இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1086



கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்

(அதிகாரம்:தகை அணங்கு உறுத்தல் குறள் எண்:1086)

பொழிப்பு (மு வரதராசன்): வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

மணக்குடவர் உரை: வளைந்த புருவங்கள் தாம் செப்பமுடையனவாய் விலக்கினவாயின் இவள் கண்கள் அவற்றைக் கடந்து போந்து எனக்கு நடுங்குந் துன்பத்தைச் செய்யலாற்றா.
இது மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டுத் தலைமகள் தலையிறைஞ்சிய வழி கண்ணை மறைத்துத் தோற்றிய புருவ முறிவு கண்டு அவன் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது) கொடும் புருவம் கோடா மறைப்பின் - பிரியா நட்பாய கொடும் புருவங்கள்தாம் செப்பமுடையவாய் விலக்கினவாயின்; இவள் கண் நடுங்கு அஞர் செய்யல - அவற்றைக் கடந்து இவள் கண்கள் எனக்கு நடுங்கும் துயரைச் செய்யமாட்டா.
(நட்டாரைக் கழறுவார்க்குத் தாம் செம்மையுடையராதல் வேண்டலின் 'கோடா' என்றும், செல்கின்ற அவற்றிற்கும் உறுகின்ற தனக்கும் இடைநின்று விலக்குங்காலும் சிறிது இடைபெறின் அது வழியாக வந்து அஞர் செய்யுமாகலின் 'மறைப்பின்' என்றும் கூறினான். நடுங்கு அஞர் - நடுங்கற்கு ஏதுவாய அஞர். 'தாம் இயல்பாகக் கோடுதல் உடைமையான் அவற்றை மிகுதிக்கண் மேற்சென்று இடிக்கமாட்டா' வாயின என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது.)

இரா சாரங்கபாணி உரை: வளைந்த புருவங்கள் வளையாமல் செம்மையாய் நின்று தடுத்தால், அவற்றைத் தாண்டி இவள் கண்கள் எனக்கு நடுங்கக்கூடிய துன்பத்தைச் செய்யமாட்டா.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கொடும்புருவம் கோடா மறைப்பின் இவள் கண் நடுங்கஞர் செய்யல.

பதவுரை: கொடும்புருவம்-கொடிய புருவம், வளைந்த புருவம்; கோடா-கோணாமல், வளையாமல், வளைந்து; மறைப்பின்-மறைத்தால், விலகினால்; நடுங்கு-நடுங்கச் செய்யும், அஞ்சத்தகுந்த; அஞர்-கொடுந்துயரம்; செய்யல-செய்யமாட்டா, உண்டாக்கமாட்டா; மன்-(ஒழியிசை); இவள்-இவளது; கண்-விழிகள்.


கொடும்புருவம் கோடா மறைப்பின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வளைந்த புருவங்கள் தாம் செப்பமுடையனவாய் விலக்கினவாயின்;
பரிப்பெருமாள்: இக்கொடிய புருவம் இவள் கண்கள் என்னைத் துன்பம் செய்வதன் முன்பே கோடி மறைத்தனவாயின்;
பரிதி: வளைந்த புருவம் அழகு செய்து விரகம் விளைத்தபடியாலே;
காலிங்கர் ('மறப்பின்' பாடம்): இவளது கோடுதலுடைய புருவம் கோடாதவாய் மற்று அவ்வினை மறந்துளவாயின்;
பரிமேலழகர்: பிரியா நட்பாய கொடும் புருவங்கள்தாம் செப்பமுடையவாய் விலக்கினவாயின்; [செப்பம்-நடுவுநிலைமை உடைமை]
பரிமேலழகர் குறிப்புரை: நட்டாரைக் கழறுவார்க்குத் தாம் செம்மையுடையராதல் வேண்டலின் 'கோடா' என்றும், செல்கின்ற அவற்றிற்கும் உறுகின்ற தனக்கும் இடைநின்று விலக்குங்காலும் சிறிது இடைபெறின் அது வழியாக வந்து அஞர் செய்யுமாகலின் 'மறைப்பின்' என்றும் கூறினான். [கழறுதல்-இடித்துக் கூறல்; அது வழியாக-சிறுது இடைபெறுதல் வாயிலாக; அஞர்-துன்பம்]

