துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை
(அதிகாரம்:பிரிவாற்றாமை
குறள் எண்:1157)
பொழிப்பு (மு வரதராசன்): என் மெலிவால் முன்கையில் இறைகடந்து சுழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ?
|
மணக்குடவர் உரை:
இறைவன் பிரிகின்றமையை எமக்கு அறிவியாவோ? முன் கையின் இறையைக் கடவாநின்ற வளைகள்,
முன்பே அறிதலான், உடம்பு மெலிந்தது என்றவா றாயிற்று.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) துறைவன் துறந்தமை - துறைவன் என்னைப் பிரியலுற்றமையை; முன் கை இறை இறவாநின்ற வளை தூற்றாகொல் - அவன் உணர்த்தாமல் தாமே உணர்ந்து என் முன் கையில் இறையினின்றும் கழலாநின்ற வளைகள் எனக்கு அறிவியாவோ? அவன் உணர்த்த உணர்ந்து வந்து நீ அறிவித்தல் வேண்டுமோ?
(முன்னே நிகழ்ந்தமையின் 'துறந்தமை' என்றும், கேட்ட துணையான் மெலிந்து ஆற்றாமையின், 'இறவாநின்ற' என்றும் கூறினாள். 'அழுங்குவித்து வந்து கூறற்பாலையல்லையாய நீயும், இவ்வளைகள் செய்தனவே செய்தாய்' எனப் புலந்து கூறியவாறு.)
இரா இளங்குமரன் உரை:
என் முன்கையின் மணிக்கட்டைக் கடவாமல் கிடந்த வளையல் கழன்று வீழ்வதே தலைவன் பிரிந்து சென்றதை ஊரார் அறியத் தூற்றி விடாதோ?
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை.
பதவுரை: துறைவன்-தலைவன்; துறந்தமை-பிரியலுற்றமை; தூற்றாகொல்-அறிவிக்கமாட்டாவோ?, பலரும் அறியக் கூறாவோ?, தெரிவிக்காமலிருக்குமோ?; முன்கை-கையினது முற்பகுதி; இறை-மணிக்கட்டு, தங்கும் இடம்; இறவாநின்ற-கழல்கின்ற; வளை-வளைகள்.
|
துறைவன் துறந்தமை தூற்றாகொல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இறைவன் பிரிகின்றமையை எமக்கு அறிவியாவோ?
பரிப்பெருமாள் ('தேற்றாதோ' என்பது பாடம்): துறைவன் பிரிகின்றமையை எமக்கு அறிவியாவோ?
பரிதி: நாயகர் பிரிந்ததை ஒருவரும் அறியார்;
காலிங்கர்: (தேற்றாகொல்' என்பது பாடம்) தோழி! இவை நம் துறைவன் நம்மைப் பிரிந்தமை அறியாவோ?
பரிமேலழகர்: (இதுவும் அது.) துறைவன் என்னைப் பிரியலுற்றமையை; எனக்கு அறிவியாவோ?
'தலைவன் பிரிந்தமையை எனக்கு அறிவியாவோ' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தலைவன் பிரிவை வெளிப்படுத்த வில்லையா?', 'என் தலைவன் போய் விட்டதை ஊராருக்கெல்லாம் தூற்றிவிடும்போல் இருக்கிறது', 'தலைவன் என்னைப் பிரிந்ததை!', 'தலைவன் பிரிந்தமையைத் தாமே தெரிந்து எனக்கும் பிறர்க்கும் அறிவியாவோ?' என்ற பொருளில் உரை தந்தனர்.
தலைவன் பிரிந்ததைத் தெரிவித்துவிடவில்லையா? என்பது இப்பகுதியின் பொருள்.
முன்கை இறைஇறவா நின்ற வளை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முன் கையின் இறையைக் கடவாநின்ற வளைகள்,
மணக்குடவர் குறிப்புரை: முன்பே அறிதலான், உடம்பு மெலிந்தது என்றவா றாயிற்று.
பரிப்பெருமாள்: முன் கையின் இறையைக் கடவாநின்ற வளை
பரிப்பெருமாள் குறிப்புரை: முன்பே அறிதலான், உடம்பு மெலிந்தது என்றவா றாயிற்று. பிரியாரென அறிவிக்கும் தோழிக்கு 'நீ சொல்ல வேண்டா; யான் அறிந்தேன்' என்று தலைமகள் கூறியது.
பரிதி: நம்முடைய முன்கை வளை கழல எல்லாரும் அறிந்தனர் என்றவாறு.
