தகையணங்குறுத்தல் என்பதனை 'அணங்கு தகை உறுத்தல்' என்று மாற்றியும் வாசிப்பர். 'அணங்கு' என்றால் பெண்; 'தகை' என்பது அழகு முதலியன; 'உறுத்தல்' வருத்தத்தை உண்டாக்குதல்; எனவே இச்சொற்றொடர் 'மங்கையின் அழகு முதலியன வருத்தத்தைச் செய்தல்' என்ற பொருள் தந்து நிற்கிறது என்று சொற்பொருள் விளக்கம் தந்தனர். அமைதியாக இருந்த தலைமகனின் உள்ளம் தலைவியைக் கண்டபின் வருந்தத் தொடங்கியது என்பதாம்.
இச்சொற்றொடர்க்கு 'தகுதியுடைய பெண்ணின் அழகு துன்புறுத்தல்' என்றும் பொருள் கொள்வர். தகுதி என்பதற்குப் பல்வேறு மாறுபட்ட வரையறைகள் கூறப்பட்டுள்ளன. தகுதி என்பது பருவினாலும் (பருவத்தாலும் அதாவது வயதாலும்) உருவினாலும் (உருவ அமைப்பாலும் அல்லது எழில்நலன்களாலும்) திருவினாலும் (செல்வநிலையாலும் அல்லது சமுதாயப் படிநிலையாலும்) ஒத்தவரான ஆடவனும் பெண்ணும் எனக் கொள்வது மரபான விளக்கம். தலைவியின் உடல்அழகு மட்டும் அவனைக் கவரவில்லை. அவளது உள்ள அழகும் ஈர்ப்பை உண்டாக்கியது என்று இவ்வதிகாரத்தில் வள்ளுவர் குறிப்பால் உணர்த்தியமை நோக்கத்தக்கது. நடுங்கும் துன்பத்தை உண்டாக்கும் அவளது பார்வையைக் கண்டும் இருமுறை 'பெண்டகை' எனத் தலைவன் சொல்வது அவளது இனிமையான பெண்மைப் பண்புகள் மேலோங்கி இருந்தனவாதலால்தான். தகையணங்குறுத்தல் அதிகாரப் பாடல்களை நோக்கும்போது தகுதி என்பது 'அழகிலும் பண்பிலும்' ஒத்த என்றாகிறது.
தலைவனும் தலைவியும் இதுவரை ஒருவரை மற்றொருவர் அறியாதவர்கள். மிகத்தூய்மையான ஓர் ஈர்ப்பாற்றல் அவர்களை ஆட்கொண்டுவிட்டது.
திருமணத்துக்கு முன்னரே காதல் உணர்வைப் பெற்றதால் இதனைக் களவு அதாவது அன்பால் ஒருவர் மனதை ஒருவர் திருடிக் கொண்டநிலை என்பர். அவன் தலைவியின் அழகுக்கும் பண்புநலன்களுக்கும் அடிமையாகும் நிலையிலேயே காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதிகாரத்துக் குறட்பாக்கள் அனைத்துமே அவள் அழகைக் கண்டு அவன் மயங்கிச் சொல்லும் கூற்றுக்களைக் கொண்டதாகவே உள்ளன.
இவன் அவளைப் பார்த்து வியந்து கொண்டிருக்கும்போது, தலைவி என்ன நினைக்கிறாள், அவளது எதிர்ச்செயல் என்னவாக இருந்தது என்பதனை அவள் கண்கள் காட்டிக்கொண்டிருக்கின்றன.
ஒரு பெண் தனக்குத் தெரியாமல் ஓர் ஆடவன் தன்னை வைத்தகண் வாங்காமல் பார்ப்பதை விரும்புவதில்லை. எனவே இங்கு தலைவியானவள் அறிமுகம் ஆகாத தலைவனை மிகுந்த சினத்துடன் பார்க்கிறாள். அது கொடுந்தெய்வம் தன் படையுடன் வந்து தாக்கியது போன்றிருந்தது; பார்த்தவர்கள் உயிரையே உண்ணும் பெரிய கண்கள் கொண்ட கூற்றுவன் பார்வை போன்றிருந்தது; அவள் புருவங்களை மேலுயர்த்தி கண்களை உருட்டிப் பார்த்தது தன்னை நடுங்க வைத்தது என்று அதை விளக்குகிறான் அவன்.
அவள் சினம்கொண்டவளாக மட்டும் தோன்றவில்லை. மகிழ்ச்சி அளிப்பவளாகவும் இருந்தாள்.
அவளது கண்கள் மானின் கண்கள்போல் அழகு மிகுந்த தோற்றம் கொண்டன. அவளது பிணைநோக்கும் நாண் குணமும் அவளுக்கு நல்ல அணிகலன்களாக இருந்தன.
