இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1057இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து

(அதிகாரம்:இரவு குறள் எண்:1057)

பொழிப்பு (மு வரதராசன்): இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளேயே உவகை அடையும் தன்மையுடையதாகும்.

மணக்குடவர் உரை: இரப்பாரைக் கண்டால் உதாசனித்தலும் இன்றி அவர் சொன்ன மாற்றத்தை இகழ்ந்துரைத்தலும் செய்யாது வேண்டப்பட்டதனைக் கொடுப்பாரைக் காணின், இரந்து சென்றவர் மனம் மகிழ்ந்து நின்று உள்ளுள்ளே இன்புறுந் தன்மை யுடைத்து.

பரிமேலழகர் உரை: இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் - தம்மை அவமதித்து இழிவு சொல்லாது பொருள் கொடுப்பாரைக் கண்டால்; உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது உடைத்து - அவ்விரப்பாரது உள்ளம் மகிழ்ந்து உள்ளுள்ளே உவக்கும் தன்மையுடைத்து.
(இகழ்ந்து எள்ளாது எனவே, நன்கு மதித்தலும் இனியவை கூறலும் பெறுதும். நிரப்பு இடும்பை கெடுதலளவேயன்றி, ஐம்புலன்களானும் பேரின்பம் எய்தினாராகக் கருதலான், 'உள்ளுள் உவப்பது உடைத்து' என்றார். இவை ஐந்து பாட்டானும் அவ்விரக்கத்தக்காரது இயல்பு கூறப்பட்டது.)

இரா இளங்குமரன் உரை: தம்மைப் பழித்துப் பேசாதும் நகையாடாதும் கொடுக்கும் நல்லோரைக் கண்டால், இரந்து கேட்பவர், உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள் இன்பமுறுதல் உடையது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது உடைத்து.

பதவுரை: இகழ்ந்து-அவமதித்து; எள்ளாது-நகையாடாமல், இழிவு சொல்லாமல்; ஈவாரை-கொடுப்பவரை; காணின்-கண்டால்; மகிழ்ந்து-களிப்புற்று; உள்ளம்-நெஞ்சம்; உள்ளுள்-மனதுக்குள்ளே, உள்ளுக்குள்ளே; உவப்பது-மகிழ்தல்; உடைத்து-உடையது.


இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இரப்பாரைக் கண்டால் உதாசனித்தலும் இன்றி அவர் சொன்ன மாற்றத்தை இகழ்ந்துரைத்தலும் செய்யாது வேண்டப்பட்டதனைக் கொடுப்பாரைக் காணின்; [உதாசனித்தலும்- அலட்சியப்படுத்தலும்]
பரிப்பெருமாள்: இரப்பாரைக் கண்டால் உதாசனித்தலும் இன்றி அவர் சொன்ன மாற்றத்தை இகழ்ந்துரைத்தலும் செய்யாது வேண்டப்பட்டதனைக் கொடுப்பாரைக் காணின்;
பரிதி: கேளாது கொடுப்பவரிடத்திலே தேகி என்பது;
காலிங்கர்: தம்மாட்டு ஒருவர் இரந்து வந்த இடத்துத் தாம் அவரை அனாதரித்து அவமதி பண்ணாது அகம் மகிழ்ந்து ஈவாரைக் காணப்பெறின்; [அனாதரித்து -ஆதரிக்காமல்]
பரிமேலழகர்: தம்மை அவமதித்து இழிவு சொல்லாது பொருள் கொடுப்பாரைக் கண்டால்;
பரிமேலழகர் குறிப்புரை: இகழ்ந்து எள்ளாது எனவே, நன்கு மதித்தலும் இனியவை கூறலும் பெறுதும். [நன்கு மதித்தல் - மிகுதியாய்ப் போற்றுதல்; பெறுதும்-பெறுவோம்]

