பண்டறியேன் கூற்றுஎன் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு
(அதிகாரம்:தகை அணங்கு உறுத்தல்
குறள் எண்:1083)
பொழிப்பு (மு வரதராசன்: எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன்; இப்பொழுது கண்டறிந்தேன்; அது பெண் தன்மையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது.
|
மணக்குடவர் உரை:
பண்டு கூற்றின்வடிவு இன்னபெற்றித்தென்பதை அறியேன்: இப்பொழுது அறிந்தேன். அது பெண்டகைமையோடே பெருத்து அமர்த்த கண்களையுடைத்து.
இது நம்மை வருத்தற்குத் தக்காளென்னுங் குறிப்பு.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது) கூற்று என்பதனைப் பண்டு அறியேன் - கூற்றென்று நூலோர் சொல்வதனைப் பண்டு கேட்டு அறிவதல்லது கண்டறியேன்;
இனி அறிந்தேன் - இப்பொழுது கண்டறிந்தேன்; பெண் தகையாள் பேர் அமர்க்கட்டு - அது பெண்தகையுடனே பெரியவாய் அமர்த்த கண்களை உடைத்து.
(பெண்தகை: நாணம்,மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் குணங்கள். அவை அவ்வக்குறிகளான் அறியப்பட்டன. அமர்த்தல்: அமர் செய்தல்,
பெயரடியாய வினை. பெண்தகையால் இன்பம் பயத்தலும் உண்டேனும் துன்பம் பயத்தல் மிகுதிபற்றிக் கூற்றாக்கிக் கூறினான்.)
வ சுப மாணிக்கம் உரை:
கூற்றை முன்பு கண்டறியேன்; இன்றறிந்தேன்; பெண்மையும் பெருங்கண்ணும் உடையது.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
கூற்று என்பதனைப் பண்டு அறியேன் இனி அறிந்தேன் பெண் தகையாள் பேர் அமர்க்கட்டு.
பதவுரை: பண்டு-முன்பு; அறியேன்-அறியமாட்டேன், அறியாதவனாக இருந்தேன்; கூற்று-எமன்; என்பதனை-என்று சொல்லப்படுவதனை; இனி-இப்பொழுது; அறிந்தேன்-தெரிந்து கொண்டேன்; பெண்-பெண்; தகையால்-தன்மையால்; பேர்-பெரிய, மிக்க; அமர்-போர்; கட்டு-கண்களையுடையது.
|
பண்டறியேன் கூற்றுஎன் பதனை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பண்டு கூற்றின்வடிவு இன்னபெற்றித்தென்பதை அறியேன்;
பரிப்பெருமாள்: பண்டு கூற்றின்வடிவு இன்னபெற்றித்தென்பதை அறியேன்;
பரிதி: கூற்றுவன் என்பது பண்டறியேன்;
காலிங்கர்: உலகத்து உயிர் கவர்ந்து ஒழுகும் கூற்று என்பதொன்று உளது என்று கேட்டறியும் அத்துணை அல்லது பண்டு ஒன்றும் கண்டறியேன்;
பரிமேலழகர்: கூற்றென்று நூலோர் சொல்வதனைப் பண்டு கேட்டு அறிவதல்லது கண்டறியேன்;
'பண்டு கூற்றின் வடிவு இன்னபெற்றித்தென்பதை அறியேன்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கூற்று என்று கூறுவதனை முன் கேட்டறிந்த்தன்றி நேரே கண்டதில்லை', 'எமன் என்று சொல்லப்படுவது என்ன வென்பதை இதுவரையிலும் நான் அறிந்ததில்லை', 'நமன் என்பதை இதற்கு முந்தி நேரே பார்த்து அறிய மாட்டேன்', 'கூற்று (எமன்) என்று நூலோர் சொல்வதனை முன்பு கேட்டு அறிவதல்லது கண்டு அறியேன்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
கூற்று என்று சொல்லப்படுவதை முன்பு அறியமாட்டேன் என்பது இப்பகுதியின் பொருள்.
இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இப்பொழுது அறிந்தேன். அது பெண்டகைமையோடே பெருத்து அமர்த்த கண்களையுடைத்து.
மணக்குடவர் குறிப்புரை: இது நம்மை வருத்தற்குத் தக்காளென்னுங் குறிப்பு.
பரிப்பெருமாள்: இப்பொழுது அறிந்தேன். அது பெண்டகைமையோடே பெருத்து அமர்த்த கண்களையுடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: கூற்று என்று அறிந்தேன் என்றது மேல் ஐயப்பட்ட மூன்றினும் எம்மை வருத்துவதற்குத் தக்காள் என்னும் குறிப்பு.