காலிங்கர்: அறியும்; என்னையோ எனின் முன்கைச் சந்தினின்று நீங்காநின்றன வளை; எனவே தன் தோள் மெலிவு பார்த்துத் தளர்வுற்றாள் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அவன் உணர்த்தாமல் தாமே உணர்ந்து என் முன் கையில் இறையினின்றும் கழலாநின்ற வளைகள். அவன் உணர்த்த உணர்ந்து வந்து நீ அறிவித்தல் வேண்டுமோ? [இறையின்நின்றும்- தங்கும் இடத்தினின்றும்]
பரிமேலழகர் குறிப்புரை: முன்னே நிகழ்ந்தமையின் 'துறந்தமை' என்றும், கேட்ட துணையான் மெலிந்து ஆற்றாமையின், 'இறவாநின்ற' என்றும் கூறினாள். 'அழுங்குவித்து வந்து கூறற்பாலை யல்லையாய நீயும், இவ்வளைகள் செய்தனவே செய்தாய்' எனப் புலந்து கூறியவாறு. [முன்னே நிகழ்ந்தமையின்-பிரிவு முன்னே உண்டாய் இருத்தலால்; கேட்ட துணையான் - தலைமகனது பிரிவைத் தோழி சொல்லக் கேட்ட அளவால்; இறவாநின்ற - கழலாநின்ற. கூறற் பாலை அல்லையாய நீயும் - சொல்லும் தன்மையள் அல்லாத நீயும்; புலந்து - பிணங்கி]
'முன்கையின் இறையைக் கடவாநின்ற வளைகள்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மணிக்கட்டிலிருந்து கழல்கின்ற வளையல்கள்', 'முன்னங்கை ரேகைகளையும் கடந்து கழன்றுவிடுவன போன்ற என வளையல்களுடைய ஓசையே',
'என் முன் கை வளையல் இருந்த இடத்திலிருந்து கழல்வதால், யாவர்க்கும் தெரிவிக்க மாட்டாயோ', 'என் முன்கையின் முன்னிடத்தில் உள்ள கழலும் வளையல்கள்' என்றபடி பொருள் உரைத்தனர்.
முன்கையின் தங்கின இடத்திலிருந்து கழலும் வளையல்கள் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
முன்கையின் தங்கின இடத்திலிருந்து கழலும் வளையல்கள் துறைவன் பிரிந்ததைத் தெரிவித்துவிடவில்லையா? என்பது பாடலின் பொருள்.
துறைவன் யார்?
|
தளர்ந்த முன்கை வளைகள் தனது தனிமையை ஊரார்க்குக் காட்டிக் கொடுத்துவிடுமே! என்கிறாள் தலைவி.
கணவர் பிரிந்து போயிருக்கிறார் என்பதை மெலிந்த தன் முன்கையிலிருந்து கழலும் வளைகள், ஊரறிய எடுத்துக் காட்டிவிடமாட்டாவோ? எனக் கேட்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
தலைவர் பணி காரணமாக நீங்கி தொலைவு சென்றுவிட்டார். அவர் நீங்கும்போதும் பின்பும் நடந்த நிகழ்வுகளைத் தலைவி நினைவு கொள்கிறாள்.
அவளிடம் விடைபெற்றுச் செல்லக் கணவர் வரும்பொழுது அவள் விம்மியபடி 'பிரிந்துபோகவில்லை என்பதைச் சொல்வதானால் சொல்லுங்கள், வேறு ஏதாவது சொல்வதானால் அப்பொழுது என் உயிர் என்னிடம் இருக்காது' எனக் கூறினாள்; முன்பு அவரது பார்வை புணர்ச்சி குறித்தமையால் இன்பமுடையதாயிருக்கும், இன்று அவர் பார்வை பிரிவை உணர்த்துவதால் துன்பமாக உள்ளது; பிரிவு உண்டென்பதும் அதன் துயரமும் நான் அறிந்தவைதாம் என்றாலும் பிரிவைத் தாங்க முடியவில்லையே என அரற்றினாள்; யாராவது அவர் போவதைத் தடுங்களேன், பிரிவில் என் உயிர் நீங்கிவிடுமே என்று புலம்பினாள்; என்னைவிட்டுப் பிரிந்து செல்வதை என் முன்நின்று கூறும் அளவுக்குக் கல்மனம் கொண்டவர் திரும்பி வந்து தன்னிடம் அன்பு காட்டுவார் என்பது அரிதல்லவா? எனத் தனக்குத்தானே கேட்டுக்கொண்டிருக்கிறாள்.
