தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடின்சுடல் ஆற்றுமோ தீ
(அதிகாரம்:பிரிவாற்றாமை
குறள் எண்:1159)
பொழிப்பு (மு வரதராசன்): நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய்போல் தன்னை விட்டு நீங்கியபொழுது சுடவல்லதாகுமோ?
|
மணக்குடவர் உரை:
தீண்டினாற் சுடுமதல்லது காமநோய்போல, நீங்கினாற் சுடவற்றோ தீ.
தலைமகன் பிரிந்துழித் தலைமகளாற்றாமை கண்டு தோழி கூறியது.
பரிமேலழகர் உரை:
(காமம் தீயே போன்று தான் நின்ற இடத்தைச் சுடுமாகலான் நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) தீத்தொடின் சுடின் சுடலல்லது - தீத்தன்னைத் தொட்டாற் சுடுமாயின் சுடுதல்லது; காமநோய் போலவிடின் சுடல் ஆற்றுமோ - காமமாகிய நோய் போலத் தன்னை அகன்றால் தப்பாது சுடுதலை வற்றோ!? மாட்டாது.
(சுடுமாயின் என்பது, மந்திர மருந்துகளான் தப்பிக்கப்படாதாயின் என்றவாறு. காமத்திற்கு அதுவும் இல்லை என்பாள், வாளா 'சுடல்' என்றாள். அகறல்: நுகராமை. 'சுடல்' என்பது முன்னும் கூட்டப்பட்டது. 'தீயினும் கொடியதனை யான் ஆற்றுமாறு என்னை' என்பதாம்.)
இரா சாரங்கபாணி உரை:
நெருப்பு தன்னைத் தொட்டால்தான் சுடுமே யன்றிக் காம நோயாகிய தீப்போல நீங்கினாலும் சுட வல்லதோ?
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடின்சுடல் ஆற்றுமோ தீ.
பதவுரை: தொடின்- தீண்டினால்; சுடின்-சுடுதல்; அல்லது-அல்லாமல்; காம-காதலாகிய; நோய்-பிணி; போல-போல; விடின்-அகன்றால்; சுடல்-சுடுதல்; ஆற்றுமோ-வல்லதோ; தீ-நெருப்பு.
|
தொடிற்சுடின் அல்லது:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தீண்டினாற் சுடுமதல்லது;
பரிப்பெருமாள்: தீண்டினாற் சுடுமதல்லது;
பரிதி: தீயானது தொட்டால் சுடும்;.
காலிங்கர்: தோழி! தன்னைக் கிட்டித் தொட்ட காலத்துப் புறஞ்சுடும் அல்லது;
பரிமேலழகர்: (காமம் தீயே போன்று தான் நின்ற இடத்தைச் சுடுமாகலான் நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) தீத்தன்னைத் தொட்டாற் சுடுமாயின் சுடுதல்லது;
பரிமேலழகர் குறிப்புரை: சுடுமாயின் என்பது, மந்திர மருந்துகளான் தப்பிக்கப்படாதாயின் என்றவாறு. [தப்பிக்கப்படாதாயின் - தடுக்கப்படாதானால்]
'தீண்டினாற் சுடுமதல்லது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தீ தொட்டால் சுடும்', 'தீ தொட்டால் சுடுவது அல்லது', 'தீயானது தொட்டால் சுடுமே அன்றி', 'நெருப்பானது தொட்டால் சுடுமேயன்றி' என்ற பொருளில் உரை தந்தனர்.
தொட்டால் சுடுமேயன்றி என்பது இப்பகுதியின் பொருள்.
காமநோய் போல விடின்சுடல் ஆற்றுமோ தீ:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காமநோய்போல, நீங்கினாற் சுடவற்றோ தீ.
மணக்குடவர் குறிப்புரை: தலைமகன் பிரிந்துழித் தலைமகளாற்றாமை கண்டு தோழி கூறியது.
பரிப்பெருமாள்: காமநோய்போல, நீங்கினாற் சுடவற்றோ தீ.
