இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1087

மத்தகம் படாம்


கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்

(அதிகாரம்:தகை அணங்கு உறுத்தல் குறள் எண்:1087)

பொழிப்பு (மு வரதராசன்): மாதருடைய சாயாத கொங்கைகளின்மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின்மேல் இட்ட முகபடாம் போன்றது.

மணக்குடவர் உரை: மதயானை முகத்துக் கண்மறைவாக இட்ட படாம் போலும் மாதரே! நினது படாமுலைமேல் இட்டதுகில்.

பரிமேலழகர் உரை: (அவள் முலைகளினாய வருத்தம் கூறியது.) மாதர் படா முலை மேல் துகில் - இம் மாதர் படாமுலைகளின் மேலிட்ட துகில்; கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் - அவை கொல்லாமல் காத்தலின் கொல்வதாய மதக்களிற்றின் மேலிட்ட முகபடாத்தினை ஒக்கும்.
(கண்ணை மறைத்தல் பற்றிக் 'கட்படாம்' என்றான். துகிலான் மறைத்தல் நாணுடை மகளிர்க்கு இயல்பாகலின், அத்துகிலூடே அவற்றின் வெம்மையும் பெருமையும் கண்டு இத்துணையாற்றலுடையன இனி எஞ்ஞான்றும் சாய்வில எனக் கருதிப் 'படாமுலை' என்றான். உவமை சிறிது மறையாவழி உவை கொல்லும் என்பது தோன்ற நின்றது.)

இரா சாரங்கபாணி உரை: இப்பெண்ணின் கைபடாத முலைமேலிட்ட மேலாடை கொல்லும் மதம்பிடித்த யானையின் மேலிட்ட முகபடாத்தினை ஒக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மாதர் படாஅ முலைமேல் துகில் கடாஅக் களிற்றின்மேல் கட்படாம்.

பதவுரை: கடாஅ-மதம் பொருந்திய; களிற்றின்மேல்-ஆண்யானையின் மீதுள்ள; கட்படாம்-கண்ணை மறைக்கும் ஆடை (முகச்சீலை); மாதர்-பெண்; படாஅ-சாயாத; முலைமேல்-கொங்கைமேல்; துகில்-மேலாடை.


கடாஅக் களிற்றின்மேல் கட்படாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மதயானை முகத்துக் கண்மறைவாக இட்ட படாம் போலும்;
பரிப்பெருமாள்: மதயானை முகத்துக் கண்மறைவாக இட்ட படாம் போலும்;
பரிதி: மதயானைக் கன்றுக்குப் படாம் கட்டினதற்கு ஒக்கும்;
காலிங்கர்: கொலைவினை காத்தற்கு மதக்களிற்றின் மாட்டி உறுத்திய முகபடாமன்;
பரிமேலழகர்: கொல்வதாய மதக்களிற்றின் மேலிட்ட முகபடாத்தினை ஒக்கும்;
பரிமேலழகர் குறிப்புரை: கண்ணை மறைத்தல் பற்றிக் 'கட்படாம்' என்றான். [யானை முகத்தில் இடும் படாம் (ஆடை) அதனது கண்ணை மறைத்தல் பற்றிக் 'கடபடாம்' என்று கூறப்பட்டது]

'மதயானையின் முகத்தின் மேலிட்ட படாம் போலும்' என்று பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கொண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மதயானைக்கு இட்ட முகமூடி போலும்', 'மதமிகுந்த யானையின் மத்தகங்களின் மீது முகச்சீலை படிந்திருப்பது போல கவர்ச்சி தருகிறது', 'மதயானையின் மேலிட்ட முகபடாம்போல் இருக்கிறது', 'மதம் பொருந்திய யானையின் மேலிட்ட முகமறைப்பினை ஒக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மதநீரையுடைய ஆண்யானையின் மேலிட்ட கண்மறைப்பு என்பது இப்பகுதியின் பொருள்.

மாதர் படாஅ முலைமேல் துகில்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாதரே! நினது படாமுலைமேல் இட்டதுகில்.
பரிப்பெருமாள்: நினது படாத முலைமேல் இட்டதுகில்.
பரிப்பெருமாள் குறிப்புரை: நீக்கின் கொல்லும் என்பது கருத்து. முலைகண்டு அவ்வேட்கையால் தலைமகன் கூறியது. இத்துணையும் தலைமகன் கூற்று.
பரிதி: தன பாரத்தின் போட்ட துகில்.
காலிங்கர்: அது யாதோ எனின், நெஞ்சே! இம்மாதராள் தனது முகஞ்செய் பருவமாகிய இளமுலைமேல் துவக்கிய உத்தரியப் பட்டாடை என்பது கருத்து என்றவாறு [உத்தரியம்- மேலாடை].
பரிமேலழகர்: (அவள் முலைகளினாய வருத்தம் கூறியது.) அவை கொல்லாமல் காத்தலின் இம் மாதர் படாமுலைகளின் மேலிட்ட துகில். [அவை கொல்லாமல்-அம்முலைகள் (என்னைக்) கொல்லாமல்; துகில்- ஆடை; ]
பரிமேலழகர் குறிப்புரை: துகிலான் மறைத்தல் நாணுடை மகளிர்க்கு இயல்பாகலின், அத்துகிலூடே அவற்றின் வெம்மையும் பெருமையும் கண்டு இத்துணையாற்றலுடையன இனி எஞ்ஞான்றும் சாய்வில எனக் கருதிப் 'படாமுலை' என்றான். உவமை சிறிது மறையாவழி உவை கொல்லும் என்பது தோன்ற நின்றது. [எஞ்ஞான்றும் சாய்வில-எந்நாளும் சாயமாட்டா; உவமை-கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் என்னும் உவமானம்]

