இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1152



இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு

(அதிகாரம்:பிரிவாற்றாமை குறள் எண்:1152)

பொழிப்பு (மு வரதராசன்): அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது; இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது

மணக்குடவர் உரை: நங்காதலரை வரவு பார்த்திருக்குமது இன்பத்தை யுடைத்து; அவரைப் புணர்ந்திருக்கும் இருப்பு. பிரிவாரோ என்று அஞ்சப்படும் துன்பத்தை யுடைத்து.

பரிமேலழகர் உரை: (பிரிவு தலைமகன் குறிப்பான் அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) அவர் பார்வல் இன்கண் உடைத்து - தழையும் கண்ணியும் கொண்டு பின்னின்ற ஞான்று அவர் நோக்கு மாத்திரமும் புணர்ச்சி குறித்தமையான் நமக்கு இன்பமுடைத்தாயிருக்கும்; புணர்வு பிரிவஞ்சும் புன்கண் உடைத்து - இன்று அப்புணர்ச்சிதான் நிகழா நிற்கவும் அது பிரிவர் என்று அஞ்சும் அச்சத்தினை உடைத்தாயிற்று; அவர் அன்பின் நிலைமை இது.
('பார்வல்' என்றதனால், புணர்ச்சி பெறாத பின்னிலைக்காலம் பெறப்பட்டது. புன்கண் என்னும் காரணப்பெயர் காரியத்தின் மேலாயிற்று. அவ்வச்சத்தினை உடைத்தாதலாவது, 'முள்ளுறழ் முளையெயிற்று அமிழ்தூறுந் தீநீரைக் - கள்ளினும் மகிழ்செய்யும் என உரைத்தும் அமையார், என் ஒள்ளிழை திருத்தும்' (கலித்-பாலை-3)பண்டையிற் சிறப்பால். அவன் பிரிதிற் குறிப்புக் காட்டிஅச்சம் செய்தலுடைமை. அழுங்குவித்தல்: பயன்.)

இரா சாரங்கபாணி உரை:: காதலரது பார்வை முன்னர் இன்பம் உடையதாக இருந்தது. இப்பொழுது அவருடைய முயக்கம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பமுடையதாக இருக்கிறது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அவர் பார்வல் இன்கண் உடைத்து; புணர்வு பிரிவஞ்சும் புன்கண் உடைத்து ஆல்

பதவுரை: இன்கண்-இன்பம்; உடைத்து-உடையது; அவர்-அவர்; பார்வல்-நோக்கு, வரவு பார்த்தல்; பிரிவு-நீங்குதல்; அஞ்சும்-நடுங்கும்; புன்கண்-துன்பம்; உடைத்து-உடைத்து; ஆல்-(அசைநிலை); புணர்வு-கூடல், முயக்கம்.


இன்கண் உடைத்தவர் பார்வல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நங்காதலரை வரவு பார்த்திருக்குமது இன்பத்தை யுடைத்து;
பரிப்பெருமாள்: நங்காதலரை வரவு பார்த்திருக்குமது இன்பத்தை யுடைத்து;
பரிப்பெருமாள் குறிப்புரை: வரவு பார்த்தல்-களவுக் காலத்து வரவு பார்த்தல்.
பரிதி: இன்பமான நாயகனைப் பிரியாமல் பிரிவுக்கு அஞ்சப்பட்ட;
காலிங்கர்: நெஞ்சே! வன்கண்மை சிறுதும் இன்றிப் பெரிதும் இன்கண்மை யுடைத்தாய் இருந்தது அவர் வந்து நோக்கிய நோக்கமானது.
பரிமேலழகர்: (பிரிவு தலைமகன் குறிப்பான் அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) தழையும் கண்ணியும் கொண்டு பின்னின்ற ஞான்று அவர் நோக்கு மாத்திரமும் புணர்ச்சி குறித்தமையான் நமக்கு இன்பமுடைத்தாயிருக்கும்; [கண்ணி-தலைமாலை]
பரிமேலழகர் குறிப்புரை: 'பார்வல்' என்றதனால், புணர்ச்சி பெறாத பின்னிலைக்காலம் பெறப்பட்டது. [பார்வல்- பார்வை (நோக்கு)]

'காதலர் நோக்கு இன்பமுடைத்தாயிருக்கும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவர் பார்வை இனிமையுடையது', 'அவரைப் பார்த்துக் கொண்டிருப்பதே எனக்கு இன்பமாக உள்ளது', 'முன்னாளில் அவர் நோக்கமானது நமக்கு இன்பத்தைத் தந்தது', 'அவர் பார்வை (புணர்ச்சி குறித்தமையால்) முன்பு நமக்கு இன்பம் உடையதாயிருக்கும்' என்ற பொருளில் உரை தந்தனர்.

'காதலர் பார்வை இன்பம் தருவது என்பது இப்பகுதியின் பொருள்.

பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவரைப் புணர்ந்திருக்கும் இருப்பு. பிரிவாரோ என்று அஞ்சப்படும் துன்பத்தை யுடைத்து.
பரிப்பெருமாள்: அவரைப் புணர்ந்திருக்கும் இருப்பு. பிரிவாரோ என்று அஞ்சப்படும் துன்பத்தை யுடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: தலைமகன் பிரியலுற்ற குறிப்புக் கண்டு வேறுபட்ட தலைமகளை இவ்வேறுபாடு எற்றினான் ஆயிற்றென்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: புன்கண்மையால் புணர்வு எப்படி உண்டாம் என்றவாறு.
காலிங்கர்: இனி மற்று இவ்வாறு அன்றி நமக்குப் பெரிதும் மாற்றலாகாப் பிரிவென்னும் புன்கண்மை உடைத்தாயிற்று.
காலிங்கர் குறிப்புரை: அவர் நம்மோடு கூடிய கூட்டம். எனவே, அவர் நோக்கம் பயந்தது இனிய புணர்ச்சியை புணர்ச்சி பயந்தது பெரியதோர் புன்கண்மையை. இனி யாம் உய்யுமாறு எங்ஙனம் என்று தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: இன்று அப்புணர்ச்சிதான் நிகழா நிற்கவும் அது பிரிவர் என்று அஞ்சும் அச்சத்தினை உடைத்தாயிற்று; அவர் அன்பின் நிலைமை இது.
பரிமேலழகர் குறிப்புரை: புன்கண் என்னும் காரணப்பெயர் காரியத்தின் மேலாயிற்று. அவ்வச்சத்தினை உடைத்தாதலாவது, 'முள்ளுறழ் முளையெயிற்று அமிழ்தூறுந் தீநீரைக் - கள்ளினும் மகிழ்செய்யும் என உரைத்தும் அமையார், என் ஒள்ளிழை திருத்தும்' (கலித்-பாலை-3) பண்டையிற் சிறப்பால். அவன் பிரிதிற் குறிப்புக் காட்டிஅச்சம் செய்தலுடைமை. அழுங்குவித்தல்: பயன். [பண்டையின் - பழமையின்]

'புணர்ச்சி. பிரிவாரோ என்று அஞ்சப்படும் துன்பத்தை யுடைத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'புணர்ச்சியோ பிரிவுக்கு அஞ்சும் துன்பக் குறிப்பு உடையது.', '(அவர் பிரிந்து போக விடை கொடுக்க) இணங்குவது பிரிவினால் உண்டாகும் அச்சந் தரக்கூடிய துன்பம் உடையது. (நானெப்படி விடை கொடுப்பேன்?)', 'இப்போது புணர்ச்சியிருந்தும் பிரிவார் என்ற அச்சத்தினால் அது துன்பத்தினோடு கூடியுள்ளது', 'இன்று புணர்ச்சி நிகழ்ந்து விட்டதால் அது பிரிவர் என்று அஞ்சும் துன்பத்தினை உடையதாய் இருந்தது' என்றபடி பொருள் உரைத்தனர்.

பிரிவை உணர்த்துவதால் அவர் தழுவல்கூட அஞ்சும் துன்பமுடையதாக இருக்கிறது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காதலர் பார்வல் இன்பம் தருவது; பிரிவை உணர்த்துவதால் அவர் தழுவல்கூட அஞ்சும் துன்பமுடையதாக இருக்கிறது என்பது பாடலின் பொருள்.
'பார்வல்' என்றால் என்ன?

கணவர் தழுவுல் பிரிவை உணர்த்துவதால் துன்பம் தருவதாயுள்ளது.

காதலரது அன்பான பார்வை முன்னர் இனிதாய் இருந்தது; இப்பொழுதோ, பிரிவை நினைத்து அச்சம் உண்டாவதால், அவரைக் கூடுதலும்கூடத் துன்பமாகத் தோன்றுகின்றது.
காட்சிப் பின்புலம்:
தலைவனும் தலைவியும் கணவனும் மனைவியாக மனம் ஒன்றிணைந்து இல்வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். பணி தொடர்பாகத் தலைவன் பிரிந்துசெல்ல வேண்டியுள்ளது. அவன் நெடுந்தொலைவு செல்ல வேண்டும். எனவே நீண்ட பிரிவுக்காலம் நீண்டதாக இருக்கும் என்பதை உணர்ந்த தலைவி ஆற்றமாட்டாதவள் ஆகிறாள். அவனது செலவு தேவையானது என்பதை அறிந்து வைத்திருந்தும், காதலனுக்கு உள்ளத்தால் நல்விடை கொடுக்க முடியவில்லை. 'உன்னைவிட்டுப் பிரிந்து செல்லப் போவதில்லை' என்பதை மட்டும் எனக்குச் சொல்லுங்கள். 'போய் கடிதில் திரும்பி வந்துவிடுவேன்' என்றவாறு சொல்வதாக இருந்தால் என்னால் அதைத் தாங்கமுடியாது; நீங்கள் திரும்பி வரும்வரை வாழ்ந்திருக்கக் கூடியவருக்கு அச்செய்தியைச் சொல்லுங்கள்' என அவன் பிரிந்தவுடன் அவளது உயிர் அவள் உடலில் தங்காது என்ற பொருளில் கூறுகிறாள். காதலன் பிரிவு என்பது தன் சாவு போன்றதே என்பதை அவ்விதம் உணர்த்திக் கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
பிரிந்து செல்லும் சமயம் வந்துவிட்டது. அவனும் அவளும் கட்டித் தழுவிக் கொள்கின்றனர். அப்பொழுது அவள் மனத்துக்குள் சொல்லிக் கொள்வதாக உள்ள காட்சி இது. 'அவர் என்னை நோக்கும் பார்வைகூட இன்பம் தந்தது. ஆனால் இன்றோ அவருடன் புணர்தலும் பிரிவிற்கான குறிப்பாய் அமைந்து வாட்டுகிறதே. இதை எப்படித் தாங்கிக் கொள்வேன்' என்று அச்சத்துடன் தலைவி தனக்குத்தானே கூறி வருந்துகிறாள்.
காதலனுடன் கூடுவது தலைவிக்கு எப்பொழுதும் இன்பம் தரக்கூடியதுதான். எனவே தழுவும் நோக்கில் அவர் பார்த்தது இன்பம் பயந்தது. ஆனால் பிரிவுக்கு முன் உள்ள முயக்கம் ஆதலால் அது அவள் மனத்துள் அச்சத்தை உண்டாக்கி பெரியதோர் துன்பத்தைத் தந்தது. புணர்ச்சி மகிழ்தல் இல்லாது போயிற்று.

