; நசை-விருப்பம், ஆசை.


பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிரிவினை யுரைக்கும் வன்கண்மையை யுடையராயின்;
பரிப்பெருமாள்: பிரிவினை யுரைக்கும் வன்கண்மையை யுடையராயின்;
பரிதி: பிரிவுரைக்கும் தறுகண்ணராயின்;
காலிங்கர்: இங்ஙனம் தமது உரைதேறிப் பிரிவின் இயல் அஃது என்று இருந்த நமக்கு இஃது ஒழிந்து பிரிவினையும் நமக்குத் தாம் உரைக்கும் வன்கண்மையும் உடையாராயின்;
பரிமேலழகர்: (தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்து சொல்லிய தோழிக்குச் சொல்லியது.) -நம் கவவுக் கடுமையறிந்த தலைவர், தாமே நம் முன்னின்று தம்பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையராயின்; [கவவுக் கடுமை-முயங்குதலின் வன்மை; வன்கண்மை - அருளின்மை]

'பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையராயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிரிவு பேசும் துணிவுடையராயின்', 'நம் அன்பின் மிகுதியை அறிந்த தலைவர் நம்மிடம் பிரிவுபற்றிக் கூறும் நெஞ்சழுத்தம் உடையராயின்', 'தலைவர் பிரிவினை உணர்த்தும் கொடுமையுடையர் என்றால்', 'என் காதலர் மீண்டும் மீண்டும் தாம் பிரிந்து போக வேண்டியிருக்கிற அவசியத்தைப் பற்றியே சொல்லும் கடின சித்தமுடையவராக இருக்கிறார்' என்ற பொருளில் உரை தந்தனர்.

பிரிந்து செல்லலை என்னிடம் வந்து சொல்லும் அளவுக்குக் கொடியமனம் கொண்டவராய் இருப்பின் என்பது இப்பகுதியின் பொருள்.

அரிதவர் நல்குவர் என்னும் நசை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் மறுத்துவந்து நல்குவரென்னும் ஆசை யில்லை.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகன் பிரிந்தானென்று கேட்டவிடத்து நின்னிற் பிரியேனென்ற சொல்லை உட்கொண்டு தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: அவர் மறுத்துவந்து நல்குவரென்னும் ஆசை யில்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: 'பிரிதலும் ஆற்றலும் உலகியல்; என்று நெருங்கிக் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: நமக்கு இன்பம் தருவர் என்னும் நசை அரிது என்றவாறு.
காலிங்கர்: இனி மற்று அவர் வந்து தலையளிப்பர் என்னும் பற்றுடைமையும் அரிது என்றவாறு.
பரிமேலழகர்: அத்தன்மையார் பின்பு நம் ஆற்றாமை அறிந்து வந்து தலையளி செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: அருமை: பயன்படுதல் இல்லாமை.. 'கூடியிருந்தே அன்பின்றிப் பிரிவு எண்ணுதலும் உணர்த்தலும் வல்லராயினார், பிரிந்துபோய் அன்புடையராய் நம்மை நினைத்து வந்து நல்குதல் யாண்டையது'? என்பதாம். அழுங்குவித்தல் : பயன்.

'வந்து தலையளி செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வந்து அருளுவார் என எதிர்பார்த்தல் பயனற்றது', 'அவர் நம் ஆற்றாமை யறிந்துவந்து அன்பு செய்வர் என்னும் ஆசை கைகூடாது', 'அவர் திரும்பி வந்து நமக்கு அருள் செய்வாரென்னும் ஆசைக்கு இடமில்லை', 'அதனால் அவர் என் விருப்பத்தின்படி போகாமல் இருப்பார் என்ற ஆசையை நான் விட்டுவிட வேண்டியதுதான்' என்றபடி பொருள் உரைத்தனர்.

திரும்பி வரும்பொழுது நிறைஅன்பு காட்டுவார் என எதிர்பார்ப்பது வீணான ஆசை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிரிந்து செல்லலை என்னிடம் வந்து சொல்லும் அளவுக்குக் கொடியமனம் கொண்டவராய் இருப்பின் அவர் திரும்பி வரும்பொழுது நிறைஅன்பு காட்டுவார் என எதிர்பார்ப்பது வீணான ஆசை என்பது பாடலின் பொருள்.
'பிரிவுரைக்கும் வன்கண்ணர்' குறிப்பது என்ன?

அவரால் எப்படி என்னிடம் வந்து 'போய்வருகிறேன்' எனச் சொல்ல முடிந்தது?

