இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1059ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை

(அதிகாரம்:இரவு குறள் எண்:1059)

பொழிப்பு (மு வரதராசன்): பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவரிடத்தில் என்ன புகழ் உண்டாகும்?

மணக்குடவர் உரை: இரந்து கோடலைப் பொருந்துவார் இல்லாதவிடத்து ஈயக் கருதியிருப்பார்மாட்டுப் புகழ் யாதான் உண்டாம்.
இஃது இரப்பாரில்லாராயின் புகழுடையார் இலராவார். ஆதலால் இரவு பழிக்கப்படா தென்றது.

பரிமேலழகர் உரை: இரந்துகோள் மேவார் இலாஅக் கடை - அவர்பாற்சென்று ஒன்றனை இரந்துகோடலை விரும்புவார் இல்வழி; ஈவார்கண் தோற்றம் என் உண்டாம் - கொடுப்பார் மாட்டு என்ன புகழுண்டாம்? யாதுமில்லை.
(தோற்றம் - ஆகுபெயர். மேவுவார் என்பது விகாரமாயிற்று. கொடுத்தல் வண்மை வெளிப்படாமையின் அதனால் புகழெய்தார் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் உலகிற்கு இரப்பார் வேண்டும் என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: இரந்து கொள்ள விரும்புவோர் இல்லாதபோது கொடுப்பவர்க்குப் பெருமிதம் என்ன உண்டு?


பொருள்கோள் வரிஅமைப்பு:
இரந்துகோள் மேவார் இலாஅக் கடை ஈவார்கண் தோற்றம் என் உண்டாம்.

பதவுரை: ஈவார்கண்-கொடுப்பவரிடத்தில்; என்-என்ன?; உண்டாம்-உளதாம்; தோற்றம்-சிறந்து விளங்குதல், புகழ், முகத்தில் தோன்றும் உள்ள மகிழ்வின் பொலிவு; இரந்துகோள்-ஏற்றுக் கொள்ளுதல், இரந்து பெற்றுக் கொள்ளுதல்; மேவார்-மேவுவார், விரும்புபவர், பொருந்துவார்; இலாஅக்கடை-இல்லாவிடில், இல்லாதபோது.


ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஈயக் கருதியிருப்பார்மாட்டுப் புகழ் யாதான் உண்டாம்;
பரிப்பெருமாள்: ஈயக் கருதியிருப்பார்மாட்டுப் புகழ் யாதான் உண்டாம்;
பரிதி: கொடுப்பார்க்கு என்ன பெருமை உண்டு;
காலிங்கர்: ஈவார்மாட்டு என்உளதாம்? யாவர்மாட்டும் தம் பெயர் தோன்ற நிற்பதோர் தோற்றம்;
பரிமேலழகர்: கொடுப்பார் மாட்டு என்ன புகழுண்டாம்? யாதுமில்லை.
பரிமேலழகர் குறிப்புரை: தோற்றம் - ஆகுபெயர்.

'கொடுப்பார் மாட்டு என்ன புகழுண்டாம்?' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஏழைக்குப் பொருள் வழங்கும் கொடையாளிகளுக்கு என்ன புகழ் உண்டாகும்?', 'கொடுக்கக் கூடியவர்களுக்கு (செல்வர்களுக்கு) எப்படிப் பெருமை உண்டாகும்?', 'கொடுப்போர்க்கு என்ன புகழ் உண்டாகும்?', 'கொடுப்பார்மாட்டு என்ன புகழுண்டாம்? ஒன்றும் இல்லை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கொடுப்போர்க்கு என்ன புகழ் உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

இரந்துகோள் மேவார் இலாஅக் கடை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்('மேவார் இல்லாத கடை' பாடம்): இரந்து கோடலைப் பொருந்துவார் இல்லாதவிடத்து.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இரப்பாரில்லாராயின் புகழுடையார் இலராவார். ஆதலால் இரவு பழிக்கப்படா தென்றது.
பரிப்பெருமாள்: இரந்து கோடலைப் பொருந்துவார் இல்லாதவிடத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இரந்துகோடல் இழிபு அல்ல ஆயினும் பழிக்கப்படும் என்றார்க்குப் பழிக்கப்படுமாயின், உலகத்து இரப்பர் இல்லையாம்; அவர் இல்லாராகப் புகழுடையார் இலராம்; ஆதலால் (இரவு) பழிக்கப்படாது என்று கூறப்பட்டது.
பரிதி: தேகி என்று கேட்பாரில்லாத இடத்து என்றவாறு.
காலிங்கர்: தம்பால் சிலர் தம்மைப் பெருமை கூறி இரந்துகொள்ளும் தொழிலைப் பொருந்துவார் ஆகிய அறிகுனர் இவ்வுலகத்து இல்லாக்கால் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: மேவார் என்பது பொருந்துவார் என்றது.
பரிமேலழகர்: அவர்பாற்சென்று ஒன்றனை இரந்துகோடலை விரும்புவார் இல்வழி. [அவர்பால் - ஈவார்பால்]
பரிமேலழகர் குறிப்புரை: மேவுவார் என்பது விகாரமாயிற்று. கொடுத்தல் வண்மை வெளிப்படாமையின் அதனால் புகழெய்தார் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் உலகிற்கு இரப்பார் வேண்டும் என்பது கூறப்பட்டது. [மேவுவார் என்பது இடைக்குறைந்து மேவார் என விகாரமாயிற்று; அதனால் - கொடுத்தல் வன்மை வெளிப்படாமையால்]

'இரந்துகோடலை விரும்புவார் இல்வழி' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இரந்து பொருளைப்பெறுதலை விரும்பும் இரப்போர் இல்லாத விடத்து', 'தானம் கேட்டு வாங்கிக் கொள்வதை மேற்கொள்ளுகிறவர்கள் இல்லாவிட்டால்', 'இரத்தலை விரும்புவோரில்லாத இடத்திலே', 'இரந்து கொள்ளுதலைப் பொருந்துவார் இல்லாத வழி' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இரந்து கொள்ளுதலை விரும்புவார் இல்லாத இடத்திலே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இரந்து கொள்ளுதலை விரும்புவார் இல்லாத இடத்திலே கொடுப்போர்க்கு என்ன தோற்றம் உண்டாகும்? என்பது பாடலின் பொருள்.
'தோற்றம்' என்பதன் பொருள் என்ன?

