இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1088ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு

(அதிகாரம்:தகை அணங்கு உறுத்தல் குறள் எண்:1088)

பொழிப்பு (மு வரதராசன்): போரக்களத்தில் பகைவரும் அஞ்சுதற்குக் காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே!

மணக்குடவர் உரை: இவ்வொள்ளிய நுதற்கு மிகவுங் கெட்டது, போரின்கண் கிட்டாதாரும் உட்கும் எனது வலி.
இது மேற்கூறிய தலைமகன் மிகவுங் கவிழ்ந்து நிலம்நோக்கிப் புருவத்தின் மேற்றோன்றிய தலைமகள் நுதல் கண்டு கூறியது.

பரிமேலழகர் உரை: (நுதலினாய வருத்தம் கூறியது.) ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என் பீடு - போர்க்களத்து வந்து நேராத பகைவரும் நேர்ந்தார்வாய்க் கேட்டு அஞ்சுதற்கு ஏதுவாய என் வலி; ஒள் நுதற்குஓ உடைந்தது - இம்மாதரது ஒள்ளிய நுதலொன்றற்குமே அழிந்து விட்டது. ('மாதர' என்பது அதிகாரத்தான் வந்தது. 'ஞாட்பினுள்' என்றதானல், பகைவராதல் பெற்றாம்.. 'பீடு' என்ற பொதுமையான் மனவலியும் காய வலியும் கொள்க. 'ஓ' என்னும் வியப்பின்கண் குறிப்பு அவ் வலிகளது பெருமையும் நுதலது சிறுமையும் தோன்ற நின்றது. கழிந்ததற்கு இரங்கலின், தற்புகழ்தல் அன்றாயிற்று.)

இரா சாரங்கபாணி உரை: போர்க்களத்தில் பகைவரும் கண்டு அஞ்சும்படியான என் பேராற்றல், ஒளி பொருந்திய மாதரது நெற்றி ஒன்றனுக்கோ அழிந்தது? என்ன வியப்பு!


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு, ஒண்ணுதற் கோஒ உடைந்ததே.

பதவுரை: ஒண்-மிளிர்கின்ற, ஒளி பொருந்திய; நுதற்கு-நெற்றிக்கு; ஓஒ-(வியப்பின் குறிப்பு); உடைந்ததே-அழிந்து விட்டதே; ஞாட்பினுள்-போர்முனையில், போரின்கண்; நண்ணாரும்-அணுகாதவரும், நேராகத் தன்னிடம் வந்து போர்செய்ய நெருங்காதவரும், பகைவரும்; உட்கும்-(கேள்வியுற்று) அஞ்சும், அஞ்சற்கேதுவாகிய; என்-எனது; பீடு-பெருமை, வலிமை.


ஒண்ணுதற் கோஒ உடைந்ததே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவ்வொள்ளிய நுதற்கு மிகவுங் கெட்டது;
பரிப்பெருமாள்: இவ்வொள்ளிய நுதற்கு மிகவுங் கெட்டது;
பரிதி: பிறைபோலும் நுதலிக்குத் தோற்றது என்றவாறு;
காலிங்கர்: நெஞ்சமே! இவ்வொள்ளிய நுதலினை உடையாள் பொருட்டு மிகவும் கேடு அடைந்தது;
பரிமேலழகர்: (நுதலினாய வருத்தம் கூறியது.) இம்மாதரது ஒள்ளிய நுதலொன்றற்குமே அழிந்து விட்டது;
பரிமேலழகர் குறிப்புரை: 'மாதர' என்பது அதிகாரத்தான் வந்தது. 'ஓ' என்னும் வியப்பின்கண் குறிப்பு அவ் வலிகளது பெருமையும் நுதலது சிறுமையும் தோன்ற நின்றது. [அவ்வலிகளது-மனவலி காயவலிகளது]

பழைய ஆசிரியர்கள் ஓள்ளிய நுதலுக்கு முன்னால் கெட்டழிந்தது/தோற்றது என்று இப்பகுதிக்குப் பொருள் தந்தனர். பரிமேலழகர் 'ஓ' என்னும் வியப்பின்கண் குறிப்பு அவ் வலிகளது பெருமையும் நுதலது சிறுமையும் தோன்ற நின்றது என்று உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இந்த நெற்றி யழகுக்கே உடைந்து விட்டதே!', 'இந்த அழகான நெற்றியையுடைய பெண்ணுக்கா தோற்றுவிட்டது! (என்ன ஆச்சர்யம்!)', 'ஒளி பொருந்திய நெற்றியை உடையாள் பொருட்டு அழிந்து போயிற்று', 'இப்பெண்ணினது ஒளி பொருந்திய நெற்றியழகுக்கே அழிந்துவிட்டது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒளிவீசும் முகஅழகிற்கு அழிந்து விட்டதே! என்பது இப்பகுதியின் பொருள்.

ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: போரின்கண் கிட்டாதாரும் உட்கும் எனது வலி.
மணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறிய தலைமகன் மிகவுங் கவிழ்ந்து நிலம்நோக்கிப் புருவத்தின் மேற்றோன்றிய தலைமகள் நுதல் கண்டு கூறியது.
பரிப்பெருமாள்: போரின்கண் கிட்டாதாரும் உட்கும் எனது வலி.
பரிப்பெருமாள் குறிப்புரை: உம்மை யெச்சவும்மை. கிட்டினார் உட்கு முன்பே அமைந்து கிடந்தது. மேற்கூறிய சொல் கேட்ட தலைமகள் மிகவுங் கவிழ்ந்து நிலன் நோக்கியவழிப் புருவத்தின்மேல் தோற்றிய நுதல் கண்டு கூறியது.
பரிதி: சமர் பூமியிலே நண்ணாரை வெற்றிகொள்ளும் என் ஆண்மை.
காலிங்கர்: யாதோ எனின், போர்த்தொழிலிடத்துப் பகைவரும் அஞ்சும் எனது நெஞ்சு உரம் என்றவாறு.
பரிமேலழகர்: போர்க்களத்து வந்து நேராத பகைவரும் நேர்ந்தார்வாய்க் கேட்டு அஞ்சுதற்கு ஏதுவாய என் வலி; [நேராத-எதிர்க்காத; நேர்ந்தார்வாய்க் கேட்டு-எதிர்த்துப் போர் செய்தார் வாயினிற் கேட்டு]
பரிமேலழகர் குறிப்புரை: 'ஞாட்பினுள்' என்றதானல், பகைவராதல் பெற்றாம். 'பீடு' என்ற பொதுமையான் மனவலியும் காய வலியும் கொள்க. கழிந்ததற்கு இரங்கலின், தற்புகழ்தல் அன்றாயிற்று. [கழிந்ததற்கு இரங்கல்-சென்றொழிந்த ஆற்றல் குறித்து எண்ணி வருந்துதல்; தற்புகழ்தல்-ஒருவன் தன்னைத் தானே உயர்த்திப் பேசுதல்].

நண்ணாரும் உட்கும் என்பது பகைவரும் அஞ்சுவர் என்று பொருள் தரும். பழம் ஆசிரியர்களில் மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் மூவரும் போரின்கண் வந்து நேராகப் பொராதவர்களும் அஞ்சும் வலிமை என்ற பொருளில் உரை கண்டனர். நண்ணாரை வெற்றிகொள்ளும் என் ஆண்மை என்பது பரிதியின் கூற்று. காலிங்கர் பகைவரும் அஞ்சும் என உரை செய்தார். பீடு என்ற சொல்லுக்கு வலி/ஆண்மை/நெஞ்சு உரம் எனத் தொல்லாசிரியர்கள் உரை கண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'போரில் வராதவரும் அஞ்சும் என் ஏற்றம்', 'யுத்த களத்தில் பகைவர்களும் பயப்படுகிற என் வலிமை', 'போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்குரிய என் வலிமை', 'போர்க் களத்தில் என்னை வந்து எதிர்த்து நில்லாத பகைவரும் கேட்டு அஞ்சும் என் வலிமை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

களத்தில் நேரில் வந்து என்னுடன் போர்செய்யாத பகைவர்களும் அஞ்சி நடுங்கும் என் ஏற்றம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
களத்தில் நேரில் வந்து என்னுடன் போர்செய்யாத பகைவர்களும் அஞ்சி நடுங்கும் என் ஏற்றம், ஒண்ணுதற் கோஒ அழிந்து விட்டதே! என்பது பாடலின் பொருள்.
'ஒண்ணுதற் கோஒ' என்ற தொடரின் பொருள் என்ன?

என் வீரம் பெருமிதம் எல்லாம் இவள்முகத்துக்குமுன் தோற்று ஒடுங்கிப்போய்விட்டனவே!

என்னுடன் நேராகப் பொராத பகைவரும் கேட்டு நடுங்கும் என் வலிமை, இவளது மின்னும் முகத்தால் உடைந்து போனதே!
காட்சிப் பின்புலம்:
தலைவன் தலைவியை பார்த்த பொழுதே ஒர் மின்னலைப் போன்று அவனுள்ளத்தில் காதல் உணர்ச்சி உண்டானது. முதல் காட்சியிலேயே அவளது அழகும் பண்புநலன்களும் தன்னை மிகையாகத் தாக்கியதாக அவன் உணர்கிறான். அவளை அழகுத் தெய்வமாகக் கண்டு, கண்களால் ஈர்க்கப்பட்டு, புருவநெரிவின் அழகைத் துய்த்துக்கொண்டு, அவளது பார்வைகளின் தாக்கத்தைத் தாங்கமுடியாமல் இருக்கிறான். அவளது மார்பகங்கள் அவனைக் கொல்லும் கருவியாக மாறக் காத்திருக்கின்றன என்பதுபோல் அவனுக்குத் தோன்றின.

