இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1090உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று

(அதிகாரம்:தகை அணங்கு உறுத்தல் குறள் எண்:1090)

பொழிப்பு (மு வரதராசன்): கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லை.மணக்குடவர் உரை: அடப்பட்ட நறவு, உண்டார்மாட்டல்லது காமம் போலக் கண்டார் மாட்டு மகிழ்வு செய்தலின்று.
இது தலைமகள் தலைமகனைக் கண்டுழி வருத்தமுற்றுக் கருதியது.

பரிமேலழகர் உரை: (தலைமகள் குறிப்பறிதல் உற்றான் சொல்லியது.) அடுநறா - அடப்படும் நறா; உண்டார்கண் அல்லது - தன்னை உண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்வதல்லது; காமம்போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று - காமம்போலக் கண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்தல் உடைத்தன்று.
(அடுநறா: வெளிப்படை. 'காமம்' என்றது ஈண்டு அது நுகர்தற்கு இடனாகியாரை. 'கண்டார்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. மகிழ் செய்தற்கண் காமம் நறவினும் சிறந்ததே எனினும், இவள் குறிப்பு ஆராய்ந்து அறியாமையின், 'யான் அதுபெற்றிலேன்' எனக் குறிப்பெச்சம் வருவித்துரைக்க. 'அரிமயிர்த் திரள் முன்கை'(புறநா.11)என்னும் புறப்பாட்டிற் குறிப்புப் போல.)

வ சுப மாணிக்கம் உரை: கள் குடித்தால்தான் மகிழ்ச்சி தரும். காமம் போல் பார்த்தளவில் மகிழ்ச்சி தருமா?


பொருள்கோள் வரிஅமைப்பு:
அடுநறா உண்டார்கண் அல்லது காமம்போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று.

பதவுரை: உண்டார்கண்-உண்டவரிடத்தில், உட்கொண்டவர்க்கு; அல்லது-அல்லாமல்; அடுநறா-பதப்படுத்தப்பட்ட கள்; காமம்போல்-காமம்போன்று, காதல்இன்பம் போன்று (இங்கு காதலுக்குரியவர்போன்று எனக் கொள்வர்); கண்டார்-பார்த்தவர்; மகிழ்செய்தல்-மகிழ்ச்சியைத் தருதல், களிப்புறச்செய்தல்; இன்று-இல்லை.


உண்டார்கண் அல்லது அடுநறா:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அடப்பட்ட நறவு, உண்டார்மாட்டல்லது;
பரிப்பெருமாள்: அடப்பட்ட நறவு, உண்டார்மாட்டல்லது;
பரிதி: கள் உண்டாலல்லது மகிழ்ச்சி கொடாது;
காலிங்கர்: நெஞ்சமே! அடப்பட்ட நறவாகிய கள்ளானது உண்டாரை மனக்களி செய்யும்;
பரிமேலழகர்: (தலைமகள் குறிப்பறிதல் உற்றான் சொல்லியது.) அடப்படும் நறா தன்னை உண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்வதல்லது; [அடுநறா- வெளிப்பட]

தொல்லாசிரியர்கள் அனைவரும் இப்பகுதிக்கு 'அடப்பட்ட நறா உண்டார்மட்டுமன்றி' என்று பொருள் கொண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆக்கப்பட்ட கள் உண்டவர்க்கு மகிழ்ச்சியைச் செய்வதல்லது', 'தீமை தருகின்ற கள் அதை உண்டவர்களுக்கு மட்டும்தான் போதை தருகிறதேயல்லாமல்', 'நன்கு சமைத்த உணவானது அல்லது காய்ச்சப்பட்ட மதுவானது, உண்டார்க்கு மகிழ்ச்சியை உண்டாக்குமே அல்லது', 'உண்டாக்கப்படும் கள் தன்னை உண்டாரிடம் மகிழ்ச்சியைச் செய்வதல்லது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இப்பகுதிக்கு ஆக்கப்பட்ட கள், குடித்தவர்க்கு மட்டுமே களிப்பைத் தருமேயல்லாமல் என்பது பொருள்.

காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காமம் போலக் கண்டார் மாட்டு மகிழ்வு செய்தலின்று.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் தலைமகனைக் கண்டுழி வருத்தமுற்றுக் கருதியது.
பரிப்பெருமாள்: காமம் போலக் கண்டார் மாட்டு மகிழ்வு செய்தலின்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் தலைமகனைக் கண்டுழி வருத்தமுற்றுக் கருதியது.
பரிதி: காமம்போலே காண மகிழ்ச்சி செய்யாது என்றவாறு.
காலிங்கர்: இத்துணையல்லது காதல் உருபு கண்டவிடத்துக் களிசெய்யும் காமம் போலத் தன்னைக் கண்டாரைக் களிப்புறுத்தல் எஞ்ஞான்றும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: காமம்போலக் கண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்தல் உடைத்தன்று.
பரிமேலழகர் குறிப்புரை: 'காமம்' என்றது ஈண்டு அது நுகர்தற்கு இடனாகியாரை. 'கண்டார்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. மகிழ் செய்தற்கண் காமம் நறவினும் சிறந்ததே எனினும், இவள் குறிப்பு ஆராய்ந்து அறியாமையின், 'யான் அதுபெற்றிலேன்' எனக் குறிப்பெச்சம் வருவித்துரைக்க. 'அரிமயிர்த் திரள் முன்கை' (புறநா.11)என்னும் புறப்பாட்டிற் குறிப்புப் போல. [யான் அதுபெற்றிலேன் - யான் அம்மகிழ்ச்சியைப் பெற்றிலேன்]

பழம் ஆசிரியர்கள் 'காமம் போல காண மகிழ்ச்சி செய்யாது' என்றபடி இப்பகுதிக்கு உரை பகன்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமத்திற்கு இடனாய மகளிர்போல் கண்டவர்க்கு மகிழ்ச்சியைச் செய்தல் இல்லை', 'காமத்தைப் போலக் கண்டவர்களுக்குப் போதை தருவதில்லை', 'காமம்போலக் கண்டவர்க்கு மகிழ்ச்சியை யுண்டாக்காது', 'காதல்போலக் கண்டாரிடம் மகிழ்ச்சியைச் செய்தல் இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

காதல் கொண்டார் போல் ஒருவரை ஒருவர் பார்த்தஅளவில் மகிழ்ச்சியைச் செய்தல் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
அடுநறா, குடித்தவர்க்கு மட்டுமே களிப்பைத் தருமேயல்லாமல் காதல் கொண்டார் போல் ஒருவரை ஒருவர் பார்த்தஅளவில் மகிழ்ச்சியைச் செய்தல் இல்லை என்பது பாடலின் பொருள்.
'அடுநறா' என்பது என்ன?

'அவளைக் கண்டாலே களிப்புண்டாகிறது'- தலைவன்; 'அவனைப் பார்த்தாலே மகிழ்ச்சி பொங்குகிறது'-தலைவி.

காய்ச்சப்பட்ட கள் உண்டார்க்கு மகிழ்ச்சியைத் தருமே அல்லாது, காதலுற்றார் போல், பார்த்தாலே மகிழ்ச்சியைத் தருவது இல்லையே!.
காட்சிப் பின்புலம்:
அப்பெண்ணை முதன்முதலில் பார்த்தபோதே அவள்மீது தலைவனுக்குக் காதல் உண்டாகிவிட்டது. அவளது அழகை 'அணங்கோ! மயிலோ!' என வியந்து பாராட்டினான். ஓர் அயல் ஆடவன் தன்னைப் பார்த்துக்கொண்டே யிருக்கிறான் என அறிந்து வெளத்துடன் அவனை நோக்குகிறாள். அப்பொழுது அவள் பார்வை அவள் கூற்றுத்தானோ என எண்ணவைத்தது. புருவங்களை வளைத்து தனது பெரிய கண்களால் அவள் பார்த்தது அவனை நடுக்குறச் செய்ததாம். அப்புறமும் அவள் மேலிருந்த பார்வையை நீக்கமுடியமல் அவளது எழில்நலங்களை நோட்டமிட்டான். அவளது மார்பகங்கள் அவனைக் கொன்றுபோடும் ஆயத்தமாக இருப்பதாக அவனுக்குத் தோன்றின. போர்க்களத்தில் தன்னுடன் போரிட்டவரும் தன்னைப்பற்றிக் கேள்விப்பட்டவரும் நடுங்கும்படியான தன் பெருமிதம் எல்லாம் இவள் அழகுக்கு முன் எங்கே போய்விட்டதோ எனத் தன்னிரக்கமாகக் கூறினான். மடநோக்கினையும், நாணத்தையும் உடையவளான இவளுக்கு வேறு அணிமணிகளால் ஏன் அழகுபடுத்தினர் என எண்ணிக்கொண்டிருக்கிறான்.