இக்காட்சி:
பிரிவைத் தாங்க முடியாத தலைவி உடல் மெலிகிறாள், அவளது முன்கையில் மணிக்கட்டைத் தாண்டாதிருந்த வளையல்கள் இப்பொழுது கழன்று கீழே விழுந்திடும் நிலையில் உள்ளன. அப்பொழுது அவள் சொல்கிறாள்: தன் காதல்கணவர் பிரிவில் சென்றதைக் கையிலிருந்து நெகிழும் வளையல்கள் ஊரார்க்கு அறிவிக்காவோ? என்று.
நழுவி வருகின்ற கை வளையல்கள் தலைவர் பிரிந்துள்ளதைப் புலப்படுத்துகின்றன என்று சொல்கிறது பாடல்.
முன்கையோடு தொடர்புபட்டு மணிக்கட்டில் இருக்கும் அணியாக வளை சொல்லப்பட்டுள்ளதால், அது கைவளை என்பது தெளிவு. துறைவன் என்ற சொல் நெய்தற் தலைவனைக் குறிப்பதால் பெயருக்கு ஏற்ப வளை சங்கினாற் செய்யப்பட்டதாகலாம்.
தலைவி தற்பொழுது தனிமையில் வாடுகிறாள் என்ற செய்தியை ஊரில் யாரும் யாருக்கும் கூறினால்தான் பிறர் தெரிந்து கொள்ள முடியும் என்பதில்லை.
அவர் பிரிவை ஆற்றமாட்டாது துயருற்ற தலைவியின் உடலில் மெலிவு தோன்றுகிறது. உடல் மெலியும் போது முன் மணிக்கட்டைக் கடவாமல் கைகளை ஒட்டினாற்போல் கிடந்த வளையல்கள் கழன்று வீழ்கின்றதைக் காண்பவர்கள் அனைவரும் தலைவர் பிரிந்து சென்றுள்ளார் போலும் என்பதைத் தெரிந்து கொள்வர்.
இதைத்தான் “கையிலிருந்து கழன்று விழும் வளையல்களே தலைவர் பிரிவை ஊர் அறிய அறிவித்துவிடுமே' எனத் தலைவி கூறுகிறாள்.
மாந்தர் வாழ்வில் துயரம் வரும்போது உடல் மெலியும்; இங்கு தலைவிக்குக் கணவர் உடனில்லாத வருத்தத்தால் வளையல் கைகளிலிருந்து கழன்று வீழுமளவு உடல் இளைத்து விடுகிறது. அதை அறியும் எவரும் அவளுடன் அவளது கணவர் தற்போது இல்லை என்பதைத் தெரிந்து கொள்வார்கள் என்கிறாள்.
துறவு என்ற சொல் 'பிரிதல்' விடுதல்' 'நீங்குதல்' ஆகிய பொருள்களிலும் குறளில் பல்வேறு இடங்களில் பயிலப்பட்டுள்ளது.
‘துறந்தமை’ என்ற தொடர் இங்கு நீங்கியுள்ளமை என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. இது இறந்தகாலத்தைக் குறிப்பதாக உள்ளது.
பரிமேலழகரும் (பிரிந்து செல்ல முன்னமே தீர்மானித்து விட்டமையால் 'துறந்தமை' யென்றும்), பரிப்பெருமாளும் ('துறைவன் பிரிகின்றமையை' ) தலைவன் இன்னும் பிரிந்து செல்லவில்லை என்னும் நிலையில் வைத்துக் காட்சிப் பின்னணி அமைத்துள்ளனர். துறைவன் துறந்தமை என்பது இறந்தகாலமாக இருப்பதால் அவ்விருவர் கொண்ட துறைகள் பொருத்தமாக இல்லை. பரிதி 'பிரிந்து சென்றார்' என இறந்தகாலமாகக் கொண்டே உரை எழுதியுள்ளார்.
‘தூற்றுதல்’ என்னும் சொல் பலரறிய வெளிப்படுத்தல் என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது, தூற்றாகொல் என்றது தூற்றாவோ எனப் பொருள் தரும்.
இதற்குப் பிறர்க்குப் பறைசாற்றாவோ?, வெளிப்படுத்த வில்லையா?, ஊரார் அறியத் தூற்றி விடாதோ?, எனக்கு அறிவிக்க வேண்டுமோ? எனவும் பொருள் கூறினர்.