இக்காட்சி:
என்னுடன் பொருதிய பகைவர், நேரடியாகப் போராடதவர் எல்லாரும் அஞ்சி நடுங்கத் தக்க என் வலிமை, இவளது ஒளிவீசும் முகஅழகுக்கு முன் வீழ்ந்துவிட்டதே! என இரங்கிக் கூறுகிறான் தலைமகன்.
தலைவன் போர்க்களங்கள் பல கண்டு பகைவர்கள் அஞ்சும்படியான வீரச் செயல்கள் புரிந்து வெற்றிபல பெற்றவன். அவனுடன் நேரில் மோதி அவனது வலிமையை மிக நன்றாகவே அறிந்தவர்களும், அவன் வீரத்தைக் கேட்டுத் தெரிந்தவர்களும் அவனுடன் பொருத அஞ்சுவர். அதனால் பெருமிதம் மிகக் கொண்டவன் அவன். அத்தகைய வீரன் இவளது முக அழகைக் கண்டு கிறங்கித் தன் வலிமையெல்லாம் இழந்ததுபோல் உணர்கிறான். அப்பொழுது 'என் வீரப்பெருமை, அய்யோ!, இவளது அழகுக்கு முன் உடைந்து நொறுங்கிவிட்டதே' என்று அவள் அழகுக்குக் கீழடங்கி விட்டதாக உணர்கிறான்.

'ஓ' என்னும் வியப்பின்கண் குறிப்பு அவனது உள, உடல்வலிமைகளின் பெருமை இழந்தது குறித்து எண்ணி வருந்துதல், அவளது முகத்தின் ஒளிவீசும் அழகைப் பாராட்டுதல் இவை தோன்ற நின்றது. 'உடைந்ததே' என்ற சொல் தோற்றபடை சிதறிப் பின்வாங்குவதைக் குறிப்பதாகக் கொள்வர். 'ஞாட்பு' என்ற சொல் போர்க்களம் எனப் பொருள்படுவதால் பகைவரும் அஞ்சும் எனக் கொள்ளப்பட்டது. 'பீடு' என்ற சொல்லுக்கு வலிமை, பெருமை எனப் பொருள்கள் உண்டு. இது உளவலியையும் உடலாற்றலையும் குறித்ததாக உரையாளர்கள் கூறினர்.

பெண்ணின் அழகு கண்டு வலியிழந்த போர்வீரர்கள்/மன்னர்கள் பற்றிய செய்திகள் பல்வேறு பண்பாட்டு வரலாறுகளிலும் இலக்கியங்களிலும் நிறைய இருக்கின்றன. கிளியோபாட்ராவின் அழகு நாடுபல வென்ற மார்க் ஆன்டனியை எகிப்து நாட்டு அவைநடுவே நேராகவே அவள்முன் மண்டியிட வைத்தது என்கிறது ரோம வரலாறு. காவியத் தலைவி சீதையின் அழகு இராவணனைக் கதிகலங்க வைத்தது. காம வயப்பட்ட பெருவீரனை அப்பெண் படுத்திய பாட்டை அவனே விளக்குகிறான்: 'என் வலிமை குன்றி உன்னிடம் தோற்குமாறு செய்தாய்; நிலவிற்கு உடல் சுடுமாறு செய்தாய்; தென்றலும் உடல் வேர்க்கச் செய்தாய்; என் உறுதியான தோளை மெலியச் செய்தாய்; மன்மதனை ஆர்ப்பரிக்கச் செய்தாய்; என்னைத் துன்பம் இத்தகையது என்று உணருமாறும் செய்துவிட்டாய்; என்பால் தேவர்கள் அச்சம் நீங்குமாறு செய்தாய்; இன்னும் என்னென்ன இடர்களை விளைவித்துத் தீர்ப்பாயோ' எனக் கூறியபின் 'உன்னால் என் ஆண்மைக்கு மாசு உண்டாகின்றதே' என இரங்கி மேலும் மொழிவது:
‘ஈசனே முதலா மற்றை மானுடர் இறுதி யாரும்
கூச, மூன்று உலகும் காக்கும் கொற்றத்தேன்; வீரக் கோட்டி
பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென்; பெண்பால் வைத்த
ஆசை நோய் கொன்றது என்றால், ஆண்மைதான் மாசு உணாதோ?
(கம்ப ராமாயணம் மாயாசனகப் படலம்:13 பொருள்: சிவபிரானை முதலாகக் கொண்டு; மற்று மானிடர் வரை உள்ள அனைவரும் அஞ்சும்படி; மூன்று உலகத்தையும் காக்கும்படி வெற்றி படைத்த நான்; வீரர் வரிசையில் பேசப்படுபவர் எவருக்கும் உயிர் தோற்றிலென்; அத்துணை வீர வலியுடைய என்னைப் பெண்ணிடம் வைத்த காம நோய் கொன்று விட்டது என்றால்; வீர ஆண்மை குற்றப்படும் அல்லவா?)

