இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1085



கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து

(அதிகாரம்:தகை அணங்கு உறுத்தல் குறள் எண்:1085)

பொழிப்பு (மு வரதராசன்): எமனோ? கண்ணோ? பெண்மானோ? இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கின்றது.

மணக்குடவர் உரை: கொடுமை செய்தலால் கூற்றமோ? ஓடுதலால் கண்ணோ? வெருவுதலால் மானோ? மடவரலே! நினது நோக்கம் இம்மூன்று பகுதியையும் உடைத்து.
இக்கொடிய புருவம் இவள் கண் என்னைத் துன்பஞ்செய்வதன் முன்னே அதனைக் கோடி மறைத்ததாயினும் அஃது அதனைக் கடத்தலும் உடையது. அதனால் அவற்றுள் யாதோ? என்றவாறு. இது தலைமகள் குறிப்பறிதற் பொருட்டுத் தலைமகன் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) கூற்றமோ - என்னை வருத்துதல் உடைமையான் கூற்றமோ; கண்ணோ - என்மேல் ஓடுதல் உடைமையான் கண்ணோ; பிணையோ - இயல்பாக வெருவுதலுடைமையான் பிணையோ? அறிகின்றிலேன்; மடவரல் நோக்கம் இம்மூன்றும் உடைத்து - இம் மடவரல் கண்களின் நோக்கம் இம்மூன்றின் தன்மையையும் உடைத்தாயிரா நின்றது.
(இன்பமும் துன்பமும் ஒருங்கு செய்யாநின்றது என்பதாம். தொழில்பற்றி வந்த ஐயநிலை உவமம்.)

இரா சாரங்கபாணி உரை: வருத்துதலால் எமனோ? அன்பைப் புலப்படுத்துதலால் கண்ணோ? அஞ்சுதல் உடைமையால் பெண்மானோ? என்னால் எது எனத் தெளிய முடியவில்லை. இம்மடப்பத்தையுடைய பெண்ணின் நோக்கம் இம்மூன்றும் உடையது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம் இம்மூன்றும் உடைத்து.

பதவுரை: கூற்றமோ-காலனோ, எமனின் பார்வையோ; கண்ணோ-விழியோ, பெண்ணின் பார்வையோ; பிணையோ-பெண்மானோ, மான்கண்ணோ; மடவரல்-மங்கை, அழகிய பெண்; நோக்கம்-பார்வை; இம்மூன்றும்-இம்மூன்றும்; உடைத்து-உடையது, பெற்றுள்ளது.


கூற்றமோ கண்ணோ பிணையோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொடுமை செய்தலால் கூற்றமோ? ஓடுதலால் கண்ணோ? வெருவுதலால் மானோ;
பரிப்பெருமாள்: கொடுமை செய்தலாற் கூற்றமோ? அருள் செய்தலாற் கண்ணோ? வெருவுதலால் மான்பிணையோ;
பரிதியார்: கூற்றம் போலவும் மான்போலவும் விளங்கா நின்றது இவள் கண் என்றவாறு.
காலிங்கர்: நெஞ்சமே! இவள்கண் நமது உயிர் நடுக்கம் செய்தலாற் கூற்றம் என்றும், குளிர்ந்த நோக்கமுடைமையிற் கண்ணுருவுதானேயா.என்றும் வெரூஉதற் பேதைமை தோன்றப் பிறழ்தலின் பிணைமான் விழிவடிவோ என்றும், இங்ஙனம் நீயே உற்றுவருந்துதலால்;
பரிமேலழகர்: என்னை வருத்துதல் உடைமையான் கூற்றமோ? என்மேல் ஓடுதல் உடைமையான் கண்ணோ? இயல்பாக வெருவுதலுடைமையான் பிணையோ? அறிகின்றிலேன்; [ஓடுதல் உடைமை - கண்ணோட்டம் (இரக்கம்) உடைமை; வெருவுதல் - அஞ்சுதல்]