கொடும்புருவம் என்றதற்கு மணக்குடவர், பரிதி, காலிங்கர் ஆகியோர் வளைந்த புருவம் என்று பொருள் கொண்டனர்; பரிப்பெருமாளும் பரிமேலழகரும் கொடும்புருவம் என்று உரைத்தனர். கோடா மறைப்பின் என்பதற்கு 'செப்பமுடையனவாய் விலக்கினவாயின்' என்று மணக்குடவர் சொல்ல, பரிப்பெருமாள் 'முன்பே கோடி மறைத்தனவாயின்' என்றார். பரிதி இத்தொடர்க்கு 'அழகு செய்து விரகம் விளைத்தபடியாலே' என உரை வரைந்தார். காலிங்கர் 'கோடாதவாய் மற்று அவ்வினை மறந்துளவாயின்' என்று உரை தருகிறார். பரிமேலழகர் 'கோடா மறைப்பின்' என்பதற்குப் பரிமேலழகரைத் தழுவிப் 'புருவங்கள்தாம் செப்பமுடையவாய் விலக்கினவாயின்' எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'வளைந்த புருவம் நேர்நின்று தடுப்பின்', 'வளைந்த புருவங்கள் இன்னும் வளைந்து இமைகள் கண்களைச் சிறுது மறைக்கும்போது', 'இவளது வளைத்த புருவம் வளையாது நேராக நின்று கண்களை மறைக்குமானால்', 'வளைந்த புருவங்கள் நடுநிலை தவறாமல் மறைத்தால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கொடிய புருவங்கள் வளையாமல் நேராக நின்று மறைத்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

நடுங்கஞர் செய்யல மன்இவள் கண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவள் கண்கள் அவற்றைக் கடந்து போந்து எனக்கு நடுங்குந் துன்பத்தைச் செய்யலாற்றா.
மணக்குடவர் குறிப்புரை: இது மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டுத் தலைமகள் தலையிறைஞ்சிய வழி கண்ணை மறைத்துத் தோற்றிய புருவ முறிவு கண்டு அவன் கூறியது.
பரிப்பெருமாள்: அதனக் கடந்து போந்து எனக்கு நடுங்கப்படும் துன்பஞ் செய்யலாற்றாவே அவை என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டு நாணமுற்ற தலைமகள் தலையிறைஞ்சிய வழி கண்ணை மறைத்துத் தோற்றிய புருவ முரிவு கண்டு தலைமகன் கூறியது.
பரிதி: காமுகர் நடுங்கத்தக்க துன்பம் விளைத்தது கண் என்றவாறு.
காலிங்கர்: நெஞ்சமே! யாம் இங்ஙனம் உன் நடுங்கு துயரஞ் செய்தல் இல்லை இவள் கண் என்றவாறு.
பரிமேலழகர்: அவற்றைக் கடந்து இவள் கண்கள் எனக்கு நடுங்கும் துயரைச் செய்யமாட்டா.
பரிமேலழகர் குறிப்புரை: நடுங்கு அஞர் - நடுங்கற்கு ஏதுவாய அஞர். 'தாம் இயல்பாகக் கோடுதல் உடைமையான் அவற்றை மிகுதிக்கண் மேற்சென்று இடிக்கமாட்டா' வாயின என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. [தாம்-புருவங்களாகிய தாம்; அவற்றை-கண்களை; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல்-தகாத செய்கை உண்டாயினவிடத்து முற்பட்டுச் சென்று கண்டித்து அறிவுரை கூறுதல்]

