இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1081



அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

(அதிகாரம்:தகை அணங்கு உறுத்தல் குறள் எண்:1081)

பொழிப்பு (மு வரதராசன்): தெய்வப் பெண்ணோ! மயிலோ? கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ? என் நெஞ்சம் மயங்குகின்றதே!

மணக்குடவர் உரை: இக்கனங்குழையை யுடையாள் தெய்வங்கொல்லோ? நல்லதோர் மயில் கொல்லோ? அன்றி, மக்களுள்ளாள் கொல்லோ? என்மனம் மயங்கா நின்றவற்றுள் யாதோ?

பரிமேலழகர் உரை: (தலைமகள் உருவு முதலியன முன் கண்டறிவன அன்றிச் சிறந்தமையின் அவளைத் தலைமகன் ஐயுற்றது.) கனங்குழை - இக்கனவிய குழையை உடையாள்; அணங்கு கொல் - இப்பொழிற்கண் உறைவாளோர் தெய்வமகளோ? ஆய்மயில் கொல் - அன்றி ஒரு மயில் விசேடமோ? மாதர்கொல் - அன்றி ஒருமானுட மாதரோ; என் நெஞ்சு மாலும் - இவளை இன்னள் என்று துணியமாட்டாது என் நெஞ்சு மயங்கா நின்றது.
(ஓ - அசை. ஆய் மயில்: படைத்தோன் விசேடமாக ஆய்ந்து படைத்த மயில்: மயிற் சாதியுள் தெரிந்தெடுத்த மயில் என்றும் ஆம். 'கனங்குழை': ஆகுபெயர். 'கணங்குழை' என்ற பாடம் ஓதி, 'பலவாய்த் திரண்ட குழை' என்று உரைப்பாரும் உளர். எழுதலாகா உருவும், தன் வருத்தமும் பற்றி 'அணங்குகொல்' என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும் பற்றி, 'ஆய்மயில்கொல்' என்றும், தன் நெஞ்சம் சென்றமையும் அவள் எதிர்நோக்கியவாறும் பற்றி 'மாதர்கொல்' என்றும் கூறினார்.)

வ சுப மாணிக்கம் உரை: தெய்வமோ மயிலோ தோடணிந்த பெண்னோ என்று என் நெஞ்சம் மயங்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அணங்கு கொல்! ஆய்மயில் கொல்லோ! கனங்குழை மாதர்கொல்! என் நெஞ்சு மாலும்.

பதவுரை: அணங்குகொல்-தெய்வமோ, தேவதையோ!; ஆய்மயில் கொல்லோ-ஆய்ந்து படைத்த மயிலோ!; கனங்குழை/கணங்குழை-கனமான காதணி, திரண்ட கூந்தல்); மாதர்கொல்-பெண்ணோ!; மாலும்-மயங்காநின்றது; என்-எனது; நெஞ்சு-உள்ளம்.


அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இக்கனங்குழையை யுடையாள் தெய்வங்கொல்லோ? நல்லதோர் மயில் கொல்லோ? அன்றி, மக்களுள்ளாள் கொல்லோ?
பரிப்பெருமாள் ('கணங்குழை' பாடம்): இக்கணங்குழையை யுடையாள் தெய்வங்கொல்லோ? நல்லதோர் மயில் கொல்லோ? அன்றி, மக்களுள்ளாள் கொல்லோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: எனக்குத் தெரிகின்றதில்லை என்றவாறு ஆயிற்று. கணங்குழை-ஆகுபெயர். ஆய்தல் என்பது தெரிதல்; பலவற்றினுந் தெரியப்படுதலின் நல்லது என்று பொருளாயிற்று. மக்களும் தேவரும் ஒருநீர்மையர் ஆதலின், தெய்வமோ மக்களோ என்று ஐயுறுக; மயிலோ என்றது என்னை எனின், இம்மணம் காந்தருவம் அன்றோ? தலைமகளைத் தலைமகன் எதிர்ப்படுங்கால் யாரும் இல்லாததோர் பொழிலகத்தே எதிர்ப்படுதல் வேண்டும்; ஆயிடை எதிர்ப்பட்ட தலைமகள் இப்பெற்றியாள் இவ்விடைத் தனிவருதல் கூடாதாகலான் ஈண்டு உறைவதோர் தெய்வமோ என்று ஐயுற்றான்; அதன்பின் பொழிலகத்து வாழ்வன மயில்கள் பலவும் உள; அவற்றுள் இஃதொரு மயில் விசேடமோ என்று ஐயுற்றான் என்று கொள்ளப்படும். இதனுட் காட்சி சொல்லி ஐயம் சொல்லுதலன்றே இலக்கணம்; அது கூறாதது என்னை எனின், கண்ட காலத்து புணர்ச்சி வேட்கை தோற்றுகையும் தோற்றாமையும் நிகழுமாதலான், அதனை யொழித்து அதற்குக் காரணமாகிய ஐயம் முதலாகச் சொன்னார் என்க. இது தலைமகன் தலைமகள் எதிர்ப்பட்டுழி ஐயுற்றது.
பரிதி: தெய்வமகளோ! நடமாடும் மயிலோ! கனத்த குழையுடைய பூமகளோ!
காலிங்கர் ('கணங்குழை' பாடம்): செய்குன்றும் இளமரக்காவும் ஆகிய யாரும் இல்லதொர் சிறையிடத்து மற்று இவண் வல்லிப்பூக்கொய்து கொண்டு ஆங்கு இனிது நின்ற தலைமகளை நிரம்ப முன் தான் செய்த தவப்பயனாகிய விதி வகையால் ஓர் வேட்டம்போந்து விளையாடுகின்ற தலைமகன் ஒரு மான் தொடர்ந்து வந்து எய்திக் கண்டான்; கண்டபின் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. இங்ஙனம் ஆரும் இல்லதொர் சிறையிடத்து நின்றும் இவ்வணியணிந்த உருவுடையதோர் தெய்வ வடிவங்கொல்லோ என்றும், மைக்கோலமும் வளரிளஞ் சாயலும் வனப்பும் உடையதோர் அழகிய மயிலாங் கொல்லோ என்றும் தக்க செல்வக்குலத்துள் பிறந்த மக்களுள் ஒருத்திகொல்லோ என்றும் இங்ஙனம் மயக்குறும் என்நினைவு, என்று தன்னெஞ்சிற்குச் சொல்லி தளர்வுற்றான் தலைமகன் என்பது பொருள்.
காலிங்கர் குறிப்புரை: கணங்குழை என்றது மகரக்குழை.
பரிமேலழகர்: இக்கனவிய குழையை உடையாள் இப்பொழிற்கண் உறைவாளோர் தெய்வமகளோ? அன்றி ஒரு மயில் விசேடமோ? அன்றி ஒருமானுட மாதரோ.
பரிமேலழகர் குறிப்புரை: ஓ - அசை. ஆய் மயில்: படைத்தோன் விசேடமாக ஆய்ந்து படைத்த மயில்: மயிற் சாதியுள் தெரிந்தெடுத்த மயில் என்றும் ஆம். 'கனங்குழை': ஆகுபெயர். 'கணங்குழை' என்ற பாடம் ஓதி, 'பலவாய்த் திரண்ட குழை' என்று உரைப்பாரும் உளர். எழுதலாகா உருவும், தன் வருத்தமும் பற்றி 'அணங்குகொல்' என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும் பற்றி, 'ஆய்மயில்கொல்' என்றும், தன் நெஞ்சம் சென்றமையும் அவள் எதிர்நோக்கியவாறும் பற்றி 'மாதர்கொல்' என்றும் கூறினார். [மயில் சாதி - மயில் இனம்]