பழம் ஆசிரியர்கள் அனைவரும் கூற்றமோ, கண்ணோ, பெண்மானோ என்றே இப்பகுதிக்கு உரை செய்தனர். ஆனால் அவற்றை விளக்குவதில் சிறுது வேறுபடுகின்றனர். மணக்குடவர்/பரிப்பெருமாள் கொடுமை செய்தலால் கூற்றமோ என்றும் காலிங்கர் உயிர் நடுக்கம் செய்தாலால் கூற்றமோ என்றும் பரிமேலழகர் வருத்துதல் செய்தலால் கூற்றமோ என்றனர். மணக்குடவரும் பரிமேலழகரும் ஓடுதலால் அதாவது கண்ணோட்டம் (இரக்கம்) உடைமையால் கண்ணோ என்றும் பரிப்பெருமாள் அருள் செய்தலால் கண்ணோ என்றும் காலிங்கர் குளிர்ந்த நோக்கம் உடைமையால் கண்ணோ என்றும் விளக்கினர். இவர்கள் அனைவரும் வெருவுதலால் பெண்மானோ என்று ஒன்றுபட உரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இது எமனோ? கண்தானோ பெண்மானோ', 'எமனைப் போல் உயிரை வதைக்கிற தன்மையும், சாதாரணக் கண்ணின் இனிமையும், பெண்மான் மருள்வதைப் போன்ற தன்மையும்', 'காலனது தன்மையும் என்மேல் செல்லுதலால் கண்ணின் தன்மையும் இயற்கையான மருட்சியுடைமையால் மானின் தன்மையும்', 'எமனோ? கண்ணோ? பெண்மானோ?', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வருத்தும் தன்மையால் கூற்றமோ, அன்புநோக்கால் மங்கையின் கண்தானோ, மருண்ட பார்வையால் பெண்மானோ என்பது இப்பகுதியின் பொருள்.

மடவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மடவரலே! நினது நோக்கம் இம்மூன்று பகுதியையும் உடைத்து.
மணக்குடவர் குறிப்புரை: இக்கொடிய புருவம் இவள் கண் என்னைத் துன்பஞ்செய்வதன் முன்னே அதனைக் கோடி மறைத்ததாயினும் அஃது அதனைக் கடத்தலும் உடையது. அதனால் அவற்றுள் யாதோ? என்றவாறு. இது தலைமகள் குறிப்பறிதற் பொருட்டுத் தலைமகன் கூறியது.
பரிப்பெருமாள்: மடவரலே! நினது நோக்கமான இவை, மூன்று பகுதியையும் உடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: அவற்றுள் யாதோ என்றவாறு. இது தலைமகள் குறிப்பறிதற் பொருட்டுத் தலைமகன் கூறியது.
காலிங்கர்: இவை இத்துணையும் ஒருங்குடைத்து இவள் நோக்கம் என்பதனால் தனது வருத்தம் ஒருகாலைக்கு ஒருகால் மிக்குச் செல்லுகின்றமை மிகுத்தரைத்தது கருத்து என்றவாறு.
பரிமேலழகர்: இம் மடவரல் கண்களின் நோக்கம் இம்மூன்றின் தன்மையையும் உடைத்தாயிரா நின்றது. [இம்மூன்றன் தன்மையையும் - வருத்துதல், ஓடுதல், வெருவுதல் என்னும் இம்மூன்றன் தன்மையையும்
பரிமேலழகர் குறிப்புரை: இன்பமும் துன்பமும் ஒருங்கு செய்யாநின்றது என்பதாம். தொழில்பற்றி வந்த ஐயநிலை உவமம். [ஒருங்கு செய்யாநின்றது-ஒரு சேரச் செய்கின்றது; ஐயநிலை உவமம் - உவமானத்தையும் உவமேயத்தையும் ஐயமுற்று உரைப்பது ஐயநிலை உவமையாம்]

