இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1052



இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்

(அதிகாரம்:இரவு குறள் எண்:1052)

பொழிப்பு (மு வரதராசன்): இரந்து கேட்ட பொருள்கள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.

மணக்குடவர் உரை: இரத்தல் ஒருவர்க்கு இன்பமாம், இரக்கப்பட்ட பொருள்கள் தான் வருத்தமுறாதவகை எய்துமாயின்.
இது வேண்டிய பொருள் பெறின் துன்பமாகா தென்றது.

பரிமேலழகர் உரை: ஒருவற் கிரத்தல் இன்பம் - ஒருவற்கு இரத்தல்தானும் இன்பத்திற்கு ஏதுவாம்; இரந்தவை துன்பம் உறாஅவரின் - இரந்த பொருள்கள் ஈவாரது உணர்வு உடைமையால் தான் துன்புறாமல் வருமாயின்.
(இன்பம் - ஆகுபெயர். 'உறாமல்' என்பது கடைக்குறைந்து நின்றது. துன்பம் - சாதியொருமைப் பெயர். அவையாவன, ஈவார்கண் காலமும் இடனும் அறிந்து சேறலும், அவர் குறிப்பறிதலும், அவரைத் தம் வயத்தராக்கலும், அவர் மனம் நெகிழ்வன நாடிச் சொல்லலும் முதலியவற்றான் வருவனவும், மறுத்துழி வருவனவும் ஆம். அவையுறாமல் வருதலாவது, அவர் முன்னுணர்ந்து ஈயக்கோடல். 'இரந்தவர் துன்பமுறாவரின்' என்று பாடம் ஓதி, 'இரக்கப்பட்டவர் பொருளின்மை முதலியவற்றால் துன்புறாது எதிர்வந்து ஈவராயின்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் நல்குரவான் உயிர் நீங்கும் எல்லைக்கண் இளிவில்லா இரவு விலக்கப்படாது என்பது கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: கேட்டவை கொடுப்பாரிடமிருந்து துன்பமில்லாமல் வருமாயின், இரத்தல் ஒருவர்க்கு இன்பம் ஆதல் கூடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒருவற்கு இரத்தல் இன்பம் இரந்தவை துன்பம் உறாஅ வரின்.

பதவுரை: இன்பம்-மகிழ்ச்சி; ஒருவற்கு-ஒருவர்க்கு; இரத்தல்-ஏற்றல்; இரந்தவை-ஏற்கப்பட்ட பொருள்கள்; துன்பம் உறாஅ-கடினமின்றி, துயரம் பொருந்தாமல்; வரின்-வந்தால்.


இன்பம் ஒருவற்கு இரத்தல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('ஒருவர்க்' பாடம்): இரத்தல் ஒருவர்க்கு இன்பமாம்;
பரிப்பெருமாள்: இரத்தல் ஒருவற்கு இன்பமாம்;
பரிதி: தேகி என்பார்க்கு மகிழ்ச்சி எய்தும்; [தேகி- கொடு]
காலிங்கர்: பின் எஞ்ஞான்றும் இரப்பு என்னும் துன்பம் உறாராயின், ஒருவர்பால் சென்று ஒருவர் இரத்தல் பெரிதும் துன்பம் அன்றே; அதுவும் ஒருவர்க்கு இன்பம் தரும்;
பரிமேலழகர்: ஒருவற்கு இரத்தல்தானும் இன்பத்திற்கு ஏதுவாம்;
பரிமேலழகர் குறிப்புரை: இன்பம் - ஆகுபெயர். [இன்பம் என்பது இன்பத்திற்கு ஏதுவை யுணர்த்துதலால் காரியவாகு பெயர்]

'இரத்தல் ஒருவர்க்கு இன்பமாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உதவி கேட்பதும் மகிழ்ச்சியைத் தரும்', 'ஒருவர்க்குப் பிச்சை வாங்குதலும் இன்பத்திற்குரிய செயலாகும்', 'பிச்சையெடுப்பதும் ஒருவனுக்கு இன்பமுண்டாக்கக் கூடியதுதான்', 'ஒருவனுக்கு இரத்தலும் இன்பமாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இரத்தலும் ஒருவர்க்கு மகிழ்ச்சியைத் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.