பரிப்பெருமாள் குறிப்புரை: தலைமகன் பிரிந்துழித் தலைமகளாற்றாமை கண்டு தோழி கூறியது.
பரிதி: காமத்தீப் போல விட்டால் சுடவல்லதோ; ஆதலால் பிரியாமலிருப்பதே நல்லது.
காலிங்கர்: காமத்தீப் போல விட்டு நின்ற காலத்து வெவ்விதாகி நின்று உள்ளே சுடுதலை அறியுமோ உலகத்துத் தீ என்றவாறு
பரிமேலழகர்: காமமாகிய நோய் போலத் தன்னை அகன்றால் தப்பாது சுடுதலை ஆற்றவற்றோ? மாட்டாது. [ஆற்ற வற்றோ -செய்ய வல்லதோ]
பரிமேலழகர் குறிப்புரை: காமத்திற்கு அதுவும் இல்லை என்பாள், வாளா 'சுடல்' என்றாள். அகறல்: நுகராமை. 'சுடல்' என்பது முன்னும் கூட்டப்பட்டது. 'தீயினும் கொடியதனை யான் ஆற்றுமாறு என்னை' என்பதாம். [அதுவும் - மந்திர மருந்துகளால் தப்பிக்கச் செய்தலும்; வாளா-யாதொரு சிறப்படையும் தாராது; 'சுடல்' என்பது சுடின் (சுடுமாயின்) என்பதனோடும் சேர்க்கப்பட்டது; யான் ஆற்றுமாறு என்னை - யான் பொறுக்கும் வகை எப்படி]
'காமநோய்போல, நீங்கினாற் சுடவல்லதோ தீ' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'காமநோய் போல விட்டாலும் சுடுமோ?', 'காமத் தீயைப் போல் தொடுதலை விட்டுச் சென்றால் சுடுகின்ற தன்மையை உடையதாகுமோ? (ஆகாது).',
'காம நோயைப் போலப் பிரிந்தாற் சுடவல்லதோ?', 'காதல் நோய் போல தன்னை நீங்கினால் சுடுதல் கூடுமோ?' என்றபடி பொருள் உரைத்தனர்.
காதல்நோய் போலத் தன்னை நீங்கினால் சுடவல்லதோ தீ? என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
தொட்டால் சுடுமேயன்றி காதல்நோய் போலத் தன்னை விடின்சுடல் ஆற்றுமோ தீ? என்பது பாடலின் பொருள்.
'விடின்சுடல் ஆற்றுமோ' குறிப்பது என்ன?
|
தொட்டாலும் விட்டாலும் சுடுவது காமத்தீ.
தன்னைத் தொட்டால் சுடுவதன்றி, காமம் போலத் அதனை அகன்றாலும் சுடும் ஆற்றல் நெருப்புக்கு உண்டோ?
காட்சிப் பின்புலம்:
கணவர் கடமை கருதி பிரிந்து சென்றுவிட்டார். தொலைவாகக் சென்றுள்ளதால் திரும்பி வரும் காலமும் நீண்டதாகும். இங்கு தலைவிக்கு அவரது பிரிவைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.
'உன்னைவிட்டுப் பிரிந்துசெல்லமாட்டேன் என்பதைக் கூறுவதானால் உரையுங்கள், வேறு ஏதாவது சொல்வதானால் அப்பொழுது நான் உயிரோடு இருக்கமாட்டேன்' என்றாள்;
'இப்பொழுது அவரது பார்வை பிரிவை உணர்த்துவதால் துன்பமாக உள்ளது, முன்பு அன்புடன் வந்து சேர நினைப்பார்'; என்கிறாள்.