பெண்தகைமையாகிய நடையும் கண் இமைத்தலும் கண்டு மக்களுள்ளாள் என்று தேற்றியது.
பரிதி ('பேரமர்க்கட் பட்டு' பாடம்): இப்பொழுது அறிந்தேன் பெண் என்னும் உருவத்தினையுடைய கண்ணினால் என்றவாறு.
காலிங்கர்: மற்று அஃது இப்பொழுது கண்டறிந்தேன், இப்பெண்மைக் கோலத்துடன் பெருத்து அமர் செய்யும் கண்ணினையுடைத்தென்று.
தலைமகன் வருத்தத்தோடு தன் நெஞ்சிற்குச் சொல்லியது என்றவாறு இன்னமும்.
பரிமேலழகர்: இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண்தகையுடனே பெரியவாய் அமர்த்த கண்களை உடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: பெண்தகை: நாணம்,மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் குணங்கள். அவை அவ்வக்குறிகளான் அறியப்பட்டன.
அமர்த்தல்: அமர் செய்தல், பெயரடியாய வினை. பெண்தகையால் இன்பம் பயத்தலும் உண்டேனும் துன்பம் பயத்தல் மிகுதிபற்றிக் கூற்றாக்கிக் கூறினான். [நாண்- பெண்டிர்க்கு இயல்பாக உள்ளதொரு தன்மை; மடம்- கொளுத்தக் (அறிவுறுத்த) கொண்டு கொண்டது விடாமை; அச்சம்-பெண்மையின் தான் காணப்படாததோர் பொருள் கண்டவிடத்து அஞ்சுவது; பயிர்ப்பு-பயிலாத பொருளிடத்து அருவருத்து நிற்றல்; இன்பம் பயத்தல் - இன்பம் தருதல்]
பழையவர்கள் அனைவரும் 'பெண்தன்மை கொண்டு அமர் செய்யும் பெரிய கண்களுடையது அது என்று இப்பொழுது தெரிந்துகொண்டேன்' என்பதாக இப்பகுதிக்கு உரை பகன்றனர். 'பெண்தகைமையாகிய நடையும் கண் இமைத்தலும் கண்டு மக்களுள்ளாள்' என்று பரிப்பெருமாளும் 'நாணம்,மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் குணங்களால் பெண் என்று அறியப்பட்டாள்' என்று பரிமேலழகரும் தங்களது விரிவுரையில் தான் பார்த்தது பெண்தான் என்பதற்காகக் கூறுவர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஆனால் இப்போது கண்டறிந்தேன். அது பெண்ணுக்குரிய குணநலன்களோடு பெரிய அமர்புரியும் கண்களை உடையது', 'இப்போது அறிந்து கொண்டேன். அது பெண்ணழகு என்ற வடிவத்துடன் துன்பமுண்டாக்கும் பெரிய கண்களையுடையது -(என்று)', 'இப்பொழுது கண்டறிந்தேன்; அது பெண்தன்மையோடு போர் செய்யும் பெரிய கண்ணழகோடும் உள்ளது', 'இப்பொழுது கண்டு அறிந்தேன். அது பெண்ணின் வடிவழகுடன் பெரியனவாய்ப் பொருந்திய கண்களை உடையது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பெண்தன்மையுடன், போர் செய்யும் பெரிய கண்களையுடையது என்று இப்பொழுது தெரிந்து கொண்டேன் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
'கூற்று என்று சொல்லப்படுவதை முன்பு அறியமாட்டேன்; பெண்தன்மையுடன், போர் செய்யும் பெரிய கண்களையுடையது என்று இப்பொழுது தெரிந்து கொண்டேன்' என்கிறான் தலைவன் என்பது பாடலின் பொருள்.
தான் பார்த்த பெண்ணை ஏன் கூற்று எனக் குறிப்பிடுகிறான் தலைமகன்?
|
அவளது கண்கள் என்னைச் சாகடிக்கின்றனவே!
'‘கூற்று’ என்பதனை இதுவரை அறியாதிருந்தேன். இப்போது அறிந்துவிட்டேன்; அது, அழகிய பெண்ணின் வடிவோடு பெரிய பெரிய போர்புரியும் கண்களை உடையது என்று' எனச் சொல்கிறான் தலைவன்.