இப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் 'முலைமேல் இட்ட மேலாடை' என்று பொருள் கூறினர். படாமுலை என்பதற்கு மணக்குடவர், பரிமேலழகர் இருவரும் 'படாமுலை' என்றே உரை செய்தனர்; பரிமேலழகர் விரிவுரையில் 'சாய்வில' அதாவது 'சாயாத முலை' என்று விளக்கினார். பரிதி 'தன பாரம்' என்று சொல்ல காலிங்கர் 'இளமுலை' என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கைபடாத முலைமேல் கிடக்கும் மெல்லாடை', 'இந்தப் பெண்ணின் திரண்டு மதர்த்து நிமிர்ந்திருக்கிற முலைகளின்மேல் இவளுடைய மேலாடை படிந்திருப்பது', 'இப்பெண்ணினுடைய துவளாத மார்பின் மேல் உள்ள ஆடையானது', 'இப்பெண்ணின் சாயாத முலைகளின் மேல் இட்ட ஆடை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பெண்ணின் சாயா முலை மீது போட்ட மெல்லாடை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:

பெண்ணின் சாயா முலை மீது அணிந்துள்ள மெல்லாடை மதநீரையுடைய ஆண்யானையின் மேலிட்ட கண்மறைப்பு போன்றது என்பது பாடலின் பொருள்.
இக்குறளிலுள்ள உவமை தரும் செய்தி என்ன?

அவள் மேலாடையுள் இருக்கும் கொங்கை அவனைக் கொல்லும் கருவியாக மாறக் காத்திருக்கிறது.

இப்பெண்ணின் சாயாத மார்பகங்களின் மேலுள்ள மெல்லிய ஆடை யானையின் மேல் இடப்பட்ட கண்படாம் போன்றது.
காட்சிப் பின்புலம்:
முதற்பார்வையிலேயே தலைவியின் அழகில் தன்னைப் பறிகொடுத்துவிடுகிறான் தலைவன். அவள் காதல் தெய்வமோ, மயிலோ என வியந்தான். இருவர் பார்வைகளும் கலந்தன. அவள் பார்வை அவனைப் படைகொண்டு தாக்குவது போல இருந்ததாம். முன்பு கூற்றுவன் பற்றி ஒன்றுமறியேன்; இப்பொழுது அது பெரிய கண்களையுடையது என்று சொல்லப்படுவதை நம்புகிறேன் என அவள் கண்களால் அவனைச் சாகடிக்கிறாள் என்பதாகச் சொல்கிறான். அவளது புருவநெரிவும் அவனைத் துன்பப்படுத்தியதை எண்ணிக்கொண்டிருக்கிறான்.

இக்காட்சி:
இப்பொழுது, அவளது முலைகள் மீது இடப்பட்ட ஆடை அவன் கண்ணில் தென்படுகின்றன. அப்போது அவன் சொல்கிறான்: 'மதயானை மீது உள்ள கட்படாம் போன்றது அவளது படாஅ முலை மேல் அணிந்துள்ள மேலாடை'. 'கட்படாம்' என்பது கண் ஆடை எனப் பொருள்படும், யானையின் கண்ணை மறைப்பதற்காக தலை உச்சியில் தொடங்கி மத்தகங்கள் வழியாக தும்பிக்கைக் கீழ் முனை வரை அணியப்படும் துணியாலான சீலை கண்படாம் எனப்படும். இது யானையின் கண்களை மறைத்தும் மறையாமலும் போடப்படும். யானையின் கண்களை உறுத்தாமல் இருப்பதற்காக அது மெல்லியதாக இருக்கும். யானையின் கண்களை மறைத்தற்காக இடப்படுவதால் 'கட்படாம்'.
பாலுணர்வினைச் சார்ந்த மதநீரை உடைய ஆண்யானைக்கு (ஆண் யானைக்கு மட்டுமே மதநீர் சுரக்கும்) அதன் மத்தகங்கள் மேல் படாம் போர்த்தப்படும். மத்தகம் என்பது யானையின் தலையின் மேல் நெற்றிப் பகுதியாகும். யானைக்கு இரண்டு மத்தகங்கள் உண்டு. அவை புடைப்புப்பகுதியாக குமிழ்கள் போல் தோன்றும். கண்படாத்தின் பயன் என்ன? யானைக்கு மதவெறி பிடித்துவிட்டல் எதிர்வரும் மாந்தர், பிற யானைகள் மற்றும் கண்ணில்படும் அனைத்துப் பொருட்களயும் சிதைத்து ஊறு விளவிக்கும். படாம் அதன் கண்களின் பெரும்பகுதியை மறைத்து விடுவதால், யானையைக் கட்டுப்படுத்தவும் யானையின் மதவெறி ஆட்டத்தால் உண்டாகும் சேதத்தை மட்டுப்படுத்தவும் அது உதவும். இவ்வாறு யானையை நெறியில் செலுத்துவதற்காகவே அதன் முகத்தில் படாம் அணிகின்றனர். விழாக்காலங்களில் யானையை அழகுபடுத்துவதற்காகவும் ஆபரணப் பொருட்களால் செய்யப்பட்ட படாம் சாத்தப்படுவது உண்டு.

