இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1055



கரப்பிலார் வையகத்து உண்மையான் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது

(அதிகாரம்:இரவு குறள் எண்:1055)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவர்முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று, ஒளித்துக் கூறாத நன்மக்கள் உலகத்தில் இருப்பதால்தான்.

மணக்குடவர் உரை: ஒருவன் முன்னே நின்று இரத்தலை இரப்பார் மேற்கொள்வது, கரப்பில்லாதார் உலகத்து உண்டாதலானே; மற்றொன்றாலன்று.
மேல் கரவாதார்மாட்டு இரக்கவென்றார்; உலகத்தில் அவரைப் பெறுத லரிதென்றார்க்கு இது கூறினார்.

பரிமேலழகர் உரை: கண்ணின்று இரப்பவர் மேற்கொள்வது - சொல்லுதன் மாட்டாது முன் நிற்றல் மாத்திரத்தான் இரப்பார் உயிரோம்பற்பொருட்டு அதனை மேற்கொண்டு போதுகின்றது; கரப்பு இலார் வையகத்து உண்மையான் - அவர்க்கு உள்ளது கரவாது கொடுப்பார் சிலர் உலகத்து உளராய தன்மையானே, பிறிதொன்றான் அன்று.
(அவர் இல்லையாயின், மானம் நீக்க மாட்டாமையின் உயிர் நீப்பர் என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: நேர்நின்று ஒருவர் இரக்க முற்படுவது ஒளிக்காதவர் உலகத்து இருப்பதால் அன்றோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்ணின்று இரப்பவர் மேற்கொள்வது கரப்பிலார் வையகத்து உண்மையான்.

பதவுரை: கரப்பிலார்-மறைத்தல் இல்லாதவர்; வையகத்து-உலகத்தில்; உண்மையான்-உள்ளதாலேயே; கண்-கண்; நின்று-நின்று; இரப்பவர்-ஏற்பவர்; மேற்கொள்வது-ஏற்றுவருவது, முன்வருவது.


கரப்பிலார் வையகத்து உண்மையான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கரப்பில்லாதார் உலகத்து உண்டாதலானே; மற்றொன்றாலன்று;
பரிப்பெருமாள்: கரப்பில்லாதார் உலகத்து உண்டாதலானே;
பரிதி: தேகி என்றல் நாஸ்தி என்னாதபேர் பூமியில் இருக்கையினாலே;
காலிங்கர்: ஏற்பவர்க்கு இங்ஙனம் இல்லை என்பது இல்லா அன்புடையாளரும் இவ்வுலகத்துச் சிலருளர் ஆகலான்;
பரிமேலழகர்: அவர்க்கு உள்ளது கரவாது கொடுப்பார் சிலர் உலகத்து உளராய தன்மையானே, பிறிதொன்றான் அன்று; [அவர்க்கு - இரவலர்க்கு; கரவாது- ஒளிக்காமல்]
பரிமேலழகர் குறிப்புரை: அவர் இல்லையாயின், மானம் நீக்க மாட்டாமையின் உயிர் நீப்பர் என்பதாம். [அவர்- கரப்பிலார்]

'உள்ளது கரவாது கொடுப்பார் சிலர் உலகத்து உளராய தன்மையானே' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உள்ளதை மறைக்காது வழங்கும் வள்ளல் சிலர் இருப்பதால்தான்', 'இல்லையென்னாமல் கொடுப்பவர்கள் உலகத்தில் (அங்கங்கே) இருப்பதனால்தான்', 'ஒளியாது கொடுப்பவர் உலகத்தில் இருப்பதினாலேதான்', 'உள்ளதை ஒளியாதார் சிலர் உலகத்தில் இருப்பதனால்தான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தம்மிடம் உள்ளதை மறைக்காது அளிப்பவர்கள் உலகத்தில் இருப்பதனால்தான் என்பது இப்பகுதியின் பொருள்.