'ஒண்ணுதற் கோஒ' என்ற தொடரின் பொருள் என்ன?

'ஒண்ணுதற் கோஒ' என்ற தொடர் ஒள்+நுதல்+கோ+ஓ என விரிந்து ஒளி பொருந்திய நெற்றிக்கோ (அதாவது நெற்றிற்காகவா?) எனப் பொருள்படும்.
'ஒண்ணுதற்கோஓ' என்பதிலுள்ள ஓ என்னும் குறிப்பிடைச்சொல் தலைவனின் உணர்ச்சி வெளிப்பாடாக அமைந்துள்ளது. தனது வீரவலியை உயர்த்திப்பேசி அதை இப்பெண்ணின் நெற்றியின் அழகுக்காகவா இழந்தேன் என்று எண்ணி இரங்குவதாக உள்ளதில் ஓ என்னும் ஒலி வியப்பையும் வருத்தத்தையும் ஒருசேரத் தருகிறது.
பரிப்பெருமாள் என்ற பழம் உரையாசிரியர் தலைவி கவிழ்ந்து நிலன் நோக்கியவழிப் புருவத்தின்மேல் தோற்றிய நுதல் கண்டு தலைமகன் கூறியது என இக்காட்சியை விளக்கினார். நாணுற்ற அப்பெண் தலை குனிந்து இருந்தாள்; அப்பொழுது அவனால் அவளது நெற்றியை மட்டுமே பார்க்க முடிந்தது என்ற பொருளில் இவ்வுரை அமைகிறது.
ஒண்ணுதல் என்று பெண்ணின் ஒளி பொருந்திய நெற்றியைப் போற்றும் தொடர் பழம் தமிழ் இலக்கியங்களில் பரக்கப் பயின்று வந்துள்ளது.
பெண்ணின் நெற்றியைப் பிறைமதிக்கு ஒப்பிட்டுப் பாடினர். பிறையென மதிமயக் குறூஉ நுதலும் (குறுந்தொகை 226: 2-3 பொருள்: பிறை என்றுகருதும்படி அறிவை மயங்கச் செய்யும் நெற்றியும்) என்று சொல்லியது சங்கப்பாடல் ஒன்று.
'பிறைபோலும் நுதலிக்குத் தோற்றது' என உடையாள் மேல் வைத்துக் கூறுகிறது இக்குறளுக்கான பரிதியின் உரை. காலிங்கரும் ஒண்ணுதல் என்றதற்கு ஒண்ணுதலையுடையளுக்கு எனவே கொண்டார். அதுபோல் ஒண்ணுதற்கு என்பதனை ஒளி பொருந்திய நெற்றிக்கு என்பதினும், ஆகு பெயரால் பெண் என்றே கூறுவது பொருத்தமுடைத்து என்பார் சி இலக்குவனார். பெண்ணின் நெற்றிக்கென்று தனி அழகு உண்டுதான். ஆனால் முகத்தில் நெற்றி மட்டும்தானா தனித்து ஒளிவீசும்? ஒளிர்விடும்முகம் என்பதையே ஒள்ளியநெற்றி என்றார்கள் போலும்! இங்கும் தலைவியது முகஅழகு கூறப்பட்டது எனக் கொள்வதில் குற்றமில்லை.
குறளின் பிற இடங்களிலும் நுதல் என்ற சொல் பெண்ணின் முகத்தையும் தோள் என்ற சொல் அவளது உடலையும் குறிப்பதாகவே வருகின்றன என்பது நோக்கத்தக்கது.

'ஒண்ணுதற் கோஒ' என்ற தொடர்க்கு 'ஒளிரும் நெற்றிக்காகவா' என்பது பொருள்.

போர்க் களத்தில் பகைவர்களும் அஞ்சி நடுங்கும் என் ஏற்றம், இவளது ஒளிவீசும் முகஅழகிற்கு அழிந்து விட்டதே! என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இவளது முகஒளிர்வு தலைவனைச் சிதறுண்டு போகச் செய்தது என்னும் தகையணங்குறுத்தல்.

பொழிப்பு

போரில் பகைவர் அஞ்சிநடுங்கும் என் வீரப்பெருமை இவளது முக அழகுக்கே உடைந்து விட்டதே!