'பிரிவு இருக்கத்தான் செய்யும் என்பதை உணர்ந்தவள்தான் என்றாலும் பிரிவைத் தாங்க முடியவில்லையே'; எனக் கூறுகிறாள்;
'உன்னைவிட்டுப் பிரியேன் என்று உறுதியளித்தவரே பிரிகிறாரே, அவர் சொன்னதை மெய் என்று நம்பியது என் தவறா' எனக் கேட்கிறாள்;
'அவர் போகவேண்டாம் என்று தடுங்களேன்; அவர் பிரிந்துசென்றால் என் உயிர் போய்விடும்' என வருந்தியுரைத்தாள்;
'தன்னைவிட்டு அகன்று செல்லும் அளவுக்குக் கல்மனம் கொண்டவர் திரும்பி வந்து அளிசெய்வாரா?' எனத் தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள்;
'மணிக்கட்டைத் தாண்டாதிருந்த வளையல்கள் இப்பொழுது கழன்று கீழே விழுந்திடும் நிலைக்கு வந்துவிட்டன; உலகோர் என் நிலைமையை எளிதாக அறிந்துகொள்வார்களே!' எனச் சொல்லிக்கொண்டிருக்கிறாள்;
'ஒத்த உணர்வு உள்ளவர்கள் இல்லா ஊரில் வாழ்தல் துன்பமுடையதாகும்; அதைவிடப் பெருந்துன்பமானது தம் காதல்கணவரை விட்டுப்பிரிந்து தனிமையில் இருப்பது' என்கிறாள்.
இவ்வாறகத் தலைவர் பிரிந்து செல்லும் வேளையும் அதன் பின்னரும் நடந்த நிகழ்வுகளை நினைத்துக்கொண்டிருக்கிறாள்.
இக்காட்சி:
பிரிவுத் தீ தன்னைச் சுட்டெரிப்பதை உணர்கிறாள் தலைவி. நெருப்பில் வதைபடுவதுபோல காமநோயால் வாடுகிறாள் அவள். சுடும் தன்மையில் தீயும் காமமும் ஒன்றுதானெனினும் தீயானது தொட்டால் தான் சுடும். காமமோ தொடாமல் விலகி நின்றாலும் சுடும். தலைவர் நீங்கிப் போனபின் காதல்தீ இன்னும் மிகுந்து தலைவியின் உள்ளே சுடுகிறதே! இயற்கை நெருப்புக்கு விட்டுப்போனால் சுடும் ஆற்றல் இல்லையே என்று காமத்தீயை வியக்கிறாள் அவள்.
தீயினை அணுகினால் அது மிகவும் சுடும். அதே தீயைவிட்டு விலகினால் தீயின் வெட்பத்தை நம்மால் துய்க்க முடியாது. குளிர்வேளையில் தீக்காய்வோர் அகலாது அணுகாது தீக்காய்வர். ஒருவர் தொட்டால் தான் நெருப்புச் சுடும்; அதனின்று நீங்கினால் சுடமாட்டாது. கணவர் மீதுள்ள தீராத காதலினால் வந்த இக்காமத்தீ, அவர் தலைவியை விட்டு அகன்றாலும் சுட்டு எரிக்கின்றதாம்! அதாவது அவர் பிரிவால் மிகுந்த துன்பும்உறுவதாகத் தலைவி கூறுகிறாள். 'காமநோய் தீயினும் கொடிதன்றோ?' என்று கேட்கிறாள். காதல்கணவர் பிரிவு தீயினை விட கொடியதாயிருக்கிறது அவளுக்கு.
விலகினால் சுடுவது காமத் தீ என்னும் இக்குறட்கருத்தைக் கம்பரும் எடுத்தாண்டுள்ளார். கைகேயின் விருப்பப்படி இராமன் காடேக ஆயத்தமாகிறான். சீதையும் உடன் வருவேன் என்கிறாள். அப்பொழுது நெருப்புப் போன்ற வெம்மையோடு கல்லும் முள்ளும் பொருந்திய காட்டில் உன் மலரடியால் நடத்தல் இயலாது. ஆகவே உடன் வரவேண்டாம் என்கிறான் இராமன். அதற்குச் சீதை 'உன்னைவிட்டு பிரிந்திருக்கும் துன்பத்தைக் காட்டிலும் காடு சுடவல்லதோ' என்கிறாள். அப்பாடல்:
‘பரிவு இகந்த மனத்தொடு பற்று இலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு நின்
பிரிவினும் சுடுமோ பெருங்காடு? ‘என்றாள். (கம்ப இராமாயணம், அயோத்தியா காண்டம், நகர் நீங்கு படலம் 221 பொருள்: உன்னால் வரும் பிரிவுத் துயராகிய வெப்பத்துக்கு ஊழிக்காலத்துச் சூரிய வெப்பமும்நிகராகாது; எனவே, ‘பிரிவினும் சுடுமோ பெருங்காடு’ என்றாள்.)