இக்குறளிலுள்ள உவமை தரும் செய்தி என்ன?

அவளது இளம் முலைகளின் மீது அணியப்பட்ட மேலாடை யானையின் மத்தகங்கள் மீது போடப்பட்ட படாம் போன்றிருக்கிறது என்கிறது இக்குறள். தலைவன் பார்த்த பெண்ணின் எழில்நலத்தை ஒவ்வொன்றாகச் சொல்லி வருபவன் அவள் தன் மார்பை மறைக்க அணிந்துள்ள துகிலை யானையின் முகஆடைக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றான். துகிலைப் பற்றிச் சொல்வது மட்டும் இப்பாடலின் நோக்கமாக இருக்கமுடியாது. வேறு என்ன செய்தி?
மதயானையின் கண்படாம் விலகினால் அதன் பார்வை தெளிவாகி மதம் காரணமாக உயிர்களைக் கொல்ல வழி ஆகும்; அவள் மார்பகங்களின் மேலுள்ள மேலாடை விலகி அவன் அவைகளைப் பார்க்க நேர்ந்தால் அவை அவனைக் கொன்று போட்டு விடுமே என்று எண்ணுகிறான். மதம்பிடித்த யானையின் கட்படாமானது பிற உயிர்கள் கொல்லப்படாமல் காப்பது போல, இளம் பெண்ணின் நிமிர்ந்த முலையை பார்க்கமுடியாமல் மறைத்த துகில் அவனுக்குக் கேடுநேராமல் காப்பாற்றிவிடுகிறதாம். இப்பொருளிலே தொல்லாசிரியர்களில் காலிங்கர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் உரை தந்தனர். பரிமேலழகர் 'உவமை சிறிது மறையாவழி உவை கொல்லும் என்பது தோன்ற நின்றது' என்று விளக்கினார். பின்வந்த ஆசிரியர்களில் பலரும் இவ்வாறே பகர்ந்தனர். தண்டபாணி தேசிகர் 'முகபடாம் என்பது யானைக்கண்ணையுஞ் சிறிதுமறைத்துக் கேடுதவிர்த்ததுபோல முலைமேற்றுகிலும் முலைக்கண்ணையும் மறைத்துக் காமநோயைத் தடுத்தது என்பதாம்' என்றார்.

தலைவன் பார்த்த பெண்ணின் மார்பக அழகு உரைக்கப்பட்டது. 'படாஅ முலை' என்பதற்குப் படாமுலை, படாத முலை, தன பாரம், இளமுலை, இளம் மார்பகங்கள், சாயாத கொங்கைகள், கைபடாத முலை, சாயாத முலை, நிமிர்ந்த மார்பகங்கள், துவளாத மார்பு, சாயாத இளமார்பகம், சரியாத முலை, தளராத கொங்கை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர். படாஅ முலை என்ற தொடர்க்கு சாயாத முலை என்பது பொருள். தலைவியது முலைகளின் தன்மையும் வடிவமும் (firm, round) கூறப்பட்டன.

இளம் பெண்ணின் நிமிர்ந்த கொங்கைகளை மூடிய மேலாடையானது தலைவனைக் காப்பாற்றியது என்பது செய்தி.

பெண்ணின் சாயா முலை மீது போட்ட மெல்லாடை மதநீரையுடைய ஆண்யானையின் மேல்உள்ள கண்ணை மறைக்கும் முகபடாம் போன்றது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

மெல்லிய மேலாடை அணிந்த தகையணங்குறுத்தல்.

பொழிப்பு

இவ்விளம்பெண்ணின் சாயாத முலைமேல் அணிந்த ஆடை யானையின் கண்மேலிட்ட படாம் போன்றது.