இக்காட்சி:
முதன் முதலில் காதல் உணர்வு ஏற்படுத்திய பெண்ணைப் பற்றிய தலைவனின் எண்ண ஓட்டங்களை விளக்குவதாக உள்ள அதிகாரத்துப் பாடல் இது. அவளது உருவ அழகும் அசைவுகளும் உறுப்பு நலன்களும் அகப்பண்புகளும் தன்னை வருத்தியாகக் கூறிய தலைவன், அவளைக் காண்பதில் மயக்கம் உண்டாக்கும் களிப்பு பிறப்பதையும் உணர்கிறான். ‘காமம் போற் கண்டார்’ எனக் குறள் கூறுகிறது. ஆனால் காமம் என்பது காணுதற்குரிய பொருள் அல்ல. இதை 'ஈண்டுக் காமம் என்பதற்குக் காமத்திற்குரியவர்' எனப் பரிமேலழகர் தெளிவுபடுத்துவார். காமத்திற்குரியவர் தலைவன், தலைவி இருவருமேயாம். தலைவிக்கும் இதே உணர்வு உண்டாயிருக்க வேண்டும் என்றும் அக்குறிப்பைப் பெற்றதினால்தான் அந்த மகிழ்ச்சியை அவன் பெற்றான் என்றும் உரைத்தனர்.
அவளைக் கண்டதும் உள்ளத்தைப் பறிகொடுத்துவிட்டவன், அவளுடைய அழகு தம்மைத் துன்புறுத்தும் வகையை எடுத்துரைத்து, அவளது சினப்பார்வை மடப்பார்வையாக மாறுவதையும் சொல்கிறான். இங்கு அவளும் காதல் கொண்டாள் என்ற குறிப்புள்ளதால், அவன் தெளிவினை அடைந்தான் என்பதாகவும் உள்ளது.

காதலின்பத்தைக் கள்ளுண்ணும் மகிழ்ச்சியுடன் ஒப்பிட்டு வள்ளுவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் கூறியுள்ளார். இங்கு, கள் உண்டவருக்குத்தான் மயக்கம்தரும்; ஆனால் காதலோ கண்வழிக்கண்ட உடனேயே மயக்கத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது என்கிறார் அவர். உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு (1281) என்று கள்ளானது காமம் போன்று நினைக்கும்போதும் காணும்போதும் மகிழ்ச்சியைச் செய்வதில்லை என்று பின்னரும் சொல்லப்பட்டது. மேலும் இன்னொரு இடத்தில் உள்ளினும் தீரா பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது (1201) - நினைத்த அளவில் காதல் மகிழ்ச்சியளிப்பதால கள்ளினும் அது இனிது என்று காதலி வியக்கவும் செய்வாள். ஒருமுறை கள்ளை உண்டு களித்தவன் மேலும் மேலும் உண்ண விரும்புவான் என்பதை .....களித்தார்க்குக் கள்ளற்றே... (1288) என்றும் குறள் உவமை சொல்லும்.
மயக்கும் செயலில் கள்ளும் காதலும் ஒரு தன்மையனவே. கள்ளோ உண்டவர்க்குத்தான் மகிழ்ச்சி தந்து மயக்கும்; கண்டவர்க்கு மகிழ்ச்சிதராது; ஆனால் காதலுக்குரியார் ஒருவரையொருவர் காணும்போதும் களிமகிழ்வுறுவர்.

இக்குறள் யார் கூற்றாக அமைந்தது என்பதில் உரையாசிரியர்கள் வேறுபட்டனர். இப்பாடல் தலைவன் 'தலைமகள் குறிப்பறிதல் உற்றான் சொல்லியது' என்று பரிமேலழகர் தலைவன் கூற்றாக உரை கொண்டார். மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'தலைமகள் தலைமகனைக் கண்டுழி வருத்தமுற்றுக் கருதியது' என்று தலைவி சொல்வதாகக் கூறுகின்றனர்; அவ்வாறே இளம்பூரணாரும் 'தலைவனைக் கண்ட தலைவி வேட்கைக் குறிப்பினால் தன்னுள்ளே கூறியது' என்று தலைவி கூற்றாகப் பொருள் உரைத்தார். '‘காமம் போல் கண்டார் மகிழ்செய்தலின்று’ என வெளிப்படையாகக் கூறும் மனப்பான்மை ஆடவர்க்குரியதாக அகத்திணையிற் காண்கின்றோம்; ஆதலின் தலைமகன் கூற்றாதலே தகும்' எனக் கூறி இப்பாடல் தலைவி கூற்றென்பதை மறுப்பார் இரா சாரங்கபாணி.