அணங்கு என்ற சொல்லுக்குப் பழைய ஆசிரியர்கள் தெய்வம்/ தெய்வமகள் என்று பொருள் கொண்டனர். ஆய்மயில் என்றதற்கு மணக்குடவரும் பரிப்பெருமாளும் நல்லதோர் மயில் என்று கொண்டனர். பரிப்பெருமாள் 'ஆய்தல் என்பது தெரிதல்; பலவற்றினுந் தெரியப்படுதலின் நல்லது என்று பொருளாயிற்று' என்று கூடுதல் உரை தந்தார். நடமாடும் மயில் என்று பரிதி உரைத்தார்; காலிங்கர் அழகிய மயில் என்றார். பரிமேலழகர் ஆய்ந்து படைத்த மயில் அல்லது தேர்ந்தெடுத்த மயில் என்கிறார். மாதர் என்பதற்கு அனைவரும் மானுட மாதர் என்று பொருள் கண்டனர். கனங்குழை/கணங்குழை என்ற சொல்லுக்கு கனமான காதணி என்றும் திரண்ட கூந்தல் என்றும் இரு வகையாகப் பொருள் கண்டனர்.
உரையாசிரியர்கள் விளக்கம் கூறும்பொழுது, மரபு கருதி, குறளில் இல்லாததையும், தமது உரையில் இணைத்துச் சொல்கின்றனர்: அவன் மானைப் பின்தொடர்ந்து வந்தபொழுது அவள் வல்லிப்பூக்கொய்து கொண்டு ஆங்கு இனிது நின்ற அவளைக் கண்டான் என்றும், அவன் அவளைக் கண்ட இடம் செய்குன்று/சோலை என்றும், இருவரும் தனிமையாக இருக்கும்போது சந்திக்கின்றனர் என்றும் காட்சி அமைத்துக் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தெய்வமோ மயிலோ தோடணிந்த பெண்னோ என்று', 'கனத்த குழையணிந்த இப்பெண் தெய்வமகளோ? ஆராய்ந்தெடுத்த நல்ல மயிலோ? மாந்தரின் மகள் தானோ? என்று', 'செறிந்த குழையணிந்த இவள் ஒரு தெய்வப் பெண்ணோ, சிறந்த ஒருவகை மயிலோ, அல்லது மனித மங்கையோ என்று', 'பாரமான காதணியை உடைய இவள், தெய்வமகளோ? அழகிய மயிலோ? இந்நிலவுலகப் பெண்ணோ?', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தேவதையோ! தெரிந்தெடுக்கப்பட்ட மயிலோ! அல்லது காதணி/கூந்தல் கொண்ட மனிதப்பெண்தானோ! என்பது இப்பகுதியின் பொருள்.

மாலும்என் நெஞ்சு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்மனம் மயங்கா நின்றவற்றுள் யாதோ?
பரிப்பெருமாள்: என்மனம் மயங்கா நின்றது இவற்றுள் யாதோ? எனக்குத் தெரிகின்றதில்லை என்றவாறு ஆயிற்று.
பரிதி: என்றன் சிந்தையை மயக்குற்றவள்.
காலிங்கர்: மாலும் என்றது மயங்கும் என்றது.
ஆற்றானாகிய தலைமகன் இவள் கால் நிலம்தோய்தலும், கண் இமைத்தலும், கண்ணி வாடுதலும், பிறவும் கண்டு தெய்வ வடிவில் தீர்வுடைய மக்களுள் ஒருத்தியென அறிந்து, மற்று அதுவே பற்றுக்கோடாக உள்ளாகிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லி அறிவிக்கின்றது மேலிற் செய்யுள்.
பரிமேலழகர்: இவளை இன்னள் என்று துணியமாட்டாது என் நெஞ்சு மயங்கா நின்றது. [இன்னள் - இத்தன்மையினாள்; துணியமாட்டாது - தெளிய இயலாது]

பழைய ஆசிரியர்கள் 'மனம் மயங்கியது', 'சிந்தை மயக்குற்றது', 'நினைவு மயக்குற்றது', 'நெஞ்சு மயங்கியது' என்று இத்தொடர்க்கு பொருள் தந்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என் நெஞ்சம் மயங்கும்', 'என் மனம் ஐயுற்றுத் தெளிவுறாமல் மயங்குகின்றது', 'என் மனம் ஐயுற்று மயங்குகின்றது', 'இன்னாள் என்று துணிந்து நினைக்க முடியாதவாறு என் நெஞ்சம் மயங்குகின்றது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

என் சிந்தை மயங்குகிறதே! என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தேவதையோ! தெரிந்தெடுக்கப்பட்ட மயிலோ! அல்லது கனங்குழை மனிதப்பெண்தானோ! என் சிந்தை மயங்குகிறதே! என்பது பாடலின் பொருள்.
'கனங்குழை' என்றால் என்ன?

ஐயோ! என்ன ஓர் அழகு!