அந்தப் பெண்மகளின் அழகும் நாணுடைமையும் அவள்மேல் தலைவன் அன்பு கொள்ளச் செய்கின்றன.
கூற்றத்தின் நோக்காக முதலில் தலைவனைப் பார்த்தது பின் மானின் மருண்ட பார்வையாய் மாறியது. இது தலைவியின் உள்ளத்தினுள்ளும் அவன் மீது காதல் உணர்ச்சி அரும்பத் தொடங்கியதைச் சொல்வதாக உள்ளது.
அதிகாரத்துப் பத்துப் பாடல்களையும் தலைவன் கூற்றாகவே கொள்ள முடியும். ஆனால் உண்டார்கண் அல்லது....(1090) என்ற இறுதிப்பாடலைத் தலைவன்-தலைவி இருவர் கூற்றாகக் கொள்ள இடமிருக்கிறது. இதனால்தான் பரிப்பெருமாள் 'தகையணங்குறுத்தலாவது தலைமகனும் தலைமகளும் எதிர்ப்பட்ட இடத்துத் தலைமகளது கவின் தலைமகனை வருத்துதலும் தலைமகனது கவின் தலைமகளை வருத்துதலும்' என்று தகையணங்குறுத்தல் என்னும் அதிகாரத் தலைப்பை விளக்கினார் போலும்.
காமத்துப்பால் முழுக்கவே நாடக ஆக்கம்தான். தகையணங்குறுத்தல் அதிகாரப் பாடல்களையும் நாடகக் காட்சிகளாக நோக்குவது சுவை பயக்கும்.
தகையணங்குறுத்தல் அதிகாரத்தின் நாடகக் காட்சிகள் இவை:
அவளைக் கண்ட மாத்திரத்திலேயே உள்ளத்தைப் பறிகொடுத்துவிட்ட தலைவன், அவளுடைய அழகு தம்மைத் துன்புறுத்தும் வகையை எடுத்துரைக்கிறான்.
அவளது அழகு பற்றி அணங்கோ என்றும் சாயல் பற்றி மயிலோ என்றும் மொத்தத்தில் மாதர்தானோ என்று வியக்கிறான்.
அடுத்த காட்சியில் இருவரும் ஒருவரை ஒருவர் ஒரே நேரத்தில் நோக்கினார்கள். அப்பொழுது அவள் அவனைப் படைகொண்டு தாக்குவது போல இருந்தது.
இவனது கணையைச் சமமாக எதிர்கொள்ள எதிர்பார்வையாக அப்படிப் பார்க்கிறாள். இருவரது நோக்கும் முன்பின் அறிமுகமில்லாத ஓர் ஆணும் பெண்ணும் இயல்பாகப் பார்க்கும் பார்வை அல்ல என்பதையும் இக்காட்சி உணர்த்தியது. அப்பொழுது அவளது பெண்மை நிறைந்த தன்மையையும் உணர்கிறான். அதே நேரத்தில் அவளது கண்கள் கூற்றுவன் அவன் உயிரைக் கவர வந்தது போல் இருந்தது என்று வேதனை தாங்காது அரற்றுகிறான். கூற்று, மனிதக்கண், மருண்ட பார்வை என மாறி மாறி தோற்றமளித்து அவனை வதைக்கிறாள் என்கிறான். அவளது கண்களை மறைத்துத் தோற்றிய புருவ முரிவும் அந்தச் சுளித்த பார்வையும் அவனை நிலைகொள்ளாதபடி செய்கிறது. மேலும் அவளது முலைகள் பகுதியானது அவன் கண்ணில் தென்படுகின்றன. அப்போது சொல்கிறான்: "அவள் அணிந்துள்ள மேலாடை விலகினால் அவை தன்னைக் கொல்லுமே' என்று. அதன்பின் அவள் முக அழகில் துவண்டு, 'தன் வீரம் எல்லாம் எங்கே மறைந்தது?' என்று அவளிடம் சரணடைந்ததை ஒப்புகிறான். தலைமகள் பேசாமல் நின்று என்ன செய்வதென்று அறியாது தன் அணிகலனைத் தொட்டு நிற்கின்றாள். அப்பொழுது அவன் வினவுவது, 'பார்வையும் நாணமும் இவளுக்கு அழகு கூட்டும்பொழுது வேறு அணிகள் என்ன கருதி அணிந்தனர்?' என்று. இப்பொழுது, ஒருவரை ஒருவர் பார்ப்பதிலே பெரும் மகிழ்ச்சியும் மயக்க உணர்வும் உண்டாவதைச் சொல்கின்றனர். இவ்வாறு இருவர் உள்ளங்களும் நெருங்கி வருவதைச் சுருக்கமாகவும் இனிமையாகவும் சொல்வன தகையணங்குறுத்தல் அதிகாரக் குறட்பாக்கள்.