'இவள் கண்கள் நடுங்கும் துயரைச் செய்யமாட்டா' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு பொருள் கூறினர். விளக்கவுரையில் மணக்குடவர் 'தலைமகள் தலைகுனிந்தபோது' எனச் சொல்ல பரிப்பெருமாள் 'தலைமகள் நாணித் தலைகுனிந்தபோது' மறைத்துத் புருவ முறி(ரி)வு கண்டு தலைமகன் கூறியதாக உரை செய்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவள் கண்கள் என்னை நடுக்கா', 'இப்போது இவளுடைய பார்வை முன் போல் நான் அஞ்சி நடுங்கும்படியான துன்பத்தை உண்டக்குவதாக இல்லை', 'இவள் கண்கள் எனக்கு நடுங்குந் துன்பத்தை உண்டாக்க மாட்டா', 'இவள் கண்கள் நடுங்கும் துன்பத்தைச் செய்யமட்டா' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இவளது கண்கள் நடுக்கம்தரும் கொடுந்துன்பம் செய்யமாட்டாவே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கொடிய புருவங்கள் கோடா மறைப்பின் இவளது கண்கள் நடுக்கம்தரும் கொடுந்துன்பம் செய்யமாட்டாவே என்பது பாடலின் பொருள்.
'கோடா மறைப்பின்' குறிப்பது என்ன?

அப்பப்பா! என்னவொரு சினப்பார்வை தலைவியது!

கொடிய புருவம் நேராக நின்று கண்களை மறைக்குமானால், இவளது கண்கள் யாம் நடுங்குந் துன்பத்தைச் செய்ய மாட்டாவே!
காட்சிப் பின்புலம்:
தலைவன் தலைவியை முதன் முதலில் பார்த்து அவள் அழகுநலம், குணநலன்களில் தன்னைப் பறி கொடுக்கிறான்; முன் அறியா ஒருவன் தன்னைப் பார்க்கிறான் என்பதை உணர்ந்து அவளும் அவனைப் பார்த்தாள். தன் பார்வைக்கு அவள் எதிர் பார்வை வீசியது அவளுடன் ஒரு படையைக் கூட்டிக் கொண்டு வந்து தாக்கியதைப்போல் தலைவன் உணர்கிறான்; அவளுடைய பெண்ணியல்புகளும் பெரிய கண்களும் கூற்றுவன் வருத்தி அவனைக் கூறுபோடுகின்றது போன்று தோன்றினவாம். அவளுடைய அகன்ற கண்களே போர் ஆயுதங்களாகி, அவனது உயிர்பறிக்கும் தன்மையதாய், வருத்துகிறது என நினைக்கிறான் அவன். மென்மையான பெண்மையின் உடலில் உயிருண்ணும் விழிகளா? ஏன் இந்த முரண்? என்று வியந்து நிற்கிறான்.