காட்சிப் பின்புலம்:
தலைவன் தலைவியை முதன் முதலில் பார்க்கிறான். கண்ட அக்கணமே அவளது அழகு அவனை மிகையாக ஈர்த்துவிடுகிறது. இவள் பெண்தானா அல்லது வேறு உலகத்தைச் சேர்ந்த அழகியா என்று வியக்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் ஒரே நேரத்தில் நோக்கினார்கள். தான் பார்த்த பெண்ணினது உடல் அழகு தன்னை முதலில் ஈர்த்தது; அவளது எதிர்பார்வை தன்னை அவள் ஒரு படையுடன் வந்து தாக்கியது போன்று இருந்தது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறான்.
இப்போது:
இப்பொழுது அவளது பெரிய கண்களைப் பார்க்கும்போது அவன் உயிரே பறிக்கப்படுவதாக உணர்கிறான். அவளது பார்வையின் தாக்கத்தைத் தாங்கமாட்டாது அவளது கண்கள் அவன் உயிரைக் கவர வந்தன போல் இருந்தன என்பதாக உணர்ந்தான். அப்பொழுது சொல்கிறான்: 'உயிரைப் பறிக்கும் கூற்று பற்றி இதுவரை தெரியாதிருந்தேன்; இப்பொழுது நேருக்குநேர் அதைப் பார்க்கிறேன்; உயிர் பறிக்கும் கூற்று ஆணல்ல; ஒரு பெண்வடிவம்தான் என்பதும் அது உயிரைப் போக்கும் பார்வை கொண்ட பெரிய கண்களையுடையது என்று இப்பொழுதுதான் புரிகிறது.'
அவள் பெண்தன்மை கொண்டு 'கொல்லும்' கண்களையுடையவளாக இருக்கிறாள் எனச் சொல்கிறான் தலைவன்.
இப்பாடலிலுள்ள பெண்டகை என்ற தொடர் பெண் தகைமை அல்லது பெண் தன்மை என்ற பொருள் தருவது. பேர் என்ற சொல் பெரிய என்ற பொருளது. அமர் என்ற சொல் போர் செய் எனப் பொருள்படும். 'கட்டு' என்ற சொல் 'கண்து' அதாவது கண்களை உடையது என்பதிலிருந்து பெறப்பட்டது என்பர். 'பெண்டகையால் பேரமர்க் கட்டு' என்ற தொடர் 'பெண்தன்மையால் பெரிய போர்செய்யும் பெரிய கண்களை உடைத்து' என்ற பொருள் தரும்.
பெருங்காவியங்கள் படைத்த கம்பரும் திருத்தக்கதேவரும் இக்குறளில் கண்ட பொருள் தோன்ற அவர்கள் படைத்த இலக்கிய மாந்தர்கள் கூறுவதாகக் காட்சிகளை அமைத்துள்ளனர். சீதையின் உருவெளிப்பாடு கண்ட இராமன் அவள் கூற்றுவனாகத் தோன்றித் தன்னை வருத்துவதாக தனக்குள் கூறுவதாக உள்ள கம்பரின் பாடல்:
வண்ண மேகலைத் தேர் ஒன்று வாள் நெடுங்
கண் இரண்டு கதி முலை தாம் இரண்டு
உள் நிவந்த நகையும் என்று ஒன்று உண்டால்
எண்ணும் கூற்றினுக்கு இத்தனை வேண்டுமோ! (கம்பராமாயாணம்: மிதிலைக் காட்சி படலம்: 144 பொருள்: அழகிய மேகலை என்னும் அணிகலன் அணிந்த, தேர்த்தட்டுப் போன்ற அல்குல் ஒன்றும், வாள்கள் போன்ற நீண்ட கண்கள் இரண்டும், பெருத்த தனங்கள் இரண்டும், வாயிடமாக அடங்கிப் பொலிந்த புன்சிரிப்பு, என்ற ஒன்றும் உண்டு. என்னைக் கொல்லக் கருதுகின்ற கூற்றுவனுக்கு இத்தனை கருவிகளும் வேண்டுமோ!).
திருத்தக்க தேவர் இலக்கணையாரின் அழகு பிறரை வருத்தியதாகக் கூறும்பொழுது, அவளைக் கூற்றுவனாகவே காட்டுகிறார்.