கண்ணின்று இரப்பவர் மேற்கொள் வது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் முன்னே நின்று இரத்தலை இரப்பார் மேற்கொள்வது.
மணக்குடவர் குறிப்புரை: மேல் கரவாதார்மாட்டு இரக்கவென்றார்; உலகத்தில் அவரைப் பெறுத லரிதென்றார்க்கு இது கூறினார்.
பரிப்பெருமாள்: ஒருவன் முன்னே நின்று இரத்தலை இரப்பார் மேற்கொள்வது.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் கரவாதார்மாட்டு இரக்கவென்றார்; உலகத்தில் அவரைப் பெறுத லரிதென்றார்க்கு இது கூறினார்.
பரிதி: இரப்போர் பெரியவர் என்றவாறு.
காலிங்கர் ('கண்ணின் இரப்பவர்' பாடம்): இது காரணமாக இவ்விரவு தொழிலைத் தம்பால் என்றும் மேற்கொள்வது என்றவாறு.
பரிமேலழகர்: சொல்லுதன் மாட்டாது முன் நிற்றல் மாத்திரத்தான் இரப்பார் உயிரோம்பற்பொருட்டு அதனை மேற்கொண்டு போதுகின்றது. [உயிர் ஓம்பற் பொருட்டு - தம் உயிரைக் காப்பாற்றுதற் பொருட்டு; போதுகின்றது - வருகின்றது]

'ஒருவன் முன்னே நின்று இரத்தலை இரப்பார் மேற்கொள்வது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஈவாரின் முன் நின்று இரப்பவர் இரத்தல் தொழிலை மேற்கொள்வதற்குக் காரணம்', 'பிச்சைக்காரர்கள் ஆலோசனையில்லாமல் (எல்லாரிடத்திலும்) பிச்சை கேட்டு விடுவது', 'ஒருவர் முன்நின்று இரத்தலை இரப்போர் மேற்கொள்வது வழக்கமாயிற்று', 'ஒருவர் முன்னால் நின்று துன்பம் தரும் இரத்தலை மேற்கொள்வது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஒருவர் முன்னால் நின்று இரக்க முற்படுவது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கண்ணின்று இரக்க முற்படுவது தம்மிடம் உள்ளதை மறைக்காது அளிப்பவர்கள் உலகத்தில் இருப்பதனால்தான் என்பது பாடலின் பொருள்.
'கண்ணின்று' குறிப்பதென்ன?

ஒளிக்காது ஈபவர்கள் முகத்தெதிரே நின்று ஏற்கலாம்.

தன்னிடமுள்ளதை ஒளிக்காமல் உதவுபவர் உலகத்தில் இருப்பதனால்தான் ஒருவர் முன் நின்று இரந்து கேட்க முன்வருகின்றனர்.
ஒருவரது வாழ்வில் வறுமை வாட்டும்நிலை ஏற்படுகிறது; பசித்தீ கொல்வது போன்றுள்ளது. உயிரை நிலைக்கச் செய்ய ஒரே வழி இரப்பது தான். யாரிடமாவது சென்று உதவி கேட்கலாம் என முடிவு செய்கிறார். தம்மிடமுள்ள பொருளை மறைக்காமல் ஈயும் பண்பு கொண்டவர் முன்னால் நின்று கேட்பது தன் மானத்திற்கு இழுக்காகாது என அமைதி கூறிக்கொண்டு செல்கிறார். ஒளிக்காமல் கொடுக்கும் அறநெஞ்சம் கொண்டோரும் இவ்வையகத்தில் இருக்கிறார்கள் என்பதாலேயே இவர் போன்றோர் இத்தகைய முடிவை மேற்கொள்கிறார்கள்.
மறைக்காது உள்ளதைக் கொடுத்துவிடும் உயர் பண்பாளராதலால், இரக்கப்படுபவர் தன்னாலியன்றதை உடனே கொடுத்து விடுவார். அங்கே இரப்பவர் மானத்துக்கு கேடு உண்டாகவில்லை; மனித மதிப்பு காக்கப்பட்டது. பொருளும் கிடைத்துவிடுகிறது.

