வறுமையே இரவுக்குப் பெரிதும் காரணமாக உள்ளது. அறஞ்சார்ந்த வாழ்க்கையுடையவன் போகூழால் வறுமையுற்றுத் துன்பப்படும்போது பிறரிடம் போய்க்கேட்டுப் பொருள் பெறுவதைவிட உயிரை விட்டுவிடவே எண்ணுவான். அறவாழ்க்கை வாழ்பவன் அவ்வாறு தன்னுயிரை நீக்கிக் கொள்வதை வள்ளுவர் விரும்பவில்லை. அவனுக்கு உதவ முன்வருகிறார். தன் வறுமைநிலையிலிருந்துவிடுபட அவன் பொருளுள்ளவரிடம் சென்று இரந்து பெற்றுக் கொள்வது குற்றமில்லை என்றும், மானம் தீரா நிலையில் அது நிகழவேண்டும் என்றும் 'இரவு' என்ற தலைப்பில் விளக்குகிறார் அவர்.
'இரவு என்பது இரத்தல், இரப்பு என்ற சொற்களால் இப்பாடல் தொகுப்பில் பயின்று வருகின்றன. இரத்தல் தொழில் செய்வார் இரப்பவர், இரப்பார், இரப்பான், இரந்துகோள் மேவார் எனக் குறிக்கப் பெறுகிறார். இரவு என்பது பிச்சைஎடுத்தல் என்ற மிகவும் தளர்த்தப்பட்ட சொல்லாட்சி மூலம் இன்று அறியப்படுகிறது. இரவு என்பது பலவேறுவகையான உதவிகள் பெறுவது, கடன்வாங்குவது போன்றவற்றையும் உள்ளடக்கியது என்றாலும் இல்லாமையின் காரணமாக பிறரிடம் சென்று பொருள் வேண்டுவதே இரவு என இங்கு சொல்லப்படுகிறது.
'இரவின் இளிவந்தது இல்' என்பதே இரவு பற்றிய வள்ளுவரின் உறுதியான கருத்து. ஆனால் வாழ்தலுக்குரிய தேவைகளை நெறிமுறைகளுடன் அடைய முடியாதவர்கள் இரந்து உயிர்வாழ்வதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியாத நிலையில் இரக்கத் தக்காரிடம் இரப்பதற்கான வழிகாட்டுகிறார் அவர்.
'இரவு' அதிகாரம் வள்ளுவரால் அறஞ்சார்ந்த வறுமைக்குத் தரப்பட்ட விதிவிலக்காக உள்ளது. இரப்பவரின் மானம் நீங்காதவாறு இரத்தலைச் செய்வதற்கு வள்ளுவர், ஒருவகையில் உடன்படுகிறார்.
இரக்கத்தக்கார் என்பவர் யாவர்? இச்சொல் இரத்தற்குத் தகுதி உடையார் எனப்பொருள்படும்.
வள்ளுவர் மொழியில் சுருக்கமாகச் சொல்வதானால் இவர் 'கனவிலும் கரவு அறியாதார்' ஆவர்.
மேலும் இரந்து பெறத்தக்கவராக, கரப்பில்லா நெஞ்சினராய்க் கடமை அறிவார், துன்பம் உறா வகையில் தருவார்; இகழ்ந்து எள்ளாது ஈவார், கரப்பிடும்பை இல்லார், ஆகியோரையும் குறிப்பிட்டு அவர்களிடம் இரந்துகொள்ளலாம் என்கிறார்.
வறுமையாளனாக இருந்தாலும், அவனது தன்மானமும், மனித மதிப்பும் காக்கப்பட வேண்டுமென்ற நோக்கில் இப்பண்புகள் உள்ளோரைச் சுட்டினார்.
.....பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு (அருளுடைமை 247) என்பதால் பொருள் வலி ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இன்றியமையாததாகிறது. பிறரிடம் இரந்து வாழவேண்டிய இன்மைநிலை பலவேறு காரணங்களால் உண்டாகும்; வெள்ளம், வறட்சி, போர், நிலநடுக்கம் போன்ற இயற்கையின் கொடுமைகளால் பொருட்குறை ஏற்படலாம். தன் மக்களின் கல்விச்செலவுகள், மணவினை முதலிய குடும்பத் தேவைகளுக்காகவும் இரக்க வேண்டிய நிலை உண்டாகலாம். சிலர் வணிகம் தொடங்குதற்குரிய முதற்பொருளுக்காகவும் இரக்கச் செல்வர்.