இரந்தவை துன்பம் உறாஅ வரின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இரக்கப்பட்ட பொருள்கள் தான் வருத்தமுறாதவகை எய்துமாயின்.
மணக்குடவர் குறிப்புரை: இது வேண்டிய பொருள் பெறின் துன்பமாகா தென்றது.
பரிப்பெருமாள்: இரக்கப்பட்ட பொருள்கள் தாம் வருத்தமுறாதவகை எய்துமாயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: பழிக்கப்படாதாயினும் துன்பமாகுமே என்றார்க்கு வேண்டின பொருள் பெறின் துன்பமாகாது என்று கூறப்பட்டது. இவை மூன்றினானும் இரவு தீது என்பாரை மறுத்தவாறாயிற்று.
பரிதி: தாதாவிடத்திலே தயவுண்டாகில் என்றவாறு. [தாதா-கொடையாளி]
காலிங்கர் ('இரந்தவர்' பாடம்): எப்பொழுது எனில் அங்ஙனம் ஒருவர்மாட்டு இரந்தவர் பின்பு எஞ்ஞான்றும் ஒரு வறுமைத்துயர் உறாவாறு வாய்ப்பப் பெற்று வருவாராயின் என்றவாறு.
பரிமேலழகர்: இரந்த பொருள்கள் ஈவாரது உணர்வு உடைமையால் தான் துன்புறாமல் வருமாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: 'உறாமல்' என்பது கடைக்குறைந்து நின்றது. துன்பம் - சாதியொருமைப் பெயர். அவையாவன, ஈவார்கண் காலமும் இடனும் அறிந்து சேறலும், அவர் குறிப்பறிதலும், அவரைத் தம் வயத்தராக்கலும், அவர் மனம் நெகிழ்வன நாடிச் சொல்லலும் முதலியவற்றான் வருவனவும், மறுத்துழி வருவனவும் ஆம். அவையுறாமல் வருதலாவது, அவர் முன்னுணர்ந்து ஈயக்கோடல். 'இரந்தவர் துன்பமுறாவரின்' என்று பாடம் ஓதி, 'இரக்கப்பட்டவர் பொருளின்மை முதலியவற்றால் துன்புறாது எதிர்வந்து ஈவராயின்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் நல்குரவான் உயிர் நீங்கும் எல்லைக்கண் இளிவில்லா இரவு விலக்கப்படாது என்பது கூறப்பட்டது. [உறாமல் என்பது உறாஅ எனக் கடைக் குறைந்து நின்றது; துன்பம்- துன்பங்களை உணர்த்துதலின் ஈறு தோன்றாத சாதி ஒருமைப் பெயர்; அவை - துன்பங்கள்]

'இரக்கப்பட்ட பொருள்கள் தான் வருத்தமுறாதவகை எய்துமாயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கேட்ட பொருள்கள் கடினமின்றிக் கிடைப்பின்', 'பிச்சைப் பொருள்கள் ஈவார்க்கும் இரப்பார்க்கும் துன்பம் செய்யாமல் கிடைக்குமானால்', 'பிச்சை கேட்ட பொருட்கள் (கொடுப்பவருக்கோ வாங்குகிறவனுக்கோ) வருத்தமுண்டாகாமல் கிடைக்குமானால். (ஆனால் அப்படிக் கிடைப்பதில்லை)', 'இரந்த பொருள்கள் தான் துன்பம் அடையாமல் கிடைக்குமானால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இரந்த பொருள்கள் கடினமின்றிக் கிடைக்குமானால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இரந்த பொருள்கள் கடினமின்றிக் கிடைக்குமானால் இரத்தலும் ஒருவர்க்கு மகிழ்ச்சியைத் தரும் என்பது பாடலின் பொருள்.
இரத்தல் எப்படி இன்பமாகும்?

ஈவார் இரப்பாரின் உணர்வை அறிந்து அளிக்கும்போது இன்பமாம்.

ஒருவர் கேட்ட பொருள் அவருக்கு எந்த வகையான துன்பமும் இல்லாமல் கிடைப்பதாக இருந்தால் பிறரிடம் சென்று இரத்தலும் இனியதே.
துன்பம் உறாஅ வரின் என்பது ஈவாரது நல்லுணர்வால் இரந்த பொருள்கள் இடையூறு இன்றிப் பொருள் எளிதில் கிடைத்தல், பலமுறை நடக்கவைக்காமல் தருதல், அன்போடு உதவுதல், கேட்பதற்கு முன்பு குறிப்பறிந்து தருதல் போன்றவற்றைக் குறித்தது. இரந்து ஒருவரிடம் பொருள் கேட்பது இழிவானது; இரப்பவருக்குக் கொடுக்க மனமில்லாதது அதைவிட இழிவானது. ஆனால் கொடுப்பதும் பெறுவதும் வருத்தமின்றி நடந்தால் அது மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகும் என்கிறது இப்பாடல். கொடுப்பவர்க்கு துன்பமில்லாத நிலை அதாவது அவரது பொருள்நிலை சிறந்து எதிர்வந்து ஈயும் வகையில் இருந்து, இரப்பவரது மானத்திற்குக் கேடு நேரா வண்ணம் அவர் எதிர்பார்த்த பொருள் கிடைக்கப் பெற்றால் அது இனிதாகவே இருக்கும்.
துன்பத்தோடுதான் பொருள் பெறமுடியுமெனில் அவ்விடத்தில் கேட்க வேண்டாம் என்பது உட்பொருள்.