எடுப்பார் இல்லையென்றால் கொடுப்பார் எங்கிருப்பார்?

ஒரு பொருளை இரந்து கேட்டுப் பெற விரும்புவோர் இல்லாதபோது பொருள் தருவோர்க்கு என்ன பெருமை உண்டாகும்? ஒன்றுமில்லை.
உலகம் உயிர்ப்புடன் விளங்க இரப்பாரும் ஈவாரும் தேவை என்று முந்தைய குறள் (1058) கூறியது. இங்கும் தமது இல்லாமையைப் போக்க இரந்து பெற்றுக் கொள்ளுதலை, மேற்கொள்பவர் சிலர் உலகில் இருத்தலும் வேண்டத் தக்கதே என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. விரும்பி ஏற்கும் இரவலர் இல்லையாயின் கொடுப்பவர்க்குப் புகழ் ஒன்றுமுண்டாவது இல்லை. பொருள்கொடுக்கும் ஈவார்க்கு இரப்பாரே புகழ் விளைப்பவர். இரப்பவர் இல்லையென்றால் கொடுப்பவரும் இல்லாமலே போய்விடுவார் என்பது கருத்து.
மேவுவார் என்ற சொல் இடைக்குறைந்து மேவார் என விகாரமாயிற்று. மேவுவார் என்பது விரும்புவார் எனப்பொருள்படும். இங்கு அச்சொல் விரும்பி வந்தேற்பாரைக் குறிக்க வந்தது.

வறுமையால் இரந்து பொருளுதவி கேட்பவர் இல்லாவிட்டால், ஈந்து புகழ் பெறுவோரும் இலர் எனக் கூறி ஈதலென்னும் ஈரத்தன்மை காய்ந்திடாதிருக்க நன்னீர் பாய்ச்சுகிறது இப்பாடல். இல்லாதவர் உள்ளவர் என்று இயற்கை முறைமையில் உண்டாகும் ஏற்றத்தாழ்வுள்ள சமுதாயத்தில் ஈவோர், இரப்போர் இருவகையினரும் இருந்தே தீர்வர். இக்கருத்து, முன் குறளில் போலவே வள்ளுவர் இங்கும் மறைமுகமாகச் சொல்லப்படுகிறது. அங்கு மக்கட் பண்பு வெளிப்பாட்டிற்கு இரப்பாரின் இன்றியமையாமை கூறப்பட்டது. இங்கு மாந்தர்க்குப் புகழ்த்தோற்றம் இரப்பாரின்றி அமைவதில்லை எனச் சொல்லப்படுகிறது.

'தோற்றம்' என்பதன் பொருள் என்ன?

'தோற்றம்' என்ற சொல்லுக்குப் புகழ், பெருமை, பெயர் தோன்றுதல், பெருமிதமாக விளங்கித் தோன்றல், பெருமிதம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பரிமேலழகர் தோற்றம் என்பது ஆகுபெயர் எனக் குறிக்கிறார். தோற்றம் என்னும் கருவிப்பெயர் அதனாலாகிய புகழினை உணர்த்துதலால் கருவியாகுபெயராம். தோற்றம்- புகழும் பெருமையுமே யன்றிப் பெருமிதமான ஏறுபோற் பீடு நடையுமாம் என்க (தண்டபாணி தேசிகர்).
ஒருவரது செயற்பாடுகள், நடத்தை, பழக்கவழக்கங்கள் முதலியவற்றால் அவரைப்பற்றிய ஒரு தோற்ற உணர்வு (Image) பொதுவில் உருவாகும். உலகோர் பார்வையில் அவர் எப்படித் தோன்றி விளங்குகிறார் என்பதைச் சொல்வது இது. ஈவார் எடுப்பான தோற்றம் தரும் புகழை விரும்புவர். அது இசைபட வாழ்தலாகிய புகழ்த்தோற்றம். 'இவர் கருணைமிகுந்த வள்ளல்' என்று பெயர் தோன்றும்படி இருக்கவே கொடையாளிகள் விரும்புவர். அவ்விதம் புகழப்படவேண்டும் வண்ணம் தோற்றம் இருக்க வேண்டும் என்றால், அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள இரப்பாரும் இருக்கவேண்டும். இரப்பாரின்றி ஈவாரில்லை; ஈகையின்றிப் புகழில்லை. எனவே கொடுப்பாரின் தோற்றத்துக்கு இரப்பாரே காரணமாகிறார்.

'தோற்றம்' என்ற தொடர் சிறந்து விளங்குதல் எனப்பொருள்படுவது.

இரந்து கொள்ளுதலைப் பொருந்துவார் இல்லாத இடத்திலே கொடுப்போர்க்கு என்ன புகழ் உண்டாகும்? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இரவு இருப்பதாலேயே கொடுக்கிற மனதுள்ளவர்கள் தோற்றம் தருகின்றனர்.

பொழிப்பு

இரந்து கொள்ள வேண்டியநிலையில் இருப்பவர் இல்லாதபோது கொடுப்பவர்க்கு என்ன பெருமிதம் இருக்கும்?