இக்காட்சி:
இதுகாறும் அவனது எண்ண ஓட்டங்கள் கூறப்பட்டன; அவள் பார்த்தாள் எனச் சொல்லப்பட்டது ஆனால் அவளது எதிர்ச்செயல் இன்னும் தெரியவில்லையே. இப்பாடல் அதற்குக் குறிப்புத் தருகிறது. அவளது அழகும் கண்களும் தொடுக்கும் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் இருந்தவன் இப்பொழுது 'இவளது கொடிய புருவங்கள் நேராக இருந்து கண்களை மறைக்குமென்றால், அவை எனக்கு நடுங்கத்தக்க துன்பத்தைச் செய்ய மாட்டாவே!' எனச் சொல்கிறான். முன்னர் அவளது கண்களின் அழகைக் கண்டு வியப்புற்றவன், இப்பொழுது அவை மறைந்திருந்திருக்கலாமே என்கிறான். ஏன்?
புருவங்கள் கோடியபோது அவளது கண்கள் மறைக்கப்படாமல் முழுதாக விழித்துப் பார்த்தது அவனை நடுக்குறச் செய்ததாம். அவை கோடாது நேராக நின்று மறைத்திருந்தால் அவளது கொடும் பார்வையை அவன் காண நேர்ந்திருக்க வேண்டியிருந்திராது; அவன் வருந்தி நடுக்கம் உற்றிருக்கவும் மாட்டான்.
கொடிய புருவம் என்றதும், கண்கள் மறைக்கப்படாமல் தோன்றின என்றதும், அவள் புருவங்களை நெறித்து அவற்றை மிக உயர்த்தி அவனைச் சினத்துடன் பார்த்திருக்கிறாள் என்பதைச் சொல்கின்றன. புருவங்களை மேல்உயர்த்தியதால் அவளது அகன்ற பெரிய கண்கள் முழுமையாகத் தெரிந்தன. அக்கண்களுடன் சினப்பார்வை பார்த்தால் எப்படி இருக்கும்? புருவ நெறிக்கையுடன் சினம் கொண்ட கண்களை மேலும் கூராக்கிப் பார்த்தது தாங்கிக்கொள்ளாததாகி விட்டது. எவ்வளவு கொடிய நெறிப்பு அது!
எதனால் சினப்பார்வை? தலைவன்மேல் இன்னும் தலைமகளுக்குக் காதல் தோன்றாத நிலையில் உள்ள காட்சி இது. அயலான் ஒருவன் தன்னைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கின்றான் என்பதை அறிந்தவுடன் அவளுக்கு சினம் எழுகிறது. பெண்களுக்குத் தாம் அறியாமல் பிறர் தம்மை உற்றுப் பார்ப்பது ஏற்புடையது அல்ல. அவ்விதம் நோக்குபவர்களை அவர்கள் வெறுப்புடன்தான் பார்ப்பர். தலைவனோ விடாமல் அவளையே பார்த்துக்கொண்டு ஏதோதோ தனக்குள் பேசிக் கொண்டிருக்கிறான். இது அவளை மேலும் வெகுளச் செய்வதால் புருவங்களை நெறித்துத் தீப்பார்வை செலுத்துகிறாள்.
இக்குறள் 1082, 1083, 1084, 1085 ஆகிய பாடல்களோடு தொடர்புடையதாதலால் அவற்றை இணைத்தும் வாசிக்கலாம்.

மணக்குடவர் 'மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டுத் தலைமகள் தலையிறைஞ்சிய வழி கண்ணை மறைத்துத் தோற்றிய புருவ முறிவு கண்டு அவன் கூறியது' என்றார். பரிப்பெருமாள் இவ்வுரையுடன் 'நாணமுற்ற தலைமகள்' எனக் கூட்டி உரைக்கிறார். அதாவது 'இவள் புருவம் கோடிக் கண்ணை மறைத்தது. அதனால் அஞர்செய்திலது' என்று தலைவன் சொல்வதாக இவர்கள் உரை அமைகிறது. அவள் நாணம் கொண்டு பார்க்கிறாளா? அல்லது அவளது பார்வை சினம் கொண்டதா? கொடிய புருவம், நடுங்கஞர் போன்ற சொல்லாட்சிகள் சினம் கொண்டாள் என்பதைத் தெரிவிப்பவதாகவே உள்ளன. கண்களை விரித்துத் தோற்றிய சுளித்த பார்வையும் கொடிய புருவ முரிவும் அவனை அச்சம் கொள்ளும்படி தாக்கின என்று பொருள் கொள்வதே சிறக்கும். எனவே அவள் நாணம் கொண்டாள் என்பதைவிட அவள் வீசிய பார்வை சினம் கொண்டதாக இருந்தது என்பதே பொருத்தமானதாகும்.

கொடும்புருவம் என்பதற்குக் கொடிய புருவம் என்றும் வளைந்த புருவம் என்றும் இரண்டு வகையாகப் பொருள் கொண்டனர். கொடும்புருவம் என்ற தொடரைத் தொடர்ந்து 'கோடா' என்ற வளைவுச்சொல்வருவதால் மீண்டும் வளைந்த புருவம் எனச் சொல்லவேண்டியதில்லை. எனவே 'கொடும்புருவம்' என்ற தொடர்க்கு 'வளைந்த புருவம்' என்பதைவிட 'கொடிய புருவம்' என்பதே பொருத்தம்.
'நடுங்கஞர்' என்ற சொல் நடுக்கம் தரும் துன்பம் என்ற பொருள் தரும்.

'கோடா மறைப்பின்' குறிப்பது என்ன?