'தம்மை அவமதித்து இழிவு சொல்லாது பொருள் கொடுப்பாரைக் கண்டால்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இகழ்ந்து பேசாது கொடுப்பாரைக் கண்டால்', 'தம்மைச் சொல்லால் இகழ்வதும் உள்ளத்தால் அவமதிப்பதும் செய்யாமல் வழங்குபவரைக் கண்டால்', 'பிச்சை கேட்பவரை அவமதித்து இழிவாகப் பேசாமல் மகிழ்ச்சியுடன் (அவர்களுக்குக்) கொடுப்பவர்கள் இருந்தால்', 'இரப்பவரை அவமதித்து ஏசாது கொடுப்பவரைக் கண்டால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தம்மை இகழாமலும் ஏளனம் செய்யாமலும் கொடுப்பாரைக் கண்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்பது உடைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இரந்து சென்றவர் மனம் மகிழ்ந்து நின்று உள்ளுள்ளே இன்புறுந் தன்மை யுடைத்து.
பரிப்பெருமாள்: இரந்து சென்றவர் மனம் மகிழ்ந்து நின்று உள்ளுள்ளே இன்புறுந் தன்மை யுடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் இரக்கத்தக்கவர் ஆவார் எத்தன்மையார் என்றார்க்கு இது கூறப்பட்டது. பரிதி: மிடி கெட்டுச் சந்தோஷமாகும் என்றவாறு.
காலிங்கர்: அவ்விரப்போர் உள்ளம் பெரிதும் மகிழ்ந்து மற்று அவர் உபகார வளத்தை உள்ளுதொறும் உள்ளுதொறும் சால உள்ளுள்ளே உவப்பதனை உடைத்து என்றவாறு. [உபகார வளத்தை- செய்த உபகாரத்தின் சிறப்பை]
பரிமேலழகர்: அவ்விரப்பாரது உள்ளம் மகிழ்ந்து உள்ளுள்ளே உவக்கும் தன்மையுடைத்து. [உள்ளுக்குள்ளே உவக்கும்- மனத்துக்குள் மகிழும்]
பரிமேலழகர் குறிப்புரை: நிரப்பு இடும்பை கெடுதலளவேயன்றி, ஐம்புலன்களானும் பேரின்பம் எய்தினாராகக் கருதலான், 'உள்ளுள் உவப்பது உடைத்து' என்றார். இவை ஐந்து பாட்டானும் அவ்விரக்கத்தக்காரது இயல்பு கூறப்பட்டது. [அவ்விரத்தக்கார் - அவ்விரத்தற்குத் தகுதி உடையார்]

'இரந்து சென்றவர் மனம் மகிழ்ந்து நின்று உள்ளுள்ளே இன்புறுந் தன்மை யுடைத்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உள்ளம் உள்ளுக்குள்ளே மகிழும்', 'இரப்பவரது மனம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவக்கும் தன்மையுடையது', '(பிச்சை கேட்பவர்கள்) உட்பட்டிருக்கிற பிச்சையெடுப்பதிலும் இன்பம் உண்டு', 'இரப்பவருடைய மனம் மகிழ்ச்சியடைந்து உள்ளுக்குள்ளே நிறைவுடையதாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மனம் மகிழ்ச்சியடைந்து உள்ளுக்குள்ளே உவக்கும் தன்மையுடையது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தம்மை இகழ்ந்துஎள்ளாது கொடுப்பாரைக் கண்டால் மனம் மகிழ்ச்சியடைந்து உள்ளுக்குள்ளே உவக்கும் தன்மையுடையது என்பது பாடலின் பொருள்.
'இகழ்ந்துஎள்ளாது' குறிப்பது என்ன?

இகழ்ச்சியின்றி பெறும் பொருள் ஆழ்மனத்தில் மகிழ்ச்சி உண்டாக்கும்.

மானம் கெடும்படி நடந்து, நகையாடல் செய்யாது பொருள் தருபவரைக் கண்டால் இரப்பவருடைய மனம் மகிழ்ச்சி அடைந்து உள்ளுக்குள்ளே இன்புறும்.
பொருள் குவித்த சிலர் கொடை நல்லது என்று எல்லோரும் சொல்கிறார்களே என்று கொடுக்கத் தொடங்குவர். ஆனால் அவர்களில் சிலர் பிறர் துன்பத்தில் இன்பம் காண்பவராகவும் இருப்பர். அவர்கள் ஈயும்போது பெறுபவரின் ஏழ்மைநிலையைக் குத்திக்காட்டி உள்ளம் புண்படும்படி ஏதாவது உரைத்தே கொடுப்பர். மற்றவர்கள் உள்ளம் நோகச் செய்வதில் இருந்து இன்பம் பெறும் இத்தகையர் இரக்கத்தக்கவர் அல்லர். மாறாக, இகழாமல், எளக்காரம் செய்யாமல், இரப்பவருக்கு கொடுத்து உதவ வல்ல வள்ளன்மையோடிருக்கும் ஈவாரைக் காணும்போது, இரவலர் உள்ளம் மிக்க மகிழ்ச்சி எய்தும்; அவர்களது ஆழ்மனத்தில் உவகை பொங்கும்.
காலிங்கர் 'உள்ளம் உள்ளுள் உவப்பது உடைத்து' என்பதற்கு உள்ளுதொறும் உள்ளுதொறும் சால உள்ளுள்ளே உவப்பதனை உடைத்து என்று பொருளுரைப்பார்.