'மடவரல் கண்களின் நோக்கம் இம்மூன்றின் தன்மையையும் உடைத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவள் பார்வையில் இம் முக்குணமும் உண்டு', 'ஆகிய இந்த மூன்றும் கலந்ததாக இருக்கிறது (இவள் பார்வை)', 'இப்பெண்ணினுடைய கண்கள் என்னை வருத்துவதால் ஆகிய மூன்றையும் உடையன', 'இப்பெண்ணின் பார்வை இம்முன்றன் தன்மையும் பெற்றிருக்கின்றது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இம்மங்கையின் பார்வை இம்மூன்று தன்மைகளையும் கொண்டதாய் இருக்கிறது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வருத்தும் தன்மையால் கூற்றமோ, இயல்பான நோக்கால் கண்தானோ, மருண்ட பார்வையால் பெண்மானோ, இம்மங்கையின் பார்வை இம்மூன்றும் கொண்டதாய் இருக்கிறது என்பது பாடலின் பொருள்.
'மூன்றும்' என்ற சொல் குறிப்பது என்ன?

கொல்கிறாள்; நோக்குகிறாள்; மருள்கிறாள். கண்களால் பலவண்ணம் காட்டுகின்றாளே!

இள மங்கையின் பார்வை, வருத்தும் கூற்றமோ! கண்ணே தானா! மருளும் மானோ! இம்மூன்று தன்மையையும் அது கொண்டிருக்கிறதே!
காட்சிப் பின்புலம்:
தலைவன் தலைவியை முதன் முதலில் பார்த்தவுடன் அவளது அழகாலும் அசைவுகளாலும் ஈர்க்கப்படுகிறான். அவளும் அவனைப் பார்த்தாள். அப்பார்வை அவளுடன் ஒரு படை வந்து தாக்கியதைப்போல் இருந்ததாம் தலைவனுக்கு; கூற்றுவன் வருத்தி அவனைக் கூறுபோடுகின்றது போன்று தோன்றியதாம். அவளுடைய அகன்ற கண்கள் படைக்கலனாகி, அவனது உயிர்பறிக்கும் தன்மையைதாய் இருந்ததாம். இம்மெல்லியாளின் முகத்தில் உயிருண்ணும் விழிகளா? என்று வியக்கிறான் அவன். அயலான் ஒருவன் தானறியாமல் தன்னையே பார்க்கிறான் என்ற வெறுப்பில் தன் புருவத்தைக் கொடியதாக வளைத்து அவன் மீது சினப்பார்வை வீசுகிறாள் தலைவி.

இக்காட்சி:
அவன் அவளது கண்களையே இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவற்றின் தாக்கங்களிலிருந்து இன்னும் அவன் மீளவில்லை. இப்பொழுது அவள் கண்கள் மூன்றுவிதமான பார்வையைச் செலுத்தினவாம். புருவ நெறிப்புடன் கூடிய அப்பெண்ணின் முதல் சினப்பார்வை அச்சம் தருவதாக இருந்தது; அடுத்தது அவன்மீது கண்களை ஓடவிட்டாள். அப்பார்வை பெண்மைக்கே உரித்த குளிர்ச்சியுடன் தோன்றியது; அதன்பின், உடனடியாக, அயலார் ஒருவரிடம் இவ்வாறு அன்புப் பார்வை செலுத்திவிட்டோமோ என்ற உணர்வால் மருண்டு நோக்குகிறாள். இது மூன்றாவதான மான்கண் பார்வை. இவ்வாறாக அச்சம், இயல்பான அன்பு, யாரும் நம்மைப் பார்த்துவிட்டார்களோ என்று மருட்சி என்றவாறு தலைவியின் உள்ள உணர்வுகளும் வெளிப்படுத்தப்பட்டன. இவ்வுணர்வு மாற்றங்கள் அவளுக்கு இவன்மேல் நட்பு உண்டாகி விட்டது என்பதையும் அறிவித்தன. அடுத்தடுத்து செலுத்திய, மாறிய பார்வைகளால், அவளிடம் அன்பும் ஈர்ப்பும் ஒருசேர உண்டாவதாக உணர்கின்றான் தலைவன்.
ஓகார வினாச் சொற்களைக் கொண்டு சிறுசிறு வாக்கியங்களால் அமைந்த இப்பாடல், அவளது பார்வையில் காதல் தொடக்கத்துக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்குகிறது என்பதையும் சொல்கிறது.