'கோடா மறைப்பின்' என்றதற்குச் செப்பமுடையனவாய் விலக்கினவாயின், என்னைத் துன்பம் செய்வதன் முன்பே கோடி மறைத்தனவாயின், அழகு செய்து விரகம் விளைத்தபடியாலே, செப்பமுடையவாய் விலக்கினவாயின், கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், மேலும் வளையாமல் நின்று, கண் பார்வையை என்மீது கூர்மையாய்ப் பாய்ச்சவிடாமல் தடுக்குமாயின், நேர்நின்று தடுப்பின், வளையாமல் செம்மையாய் நின்று தடுத்தால், கோணிய புருவங்கள் இன்னும் சிறுது) கோணி (கண்களைச் சற்றே இமைகள்) மறைத்ததால், வளையாமல் நேராக இருந்து மறைக்குமென்றால், வளையாது நேராக நின்று கண்களை மறைக்குமானால், நடுநிலை தவறாமல் மறைத்தால், புருவங்கள் மேலும் வளையாமல் இருந்தால், நேராக விருந்து மறைக்குமாயின், வளையாது சரியாக இருந்திருக்குமானால் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'கோடா மறைப்பின்' என்றதற்கு கோடாது அதாவது வளையாமல் மறைத்திருந்தால் என்று பெரும்பான்மையோரும் வளைந்து என்று சிலரும் உரை தந்தனர். புருவங்களே வளைந்துதானே இருக்கின்றன; அதனால் 'மேலும் வளைந்த புருவம்' என்று 'மேலும்' என்ற சொல்லைக் கூட்டியும் சிலர் உரைத்தனர்.
மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'இக்கொடிய புருவம் இவள் கண்கள் என்னைத் துன்பம் செய்வதன் முன்பே வளைந்து மறைத்திருந்தால், அதனைக் கடந்து வந்து எனக்கு நடுங்கப்படும் துன்பஞ் செய்யலாற்றாவே அவை' என்கின்றனர். இவர்கள் இத்தொடர்க்கு வளைந்து எனப் பொருள் கொள்கின்றனர். பரிதி வளைந்த புருவம் 'அழகு செய்து விரகம் விளைத்தபடியாலே' என்று உரை வரைந்தார். இது 'அவள் புருவத்தை வளைத்த அழகு அவனிடத்தே காதல் தாகத்தை ஏற்படுத்தியது' என்ற பொருள் தருவது. தலைவியின் புருவ அழகே இப்பாடலில் பாராட்டப்பட்டது என இவர் கூறுகிறார். இவரும் புருவம் 'வளைந்து' எனவே உரைக்கின்றார். காலிங்கர் 'மறப்பின்' பாடம் என்று பாடம் கொண்டு 'இவளது புருவம் கோடும் செயலை மறந்திருந்தால் இங்ஙனம் நடுங்கு துயரஞ் செய்திருக்கா இவள் இவள் கண்கள்' என்கிறார். இவரும் கோடா என்றதற்கு வளைந்து எனப் பொருள் கண்டவர்.
பரிமேலழகர் கோடுதல் என்பதற்கு நடுநிலை தவறுதல் என்பதாகப் பொருள் கண்டு விளக்குகிறார். இவர் கோடாது அதாவது நேர்நின்று -வளையாது என்று சொல்கிறார். பின்வந்தவர்களில் பலரும் வளையாது எனப் பொருள் காண்பவர்கள்.
கோடா என்பதற்குக் கோடாது அதாவது வளையாது எனப் பொருள் கொள்வதே இங்கு பொருத்தம்.

'கோடா மறைப்பின்' என்றதற்கு வளையாது மறைத்தால் என்பது பொருள்.

கொடிய புருவங்கள் வளையாமல் நேராக நின்று மறைத்தால் இவளது கண்கள் நடுக்கம்தரும் கொடுந்துன்பம் செய்யமாட்டாவே என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புருவ முறிவால் தகையணங்குறுத்தல்.

பொழிப்பு

கொடிய புருவம் வளையாமல் மறைத்தால் இவள் கண்கள் நடுக்குறும் துன்பம் செய்யாதொழியும்.