கள்ளுண்ணாமையை அறிவுறுத்தும் வள்ளுவர் கள்ளை உவமையாகக் கொண்டு பாடல்கள் புனைந்தது ஏன் என்று வினா எழுப்புவோர் உண்டு. 'நடைமுறையைக் காட்டியே எதனையும் வற்புறுத்திக் கூறமுடியும்; அதனால் உலகியல் காட்டி, அறம் நிலைபெறுமாறு, தலைவன் தலைவி பேச்சில் இவை இடம் பெறுகின்றன; இவை தவறாகா' என்று அமைதி காண்பார் தமிழண்ணல். 'கள்ளுண்ணாமையை வலியுறுத்திய வள்ளுவர் கள்ளையும் உவமையாகக் கொண்டு வந்தது மக்களியல்பு நோக்கிப் போலும்!' என்றார் சி இலக்குவனார். இங்கு கள் பண்பு பற்றிப் பாடப்பட்டதே அன்றி கள்ளுண்ணல் போற்றிப் பாடப்படவில்லை என்பதும் கருத்தில் கொள்ளத்தகும். தலைவனோ அல்லது தலைவியோ இவ்வாறு கூறினர் என்பதாலேயே, கள்ளுண்ணும் பழக்கம் அவர்களுக்கு உண்டென்று கொள்ள வேண்டுமென்பதுமில்லை.

'அடுநறா' என்பது என்ன?

'அடுநறா' என்றதற்கு அடப்பட்ட நறவு, கள், காய்ச்சப்பட்ட மது, ஆக்கப்பட்ட கள், அழிவு செய்யக்கூடிய கள், துன்பந் தரும் அல்லது அழிவுண்டாக்கும் கள், நன்கு சமைத்த உணவு அல்லது காய்ச்சப்பட்ட மது, உண்டாக்கப்படும் கள், வடித்த மது, காய்ச்சி எடுக்கப்பட்ட மது, காய்ச்சப்பட்ட கள் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நறா எனக் கொடியும் உண்டு. அடு என அடையிருத்தலின் கள்ளையே குறிக்கும். பரிமேலழகர் அடுநறா 'வெளிப்படை' என்றார்- கொடியை விலக்கி கள்ளென்ற பொருளுணர்த்தலின். தேவநேயப்பாவாணர் 'அடுநறா, சுவையும் மணமும் மிக்கனவும் உடம்பிற்கு உரஞ்செய் வனவும் சிறிது மயக்கந்தருவனவுமாக, கூலங்களினின்றும் கனிகளினின்றும் காயச்சரக்குகள் சேர்த்துக் காய்ச்சி யிறக்கப்படும் மட்டு வகைகள்' என்று விளக்கினார். தோப்பி என்ற அரிசிக் கள்ளைக் காய்ச்சிக் குடித்து இருக்கிறார்கள் எனப் பழம் இலக்கியங்கள் வழி அறியவருகிறோம்.
‘அடுநறா’ என்பதற்கு நன்கு சமைத்த உணவு எனக் கா சு பிள்ளையும், கொல்லுஞ்செயலையுடைய என்று அருணாசலக் கவிராயரும், அழிவு செய்யக் கூடிய கள் என்று நாமக்கல் இராமலிங்கமும் பொருள் கூறுவர்.
'நறவு' கள்ளினும் வேறுபட்ட ஒன்றாகும். ஆயினும் நறவும் கள்ளும் தன்மையில் ஒன்றுதான். காய்ச்சப்பட்ட கள் என்பதே இங்கு பொருத்தமான பொருளாகும்.

அடுநறா என்பது காய்ச்சிய கள் என்ற பொருள் தரும்.

ஆக்கப்பட்ட கள், குடித்தவர்க்கு மட்டுமே களிப்பைத் தருமேயல்லாமல் காதல் கொண்டார் போல் ஒருவரை ஒருவர் பார்த்தஅளவில் மகிழ்ச்சியைச் செய்தல் இல்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கண்டாலே மயக்குறும் தகையணங்குறுத்தல்.

பொழிப்பு

உண்டால் மட்டுமே களிப்பைத் தருவது கள்; ஆனால் காதலுக்கு உரியவர் பார்த்தஅளவில் மகிழ்ச்சி தருவர்.