இரத்தல் எப்படி இன்பமாகும்?

இரப்பவர்க்குக் கேட்ட பொருள் கிடைக்கிறது. அதுவும் எளிதாக எய்த முடிந்தது. கொடுப்பவர்க்கும் அது மனவருத்தம் அளிக்கவில்லை. அப்படிப்பட்ட இரவு மகிழ்ச்சி தரக்கூடியது. அது எவ்விதம் இன்பமாவது என்பதைப் பரிமேலழகர் 'ஈவார்கண் காலமும் இடனும் அறிந்து சேறலும், அவர் குறிப்பறிதலும், அவரைத் தம் வயத்தராக்கலும், அவர் மனம் நெகிழ்வன நாடிச் சொல்லலும் முதலியவற்றான் வரும்' எனக் குறிக்கின்றார். காலிங்கர் 'அங்ஙனம் ஒருவர்மாட்டு இரந்தவர் பின்பு எஞ்ஞான்றும் ஒரு வறுமைத்துயர் உறாவாறு வாய்ப்பப் பெற்று வருவாராயின்' என விளக்குவார்; இது கொடுப்பவரின் பொருள் மிகுதியை குறிப்பதாக உள்ளது. தேவநேயப்பாவாணர்,
என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும்
சென்று பொருள் கொடுப்பர் தீது அற்றோர் - துன்றுசுவை
பூவின் பொலி குழலாய்! பூங்கை புகழவோ
நாவிற்கு உதவும் நயந்து
(நன்னெறி 1 பொருள்: தன்னைப் பாராட்டிப் பேசாதவர்களிடமும் பெரியவர்கள் பழகுவார்கள், அவர்களுக்கு வேண்டியதை அவர்பாற் சென்று கொடுப்பார்கள். காரணம், அவர்கள் அந்தப் பாராட்டை எதிர்பார்ப்பதில்லை) என்னும் நன்னெறிப் பாடலை, இரக்கப்பட்டவர் பொருளின்மை முதலியவற்றால் துன்புறாது எதிர்வந்து ஈவாராயின் என்பதற்கு, மேற்கோள் காட்டுவார்.

பொதுவாக, இரத்தல் துன்பம். ஆனால், துன்பமாகிய இரத்தலும் இன்பமாவது இரக்கப்படுவாரின் நல்லுணர்வைப் பொறுத்தது. கொடுக்கிறவர்கள் இன்று நாளை என்று அலைக்கழிக்காமலும், நாணுமளவு திட்டாமலும் கொடுக்கும்போது இன்பமே. வறுமையின் இறுதி எல்லைக்கண் இருக்கும் ஒருவர் தன் மகன் பட்டப்படிப்பு பெற முதலாண்டுச் செலவுக்கான உதவிகேட்பதற்காக ஈவாரிடம் செல்கிறார். ஆனால் இரக்கப்பட்டாரோ கேட்பவரது நிலையை உணர்ந்து அவரது மகனது கல்லூரிக் கல்வி முடிகிறவரைக்கான செலவைத் தான் ஏற்றுக்கொள்வதாக வாக்களிக்கிறார். இதுபோன்று இரக்கப்பட்ட பொருள் தாம் வருத்தமுறாதவகையில் எதிர்பார்த்ததற்கும் மேலான அளவில் எய்துமாயின், இரந்து கிடைத்த பொருள் ஒருவனுக்கு இன்பம் தருவதாகத்தானே இருக்கும்.

இரக்கப்படுவாரின் கழிஇரக்க குணம் இரத்தலை இன்பமாக்கும்.

இரந்த பொருள்கள் கடினமின்றிக் கிடைக்குமானால் இரத்தலும் ஒருவர்க்கு மகிழ்ச்சியைத் தரும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கேட்பார்க்கும் கொடுப்பார்க்கும் இன்பம் உண்டானால் அந்த இரவு இளிவந்ததாகாது.

பொழிப்பு

இரக்கப்பட்ட பொருள்கள் கடினமின்றிக் கிடைக்குமானால் உதவி கேட்பதும் ஒருவர்க்கு மகிழ்ச்சியைத் தரும்.