எதிரே தோன்றுகின்ற உரு தேவமகளோ? சிறந்த அழகு மயிலோ? அல்லது, கனவிய குழை கொண்ட ஒரு பெண் தானோ! என் நெஞ்சம் மயங்குகின்றதே!
தலைமகளை முதன்முதல் காணும் தலைமகன் கூற்றாக உள்ளது இப்பாடல். அவன் சொல்கிறான்: 'இவள் தேவதையா? அழகிய மயிலோ? அல்லது மனிதப்பெண்தானா? என எனது உள்ளம் மயங்கி நிற்கின்றது'.
அணங்கு என்ற சொல்லுக்குப் பெண்தெய்வம் அல்லது தேவதை என்பது பொருள். அதற்கு 'வருத்துந் தெய்வப்பெண்' அதாவது 'தன் அழகால் வருத்தும் தெய்வப்பெண்' என்றும் பொருள் கூறுவர். இச்சொல் தெய்வப்பெண், பேய்ப்பெண் இரண்டினையும் குறிக்கும் பொதுச்சொல்லும் ஆகும். 'சூர்' என்பது தீயதேவதையையும், 'அணங்கு' என்பது நன்மை செய்யும் தேவதையையும் குறிக்கும் என்று சங்கப்பாடல்கள் வழி அறியலாம். ஆண்களை வருத்தும் பெண்பாற் காமத்தை அணங்கு எனப் பெண்பாலாகவும், பெண்களை வருத்தும் ஆண்பாற் காமத்தைக் காமன் என ஆண்பாலாகவும் கூறுதல் நூன்மரபு என்பர்.
ஆய்மயில் என்றால் என்ன? பரிப்பெருமாள் ஆய்தல் என்பது தெரிதல் என்று சொல்லி 'பலவற்றினுந் தெரியப்படுதலின் நல்லது என்று பொருளாயிற்று' என்று விளக்கமும் அளித்தார். பரிமேலழகரும் இரண்டு பொருள் தருகிறார். ஒன்று 'கடவுள் ஆய்ந்து சிறப்பாகப் படைத்த மயில்'; மற்றொன்று 'ஆராய்ந்து தேர்ந்தெடுத்த அழகான மயில்'. மயிற்கூட்டந்தனில் உள்ள எல்லா மயிலும் அழகுதான். அவற்றினுள்ளும் ஆய்ந்து தெரிவு செய்யப்பட்ட மிகமிக அழகான மயில் இது என்று பொருள் கொள்ளப்படும். பெண்ணைப் பற்றிய புனைவுரையில் அவளது நடையை மயில்நடைக்கு ஒப்பிடுவர்.
கனங்குழை மாதர் என்பது காதணி அணிந்த பெண்ணைக் குறிக்கும் சொல். அடர்ந்த கூந்தல் எனவும் பொருள் கூறினர்.
மால்-மயக்கம். மாலுதல்-சுழன்றுகொண்டிருத்தல். மாலுதலுக்கு மயங்குதல் என்று பொருள்.
கொல் என்ற இடைச்சொல் ஐயம் காட்டுவதாக வருவது. இச்சொல்லாட்சி மூன்று முறை இப்பாவில் அடுக்கி அடுக்கி வந்து சொல்லவந்த கருத்துக்கு ஓசை நயத்தையும் தொடை நயத்தையும் தந்து அதன் கவித்துவத்தை ஏற்றி படிப்போர் உள்ளத்தில் ஒரு இன்ப உணர்வையும் கொண்டுவந்து விடுகிறது. இப்பாடலில் இரண்டாவது இடத்தில் உள்ள கொல் என்னும் ஐயச்சொல்லுடன் ஓகார இடைச் சொல்லை இட்டு 'கொல்லோ' என மாற்றியதால் ஒரே மாதிரியான கொல் என்ற சொல் திரும்பத் திரும்ப வருவதால் உண்டாகும் சலிப்புத்தன்மை ஏற்படாமல் தடுத்துக் கவிதைக்கு வீறுகொண்ட தோற்றம் தருகிறது (ச அகத்தியலிங்கம்).

