இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1153அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோர் இடத்துஉண்மை யான்

(அதிகாரம்:பிரிவாற்றாமை குறள் எண்:1153)

பொழிப்பு (மு வரதராசன்): அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ளபடியால், அவர் 'பிரியேன்' என்று சொல்லும் உறுதிமொழியை நம்பித் தெளிவது அரிது.

மணக்குடவர் உரை: --------------------------------------------------

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) அறிவு உடையார் கண்ணும் - பிரியேன் என்ற தம் சொல்லும் நம் பிரிவாற்றாமையும் அறிதலுடையராய காதலர் கண்ணும்; ஓர் இடத்துப் பிரிவு உண்மையான் - ஒரோவழிப் பிரிவு நிகழ்தலான்; தேற்றம் அரிது - அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டு அன்புடையார் எனத்தேறும் தேற்றம் அரிதாயிருந்தது.
(அரோ: அசைநிலை. உம்மை உயர்வு சிறப்பின்கண் வந்தது.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: பிரிந்து போகிறதாகச் சொல்லுகிற கணவனிடத்தில் மனைவி கொண்டுள்ள உண்மையான கற்பினால் அவள் அறிவுடைய பெண்னாக இருந்தாலும் கணவனைப் பிரிந்திருப்பதில் வருத்தப்படாமல் தேற்றியிருப்பது முடியாத காரியம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறிவுடையார் கண்ணும் பிரிவு ஓர்இடத்து உண்மையான் தேற்றம் அரிது அரோ.

பதவுரை: அரிது-அருமையானது, கடினம்; அரோ-(ஈற்றசை); தேற்றம்-ஆறுதல், தெளிதல்; அறிவுடையார் கண்ணும்-அறிந்தவரிடத்தும், அறிவு உடையாரிடத்திலும்; பிரிவு-பிரிவு; ஓர் இடத்து-ஒரோவழி, ஓர்இடத்தில், ஒரு காலத்தில், ஒரு சமயத்தில்; உண்மையான்-உள்ளதால், உள்ளபடியால்.


அரிதரோ தேற்றம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: உலகத்து ஒருவரைத் தேறும் தேற்றம் அரிதே;
பரிதி: எக்காலத்தினும் அரிது என்றவாறு.
காலிங்கர்: தோழி! உலகத்தினில் நம் உற்றார் சுற்றம் நட்டார் என்னும் அவரவர்மாட்டும் தேறும் தேற்றம் அரிது;
பரிமேலழகர்: (இதுவும் அது.) அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டு அன்புடையார் எனத்தேறும் தேற்றம் அரிதாயிருந்தது; [தேறும் தேற்றம் - தெளியும் தெளிவு]
பரிமேலழகர் குறிப்புரை: அரோ: அசைநிலை.

'நம்மாட்டு அன்புடையார் எனத்தேறும் தேற்றம் அரிதாயிருந்தது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நம்புதல் அரிதாம்', 'நம்புதல் அரிது.', 'நம்புதல் கடினமாயிருக்கிறது.', 'தெளியும் தெளிவு அரிது' என்ற பொருளில் உரை தந்தனர்.

ஆறுதல் கொள்வது கடினம் போலும் என்பது இப்பகுதியின் பொருள்.

அறிவுடையார் கண்ணும் பிரிவோர் இடத்துஉண்மை யான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: அறிவுடையார் மாட்டும் ஒரு காலத்தே பிரிவு உண்டாம் ஆதலான் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: 'தலைமகன் பிரிந்தான்' என்று கேட்டவிடத்து 'நின்னிற் பிரியேன்' என்ற சொல்லை உட்கொண்டு தலைமகள் கூறியது.
பரிதி: அறிவுடையாரிடத்துப் பிரிவு.
காலிங்கர்: மற்று இதற்கு என்னைக் காரணம் எனின் இன்றியமையாத தன்மையராகிய இனிய அறிவுடையார் மாட்டுங்கூடப் பிரியின் வாழார் பேதையரெனாது பிரிவு என்பதும் ஒரு நிலத்து உளதாகலான் என்றவாறு.
பரிமேலழகர்: பிரியேன் என்ற தம் சொல்லும் நம் பிரிவாற்றாமையும் அறிதலுடையராய காதலர் கண்ணும் ஒரோவழிப் பிரிவு நிகழ்தலான்
பரிமேலழகர் குறிப்புரை: உம்மை உயர்வு சிறப்பின்கண் வந்தது.