தொழில் இல்லா மனிதனுக்கு வாங்கும் ஆற்றல் இருக்காது; அவன் தன் பசி தீர்த்துக் கொள்ள இயலாதவனாகிறான்.
இரப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டவரது குறை தீர்க்க 'இரக்க' என்றார் வள்ளுவர்.
ஈவாரை நோக்கி 'ஈக' (477) என்றவர், வறுமைப்பட்டவரிடம், இகழ்வற்ற நடையில், 'இரக்க' இரத்தக்கார்க் காணின் என்கிறார்.
வறியார்க்கு ஈவதே ஈகை என, யார்க்கு கொடுப்பது என்பதை முன்பு சுட்டியவர் தம்மிடம் உள்ளதை மறைக்காதவர்பால் இரக்க என, யாரிடம் பெறுவது என்பதை இவ்வதிகாரத்தில் சொல்கிறார். யாரிடமாவது சென்று இரக்க என்னாமல் இரத்தக்கார்க் காணின் இரக்க என ஓர் எல்லை வகுத்துக் காட்டுகிறார்.
உதவியின் சிறப்பு உதவியின் தரத்தையும் தகுதியையும் பொறுத்தல்ல; உதவியைப் பெறுவோரின் தகுதியைப் பொறுத்தது, உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து (செய்ந்நன்றியறிதல் 105) என முன்னர் சொல்லப்பட்டது. இங்கு உதவுவானின் தகுதி கண்டு உதவிநாடுக எனக் கூறப்படுகிறது.
இரக்கத் தக்கவரைக் கண்டால் அவரிடம் இரந்து பொருள் பெறுக. அவர் இல்லையென்று மறைத்தால் பழி இரக்கப்படுவோனையே சாரும்; அது இரந்தவர் தம் குற்றமன்று.
தான் இரந்து கேட்ட பொருள், தன் மனம் துன்புறாதபடி எளிதிலே கிடைக்குமானால் ஒருவனுக்கு இரத்தலும் மகிழ்ச்சி தருவதுதான்.
ஒளித்தல் இல்லா நெஞ்சுடன் தங்கள் கடமை தெரிந்தவர்களின் முன்னால் நின்று இரத்தலும் எடுப்பாகவே இருக்கும்.
தன்னிடம் இருப்பதை இரப்போர்க்கு ஈயாமல் ஒளித்துக் கொள்ளுவதைப்பற்றிக் கனவில் கூட நினைக்காதவர்களிடம் சென்று ஒன்றை இரத்தல் இரத்தலாகாது; அது, தான் ஈவதைப் போன்ற இன்பம் தரக்கூடியது.
தம்மிடம் உள்ளதை மறைக்காமல் ஈபவர்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்; அதனால்தான் அவர்கள் கண்ணெதிரே நின்று இரக்கச் செல்கிறார்கள்.
உள்ளதை மறைத்துவைக்கும் நோய் இல்லாத கொடையாளிகளைக் காணும்போது இரவலனது வறுமைத்துன்பம் முற்றிலும் அகலும்.
இரவலரைக் கண்டவுடன் இகழ்ந்து எள்ளாத ஈவாரைக்காணின் இரப்பவர் மகிழ்ந்து ஆழ்மனத்துள் உவகை அடைவர்.
பிறரிடம் உதவி பெறுபவர்கள் இல்லாதபோது உலகம் பொம்மலாட்ட மேடையாகிவிடும்; உணர்வுகளையும் மனித மதிப்புகளையும் எங்கே வெளிப்படுத்துவது?
வறுமையால் இரந்து பொருளைப் பெற்றுக் கொள்ளாதவர் இல்லாவிட்டால் கொடுக்கின்றவர்களிடத்தில் எப்படிப் புகழ் உண்டாகும்?
இரவலர்க்குச் சினம் வரக்கூடாது; தன் வறுமைத்துன்பமே அதற்குச் சான்று.
இவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.