முதற்பார்வையிலேயே அப்பெண்ணின் மொத்த உருவமைப்பும் உடல் அசைவுகளும் அணிகலனும் தலைவனை மின்னல் போல் தாக்கி நிலைதடுமாற வைக்கிறது. அவளது பேரழகு அவனை அவளிடம் ஈர்ப்புக் கொள்ளவைக்கிறது; 'தன்னை வருத்தியது அணங்கோ' என்று மருள்கிறான். மயில் போன்ற அவளது ஒயிலான சாயல் அவனை மயக்கியதால் 'இவள் இறைவன் ஆய்ந்து தனியாகப் படைத்த மயிலா' என்று வியக்கிறான். அவள் அணிந்துள்ள காதணி அல்லது அவளது அடர்த்தியான கூந்தல் தன்னை வெகுவாக உறுத்துவதுதாக உணர்ந்து 'இவள் மனிதப் பெண்தானோ' என்று ஐயமும் தெளிவும் கலந்த நிலையில் கூறுகிறான்.
தன்னை ஈர்த்த அழகிய பெண் ஒருத்தியைக் கண்ட தலைமகன் அவளது எழில் நலத்திலும், ஒயிலான அசைவுகளிலும் மயங்கிக் கூறுவதாக அமைந்த பாடல் இது.

'கனங்குழை' என்றால் என்ன?

கனங்குழை என்ற சொல்லுக்குக் கனங்குழையை யுடையாள், கணங்குழையை யுடையாள், கனத்த குழையுடைய பூமகள், கனவிய குழையை உடையாள், தோடணிந்தவள், கனத்த குழை, கனத்த குண்டலங்கள், திரண்ட கூந்தலையுடையவள், செறிந்த குழையணிந்த, பாரமான காதணியை உடையவள், காதணிகள் பூண்டவள், கண்ணியம் மிக்க காதணியுடையாள், கனமான காதணி, பொருந்திய குழையினையுடையவள், பெரிய கம்மல் அணிந்தவள் என்று பொருள் கூறினர்.

கனங்குழை என்பது கனமான காதணியைக் குறிக்கும் என்றே பல உரையாசிரியர்கள் பொருள் கூறினர். காதில் கனமான ஆபரணத்தை அணிதல் பெண்களுக்கு அழகும் சிறப்பும் தந்ததுபோலும். மணக்குடவர், பரிதி, பரிமேலழகர் ஆகியோர் 'கனங்குழை' என்று கொண்டு உரை தருவர்.
பரிப்பெருமாளும், காலிங்கரும் 'கணங்குழை' என்று கொண்டு முறையே 'பலவாய்த் திரண்ட குழை', 'மகரக்குழை' என்று பொருள் உரைப்பர். 'கணங்குழை யென்று பாடமோதிப் பலவாய்த் திரண்ட குழையென்றுரைப்பாரு முளர் என்றார் பரிமேலழகர். பாம்படம், தண்டொட்டி, அரிசித்தழுப்பு, பூச்சிக்கூடு, ஆகிய பாண்டி நாட்டுக் காதணிகளைக் குறிப்பின், அப்பாடமும் பொருந்துவதே' என்கிறார் தேவநேயப் பாவாணர். அணங்கு என்றதற்கேற்பக் கணங்குழை என்ற பாடம் எதுகை நயமுடையது.
கனங்குழை/கணங்குழை என்பதற்குத் திரண்ட கூந்தல் (இளங்குமரன்), நிறைந்த கூந்தல் (பொற்கோ), அடர்ந்த கூந்தல் என்றவாறும் பொருள் உரைத்தனர். கனங்குழை என்றதற்குக் ‘கனங்குழல்’ என்றும் இன்றைய ஆசிரியர் பாடம் கொண்டனர். 'குழை'க்குக் கூந்தல் என்ற பொருள் சிறப்பில்லை என்றும் கனம் என்னும் அடை கூந்தலுக்கு இயல்பில்லை என்றும் கூறுவார் இரா சாரங்கபாணி. ஆனால் அடர்ந்த கூந்தல் பெண்ணுக்கு அழகு மிகசேர்ப்பதால் இப்பொருளும் ஏற்கும்.

'கனங்குழை' என்றால் கனமான காதணி அல்லது அடர்ந்த கூந்தல் என்பது பொருள்.

தேவதையோ! தெரிந்தெடுக்கப்பட்ட மயிலோ! அல்லது காதணி கொண்ட மனிதப்பெண்தானோ! என் சிந்தை மயங்குகிறதே! என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பார்த்தவுடனேயே அவள் அழகும் அசைவும் அவனை அடித்துப் போட்ட தகையணங்குறுத்தல் கவிதை.

பொழிப்பு

இவள் ஒரு தேவதையா! தெரிந்தெடுக்கப்பட்ட மயிலோ! கனத்த குழைகள்/கூந்தல் கொண்ட மானிடப் பெண்தானா! நான் மயக்குற்றேனே!