'அறிவுடையார் மாட்டும் ஒரு காலத்தே பிரிவு உண்டாம் ஆதலான்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிரியேன் என்றவர் ஒரு சமயம் பிரிதலால் நன்கு தெரிந்தவரையும்', 'அறிவுடைய காதலரிடத்தும் ஓரோவழி பிரிவு உள்ளபடியால், அவர் பிரியேன் என்று கூறும் சொல்லையும் அன்புச் செயலையும்', 'பிரியேன் என்றதும் பிரிவாற்றாமை கொடிதென்றதும் அறியவல்ல காதலரிடத்தும் ஓரிடத்தில் அல்லது ஒருகாரணம் பற்றிய பிரிவு காணப்படுதலால், அவரை முழுதும்', பிரியேன் என்ற தம் சொல்லும் நம் பிரிவு ஆற்றாமையும் அறிதல் உடையராய் காதலர் கண்ணும் ஓரோவழிப் பிரிவு நிகழ்தலால், அவர் அன்புடையார் என' என்றபடி பொருள் உரைத்தனர்.

ஒரு காலத்து பிரிவு உண்மை அறிதல்உடையவரிடத்தும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒரு காலத்து பிரிவு உண்மை அறிதல்உடையவரிடத்தும் ஆறுதல் கொள்வது கடினம் போலும் என்பது பாடலின் பொருள்.
'அரிதரோ தேற்றம்' என்றால் என்ன?

உலகியல் புரிந்தவர்களுக்கும்கூட பிரிவு தாங்கக்கூடியதாக இல்லையே என்று காதலி புலம்புகிறாள்.

கணவன் -மனைவியிடை ஒவ்வோர் சமயத்தில் பிரிவு உண்டாகவே செய்யும் என்பதை அறிந்திருந்தாலும், அவர்கள் ஆறுதல் கொள்வது கடினமாகவே இருக்கிறது.
காட்சிப் பின்புலம்:
இல்வாழ்க்கையைப் புதுவதாகத் தொடங்கி மனம் ஒன்றிணைந்து கணவனும் மனைவியுமாகத் தலைவனும் தலைவனும் வாழ்ந்து வருகின்றனர். தலைவன் கடமை காரணமாகப் நீண்ட பயணம் மேற்கொள்ளவிருப்பதால் பிரிந்து செல்ல வேண்டியிருக்கிறது. அவளிடம் சொல்லிவிட்டுத்தான் செல்கிறான். ஆயினும் அவனுக்கு மனதார நல்விடை கொடுக்க முடியவில்லை தலைவிக்கு. 'போய் விரைவில் திரும்பி வந்துவிடுவேன் எனச் சொல்வதாக இருந்தால், நீங்கள் திரும்பி வரும்வரை வாழ்ந்திருக்கக் கூடியவருக்கு அச்செய்தியைச் சொல்லுங்கள்; என்னால் அதைத் தாங்கமுடியாது' எனக் காதலன் பிரிவு என்பது தன் சாவு போன்றதே என்பதை உணர்த்திக் கொண்டிருக்கிறாள். பிரிந்து செல்லும் சமயம் வந்துவிட்டது. அவனும் அவளும் கட்டித் தழுவிக் கொள்கின்றனர். காதலனுடன் கூடுவது தலைவிக்கு எப்பொழுதும் இன்பம் தரக்கூடியதுதான். எனவே தழுவும் நோக்கில் அவன் பார்த்தது இன்பம் பயந்தது. ஆனால் இப்பொழுது அது பிரிவுக்கு முன் உள்ள முயக்கம் ஆதலால் அது அவள் மனத்துள் அச்சத்தை உண்டாக்கி பெரியதோர் துன்பத்தைத் தந்ததாயிருக்கிறது.