உள்ளதை இல்லையென்று மறைக்காமல் கொடுக்கும் கடனறிவாரிடம் மட்டுமே இரக்க வேண்டுமென்று வள்ளுவர் இக்குறளில் மேலும் தெளிவுபடுத்துகிறார்.

'கண்ணின்று' குறிப்பதென்ன?

'கண்ணின்று' என்றதற்கு ஒருவன் முன்னே நின்று, சொல்லுதன் மாட்டாது முன் நிற்றல் மாத்திரத்தான், தம் குறையைச் சொல்ல மாட்டாமல் முன்னே நின்ற மாத்திரத்திலே, சொல்லமாட்டாமல் முன்னே நிற்றல் மாத்திரத்தால், ஒருவர்முன் நின்று, முன்னே நேர் நின்று, நேர்நின்று, முன் நின்று, ஆலோசனையில்லாமல், நேரில் நின்று, முன்னால் நின்று, முன்னிலையில் நின்று என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

‘கண்ணின்’ எனப் பாடங் கொண்ட காலிங்கர் இதற்குத் 'தம்பால்' எனப் பொருள் கொள்வார். நாமக்கல் இராமலிங்கம் 'கண்+இன்று' எனப் பிரித்து 'ஆலோசிக்காமல்' எனப் பொருள் காண்கிறார். மேலும் 'அறிதல் இல்லாதவராக' என்றும் பொருள் கொள்கிறார். இப்பொருள் பொருந்துமாறில்லை.

கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல் (புறங்கூறாமை 184 பொருள்: ஒருவனின் கண் எதிரே நின்று இரக்கமில்லாமல் கடுஞ்சொற்களைக் கூறினாலும், பின்னர் அவன் முகத்தை நேருக்கு நேர் எதிர்நோக்கவியலாத சொற்களைப் புறங் கூற வேண்டாம்) என்ற குறளிலும் கண்நின்று என்ற தொடர் ஆளப்பட்டது. அங்கு கண் எதிரே நின்று என்ற பொருளில் வந்ததுபோலவே இங்கும் அதே பொருளிலேயே 'கண்ணின்று' உள்ளது.
ஒருவர் முன்பு நின்று இரப்பதை எவருமே இழிவாகக் கருதுவர். கேட்க நாணும் தன்மை கொண்டவர்களுக்கு அது இன்னுமே மானக் குறைவான செயலாகும். அத்தகையவர்கள் கூட இரக்க முன்வருகிறார்கள் என்றால், தங்களிடம் உள்ளவற்றை ஒளிக்காமல் கொடுக்கும் குணம் கொண்டவர்கள் உலகில் இருப்பதால்தான். இரப்பவர் அப்பண்புடையவர் முன் நிற்கும்போதே, இன்னதுதான் வேண்டும் கேட்கவே தேவையில்லை. அவர்கள் வாய்திறந்து இளிவந்த சொல்லைச் சொல்லாமலே- கண் முன்னே நிற்றலளவினாலேயே- பொருள்கள் கிடைக்கும். இந்த நம்பிக்கையில்தான் மானத்துக்கஞ்சுபவரும் அவர்முன்பு செல்கிறார்கள்.

'கண்ணின்று' என்ற தொடர் இங்கு 'நேர்நின்று' என்ற பொருள் தரும்.

ஒருவர் முன்னால் நின்று இரக்க முற்படுவது தம்மிடம் உள்ளதை மறைக்காது அளிப்பவர்கள் உலகத்தில் இருப்பதனால்தான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கரப்பிலாரிடம் சென்று இரவு மேற்கொள்வது மானக்கேடாகாது.

பொழிப்பு

நேர்நின்று இரக்க முற்படுவது உள்ளதை மறைக்காது அளிப்போர் உலகத்து இருப்பதால்தான்.