கண்ணினால் இன்று கண்டாம் கூற்றினைக் காமர் செவ்வாய்
ஒள் நுதல் உருவக் கோலத்து ஒருபிடி நுசுப்பின் தீம் சொல்
வண்ணித்தல் ஆவது இல்லா வரு முலை மதர்வை நோக்கின்
பெண் உடைப் பேதை நீர்மைப் பெருந் தடம் கண்ணிற்று அம்மா (சீவக சிந்தாமணி: இலக்கணையார் இலம்பகம்: 81 பொருள்: இன்று கூற்றத்தைக் கண்ணாலே பார்த்தோம்; விருப்பூட்டும் செவ்வாயையும்; ஒள்ளிய நெற்றியையும்; அழகிய ஒப்பனையையும்; ஒரு பிடியில் அடங்கும் இடையையும்; இனிய மொழியையும்; புனைந்துரைக்க முடியாத; வளரும் முலைகளையும்; களிப்புடைய பார்வையையும்; பெண்ணியல்பையுடைய பேதை நீர்மையையும்; பெரிய அகன்ற கண்களையும் உடையது.)
தலைவன் வருந்தியதற்கு வள்ளுவர் அமர்க்கண்ணைக் கூற, கம்பர் அல்குல், கண், முலை, பல் ஆகியவற்றைச் சொல்கிறார். திருத்தக்க தேவர் முற்கூறியவற்றோடு வாய், நுதல், நுசுப்பு, தீஞ்சொல் ஆகியவற்றையும் சேர்த்து விரித்திருந்தார். 'கூற்றென்பதனை இனி அறிந்தேன்' என வரும் குறள் பகுதி 'கண்ணினால் இன்று கண்டாம் கூற்றினை' எனச் சிறுது நடைமாற்றத்துடன் திருத்தக்கதேவர் பாடலில் வந்துள்ளது (இரா சாரங்கபாணி).
|
தான் பார்த்த பெண்ணை ஏன் கூற்று எனச் சொல்கிறான் அவன்?
கூற்று என்பது உலகத்து உயிர் கவர்ந்து ஒழுகும் உருவகமாகத் தொன்மங்களில் சொல்லப்படுவது. அது நூல்களிலே மட்டும் காணப்படும் கற்பனைப் படைப்பு ஆதலால் அதை .யாரும் பார்த்ததுமில்லை; இனியும் பார்க்கப்போவதுமில்லை. அது காலன், எமன், யமன், நமன், என்றும் அறியப்படும்.
தொன்மங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூற்று என்பதற்கு 'கூற்று- உடலில் இருந்து உயிர் பிரிவது ஓர் இயற்கை ஒழுங்கு; ஒன்றைப் பகுத்தல், கூறுவைத்தல், கூறுபோடல் எனப்படும். உடலில் இருந்து உயிர் பகுத்து அல்லது பிரிந்து செல்லும் நிலையைக் கூற்று எனல் மரபு. அதனை உருவக வகையால் 'கூற்றுவன்' எனலும் வழக்கே' எனவும் 'உடலும் உயிரும் கூறுபடும் காலத்தையும் தொழிலையும் உயிருடையதாகக் கூறியது கூற்று (எமன்) ஆகும்' எனவும் விளக்குவர்.
இவ்விரு திறத்தாரும் சொல்வது கூற்றின் தொழில் உயிர் பிரிப்பது என்பதுதான். உடலிலிருந்து உயிர் பிரிப்பது என்னும்போது கூற்று தாங்கவொண்ணா வருத்தம் விளைப்பது என்பதும் பெறப்படும்.
அவனுக்கு அவளது கண்கள் கொல்படையாகத் தோன்றுவதால் கண்களைக் கூற்றாக்கிக் கூறினான். அவளுடைய பெண்ணியல்புகளும் பெரிய கண்களும் அவனுக்குள்ளிருந்து கூற்று போல வருத்தி அவனைக் கூறுபோடுகின்றன போன்று தோன்றின.
அவளது கண்கள் அவனது உயிர்பறிக்கும் தன்மையதாய் வருத்துகின்றன என்கிறான் தலைமகன்.
தலைவனை அவள் அழகு மிகவும் வருத்தித் துயரம் தருவதால், துன்பமிகுதி பற்றிக் கூற்றாக்கிக் கூறினான்.
|
கூற்று என்று சொல்லப்படுவதை முன்பு அறியமாட்டேன்; பெண்தன்மையுடன், போர் செய்யும் பெரிய கண்களையுடையது என்று இப்பொழுது தெரிந்து கொண்டேன் என்பது இக்குறட்கருத்து.
'உயிரே போகுதே' என்று தலைவனை வருந்தச்செய்யும் அவளது கண்கள் பற்றிய தகையணங்குறுத்தல் பாடல்.
கூற்று என்று சொல்லப்படுவதை முன் அறிந்ததில்லை. ஆனால் இப்போது தெரிந்துகொண்டேன், அது பெண்இயல்போடு போர்புரியும் பெரிய கண்களை உடையது என்று.
|