இக்காட்சி:
இல்லறம் மேற்கொண்ட கணவன் -மனைவி இருவரிடை பிரிவென்பது அவ்வப்பொழுது நிகழும் என்பது உண்மையாக இருக்கிறது. பிரிவுத் துயரம் எத்துணை கொடியது என்பதை அவர்கள் அறிந்தவர்களே. ஆயினும் கடமைகளைச் செய்வதற்காகத் துன்பங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர் என்ற உணர்தலும் இருவருக்கும் உண்டு. இவர்கள் இருவருமே அறிவுடையார் எனக் குறிக்கப்பெறுகின்றனர். பிரிவு உண்டு என்பதை அறிந்தவள் ஆயினும் பிரிவு நிகழும்போது தலைவியால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை; ஆறுதல் அடையக்கூடவில்லை. எனவே அவள் கூறுகிறாள்: 'காதலரிடத்து ஓரோவழி பிரிவு உள்ளபடியால், அறிவுடையவர்க்கும் அதைப் பொறுத்தல் கடினம்.' பிரிவு ஒரு காலத்தில் நேரும் என்று அறிந்த எம் போன்றோர்க்கும், பிரியும்வேளை வந்தவிடத்து ஆறுதல் கொள்வது கடினம் போலும் என்று தன்னிரக்கமாகத் தலைவி கூறுகிறாள். அவளது வருத்தமெல்லாம் அன்பு கருதியேயாம் என்பது தெளிவு.
‘உண்மையான்’ என்ற சொல் பிரிவு இன்றியமையாதென்பதை உணர்த்திற்று.

இக்குறளுக்கு 'நின்னிற் பிரியேன்' என்று அன்று உறுதி கூறினார் நம் தலைவர். அவர் கூறுவது உண்மைதான் என்று தெளிந்து இருந்தோம். எல்லாம் அறிந்த அவரே இன்று சொன்னதற்கு மாறாக நடப்பாரேயானால் யாரைத்தான் நம்புவது? எவரையும் நம்பி ஒழுக முடியாது போலும்!' என்றவாறு தலைவி சொல்வதாகவே பலரும் உரை கூறினர். நாமக்கல் இராமலிங்கம் ஏனைய உரையாசிரியர்களிடமிருந்து மாறுபட்ட ஓர் உரை தருகிறார். 'பிரிந்து போகிறதாகச் சொல்லுகிற கணவனிடத்தில் மனைவி கொண்டுள்ள உண்மையான கற்பினால் அவள் அறிவுடைய பெண்ணாக இருந்தாலும் கணவனைப் பிரிந்திருப்பதில் வருத்தப்படாமல் தேற்றியிருப்பது முடியாத காரியம்' என்று விளக்குகிறார். கணவனிடத்தில் உள்ள உண்மையான அன்புடைய தன்மையினால் அறிவு மிகுந்த பெண்களுக்கும் கணவனைப் பிரிந்து கலக்கமில்லாமல் இருக்க முடியாது என்பது இவர் உரையின் பொருள்.
இக்குறளிலுள்ள 'தேற்றம்' என்ற சொல்லுக்குத் தெளிவு என்று பெரும்பான்மையினர் பொருள் கொண்டதால் இடர் உண்டாயிற்று எனத் தோன்றுகிறது. தேற்றம் என்பதற்கு ஆறுதல் என்ற பொருளும் உண்டு. இன்றும் தேற்றுதல் என்பது ஆறுதல்படுத்துவது என்ற பொருளில் வழக்கில் உள்ளது. நாமக்கல் இராமலிங்கம் உரை இப்பொருளையே கொண்டுள்ளதை அறியலாம்.