நலிவுற்றவர்கள் தம்மை நாடி உதவி கேட்கும்பொழுது அவர்களின் நிலை கண்டு இரங்கி அவர்கள் மனம் காயப்படாதவாறு, மானம் கெடாதபடி உதவி செய்ய வேண்டும் என்று ஈவோர்க்கு அறிவுரை கூறுவது போன்று இக்குறள் அமைந்துள்ளது.

'இகழ்ந்துஎள்ளாது' குறிப்பது என்ன?

வறுமையால் வாடுவாரை இகழ்தலும் அவமதித்தலும் உலகியல்பு. ஈபவர்களில் சிலர் இரப்பவரை இகழ்ந்தும் எள்ளி நகைத்தும் பேசிப்பின் பொருள் கொடுப்பதுண்டு. 'இகழ்ந்துஎள்ளாது' என்ற தொடர் செய்கையால் இகழ்ந்து, சொல்லால் எள்ளல் செய்யாமல் இருப்பதைச் சொல்வது. இரப்பாரை இகழ்வது என்பது வறுமையால் வாடிய முகத்துடன் வந்தாரைப் பொருட்படுத்தாமல் அருவருப்பாக அவர்களை நோக்குவது 'தள்ளிநில்!' எனச் சைகை காட்டுவது போன்றவையாம். 'உன் காலும் கையும் நன்றாகத்தானே இருக்கிறது. பின் ஏன் இங்கு வந்து நிற்கிறாய்?' என்பதுபோலக் கேட்பது எள்ளலாம்.
நல்ல உள்ளம் கொண்ட ஈவார், இரப்போரைக் கண்டால் ஏற்றிப் போற்றுவர்; இனிய சொற்கள் கூறித் தேற்றுவர்; அவரது நைந்த உள்ளத்திற்கு ஒற்றடம் கொடுப்பதுபோல் நடந்துகொள்வர்; அகம் மகிழ்ந்து பொருள் கொடுத்து அனுப்புவார். சங்கப் பாடல் ஒன்றில், புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி (அகம் 32 1-4 பொருள்: செல்வன் போல் உடைகளும் உடுத்தியிருந்தவன் தான்! ஆனால், இரத்தல் செய்யும் மக்களைப் போல எளிய சொற்களால் பணிந்த மொழிகளைப் பலகாற் பேசினான்.) என்று காதலனைப் பற்றி நகையாடிப் பேசுகிறாள் தலைவி. அதுபோல், பொருள்மிகக் கொண்டிருந்தாலும் ஈபவன் இகழாமல் எள்ளாமல் இரவலன்போல் பணிவாகப் பேசவேண்டும். வந்தவன் வறியவன் என்றாலும் பழித்துத் தாழ்வு படுத்தாது ஆதரவுடன் மதித்துப் பேசி பொருள் வழங்கி அனுப்ப வேண்டும். இத்தகைய நல்லோரைக் கண்டால், தன்மான உணர்ச்சி மிகுந்த இரவலர் மனம் மகிழ்ந்து உள்ளாரக் களிப்புறும்.

'இகழ்ந்துஎள்ளாது' என்பது 'எளியர் இவர் என்றிகழ்ந்து உரையா'மை குறித்தது.

தம்மை இகழாமலும் ஏளனம் செய்யாமலும் கொடுப்பாரைக் கண்டால் மனம் மகிழ்ச்சியடைந்து உள்ளுக்குள்ளே உவக்கும் தன்மையுடையது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

மானம் கெடும்படியான இரவு வேண்டாமே.

பொழிப்பு

இகழாமலும் ஏளனம் செய்யாமலும் கொடுப்பாரைக் கண்டால் இரப்பவரது மனம் மகிழ்ச்சியடைந்து உள்ளுக்குள்ளே உவக்கும் தன்மையுடையது.