மடவரல் என்ற சொல்லுக்குப் பொதுவான பொருள் பெண் என்பது. அது பெண்ணுக்கான மடந்தைப் பருவத்தை அதாவது 14 வயது முதல் 19 வயது வரை உள்ளான மடந்தை என்பதைக் குறிக்கும் எனவும் சொல்வர்.
மணக்குடவர்/பரிப்பெருமாள் உரை அவன் அவளை நோக்கி 'மடவரலே!' என்று விளிப்பதாக அமைகிறது. இன்றைய ஆசிரியர்கள் மடவரல் என்ற சொல்லுக்கு பெண், மங்கை, மடைமைக் குணம் கொண்டவள், மடப்பத்தையுடைய பெண், இளம்பெண் என்று பொருள் கொள்வர். மடவரல் என்பதனை விளியாகக் கொள்ளாமல், படர்க்கைப் பொருளாகக் கொள்வதே இயல்பானது என்பார் இரா சாரங்கபாணி.
குறள் வைப்பு முறையில் உரையாசிரியர்கள் பெரிதும் மாறுபடுகின்றனர். இப்பாடல் கொடும்புருவம் கோடா மறைப்பின்.... (1086) என்ற குறளுக்கு அடுத்ததாக வைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் தலைவன் - தலைவி எதிர்கொள்ளல் நிகழ்வுகளின் தொடர்ச்சி கிடைக்கும். இவ்விரு குறள்களுக்கான மணக்குடவர் உரை அதைத் தெரிவிப்பதைக் காணலாம். அவர் 1086ஆம் குறளை முன் குறளாக முறைவைப்புக் கொண்டதால் அதனோடு பொருந்த விளக்கம் தந்துள்ளார்.

'மூன்றும்' என்ற சொல் குறிப்பது என்ன?

இப்பாடலில் கூற்றுப் பார்வை, இயல்பான அன்புப் பார்வை, மான்கண் பார்வை எனும் மூன்று பார்வைகள் குறிக்கப் பெறுகின்றன. அப்பார்வைகள் அவனிடம் துன்பத்தையும் இன்பத்தையும் ஒருங்கே தோற்றுவித்தன. இவ்விளம்பெண்ணின் சினப் பார்வை அவனைக் கொல்வது போன்று உள்ளதைக் கண்டு அது கூற்றுவின் நோக்கம் என்றும், அவளது குளிர்ந்த பார்வை அவன்மீது வீழ்வதைப் பார்த்ததால் இயல்பான பார்வை என்றும், அச்சமும் நாணமும் கொண்டு மருண்டு மருண்டு விழிப்பதைக் கண்டு மான்கண் போன்று மிக அழகாகத் தோன்றுவது என்றும் நினைக்கிறான் தலைமகன்.
இதைக் காலிங்கர் 'உயிர் நடுக்கம் செய்தலாற் கூற்றம், குளிர்ந்த நோக்கமுடைமையிற் கண்ணுருவுதானேயா, வெரூஉதற் பேதைமை தோன்றப் பிறழ்தலின் பிணைமான் விழிவடிவோ' என அவளது கண்கள் மேலும் மேலும் அவனை வருத்துவதாக எழுதுகிறார்.
முதலில் அச்சமூட்டினாள். அடுத்து அன்பு காட்டினாள். அதன்பின், இடையிடை மருண்டு பெண்மான் போல் பார்த்தாள். இங்ஙனமாக மூவகைப் பார்வையை இவள் கண்களிடத்தில் அடுத்தடுத்து மாறிமாறி பார்க்க முடிந்ததாக உரைக்கிறான்.

'மூன்றும்' என்றது கொல்லும் தன்மை, அன்பு, மருட்சி என்பவற்றைக் குறித்தது.

வருத்தும் தன்மையால் கூற்றமோ, இயல்பான நோக்கால் கண்தானோ, மருண்ட பார்வையால் பெண்மானோ, இம்மங்கையின் பார்வை இம்மூன்றும் கொண்டதாய் இருக்கிறது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வேறுபட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்திய அவளது கண்கள் தகையணங்குறுத்தல்.

பொழிப்பு

காலனோ? கண்தானோ? பெண்மானோ? இப்பெண்ணின் பார்வையில் இம் முக்குணமும் உண்டு.