பிரிவைப் பற்றி என்னிடம் சொல்லும் கொடியவராயிருக்கும் அவர் திரும்பி வந்து இன்பம் தருவார் என்னும் ஆசைகூட நமக்கு இருக்கமுடியுமா! என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
பொருள் தேடுதற்காகக் கணவன் மனைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் சென்றவுடன் தலைவி அவன் பிரிந்ததன் அதிர்வில் இருந்து மீளமுடியாமல் அவன் சென்றது பற்றி நினைக்கிறாள். அவன் புறப்படுவதற்கு முன் அவளிடம் விடைபெற வருகிறான். அவள் 'நீ பிரிந்துபோகவில்லை என்பதைச் சொல்வதானால் சொல். வேறு ஏதாவது சொல்வதானால் அப்பொழுது என் உயிர் என்னிடம் இருக்காது' என நா தழுதழுக்கக் கூறினாள். காதலன் தழுவுதல் பிரிவை உணர்த்துவதால் துன்பம் தருகிறது என்றாள். பிரிவின் துன்பத்தை அறிந்து வைத்திருக்கிறேன்; அப்படியும் பிரிவு தாங்க முடியவில்லையே என்று புலம்பினாள். உன்னைவிட்டு என்றும் பிரியேன். அஞ்சாதே! என்ற அவர் சொல்லில் ஆறுதல் பெற்றது என் தவறா எனத் தனக்குத் தானே முறையிட்டுக் கொள்கிறாள். அவரது பிரிவில் என் உயிர் நீங்கிவிடுமே என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
''சென்று வருகிறேன்' என்று என் முன்நின்று கூறும் அளவுக்குக் கல்மனம் கொண்டவர் திரும்பி வந்து தன்னிடம் முன்போல நிறைஅன்பு காட்டுவாரா' என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்கிறாள்.
பிரிதலும் ஆற்றிக்கொள்ளுதலும் உலகியல்தான் என்பதை உணரமாட்டாத பேதை அல்ல தலைவி. ஆனாலும் தன் கணவர் தன்னிடம் வந்து பிரிவுவிடை கேட்கும்போது அதைப் பொறுக்கமுடியாமல் அரற்றுகிறாள். எப்போது அவர் மனம் இப்படி இறுக்கமானது? சரி சென்று விட்டார். பணிமுடிந்து இல்லம்திரும்பும்போது இளகிய மனதுடன் வந்து என்னிடம் அன்பு செய்வாரா? என்று பலவாறாக நினைக்கத் தொடங்குகிறாள்.

நல்குவர் என்றதற்குத் தலையளி செய்வார் தண்ணளி செய்வார், அருள் செய்வார், அன்பு செய்ய வருவார், பேரன்பு செய்வர், அன்பு செலுத்துவார், இன்பம் தருவர் என்று உரையாளர்கள் பொருள் கூறினர். காமத்துப்பாலில் நல்குதல் என்பது தண்ணளி செய்தல் அதாவது நிறைந்த அன்பு காட்டுதல் என்ற பொருளிலேயே பயின்று வரும். நல்குவர் என்றதற்கு இங்கு 'முழுஅன்பு காட்டுபவர்' என்பது பொருள்.

'பிரிவுரைக்கும் வன்கண்ணர்' குறிப்பது என்ன?

'பிரிவுரைக்கும் வன்கண்ணர்' என்ற தொடர்க்குப் பிரிந்து செல்லலைக் கூறும் கொடியவர் என்பது பொருள். அவர் ஏன் கொடியவர்? பணி காரணமாக அவர் அயல் செல்ல வேண்டிய வேளையில் அவளிடம் 'சென்றுவருகிறேன்' என விடைபெற்றதைத்தான் அவள் கொடுமை என்கிறாள். அவரின்றித் தன் உயிர் நீங்கிவிடுமே என்று எண்ணிக்கொண்டிருந்தவளுக்கு அவரைவிட்டுக் கொஞ்சகாலம் பிரிந்திருக்க வேண்டியிருக்குமே என்பதைத் தலைவியால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. போய் விரைவில் திரும்பிவிடுவதாக அவர் கூறினாலும் அவளால் ஆற்றிக்கொள்ளமுடியவில்லை. பிரிந்து செல்வதை முன்னிருந்தே சொன்னதைக் கொடுமையான செயல் என்கிறாள். எனவே அவர் வன்கண்ணர்.

'உரைக்கும் என்பதிலே நிகழ்வு, எதிர்வு ஆகிய காலங்களை அடக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் முக்காலங்களுக்கும் செய்யும், செய்க, என்று இரு வாய்பாடுகளை மட்டுமே தொல்காப்பியர் கூறியுள்ளார்' என்பார் இரா சாரங்கபாணி. இங்கு 'பிரிவுரைத்த வன்கண்ணர்' எனக் கொள்வது தெளிவு பயக்கும்.

'பிரிவுரைக்கும் வன்கண்ணர்' என்றது பிரிவாற்றாமையால் தலைவி கணவனைக் கொடுமைக்காரர் எனச் சொல்வது.

பிரிந்து செல்லலை என்னிடம் வந்து சொல்லும் அளவுக்குக் கொடியமனம் கொண்டவராய் இருப்பின் அவர் திரும்ப வரும்வேளை அன்பு காட்டுவர் என எதிர்பார்ப்பது வீணான ஆசையே என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பிரிவாற்றாமை கணவரைக் கொடுமைக்காரர் என எண்ணச் செய்கிறது.

பொழிப்பு

பிரிவை என்னிடம் கூறும் கொடியநெஞ்சம் கொண்டவராய் இருப்பின், திரும்ப வந்து காதலர் என்னிடம் பேரன்பு காட்டுவார் என்று நான் ஆசைப்படலாமா?