பரிப்பெருமாள் 'தூற்றாகொல்' என்னுமிடத்தில் 'தேற்றாதோ' எனவும் காலிங்கர் 'தேற்றாகொல்' எனவும் பாடம் கொண்டனர். ‘தேற்றாய் கொல்’ எனப் பாடம் கொள்கிறது பழைய உரை ஒன்று. இவற்றினும் ‘தூற்றாகொல்’ எனப் பிறர் கொண்ட பாடமே தொடைநயமும் பொருள்நயமும் உடையது; ‘தூற்றாகொல்’ என்பதற்குத் தலைவன் தனக்கே அறிவிப்பதாகப் பரிமேலழகர் உரை செய்திருப்பதினும் ஊருக்கு அறிவிப்பதாகப் பரிதி உரை செய்திருப்பது மிகப் பொருத்தம். (இரா சாரங்கபாணி).
இறை என்ற சொல்லுக்கு மணிக்கட்டு எனப் பொருள் கொள்வர். இச்சொல்லுக்குத் தங்கும் இடம் எனவும் பொருள் கூறி, இறையினின்றும் என்றது தங்கும்மிடத்தினின்றும் என உரை செய்தனர், வளை தங்குமிடம் மணிக்கட்டு என்பதால்.
இறவா என்ற சொல்லுக்கு கடவா என்பது பொருள்.
ஐங்குறுநூறு என்னும் எட்டுத்தொகை நூலில், இக்குறளில் சொல்லப்பட்டுள்ளது போன்று, முன்கையினின்று நீங்கிய வளை பற்றிய செய்யுள் ஒன்றுளது. அது:
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
இருங் கழித் துவலை ஒலியின் துஞ்சும்
துறைவன் துறந்தென, துறந்து என்
இறை ஏர் முன்கை நீங்கிய, வளையே (ஐங்குறுநூறு 163 பொருள்: துவலையினது ஒலியில் உறங்கும். துறைவன் என்னைத் துறக்க நீங்கி. சந்தையுடைய முன்கையினின்றும் நீங்கிய வளை)
இக்குறட்கருத்தைத் 'தலைவி முன்கையில் அணிந்திருந்த வளையல் தலைவனது பிரிவுத்துயரால் அவள் மெலிந்தமையில் கழன்றது. இதனையுணராது தோழி அப்பிரிவைத் தலைவிக்கு உணர்த்தியபோது இப்பிரிவைக் கழன்று விழும் வளையே உணர்த்திவிட்டதே அவன் பிரிவைத் தடுத்து நிறுத்தாது அச் செய்தியை மட்டும் அறிவிக்க நீ தேவையில்லையே எனத் தோழியிடம் அவள் புலந்துரைக்கின்றாள்' என்றவாறும் உரைத்தனர்.
|
துறைவன் யார்?
'துறைவன்' என்ற சொல்லுக்கு இறைவன், நாயகர், துறைவன், தலைவன், தலைவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர். இவை அனைத்தும் தலைவன் என்ற பொருளே தரும்.
இலக்கிய மரபுப்படி துறைவன் நெய்தல் நிலத்தலைவனைச் சுட்டும்.
துறைவன் என்ற சொல் தண்ணம் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை (குறிப்பறிவுறுத்தல் 1277 பொருள்: குளிர்ந்த துறையையுடையவன் நம்மை மனத்தினாற் பிரிந்தமையை, நம்மைவிட முன்னமேயே அறிந்து விட்டன நம் வளையல்கள்) என்ற பாடலிலும் ஆளப்பட்டுள்ளது.
'துறைவன் என்ற சொல்லே துறைவன் துரை என்று ஆகிக் கடல் கடந்து வந்துள்ள வெள்ளைக்காரத் தலைவரைக் குறித்தது; பின்னர் மேல் பதவியில் உள்ள இந்நாட்டவரையும் 'துரை' என்ற சொல்லால் கீழ்ப்பதவியில் உள்ளவர் குறிப்பிடுவது வழக்கமாகி விட்டது. வெள்ளைக்காரர் சென்ற பின்பும் இந்நாட்டவர் இன்றும் துரையென்று அழைக்கப்பட்டு வருகின்றனர்' என சி இலக்குவனார் குறித்துள்ளார்.
|
முன்கையின் தங்கின இடத்திலிருந்து கழலும் வளையல்கள் தலைவர் பிரிந்ததைத் தெரிவித்துவிடவில்லையா? என்பது இக்குறட்கருத்து.
பிரிவாற்றமையால் தலைவி உடல்மெலிகிறாள்.
காதலர் பிரிந்ததைத் தெரிவித்துவிடவில்லையா முன்கை மணிக்கட்டிலிருந்து கழன்று கொண்டிருக்கும் வளையல்கள்?
|