'அரிதரோ தேற்றம்' என்றால் என்ன?

'அரிதரோ தேற்றம்' என்ற தொடர்க்கு உலகத்து ஒருவரைத் தேறும் தேற்றம் அரிதே, உலகத்தினில் நம் உற்றார் சுற்றம் நட்டார் என்னும் அவரவர்மாட்டும் தேறும் தேற்றம் அரிது, அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டு அன்புடையார் எனத்தேறும் தேற்றம் அரிதாயிருந்தது, உறுதிமொழியை நம்பித் தெளிவது அரிது, உறுதிமொழிகளை நம்புவது அரிதாகும், நம்புதல் அரிதாம், பிரியேன் என்று கூறும் சொல்லையும் அன்புச் செயலையும் நம்புதல் அரிது, தெளிந்து நம்புவது என்பது அரிதேயாம், முழுதும் நம்புதல் கடினமாயிருக்கிறது, அன்புடையார் எனத் தெளியும் தெளிவு அரிது, யாரைத்தான் நம்புவது என்று தெரியவில்லை, நம்மிடம் அன்புடையவர் என்று தெளிதல் அரிதாயிருக்கிறது, நம்பாற் பிரியாத அன்புடையரெனத் தெளியும் உறுதி அரிதாயிருந்தது, அவர் பிரியேன் என்று கூறும் சொல்லை நம்புவதற்கில்லை, அவர் சொல்வதை எப்படி நம்புவது? என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அரிதரோ என்றது அரிது+அரோ என்று விரியும். அரிது என்பதற்கு அருமை என்பது பொருள். கடினம் என்றும் கொள்வர். அரிதரோ என்பது கடினம் போலும் எனப் பொருள்படும்.
தேற்றம் என்ற சொல்லுக்கு தெளிவு கொள்ளுதல், கலங்காமை, உறுதி எனப் பல பொருள் உள. உரையாசிரியர்கள் அனைவரும் தெளிவு, உறுதி என்ற பொருள் கொண்டனர். ஆனால் தேற்றம் என்றதற்கு ஆறுதல் என்ற பொருளும் உண்டு. அதிகாரம் பிரிவாற்றாமை அதாவது பிரிவைப் பொறுத்துக் கொள்ளாமை. எனவே ஆறுதல் என்ற பொருள் இங்கு பொருந்தும்.
'அரிதரோ தேற்றம்’ என்பதற்கு 'நம்மாட்டு அன்புடையார் எனத்தேறும் தேற்றம் அரிதாயிருந்தது' எனத் தலைவன்மேல் வைத்தெழுதினார் பரிமேலழகர். உலகில் யாரையும் நம்புதற்கு முடியாது எனப் பொதுப்பட காலிங்கர் உரைத்தார்.
நான் எப்படி தேற்றம் கொள்வது அதாவது ஆறுதல் அடைவேன் என்று தலைவி ஆற்றாமல் கூறுகிறாள்.

அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு (தெரிந்து வினையாடல் 513 பொருள்: அன்பு, அறிவு, செயலாற்றும்போது கலங்காமை (தெளிவு), ஆசையின்மை இந்நான்கும் செம்மையாக உடையானைத் தேர்வு செய்ய வேண்டும்) என்ற குறளிலும் தேற்றம் என்ற சொல் பயிலப்பட்டுள்ளது.

'அரிதரோ தேற்றம்' என்ற தொடர்க்கு ஆறுதல்கொள்வது கடினம் போலும் என்பது பொருள்.

ஒரு காலத்து பிரிவு உண்மை அறிதல்உடையவரிடத்தும் ஆறுதல் கொள்வது கடினம் போலும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

எல்லாம் அறிந்தவர்க்குக் கூட பிரிவாற்றமையால் தேறுதல் இல்லை.

பொழிப்பு

பிரிவு உண்மையை அறிந்தவரிடத்தும் பிரிவைத் தேற்றுதல் கடினம் போலும்.