சில வேளைகளில் மிகுந்த இன்பத்துக்கான நிகழ்ச்சிகளினூடே, இவ்வின்பம் விரைவில் மறைந்துவிடுமே, அடுத்துவரும் துன்பத்தை எப்படி ஏற்றுக்கொள்ளப்போகிறோம் என்னும் மனக் கவலை உண்டாகும். இது மாந்தர் இயல்பு. இவ்வுளவியல் கூறுபாட்டை அடியாகக் கொண்டு இப்பிரிவுக்காட்சி அமைக்கப்பட்டது. இன்பம் அளிக்க வேண்டிய அவருடனான கூட்டம் அவர் பிரியப் போகின்றார் என்பதை உணர்த்துவதால் துன்பமாகியது. மகிழ்வான ஒன்றை அடையப்போகிறோம் என்ற எண்ணத்தில் அதை எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கும் உள்ளம். ஆனால், அதை அடைந்தபின், அவ்வின்பத்துக்கிடையே, அது தம்மை விட்டு எப்போது விலகிவிடுமோ என்கிற அச்சம் மேலோங்கி ஆட்கொண்டு அடைந்ததை முழுமையாகத் துய்க்கமுடியாமல் செய்துவிடும். அதுபோன்ற சூழ்நிலையே இங்கு காட்டப்படுகின்றது. இக்குறட்கருத்தை ஒட்டிய இன்னொரு பாடல் பின்வரும் அதிகாரம் ஒன்றில் உள்ளது. அது: பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்துஎன் நெஞ்சு நெஞ்சோடுபுலத்தல் 1295 (பொருள்: காதலரைக் காணப்பெறாமைக்காக வருந்தும்; பெற்றகாலத்துப் பிரிவினை நினைந்து அஞ்சும்; ஆதலால் என் நெஞ்சம் எப்போதும் தீராத துன்பத்தை யுடையது).

'பார்வல்' என்றால் என்ன?

'பார்வல்' என்ற சொல்லுக்கு வரவுபார்த்திருத்தல், வந்து நோக்கிய நோக்கம், புணர்ச்சி குறித்த நோக்கு, பார்வை, எதிர்பார்த்திருப்பது, பார்த்துக் கொண்டிருப்பது, எதிர்பார்த்து நிற்றல், நோக்கம், பார்வை (புணர்ச்சி குறித்தமையால்), காதல் மீதூரும் பார்வை, அன்று களவுக் காலத்தில் நம் பின் நின்று அவர் பார்த்த, புணர்ச்சி குறித்த பார்வை, முன்னைய பார்வை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பார்வல் என்றதற்கு மணக்குடவர் தலைவனைத் தலைவி எதிர் நோக்கியிருத்தல் எனப் பொருள் தந்தார். காலிங்கரும் பரிமேலழகரும் நோக்கு அதாவது பார்வை என்று கூறினர். இவ்விரண்டு பொருளும் ஒக்கும்.
'பார்வை 'பார்வல்' என வழங்கியுள்ளது. சங்க காலத்தில்' என்பார் சி இலக்குவனார்-

'பார்வல்' என்ற சொல் பார்வை எனப்பொருள்படும்.

காதலர் பார்வையே இன்பம் தருவது; பிரிவை உணர்த்துவதால் அவர் தழுவல்கூட இப்பொழுது அச்சம் காரணமாகத் துன்பமுடையதாக இருக்கிறது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பிரிவாற்றமையால் தலைவனுடனான புணர்வு கூடத் தலைவிக்குத் துன்பமாகிறது.

பொழிப்பு

காதலரது பார்வையே இன்பம் உடையதாக இருப்பது; பிரிவை உணர்த்துவதால் அவருடைய முயக்கம்கூட அஞ்சுகின்ற துன்பமுடையதாக இருக்கிறது.