ஓரே எழுத்தைக் கடைசி சீராகக் கொண்டு முடிகிறது இக்குறள் என்பது அறியத்தக்கது.
|
'விடின்சுடல் ஆற்றுமோ' குறிப்பது என்ன?
'விடின்சுடல் ஆற்றுமோ' என்றதற்கு நீங்கினாற் சுடவற்றோ, விட்டால் சுடவல்லதோ, விட்டு நின்ற காலத்து வெவ்விதாகி நின்று உள்ளே சுடுதலை அறியுமோ, தன்னை அகன்றால் தப்பாது சுடுதலை ஆற்றவற்றோ? மாட்டாது, தன்னை விட்டு நீங்கியபொழுது சுடவல்லதாகுமோ?, விட்டு நீங்கினால் சுடும் ஆற்றலுடையதன்று, விட்டாலும் சுடுமோ?, நீங்கினாலும் சுட வல்லதோ?, விட்டுப் பிரிந்த உடனே சுடுமா?, தொடுதலை விட்டுச் சென்றால் சுடுகின்ற தன்மையை உடையதாகுமோ? (ஆகாது), பிரிந்தாற் சுடவல்லதோ?, தன்னை நீங்கினால் சுடுதல் கூடுமோ?, தன்னை விட்டு நீங்கினுஞ் சுடவல்லதோ? இல்லையே!, தன்னைவிட்டு விலகினவரைச் சுடும் ஆற்றலுடையதோ? இல்லை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
கணவர் பணி காரணமாகத் தலைவியை விட்டு விலகிச் செல்ல வேண்டியிருந்தது. அவர் இல்லத்தில் இருக்கும்போது அவரைத் தீண்டியபோது வெப்பத்தை உணர்ந்தாள்.
இப்பொழுது அவர் அகன்று சென்றுவிட்டார். ஆனால் இப்பொழுது முன்னினும் மிகையாக உடல் வெம்மையுறுகிறது. இது காதல்நோய் தரும் சூடு. இச்சூழலில் தலைவி,
'தன்கிட்டே வந்து தொட்டபோதுதான் தீ புறத்தே சுடும்; அந்நெருப்புக்கு காதலர் விட்டுச்சென்ற காலத்து காமநோய் வெந்து நின்று உள்ளூறச் சுடும் ஆற்றல் உண்டோ?' என வேதனை தெரிவிக்கிறாள்.
நீங்கினால் சுடும்; நெருங்கினால் குளிரும் (நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்.... (1104) தீயைப் பெற்றவளான தலைவி 'காமத்தீ விடில் சுடும் புதுமைத் தன்மையது; தீயினும் கொடியது' என்கிறாள் இங்கு.
விடின் சுடல் ஆற்றுமோ என்பதற்கு நீங்கினால் சுடவல்லதாகுமோ என்பது பொருள்.
|
தொட்டால் சுடுமேயன்றி காதல்நோய் போலத் தன்னை நீங்கினால் சுட வல்லதோ தீ? என்பது இக்குறட்கருத்து.
பிரிவாற்றமையால் தொடாமலே சுடும் காமத்தீ தான் கொடுமையானது என வருந்துகிறாள் தலைவி.
தீ தொட்டால் சுடுமே யன்றிக் காதல் நோய் போல நீங்கினாலும் சுட வல்லதோ?
|